கண்டியில் வாழ்ந்த ஆரம்பகால ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்யப்பட்ட கண்டி கெரிசன் மயானபூமி | தினகரன் வாரமஞ்சரி

கண்டியில் வாழ்ந்த ஆரம்பகால ஆங்கிலேயர்கள் அடக்கம் செய்யப்பட்ட கண்டி கெரிசன் மயானபூமி

(சென்றவார தொடர்...)

அக்காலத்தில் கரையோர சிங்கள பிரதானிகளும் டொயிலியை ‘ஜெனரல்’ என்றே அழைத்தனர்.   மன்னன் ஸ்ரீவிக்கிர இராஜசிங்கனை மெதமாநுவரையில் கைது செய்தவுடன் ஆளுநர் பிரவுன்றிக்கு அகவல் அனுப்பியடொயிலி மகிழ்ச்சியிலாழ்ந்தவாறு,  

‘மதிப்புக்குரியவரே! உங்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் மன்னனை கைது செய்துவிட்டேன்!” எனக் குறிப்பிட்டிருந்தான். அதே சமயம் இம்முயற்சியில் உதவி புரிந்தவர்கள், தகவல் கொடுத்தவர்கள் மற்றும் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்ததன் காரணமாக இராஜசிங்கனால் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட புஸ்வெல்ல, வத்தல அப்பு ஆகிய சகோதரர்கள் பற்றி குறிப்பிடவில்லை. இவற்றை எடுத்துரைக்க பல சந்தர்ப்பங்கள் பின்னர் வாய்த்திருந்தபோதும் டொயிலி அதுபற்றி வாய் திறக்கவேயில்லை. தனது சுய முயற்சியின் காரணமாகவும் சாணக்கியமான செயற்பாடுகள் காரணமாகவுமே மன்னனைக் கைது செய்யமுடிந்ததென்றும் கண்டி இராசதானியை பிரித்தானிய சாம்ராஜ்யத்திற்கு அடிமைப்படுத்தக் கூடியதாக இருந்ததென்பதையுமே எல்லா சந்தர்ப்பங்களிலும் அவன் முதன்மைப்படுத்தி வந்தான்.  

இலங்கையில் இறைமை மிக்க இராசதானியாக விளங்கிய கண்டி இராச்சியத்தை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு மிகவும் உதவிய எஹலபொலைவின் பங்களிப்பு முக்கியமானது. மனைவி மக்களையும் சொத்துக்களையும் எஹலபொல இழந்தான். எனினும் எஹலபொல பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் தொல்லை கொடுப்பவனாக மாறுவான் என சந்தேகம் கொண்டான் ஆளுநர் பிரவுன்றிக். எனினும் கண்டி படையெடுப்புக்கு முந்திய காலக் கட்டத்தில் எஹலபொல ஆங்கிலேய அரசுக்கு எதிராக எந்தவித சதியிலும் ஈடுபட்டிருக்கவில்லை. எனினும் ஆளுநர் அவன்மீது ஐயம் கொண்டிருந்தான். இதை நன்குணர்ந்த டொயிலி எஹலபொலவுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டான். இத்தனைக்கும் ஹூக் தலைமையிலான படையணிக்கு வழிகாட்டியாக நின்று, கண்டியின் சந்து பொந்துகளையெல்லாம் காட்டிக் கொடுத்து முற்றுகைக்கான வியூகங்களை மிக நேர்த்தியாக வகுத்து மன்னனையும், தேசத்தையும் அந்நியர் கையில் கையளித்தவனே எஹலபொல. யுத்த முடிந்த பின்னர் எஹலபொல தனிமைப்படுத்தப்பட்டான். 1815ம் ஆண்டு கண்டியைக் கைப்பற்றிய தன் பின்னர் மத்திய மலைநாடு பற்றி பரந்த அனுபவம் டொயிலிக்கு ஏற்பட்டது.  

அம்மக்களின் சுக துக்கங்களையும், வாழ்க்கை முறை பற்றிய சகல விடயங்களையும் நன்கறிந்தவனாக இருந்தும் 1818ம் ஆண்டு இடம்பெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியின் போது டொய்லி தன் சுயரூபத்தை வெளிக்காட்டினான்.  

சாதாரண பொதுமக்கள் உட்பட அவன் மேற்கொண்ட மனித படுகொலைகளுடன், விளைச்சல் நிலங்கள், வீடுவாசல்கள், சொத்துகள் என்பனவும் அவனால் அழிக்கப்பட்டன. இதன்மூலம் பௌத்த மதகுருமார்களுடன் கொண்டிருந்த டொயிலியின் நட்பு, மக்களுடன் அவன் நடைமுறைப்படுத்தி வந்த நல்லாட்சியாளன் என்னும் நாமமும் தவிடு பொடியாகின.   

1815ம் ஆண்டின் கண்டி ஒப்பந்தத்தில் “Religion of the Boodoo” என்னும் தலைப்பிலான இணக்கப்பாடுகளும், பௌத்த பிக்குமார்களுடன் டொயிலி கொண்டிருந்த சினேகபூர்வமான நட்பும், 1818ம் ஆண்டு கலவரத்தின் போது ஆங்கிலேய சிப்பாய்கள் பௌத்த விகாரைகளை கொள்ளையிட்டும், தாக்குதல் மேற்கொண்டும் நடத்திய காட்டுத்தர்பார் மூலம் போலியானவையென புலனாகின. வண. கறத்தொட்டை தேரரிடம் அவன் கற்ற சிங்கள மொழியறிவு தொடர்பாக அவன் தனது நன்றிக் கடனை இவ்வாறு செலுத்தியிருக்கிறான் போலும்!  

சுஜித் சிவசுந்தரம் எழுதிய “The Principles of British Govt and British Jutice” என்னும் தலைப்பிலான மடலில், டொயிலியின் செயற்பாடுகள் அனைத்தும் போலியானவையென அழுத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஒபேசேகரா தெரிவிக்கின்றார். கண்டி ஒப்பந்தத்திற்கான நிகழ்வுக்கு வருகை தந்த பௌத்தமத குருமார்களுக்கு கதிரைகளில் வெள்ளை விரித்து பணிவாக வரவேற்று உபசரித்தமை அனைத்துமே நடிப்பாகும் என பிரஸ்தாப கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும் 1818ம் ஆண்டு நடைபெற்ற கலகத்தின் பின்னர் டொயிலி தனது குறிப்பில் பதிவு செய்துள்ளவற்றை வாசிக்கும்போது டொயிலியின் நடத்தைபற்றி நன்குணர முடியுமென தெரிவிக்கும் பேராசிரியர், கண்டி ஆவணக் களஞ்சிய சாலையில் அவற்றை காணமுடியுமெனவும், அவை தற்போது மங்கிப்போயிருப்பதாகவும், நவீன நுட்பங்களின் உதவியுடன் அவற்றை வாசித்தறியலாம் எனவும் தெரிவித்துள்ளார். பேராசிரியர் விமலானந்த திசாநாயக்க, கலகத்தின்போது ‘மார்ஷல் சட்டத்தை’ பிரகடனப்படுத்தி ஆளுநர் பிரவுன்றிக் மேற்கொண்ட கொடூர சித்திரவதைகளையும், மனித படுகொலைகளையும் டொயிலி கணக்கில் கொள்ளவில்லை எனவும் மௌனம் சாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

உண்மையில் 1815ம் ஆண்டுக்கு முன்னரும் அதன் பின்னரும் இருந்ததைப் போன்று ஆங்கிலேய அதிகாரிகளுக்கு கட்டளையிடக் கூடிய அதிகாரம் கொண்டவனாக டொயிலி இக்கால கட்டத்தில் இருக்கவில்லை. சுஜித் சோமசுந்தரம் அதனை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். ‘இராணுவ சிப்பாய் போன்று டொயிலி ஆளுநரின் கட்டளைகளின் பிரகாரம் பணியாற்றினார்.’ 18118ம் ஆண்டு கலகத்தின் பின்னர் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆளுநர் பிரவுன்றிக் டொயிலியின் ஆலோசனைகளை கணக்கிலெடுக்கவில்லை.  

இச் சந்தர்ப்பத்தில் புதிய நிருவாக முறையொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு டொயிலியும் ஏனைய மலைநாட்டு ஆணையாளர்களும் தள்ளப்பட்டனர். புதிய நிருவாக அமைப்பின் கீழ் மாவட்ட அதிபர்களென்னும் புதிய பதவிகளில் பலர் அமர்த்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து டொயிலி மற்றும் முன்னால் அதிகாரிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மதிப்பு இருந்தபோதும் குறிப்பிடத்தக்க நிருவாக அதிகாரங்கள் இருக்கவில்லை.  

கண்டி இராசதானியெனும் இலங்கையின் இறைமைமிக்க ஓர் அரசை கவிழ்த்து ஆங்கிலேய கொடியின் கீழ் கொண்டுவருவதற்கு அயராது உழைத்தவனும் உளவாளியாக இங்கு வந்து மொழிபெயர்ப்பாளனாகவும், அரச சேவையாளனாகவும் பணியாற்றி, கண்டி பெருநிலப்பரப்பில் சிற்றரசனுக்குச் சமமான பதவியில் அமர்ந்த ஜோன் டொயிலியை இவ்வாறு செல்லாக்காசாக்கினான் ஆங்கிலேய ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக்.  

கண்டி கெரிசன் மயானபூமி  

கண்டியில் வாழ்ந்து மறைந்த பல பிரித்தானியர்கள் மீளாத்துயில் கொண்டிருப்பது கண்டி ‘கெரிசன் மயான பூமி’யிலாகும். ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான இக்காணி இப்போது பிரிட்டிஷ் பராமரிப்பில் உள்ளது. தமது தாய்நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நினைவு கூருமுகமாக பிரித்தானிய தூதுவராலயத்தின் மேற்பார்வையின் கீழ் இம்மயான பூமி நிர்வகிக்கப்படுகின்றது.  

பிரித்தானிய எலிசபெத் மகாராணியின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் 2013ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்தபோது கண்டி கெரிசன் மயான பூமியை தரிசிக்கத் தவறவில்லை. அங்கு பல போர் முனைகளைக் கண்டவனாகிய கேப்டன் மெக்கிராசன், ஆளுநர் சர், வில்லியம் கிரகரியின் மனைவி எலிசபெத், இலங்கையில் முதலாவது மரப்பாலத்தை நிர்மாணித்த ஜெனரல் ஜோன் க்ரேசர், மற்றும் ஜோன்டொயிலி ஆகிய பிரித்தானிய, ஸ்கொட்லாந்து நாட்டவர்களின் நினைவு தூபிகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.  

இந்நாட்டின் வனப்புமிக்க இடங்களைக் கண்டுகளிப்பதற்காக வரும் பிரித்தானியர்களில் பெரும்பாலானவர்கள் கண்டிகெரிசன் மயானத்திற்கு செல்லத் தவறுவதில்லை. எனினும் இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்கள் யுத்தத்தினால் உயிர் துறந்தவர்கள் அல்ல. பல்வேறு விபத்துக்கள், மலேரியா முதலான வியாதிகளுக்குள்ளானவர்களே இங்கே புதைக்கப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு இலங்கை முழுதும் பரந்து வாழ்ந்த பிரித்தானிய நாட்டவர்கள் மரணமடைந்த பின்னர் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக பல்வேறு இடங்கள் பயன்படுத்தப்பட்டன. கொழும்பில் வசித்தவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்த இடம் காலி முகத்திடலாகும். சில வேளைகளில் தேவாலயங்களை அண்மித்த காணிகளையும் மயான பூமியாக பயன்படுத்தினர். ஆனால் கண்டியில் அவர்கள் தமது நாட்டவர்களின் பூதவுடல்களை ஸ்ரீ தலதாமாளிகையை அண்மித்த காணியிலேயே அடக்கம் செய்தனர். அதுவே கெரிசன் மயானம் என அழைக்கப்பட்டது. இம்மயான பூமியை தற்போது சார்ள்ஸ் மைக்கல் என்னும் அறுபத்தேழு வயதானவர் கண்காணித்து வருகின்றார்.

(தொடரும்...)

நன்றி சிகிர குமார பண்டார  
(ரசவித்த)  

Comments