இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க சீனா உதவி | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க சீனா உதவி

இலங்கையின் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு சீனாவிலிருந்து 260கோடி ரூபா நன்கொடை

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய 150கோடி ரூபா பெறுமதியான 100ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு..

இருநாட்டு பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைப்புக்காக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..

பயங்கரவாத மற்றும் இணையத்தள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நவீன தொழிநுட்ப கருவிகளையும் அறிவையும் இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம்

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு   சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய 260கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்தோடு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இரு தரப்பு கலந்துரையாடலுக்காக சீன ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன ஜனாதிபதி உற்சாக வரவேற்பளித்தார்.

உலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிப்பதாக சீன ஜனாதிபதி வலியுறுத்தினார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த சீன ஜனாதிபதி, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். பயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும் என்று தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி, அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.

இருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அக்குற்றங்களை தடுப்பதற்கும் தேவையான தொழிநுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை எனத் தெரிவித்தார்.

அந்த உபகரணங்களையும் தொழிநுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்ததுடன், அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழிநுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

சீனக் கடன் உதவிகளினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதுடன், அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீன அன்பளிப்பின் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப்பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அனைத்து சந்தர்ப்பத்திலும் சிறந்த நண்பன் என்ற வகையில் இலங்கை சீனாவுக்கு வழங்கும் ஒத்துழைப்பையும் சீன ஜனாதிபதி பாராட்டினார்.

அதுபோன்று போதைப்பொருள் ஒழிப்பிற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி, அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கையிடம் காணப்படுவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments