அமெரிக்க வல்லரசு பலத்திற்கு ஈரானும் வடகொரியாவும் சவாலா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க வல்லரசு பலத்திற்கு ஈரானும் வடகொரியாவும் சவாலா?

உலக வல்லரசுகளது கடல் போட்டி மீளவும் நாடுகளுக்கிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரத்தில் இரு பெரும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஒன்று மேற்காசியாக் கடல் பிரதேசம் நோக்கி அமெரிக்க போர்க் கப்பல்கள் மேற்கொண்ட பயணம். இரண்டாவது வடகொரியாவின் சரக்குக் கப்பல் ஒன்றினை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய விடயம். இவை இரண்டுமே இந்தோ - பசுபிக் சமுத்திரப் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஏறக்குறைய அமெரிக்காவின் போர்ச்சூழல் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. அதில் வெறுமையான ஊகங்களே காணப்பட்டது. இக்கட்டுரையும் ஈரான் வடகொரியா தொடர்பில் பிந்திய அமெரிக்க கொள்கை மற்றும் ஈரான் வடகொரிய நிலைப்பாட்டில் காணப்படும் மாற்றங்கள் பற்றியதாக அமையவுள்ளது.  

வடகொரியா அண்மையில் நிகழ்த்திய ஏவுகணைப் பரிசோதனையை அடுத்து அமெரிக்கா வடகொரியாவின் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியதுடன் தனது ஆதிக்கத்திலுள்ள சமோவாத் தீவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. அடிப்படையில் ஐ.நா. விதிகளையும் சட்டதிட்டங்களையும் வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையின் மூலம் மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 17இல் நவீன ரகத்தை சேர்ந்த ஏவுகணை ஒன்றினை பரிசோதித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் ஒரு கட்டமே அதன் சரக்கு கப்பலை தனது சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனால் வடகொரியா எந்த நாட்டுடனும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியாது என அமெரிக்கா கூறி வருகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடையை வடகொரியா மீறி விட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வடகொரியா, சர்வதேச வர்த்தக தடையை மீறியதாக இந்தோனேசிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலான வைஸ்ஹானஸ்ஸையே சமோவா தீவுக்கு அமெரிக்கா கொண்டு சென்றுள்ளது. 

அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்த வடகொரியா இச்செயல் அமெரிக்காவின் அடாவடித்தனம் என்றும், வடகொரியாவை அமெரிக்கா கட்டுப்படுத்த நினைப்பது ஆபத்தானதாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவைப் பொறுத்தவரை வலுவான வல்லரசுகளது ஒத்துழைப்புடனும் நெருக்கத்துடனும் அவற்றின் வழிப்படுத்தலிலேயே செயல்படுகிறது. இதனால் அமெரிக்க நடவடிக்கையை அதிகம் அரசியாலாகவும் பொருளாதார விடயமாகவுமே பார்க்கின்றது. அது ஒரு வகையில் சரியானதே காரணம் இராணுவ ரீதியில் அமெரிக்காவின் இராணுவ பலத்திற்கு முன்பு சிறிய நாடாகவும் வலுவற்ற தேசமாகவும் வட கொரியா காணப்பட்டாலும் அணுவாயுதத்தை கொண்டிருக்கும் தேசம் என்ற வகையில் பலமான அரசாகும். அது அமெரிக்காவுக்கு ஈடில்லாது விட்டாலும் இராணுவ பலத்தில் அழிவையும் ஆபத்தையும், ஏன் அமெரிக்காவுக்கே அச்சத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனால் அமெரிக்காவின் இராணுவ பலத்தைவிட அது அதிகம் நெருக்கடிக்குள்ளாகப் போவது பொருளாதாரத்திலும் அரசியலிலுமாகும். அரசியலிலும் பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் சீனாவும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு பாதுகாப்பாகவே உள்ளன. அதனால் இராணுவ அரசியல் களத்தை அமெரிக்காவிடமிருந்து எதிர்கொள்ளும் நெருக்கடியை விட பொருளாதார ரீதியிலேயே அதிக பாதிப்பை தருமென கருதுகிறது. அதனைக் கூட சீனாவின் மூலம் சரி செய்ய முடியுமென கருதினாலும் புவிசார் அரசியல் பொருளாதாரத்தை அமெரிக்க கூட்டாளிகளுடன் பகிர வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது. அதுவே இன்றைய வடகொரியாவுக்குள்ள சவாலாகும். அதற்கான காத்திருப்பும் உரையாடலுக்கு தயாராவதும் அமெரிக்காவுடனான சந்திப்புக்கு உடன்பட்டமையும் நிகழ்ந்து வருகிறது. 

மறுபக்கத்தில் அமெரிக்கா, வடகொரிய விடயத்தை மிரட்டி பணிய வைக்க முடியுமென கணக்குப் போட்டாலும் அத்தகைய உத்தி மீது அதிக நம்பிக்கை கொண்டதாக இல்லை என்பதை அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. குறிப்பாக தென்கொரியாவுடனான சந்திப்பை முதன்மைப் படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜப்பானில் நடைபெறவுள்ள  ஜி-20மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அப்போது கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான உரையாடலை ஆரம்பிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அதிகாரபூர்வமான ஒருங்கிணைத்ந்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அதற்கான சந்திப்பாகவே தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே உரையாடல் அமையுமென்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய சீனத் தலைவர்களை ஜி-20இல் சந்திக்கப் போவதாகவும் அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுவும் ஏறக்குறைய வடகொரிய விடயமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏறக்குறைய இவ்விரு நாடுகளது புவிசார் அரசியல் பலத்திலேயே வடகொரியா பயணிகிறது என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள அமெரிக்கா அவ்விரு நாடுகளிடமுமே வடகொரிய விடயத்தை கையாள வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்க முனையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வடகொரியாவைப் பொறுத்தவரை அரசியலும் இராணுவத்திலும் பலமான நாடாகவும், பலமான புவிசார் வல்லரசுகளது நட்பினையும் கொண்டுள்ளது. பொருளாதாரத்தை முழுமையாகப் பலப்படுத்துவதே அதன் பிரதான உத்தியாகும். தற்போதைய நிலையை அதிகம் மிரட்டலாக அமெரிக்கா எடுத்துக் கொண்டாலும் வடகொரியா அதிக மௌனம் காட்டுகின்றது என்றே தெரிகிறது. ஆனால் அது நீண்டகாலத்திற்கானதாக தென்படவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை போர்ப் பதட்டத்தை ஏற்படுத்தும் களங்களை அதிகம் திறக்க விரும்பாத நிலையுள்ளது. ஆனாலும் வடகொரிய அல்லது கொரிய குடா ஒரு போர்க் களமாகவே அதனால் பார்க்கப்படுகிறது. அதில் அமெரிக்கா இலகுவில் வெல்லமுடியாது என்பது நன்கு தெரிந்துள்ளது . காரணம் அப்பிராந்திய சக்திகள் பற்றிய பலமும் புவிசார் பலமும் அந்தப் பிராந்திய சக்திகளுக்கே உரியது. அதனால் ஒரு போர்ப் பதட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. 

ஈரான் விடயம் ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்த காலப்பகுதியிருந்து தொடங்கியது. அது ஒரு நீண்ட அரசியல் இராணுவ முரண்பாடு. அது ஏறக்குறைய 1979காலப்பகுதியில் ஆரம்பமானது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சி ஆரம்பமான போதே தொடங்கிய விடயம். அதனை தேற்கடிக்க முடியாது, அமெரிக்கா நீண்ட காலமாக பேராடிவருகிறது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஈரான் தப்பிப்பிழைத்து வருகிறது. அதற்கு பின்னால் ஈரானின் உறுதிப்பாடும் இஸ்லாமியப் புரட்சி ஏற்படுத்திய பலமும் முக்கிய காரணமாகும். தற்போது அமெரிக்கா தனது கட்டாரிலுள்ள தளங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படும் என அச்சமடையும் நிலையிலேயே கடற்படைக் கப்பல்களை மேற்காசியக் கடல்பரப்புக்கு அனுப்பியதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரானுடன் போர்புரியும் நோக்கம் ஏதும் அமெரிக்காவுக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உலகத்தில் ஒரு போர் நடவடிக்கையை மேற்கொள்ள தயாரில்லாத நாடு என்பதை அது பல தடவை  வெளிப்படுத்தியுள்ளது. தனித்து எந்த நாட்டுடனும் அமெரிக்கா போர் புரிவதை கடந்த பல தசாப்தங்கள் தவிர்த்தே வந்தது. குறிப்பாக கூட்டுப்படை அணியை அமைத்தே அமெரிக்கா போரை எதிர்கொண்டு அதன் வெற்றிகளை தனதாக்கியது. அல்லது அரபு வசந்தம் போன்ற செயல்பாடுகளை அல்லது அல்கெய்தா தலிபான் மற்றும் ஐ.எஸ். போன்ற அமைப்புக்களையும் அவற்றின் ஆயுதபலத்தையும் மறைமுகமாக வளர்ப்பதன் மூலம் வெற்றிகரமான அரசியலை மேற்கொண்டு வந்தது. சதாம், கடாபியின் அழிவுகளை வெற்றிகரமாக மாற்றிக் கொண்ட அமெரிக்கா, ஈரான் விடயத்தில் அதிக நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறது. ஆனால் ஈரான் வடகொரியா போன்றதல்ல. இஸ்லாமிய சமூகம் மீதான அமெரிக்க அணுகுமுறை வேறானது. அமெரிக்காவின் வல்லரசு இருப்பின் மையமும் மேற்காசியா என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் மேற்காசியாவால் அமெரிக்கா அதிக பாதிப்பையும் தனது வல்லரசு பலத்தையும் இழக்கக் கூடியதாக அமையும்.  

ஈரானின் பிரதான உத்தி அதன் பாதுகாப்புக்கான அணிகளை கையாள்வதிலேயே தங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யா, - சீனா உடனான அதன் நெருக்கமான உறவும் அந்நாடுகளின் அமெரிக்கா மீதான எதிர்ப்பும் ஒரே புள்ளியில் சந்திப்பதனால் அமெரிக்காவால் இலகுவில் ஈரானை தகர்க்கவோ அல்லது அதன் வல்லரசுகளுடனான உறவை உடைக்கவோ முடியாது. ஈரானில்  ஷியாக்களின் இருப்பும் அதன் இஸ்லாமிய புரட்சியும் அந்த நாட்டை அமெரிக்காவுக்கு எதிரானதாக பலப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் நீண்ட காலத்தில் ஷியா, சுன்னி முரண்பாட்டை கையாள முடியுமென அமெரிக்கா கருதினாலும் அந்த பிராந்தியத்தின் இருப்பும் உறுதிப்பாடும் ஷியாக்களால் அல்லது ஈரானியரால் கட்டிவளர்க்கப்படும் நிலையே மேலெழுந்துள்ளது. இத்தகைய உணர்வுக்கு சீனா ரஷ்யாவின் அனுசரணை இருக்கும் வரை, ஈரானின் இருப்பினை இலகுவில் அமெரிக்காவால் தகர்த்துவிட முடியாது.  

எனவே, வடகொரிய ஈரான் விவகாரம், அமெரிக்காவுக்கு தொடர் நெருக்கடிக்கானதேயாகும். இதனால் அமெரிக்க வல்லரசுப் பலம் படிப்படியாக வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய அமெரிக்காவும் அதன் இராணுவமும் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் அதனை பாதுகாப்பது கடினமான இலக்காக மாறியுள்ளது. உலகத்தை பாதுகாத்த அமெரிக்கப் படை என்ற நிலை மாறி அமெரிக்க படைகளைப் பாதுகாக்க படைகள் என்ற நிலை வளர்ந்துள்ளது. இரு பிராந்திய அரசியலையும் முதன்மைப்படுத்திக் கொண்டு வல்லரசுகளது போட்டியும் உரையாடலும் தந்திரோபாய நகர்வுகளும் அமையவுள்ளது. இதுவே அடுத்துவரும் தசாப்தங்களிலும் காணக்கூடியதாக அமையவுள்ளது. அமெரிக்க அரசியல் இராணுவ இலக்கில் ஈரானும் வடகொரியாவும் ஆபத்துமிக்க பொறியாகவே உள்ளன.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்    

 

Comments