இலங்கை தீவின் அமைவும் அதன் எதிர்காலமும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தீவின் அமைவும் அதன் எதிர்காலமும்

உலகின் மூன்று முக்கிய பலசாலி நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் ஒரு நாடு என்ற வகையில் எமது சமூக, கலாசார, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய நலன்களை பாதுகாத்துக் கொள்வதில் நமது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு மேலாக இந்த பலம்வாய்ந்த நாடுகளின் அரசியல் உள்நோக்கங்களை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.  

அயல்நாடு என்ற வகையில் இந்தியா எம் மீது வரலாற்று ரீதியிலான தொடர்புகளையும் தாக்கங்களையும் கொண்டிருக்கின்ற அதேவேளை, இந்தியா இலங்கை தொடர்பில் எடுக்கின்ற எந்தவொரு முடிவாக இருப்பினும் முடிவில் அது அவர்களது உலக அரசியல் பற்றிய தீர்மானங்களின் ஓர் அங்கமாகவே அமைகின்றது. அதேபோன்று ஒன்றுக்கொன்று நேர்மறையான கொள்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருக்கும், உலக வல்லரசு என்ற நிலைக்கான பயணத்தில் நீயா நானா என்ற அளவுக்கு மிகக் கடுமையான போட்டியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவும் சீனாவும் அவர்களின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமையவே அவ்விரு நாடுகளும் இலங்கை மீது செலுத்தும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கையின் புவியியல் அமைவு இந்த மூன்று நாடுகளினதும் அரசியல் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்பு என்ற விடயத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதே அதற்குக் காரணமாகும்.  

இந்த பின்னணியிலேயே 20வருடங்களுக்கும் மேலாக நீடித்த இலங்கையின் போர் முடிவுக்கு வந்து அமைதியாக நகர்ந்து கொண்டிருந்த சுமார் 10ஆண்டு கால அமைதியான சூழ்நிலையை துவம்சம் செய்யும் வகையில் இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாதிகளால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்களும் அதன் பின்னரான உலக மற்றும் உள்ளக அரசியல் காய்நகர்த்தல்களும் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதை எம்மால் ஆராய்ந்து பார்க்க முடியும்.  

அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட பெளத்த தர்மத்தை பின்பற்றிவரும், உலகில் வேறு எந்தவொரு நாட்டுக்கும் எதிரியாக செயற்படாத இலங்கை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் எதனால் இத்தகையதோர் தாக்குதலை மேற்கொண்டனர் என்ற கேள்வியை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கடந்த வாரம் சீனாவில் இடம்பெற்ற ஆசிய நாகரிகங்கள் பற்றிய மாநாட்டில் எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்குப் பதிலாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு பொருள் உதவியும் நிதியுதவியுமே கிடைத்திருக்கின்றது. அதாவது இத்தாக்குதல்கள் உள்நாட்டில் இடம்பெற்ற போதிலும் அதற்கான திட்டங்கள் வெளிநாடொன்றில் வைத்தே வகுக்கப்பட்டிருக்கின்றது என்பதையே சீனா இலங்கைக்கு சொல்லாமல் சொல்லியிருக்கின்றது.  

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை பொலிஸ் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதே ஒரு ஜீப்வண்டியேனும் இல்லாத 30பொலிஸ் நிலையங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன என்ற விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான 30ஜீப்வண்டிகளை மாத்திரம் சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக கொடுத்திருக்குமேயானால் அது ஒரு சாதாரண விடயமாகவே இருந்திருக்கும். ஆனால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் பின்னணியை நன்கு உணர்ந்திருப்பதனாலேயே தலா ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான 100ஜீப்வண்டிகள், பெருமளவு தொழிநுட்ப உதவிகள் உள்ளிட்ட 410கோடி ரூபாய் பெறுமதியான பாரிய உதவியை சீனா இலங்கைக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றது. இதன்மூலம் சீனா இலங்கை மீது கொண்டிருக்கும் கரிசனையையும் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தையும் அதற்காக எத்தனை தூரம் செல்வதற்கு அந்த நாடு தயாராக இருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.  

வரலாற்று ரீதியாக, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு இருந்துவந்த அரசியல், பொருளாதார பாதிப்புக்கள், நெருக்கடிகள் மற்றும் சவால்களை சந்தித்திராத ஒரு சமூகம் என்ற வகையில் இந்த நாட்டின் நலனை விரும்பும் சாதாரண முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த நாட்டின் கட்டுமானத்தை சீரழித்து அதன்மூலம் இலங்கையை ஒரு இஸ்லாமிய இராச்சியமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமோ அதற்கான தேவையோ ஒருபோதும் இருக்கவில்லை என்பதை, இந்த மிருகத்தனமான தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்ற விடயம் அம்பலமான அடுத்த கணத்திலிருந்தே இந்நாட்டின் முஸ்லிம் அரசியல் மற்றும் மத தலைமைகள் திட்டவட்டமாக கூறி வருகின்றன. இருப்பினும் இத் தாக்குதலையடுத்து பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துவரும் தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வு செயற்பாடுகள், இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்த சில இஸ்லாமிய இனத்தை சேர்ந்த தீவிரவாத தீய சக்திகள் இத்தாக்குதலின் பின்னணியையும் திட்டங்களையும் அறிந்திருந்ததோடு, அதற்காக பெருமளவு நிதியுதவிகளை செய்து வந்திருக்கின்றன என்பதையும் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்தெடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை செய்து வந்திருக்கின்றன என்பதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.  

இத்தாக்குதலின் பின்னணியில் இந்த நாட்டின் இஸ்லாமிய தீவிரவாதிகளும் இருக்கின்றார்கள் என்ற உண்மையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எத்தனிக்கும் சந்தர்ப்பவாத சக்திகள், இதன்மூலம் ஒரு பாரிய சிங்கள, முஸ்லிம் இனக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம் இனத்தவரின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மதக் கட்டுமானங்களை வேரரறுப்பு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மூலம் தமது அரசியல் இலக்குகளை அடைய முயன்ற முஸ்லிம் தீவிரவாத சக்திகளுக்கு தீனி போடுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் சிங்கள இனவாத சக்திகளின் சூழ்ச்சியினாலேயே அண்மையில் முஸ்லிம் இனத்தவர்கள் செறிந்து வாழும் சில பிரதேசங்களில் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன.  

இந்நிலைமை தொடருமாயின் அது இந்த நாட்டின் இஸ்லாமிய தீவிரவாதத்தை வேரூன்றச் செய்வதற்கே வழிவகுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.  

இதனாலேயே இஸ்லாமிய தீவிரவாதத்தை இனங்கண்டு அதனை அழிப்பதும் இந்த நாட்டின் நலனை விரும்பும் பெரும்பான்மை முஸ்லிம் மக்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு விடயங்களாகும் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொண்டிருக்கின்றார்.  

இலங்கை அரசியலில் சில முக்கிய பதவிகளை வகித்துவரும் இஸ்லாமியர்களை உடனடியாக அப்பொறுப்புக்களிலிருந்து அகற்ற வேண்டும், மட்டக்களப்பு ‘ஷரியா பல்கலைக்கழகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும், இலங்கையை உடனடியாக ஒரு பெளத்த இராச்சியமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வகையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு அரச தலைமை என்ற வகையில் கண்மூடித்தனமாக இணங்க முடியாது என்பதையும் சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுவோர் மாத்திரமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதுமே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதனை இனவாதத்திற்கு துணைபோக துடித்துக் கொண்டிருப்போர் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது.  

70களில் ஒரு பிடிப்பான இளைஞனாகவும் அநீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு சமூக நலன்விரும்பியாகவும் இருந்த உயர்தர மாணவன் ஒருவனின் அச்செயற்பாடுகளை விரும்பாத பாடசாலை அதிபர் அந்த மாணவன் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரன் என்ற போலியான தகவலை பொலிஸாருக்கு வழங்கினார். அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட அவ்விளைஞன் சிறையிலடைக்கப்பட்டான். சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்தவாறே உயர்தரத்தைக் கற்றுத் தேர்ந்த அவ்விளைஞன், இறுதியில் எந்தவொரு குற்றச்சாட்டும் சட்டத்தின் நிரூபிக்கப்பட முடியாத நிலையில் விடுதலை பெற்றான். அன்று அவ்வாறு நிரபராதியாக இருந்தும் ஒரு விஷமியின் தனிப்பட்ட சுயலாபத்திற்காக தண்டிக்கப்பட்ட அந்த நிரபராதியே இன்று இந்த நாட்டின் அரச தலைவனாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன ஆவார். ஆகையால் தமக்கு நேர்ந்த கதி வேறு எவருக்கும் நேரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மைத்ரிபால சிறிசேனவின் அந்த நிதானத்தை தவறாக எடை போடுவதென்பது இந்த நாட்டின் நிம்மதியை பறிக்கும் என்பதைப் புரிந்துகொள்வதே புத்திசாலித்தனமாகும். 

ஆனந்தன் 

Comments