ஒரு சமூகத்தை குறிவைத்து தாக்குவது சஹ்ரானின் நோக்கங்களையே நிறைவேற்றும் | தினகரன் வாரமஞ்சரி

ஒரு சமூகத்தை குறிவைத்து தாக்குவது சஹ்ரானின் நோக்கங்களையே நிறைவேற்றும்

உலகில் நடைபெறும் சில சம்பவங்கள் அவை ஏன் நிகழ்ந்தன அல்லது நிகழ்ந்தப்பட்டன என்ற கேள்வி எழுந்து அவதானிகளை குழப்பி விடுவதுண்டு. உதாரணத்துக்கு 1914ம் ஆண்டு ஜூலை 28ம் திகதி ஒஸ்ட்ரிய பேரரசு சேர்பியா மீது போர்ப் பிரகடனம் செய்ததை குறிப்பிடலாம். அதே ஆண்டு ஜூன் 28ம் திகதி ஒஸ்ட்ரிய பட்டத்து இளவரசரான பேர்டினன்ட், தன் மனைவி சோஃபியுடன் பொஸ்னியாவின் சரஜீவோ நகருக்கு விஜயம் செய்தார். அப்போது இருவரும் சேர்பிய தீவிரவாதிகளினால் சுட்டுக்ெகால்லப்பட்டனர். பொஸ்னியா – ஹெர்ஸகோவ்னியா பிராந்தியம் ஒஸ்ட்ரியாவினால் பலவந்தமாக இணைக்கப்பட்டிருந்தால் பொஸ்னிய இளைஞர்கள் ஒஸ்ட்ரியா மீது ஆத்திரம் கொண்டிருந்தனர். இப்படுகொலைக்கு பழிதீர்க்கு முகமாக ஒஸ்ட்ரியா நடத்திய படையெடுப்பு முதலாவது உலகப் போராக மாறி, ஒருகோடி மக்களை பலி கொண்டது. ஆனால் இந்த யுத்தத்தை ஒஸ்ட்ரியா இன்னும் கொஞ்சம் நிதானத்துடன் கையாண்டிருந்தால் உலகப்போர் தவிர்க்கப்பட்டிருக்க முடியும். 

அதேபோல, இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தில் அதிக அக்கறையுடன் இந்தியா செயற்பட்டுவந்த நிலையில், அந்த நிலைப்பாட்டை முற்று முழுதாக இந்திய அரசு மாற்றி அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி மீது நடத்திய தற்கொலைத் தாக்குதலே காரணமானது. அவரை படுகொலை செய்தமைக்கான அசல் காரணத்தை புலிகள் கடைசிவரை வெளியே தெரிவிக்கவில்லை. அந்தத் தவறே அவ் வியக்கத்தின் வீழ்ச்சிக்கு கால்கொலிட்டது. 

அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான 9/11தாக்குதல் அக்காலத்தில் முட்டாள்தனமானதும், தூங்கும் புலியை இடறிவிடுவது போலவும் அமைந்ததாக பல விமர்சகர்கள் கூறியிருந்த போதிலும், அதன் பின்னர் ஜோர்ஜ் புஷ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஆப்கானிஸ்தானை சின்னாபின்னமாக்கியதோடு ஈராக்கையும் பந்தாடியது. ஆனால் 2001ம் ஆண்டுக்கு முன்னர் உலகெங்கும் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கையுடன் 2017ம் ஆண்டில் உலகெங்கும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், யேமன், எத்தியோப்பியா, சிரியா ஆகிய நாடுகளில் மேற்கத்திய கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட பின்னரும் பயரங்கரவாதிகளின் தாக்குதல்கள் உலகெங்கும் அதிகரித்துள்ளன என்றால் அதன் அர்த்தம், அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்துக்கு எதிரான போர் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான்! எனவே ஒஸாமா பின்லேடன் நடத்திய 9/11தாக்குதல், உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சிக்கே வழிவகுத்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம். இதுவரை பயங்கரவாதத் தாக்குதல்களே நிகழ்ந்திராத நாடுகளில் எல்லாம் தற்போது அத்தகைய தாக்குதல்கள் நிகழ்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் மற்றொரு விளைவாக ஐ.எஸ்.அமைப்பின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டலாம். இது பக்தாதியின் உருவாக்கமா அல்லது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைப்பா என்ற கேள்வியை ஒரு புறமாக வைத்து விட்டுப் பார்ப்போமானால், அது சிரியா மற்றும் ஈராக்கில் ஆடிய தாண்டவம் பயங்கரமானது என்பதையும் இன்றைக்கு உலகை உலுக்கும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

இந்து சமுத்திர நாடுகளிலேயே அமைதிப் பூங்கா நாடாக விளங்கிய இலங்கை, 1971முதல் தொடர்ச்சியாக உள்ளூர் யுத்தங்களை சந்தித்து வந்திருக்கிறது. 1971ஜே.வி.பி கிளர்ச்சி, 1983இனக் கலவரம், தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் எழுச்சியும், உள்நாட்டுப் போரும், 1988-_-89ஜே.வி.பி.யின் ஆயுத போராட்ட வடிவிலான மீள்எழுச்சி என இலங்கையின் சிங்கப்பூர் கனவை இவை பின்தள்ளியே வந்துள்ளன.  

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பொருளாதார அபிவிருத்தியில் முன்நோக்கிச் செல்ல முயற்சிக்கையில் பயங்கரவாதத்தின் ஐந்தாவது அத்தியாயம் தற்போது விரித்துப் போடப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். 

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சதனமான தாக்குதல்களிலேயே மிகக் கொடுமையானது என்றும் உச்சக்கட்ட – பயங்கரவாதம் என்றும் வர்ணிக்கப்படக் கூடிய தாக்குதல்களே 4/21இல் கட்ட விழ்த்து விடப்பட்டது என்பதும் மிகையல்ல. ஆனால் அது இஸ்லாமிய அடிப்படை வாதத்தை மட்டும் பின்புலமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு வெறித்தனமான தாக்குதலா அல்லது சங்கிலித் தொடரான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, பின்லேடன் நடத்திய தாக்குதலை போன்ற, ‘அச்சார’ தாக்குதலா என்பது நுணுக்கமாக ஆராயப்பட்ட வேண்டியது அவசியம். 

ஒரு நிகழ்வு நடத்தப்பட்டதும் அது எத்தகைய பின் விளைவுகளை அடுத்தடுத்து உருவாக்கும் என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே தீர்மானிக்கலாம். இந்த வகையிலான சிந்தனை வழியிலேயே பின்லேடன் அமெரிக்காவை வலிய சண்டைக்கு அழைத்திருக்க வேண்டும். 4/21தாக்குதல் மூலமும் சஹ்ரான் இலங்கை அரசை ‘சண்டைக்கு’ அழைத்ததும் இத்தகைய சிந்தனை வழியில் தானா என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

இதனால்தான் விஷயம் தெரிந்த அரசியல்வாதிகள், கடந்த வாரம் சிலாபம், வடமேல மாகாணத்தின் சில பகுதிகள், கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்ததுடன் இத் தாக்குதல்களை சம்பந்தப்பட்ட சிங்களத் தீவிர வாத அமைப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

பொதுவாகவே சிங்கள – பௌத்த தீவிரவாதப் போக்கைக் கொண்ட விமல் வீரவன்ச, “சிங்கள இளைஞர்களே, நான் உங்களை முடிந்தாளிட்டு கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இத்தாக்குதல்கள் தொடருமானால் அது இன்னொரு கறுப்பு ஜுலைக்கு இட்டுச் செல்லும். இதுதான் தருணம் என்று வெளிநாட்டுப்படைகள் – அமெரிக்கப் படைகள் – வந்திறங்கும். இதுதான் வாய்ப்பென ஐ.எஸ்.ஸூம் இங்கே வந்திறங்கும். பின்னர் என்ன நடக்கும்? இலங்கை சிரியாவைப் போன்றாகிவிடும். எனவே என் பிள்ளைகளே, இந்த விநாசத்தை நிறுத்துங்கள்” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மனம் நெகிழ்ந்து, கண்கலங்கியவாறு வேண்டுகோள் விடுத்ததை நாம் பார்த்தோம். அடுத்த வருட முற்பகுதியில் தேர்தல் ஒன்று வரவிருப்பதால், இன்றைய சூழலை தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் களமாடும் இத் தருணத்தில் விமலின் குரல் தொலைநோக்குப் பார்வையுடன் ஒலிக்கிறது.  

சிங்களக் கட்சிகள் தமிழர் பிரச்சினையை விளையாட்டுத்தனமாகவும், குறுகிய நோக்கங்களுடனும் பயன்படுத்தியதன் விளைவை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. அதைப் பாடமாகக் கொள்ளாமல், சஹ்ரான் யார் சார்பாகவோ பற்றவைத்திருக்கும் இந்தத் திரியை அனுமார்வால் பெருந்தீயாக கொளுத்தாமல் எமது அரசியல் கட்சிகள் அறிவு பூர்வமாகவும் நாட்டை முன் நிறுத்தியும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 4/21 தாக்குதலை வெறும் பயங்கரவாதச் செயலாக பார்க்காமல், சஹ்ரான் என்னென்ன நீண்டகால நோக்கங்களுடன் இத் திரியை பற்ற வைத்தார் என்பதை உணர்ந்து செயல்பட்டால் மாத்திரமே இன்றைய கருமையான சூழலில் இருந்து நம்மால் முற்றிலுமாக மீண்டுவர முடியும் என்பதை அழுத்தமாக தினகரன் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.   

Comments