ஐக்கியத்திற்கு விழுந்த பேரிடி! | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கியத்திற்கு விழுந்த பேரிடி!

சுயபரிசோதனை செய்ய வேண்டியது யார்?

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலையே மன்னித்த அந்த மக்களின் பொறுமைக்குள் பொதிந்திருக்கும் வலியைப் புரிந்துகொள்ளாத ஒரு காட்டுமிராண்டித்தனமாகவே இந்த வன்முறை பார்க்கப்படுகிறது. முற்றிலும் மனித நாகரித்திற்கு மாறுபட்ட செயல். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்த பின்னர், பொது மக்களை இலக்கு வைத்த வெறிச்செயல்

இலங்கை மக்கள் எந்தச் சம்பவத்தையும் ஒரு வாரத்தில் மறந்து விடுவார்கள் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. சிலவேளைகளில் மக்களாகவே மறந்துபோகும் நிலை உருவாகும்; சில சந்தர்ப்பங்களில் அந்த நிலை உருவாக்கப்பட்டுவிடும்.  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மக்கள் இழந்த பிராணவாயுவை மீளப் பெறுவதற்குள் மற்றொரு பேரிடியாய் வன்முறைச் சம்பவங்கள் வெடித்து, மக்களை மீண்டும் ஓர் இருண்ட காலத்திற்கு இழுத்துச் சென்றிருக்கின்றன. பயங்கரவாதிகள் சார்ந்த சமூகம் என்ற ஒரே காரணத்தினால், முஸ்லிம் சமூகத்தின் ஆன்மா மூர்க்கத்தனமாய் கிழித்துக் காயப்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. அதனால், இன்று நாட்டில் வன்முறைச் சம்பவங்களே பேசு பொருளாகியிருக்கின்றன.  

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலினால்,  கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாடுமே மனத்தளவில் காயப்பட்டுப்போய் உள்ளது. கொல்லப்பட்டோரின் குடும்ப உறவுகளும் உடல் ரீதியாகக் காயமடைந்தவர்களும் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காகத் துடித்துக்ெகாண்டிருக்கிறார்கள். இந்தத் துன்பியல் துடைத்தெறியப்படுவதற்கு முன்னதாகவே மற்றொரு பேரவலத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.  

பயங்கரவாதத்திற்கு வன்முறை தீர்வாகுமா?

மனிதாபிமானத்திற்கு மாறான பயங்கரவாத செயல் எப்போது நடந்தாலும், அதற்கு இலங்கை  பதிலடி கொடுத்த விதம் உங்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை. யுத்தம் முடிவடைந்த நிலையிலும் அந்த ரணங்கள் இன்னும் மாறவில்லை. தற்போது முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையானது, உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருதப்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலையே மன்னித்த அந்த மக்களின் பொறுமைக்குள் பொதிந்திருக்கும் வலியைப் புரிந்துகொள்ளாத ஒரு காட்டுமிராண்டித்தனமாகவே இந்த வன்முறை பார்க்கப்படுகிறது. முற்றிலும் மனித நாகரித்திற்கு மாறுபட்ட செயல். பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்த பின்னர், பொது மக்களை இலக்கு வைத்த வெறிச்செயல். உயிரிழப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் கோடிக்கணக்கான சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. உடைமைகள் அழிந்தாலும் பரவாயில்லை என மக்கள் தமது உயிரைக் கையில் பிடித்தபடி ஓடித்தப்பியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் மீண்டும் தமது தாழ்வாரங்களுக்கு வந்து நிலைமையைக் கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள். எத்தனை ஆண்டுகால உழைப்பு? எத்தனைபேரின் இருப்பு? அத்தனையும் ஒரே நாளில் துவம்சம். வன்முறையாளர்களின் ஒரே இலக்கு, பொருளாதாரத்தைச் சிதறடித்து வலியைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதுதான். நிச்சயம் தாம் சார்ந்த சமூகத்திற்கு இத்துணை ஆபத்து காத்திருக்கும் என்பது அந்தப் பயங்கரவாத முட்டாள்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்லவே. சிறுவர்கள், பெண்கள், படையினர் என எந்தப் பாகுபாடும் இல்லை என்பதே அவர்களின் பிற்போக்குத்தனமான சிந்தனை! இன்று அந்தச் சிந்தனைதான் முன்னேறிவந்து கொண்டிருந்த ஒரு சமூகத்தைப் புரட்டிப்போட்டிருக்கிறது.  

83ஐ நினைவுபடுத்தும் மே 13 (05/13)

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை 1915இலே​ேய தோற்றம் பெற்றிருக்கிறது. என்றாலும், வன்முறை என்றால், 1983இல் தமிழர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலைதான் நினைவுக்கு வரும். 13இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக முழு நாடும் கொதித்தெழுந்தது. தமிழர்களின் உடைமைகள் பற்றி எரிந்தன. குண்டர்கள் தாக்குதல் நடத்தியபோது பலர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட வலியும் வேதனையும் பல நூறு தமிழ் இளைஞர்களைத் தீவிரவாதப்போக்கிற்கு இழுத்துச்சென்றன. தமிழ் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலை உருவானது. ஏவிவிடப்பட்ட அரசியல் குண்டர்கள் செய்த கொடுவினையால், முப்பது ஆண்டுகாலம் முழு நாடும் அந்த வேதனையை அனுபவித்தது. அவ்வாறான ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.  

பொதுவாக இந்த நாட்டில் சிறுபான்மை இனங்கள் எப்போதும் அடங்கி, ஒடுங்கி வாழ வேண்டும். பெரும்பான்மை இனத்தை மீறிச் செயற்படக் கூடாது என்ற சிந்தனை சுதந்திரமடைந்த காலம் முதல் நீடித்து நிலைத்து வந்துகொண்டிருக்கிறது. அதனால், எந்த ஓர் இடத்தில் ஒரு சாதாரண விபத்து நேர்ந்தாலும், மோதியவர் தமிழர் அல்லது முஸ்லிம் என்று தெரியவந்தால், அந்த விபத்தை வைத்தே ஒரு பெரிய களேபரத்தை ஏற்படுத்தி விடுவார்கள். சிறுபான்மையினத்தவர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதியென்றால், இந்த நிலை தலைகீழ். அளுத்கம, திகன ஆகிய சம்பவங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.  

எப்போதும் பெரும்பான்மை தம்மை அடக்கியாள்கிறது என்று சிறுபான்மையினரும் பெரும்பான்மையாக இருந்தும் தாம் ஒரு சிறுபான்மையாக இருப்பதாகப் பெரும்பான்மையினரும் தமக்குள் ஒரு கற்பிதத்தை வளர்த்துக்ெகாண்டிருக்கிறார்கள். இந்தத் தாழ்வுச் சிக்கல்தான் இரு தரப்பினரிடையேயும் இத்துணை விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்த விரிசல் இன்னும் விசாலமாகியிருக்கிறது. ஓர் இனத்தின் மீது காண்பித்த வன்மத்தால், முழு நாட்டிற்கும் அபகீர்த்தி. இந்தத் துன்பகரமான சம்பவம் ஐக்கியத்தின் மீதான பேரிடி!  

சிதைக்கப்படும் சிறுபான்மை தனித்துவ அடையாளங்கள்!

இரு தரப்புக்குமிடையேயான புரிந்துணர்வும் பரஸ்பர நம்பிக்ைகயும் கறைபட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் சிறுபான்மையினத்தவரின் தனித்துவ அடையாளங்கள் மீது பெரும்பான்மையினத்தவருக்குப் பெரிதாகத் திருப்தியில்லை. எப்போதும் இரண்டாந்தரத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய சிறுபான்மையினத்தவர்கள் ஓங்கி வளர்வதையோ, ஒளிர்வதையோ பார்ப்பதற்குச் சகிக்காது. தாம் சிறுபான்மை என்பதை மறந்து செயற்படுகிறார்களே என்ற ஆதங்கம் அவர்களுக்கு எப்போதும் உண்டு. என்றாலும், பொறுமையின் சிகரமாய் இருந்து காலத்தைக் கழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு. அந்தச் சகிப்புத்தன்மைதான் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களின் குணத்தை உயர்த்திக்காட்டியது. 83கலவரத்தின்போது பெரும்பாலான தமிழ் மக்களின் உயிரையும் உடைமைகளையும் காத்தவர்களும் சிங்கள மக்கள்தான். இதனைப் பல சந்தர்ப்பங்களில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தேவைப்பாடு இருக்கவே செய்கிறது. சிலவேளை, இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருந்து, சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்திருப்பார்களாயின், சிங்களவர்கள் சுதந்திரமாய் நடமாட முடிந்திருக்குமா? என்பது கேள்விக்குறிதான். அந்தளவிற்குச் சிறுபான்மையினத்தவரின் செயற்பாடுகள் தீவிரமானவை என்பதை விருப்பின்றியேனும் ஏற்றுக்ெகாள்ளத்தான் வேண்டும்.  

அந்தளவு மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய பெரும்பான்மை மக்கள், ஓர் இனத்தின் ஒரு சிறு குழு நடத்திய குண்டுத்தாக்குதல்களுக்காக முழுச் சமூகத்தையே இலக்கு வைத்தது ஏன்? பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று சொல்லியும் சமூகத்தின் மீது குறி வைக்கப்பட்டது ஏன்? என்பதுதான் இப்போதுள்ள கேள்விகள்.  

பாதுகாப்பு என்ற பெயரில் தமது கலாசாரத்தின் மீதும் கை வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் முஸ்லிம் மக்கள். விசேடமாகப் பெண்களின் ஆடை மீது கவிழ்ந்திருப்பது தீவிரவாதமே என்கிறார்கள் அவர்கள். முஸ்லிம் பெண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி நிர்ப்பந்திப்பதும், பின்னர் அதற்கு மாறான தீர்மானத்திற்கும் அதே ஒரு சாரார் பெண்களைக் கட்டாயப்படுத்துவதும் எந்த விதத்தில் நியாயமாகும் என்று கேட்கிறார்கள். புர்கா அணிவதற்கும் காதுகளை மூடி உடையோ அல்லது வேறு எந்த வஸ்திரத்தையோ அணிவதற்கும் புதிய சட்டம் தடை விதித்திருக்கிறது. இஃது உண்மையில் தம்மீதான ஒரு மறைமுகத் தீவிரவாதம் என்கிறார்கள். தற்போது தடை விதிக்கப்பட்ட ஆடைக்குப் பழகிப்போன முஸ்லிம் பெண்கள் சிலர், வீட்டைவிட்டு வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கித் தவிப்பதாகவும் தெரியவருகிறது. ஓர் ஆடைக்குப் பழக்கப்பட்டவர்கள் திடீரெனத் தம்மை மாற்றிக்ெகாள்வது எங்ஙனம் என்பதும் சிக்கல்தான். விரும்பத் தகாத நிலைமை உருவாகக் காரணம், சில சுயநலவாத அரசியல்வாதிகளும் அமைப்புகளின் தலைவர்களுமே என்பது தற்போதைய குற்றச்சாட்டு.  

திட்டமிட்ட வன்முறையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்?

மினுவான்கொடை, குளியாபிட்டி, சிலாபம், ஹெட்டிப்பொல, நாத்தாண்டி, குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் திட்டமிட்ட அரசியல் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இல்லாவிட்டால், குண்டுத் தாக்குதல் நடந்த மூன்று வாரத்தில் எவ்வாறு ஆத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்க முடியும்? என்பது நியாயமான கேள்விதான். தாக்குதலில் ஈடுபட்ட பலர் வெளியிடங்களிலிருந்து வாகனங்களில் வருகை தந்திருந்ததாகக் கூறப்படுகிறது. குண்டுத் தாக்குதலையடுத்து அமைதியையும் பொறுமையையும் பேணுமாறு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால், அவர் மதத் தலைவர்களின் சிகரமாய் விளங்கினார். நாட்டுக்ேக தலைமை வகிக்கும்படியாக அவரது ஆறுதல் வார்த்தைகள் அமைந்திருந்தன. சில அரசியல் சுயநலமிகளுக்குப் பேராயரின் வேண்டுகோள்கூடப் பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சிந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.  

இன்று சுயபரிசோதனை செய்ய வேண்டியது யார்?

இஸ்லாமிய விரோதிகளை வைத்து முஸ்லிம்களைக் கணிப்பிடக் கூடாது  

சிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது. தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் கூறுகிறார்கள்.  

முஸ்லிம் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மதரசாக்களை நிர்வகிப்பது குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம் சமூகமே தானாக முன்வந்துள்ளது.  

இருந்தபோதும், முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் அவர்களைப் பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே சுய பரிசீலனை செய்யத் தயாராகியுள்ளது. இதேபோல ஏனைய சமூகங்களும் தம்மைத் தாமே சுய பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். "குண்டுதாரிகள் எமது மார்க்கத்தைப் பின்பற்றவில்லை. இவ்வாறான அடிப்படைவாதிகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை 2012ஆம் ஆண்டிலிருந்தே தகவல்களை வழங்கியுள்ளது. எனினும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குறைபாடு உள்ளது" என்கிறார் அமைச்சர் கபீர் ஹாசிம்.  

முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட கலாசார வேறுபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன. இவை தொடர்பில் நாம் சுய விமர்சனம் செய்வதுடன், சுய பரிசோதனை செய்வதற்கும் தயாராகியுள்ளோம் என்கிறார்கள் முஸ்லிம் சமூகத் தலைவர்கள்.  

அதேநேரம், நாட்டின் ஏனைய இனங்களும் இந்தச் சுயபரிசோதனைக்கு முன்வர வேண்டியதும் அவசியமாகும். கலாசாரப் பாரம்பரியங்களைப் பற்றிய சுயமதிப்பீடு என்பதைவிடவும், ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கு அடிப்படையான சில மாற்றங்களை ஏற்படுத்திக்ெகாள்வதற்கும் சுயபரிசோதனை அவசியமாகிறது.  

குறிப்பாக, எந்த ஓர் இனமும் தன்மையவாதச் சிந்தனையைத் தூக்கியெறிந்து மாற்றுக் கருத்தையும் உள்வாங்கும் மனோநிலையை வளர்த்துக்ெகாள்ள வேண்டும். அடுத்தவரின் மதம், நலம், கருத்து என்பவற்றை மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்ெகாள்வதே சமூக மாற்றத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படையாகும்.  

நாட்டைப் பாதுகாக்க ஒன்றுபட வேண்டும்

ஒரு காலத்தில் சிங்களத் தீவிரவாதியென அறியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சில தினங்களுக்கு முன்னர், பயங்கரவாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். அதுவும், தன்னைக் கட்டுப்படுத்திக்ெகாள்ள முடியாதவாறு கண்ணீர்விட்டு அழுது அவர் கேட்டுக்ெகாண்டது ஒரே விடயம், "இந்த நாட்டைச் சிரியாவாக மாற்றிவிடாதீர்கள். எமக்கு வாழ்வதற்கு நாடு வேண்டும். வன்முறையைத் தூண்டாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், பயங்கரவாதிகளுக்குச் சாதகமாகிவிடும். அவர்கள் வளர்வார்கள், நாங்கள் அழிந்துவிடுவோம்" என்பதுதான்.  

இலங்கையில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடு தோன்ற வேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் எதிர்பார்ப்பாகும். இதற்கு இடமளிக்காது அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும். இன்று அரசியல், சமூக, ஊடக மட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய ஒரே விடயம் இதுதான். சகலரும் சிந்திப்போம்; செயற்படுவோம்!

விசு கருணாநிதி

Comments