கற்றுக்கொண்ட பாடங்களை படிப்பினையாக கொள்வோம் | தினகரன் வாரமஞ்சரி

கற்றுக்கொண்ட பாடங்களை படிப்பினையாக கொள்வோம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் சரியாக மூன்று வாரங்கள். நிறுத்தப்பட்டிருந்த திருப்பலி ஆராதனைகள் இன்று முதல் (12) ஆரம்ப மாகின்றன. மூடப்பட்டிருக்கும் கத்தோலிக்க பாடசாலைகள் நாளை மறுதினம் 14ஆம் திகதி மீளத் தொடங்குகின்றன.

நாட்டு மக்களைப் பீடித்திருந்த பயங்கரவா பீதி ஓரளவுக்கு நீங்கியிருக்கின்றது. எனினும், அச்சமும், பதற்றமும் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் ஓரமாய் அமர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாளை திங்கட்கிழமை 13ஆம் திகதி இரண்டாம் கட்டத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவதால் இந்த அச்சம் குடிகொண்டிருக்கிறது. அதனால், பொலிஸாரினதும் படையினரினதும் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் தொடர்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளின் சுவடுகளைக் கண்டறிந்து ஒடுக்குவதில் படையினர் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட  பயங்கரவாத குழுவினரால் மிகவும் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த  பெருந்தொகை வெடிபொருட்களை காத்தான்குடியில் பொலிஸார்  மீட்டெடுத்துள்ளனர். 

புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து  காத்தான்குடி கடற்கரையோர பகுதியில் மேற்கொண்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின்  போதே மிகவும் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான  வெடிபொருட்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ்  அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு  முக்கிய சந்தேக நபரான தெஹிவளை, கல்விகாரை வீதியைச் சேர்ந்த புஹாரி  மொஹம்மட் ராபிக் என்பவரை கொம்பனிவீதி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கொழும்பு 10, மருதானை, டி. பி. ஜாயா வீதியிலுள்ள தனியார்  நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி சந்தேக நபரின் தனிப்பட்ட அலுவலகத்தை  சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 83இலட்சத்திற்கும்  அதிகமான பணத்தையும், 97பவுண் தங்க ஆபரணங்களையும் மீட்டெடுத்துள்ளனர். 

அத்துடன் மேற்படி சந்தேக நபரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள சொகுசு வீடொன்றையும், வங்கிக் கணக்குகளையும் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். 

இதேவேளை, பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் மிகவும்  நெருக்கமான உறவையும், நிதி கொடுக்கல் வாங்கல்களையும் பேணி வந்த  குற்றச்சாட்டில் காத்தான்குடி மெத்தப் பள்ளி வீதியில் வைத்து கைது  செய்யப்பட்ட மொஹம்மட் அலியார் என்ற சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்  போது பல்வேறு தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 

60வயதுடைய இச் சந்தேகநபர் பயங்கரவாதிகளினால் ஹம்பாந்தோட்டை  பிரதேசத்தில் பயன்படுத்தி வந்த மறைவிடம் அல்லது பயிற்சி இல்லத்தில்  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்குபற்றியுள்ளமை  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சஹ்ரானுடன் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்பை பேணிவந்த இச்  சந்தேக நபர் பயன்படுத்தி வந்த பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடர்பிலும்  கண்டு பிடிக்கப்பட்டுள்ளன 

பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு  ஆயுதங்களையோ,வெடிபொருட்களையோ கண்டுபிடிக்காமல் விட்டுவைக்கப்  போவதில்லையென்றும் அவற்றை எவ்வாறாவது கண்டுப்பிடித்தே தீருவோம் என்றும்  உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அதேபோன்று இந்த பயங்கரவாத குழுவுடன் தொடர்பு வைத்துள்ள  அனைவரையும் கைது செய்யும் அதேசமயம் அவர்களுடன் தொடர்புபட்ட சகல  சொத்துக்களையும் கைப்பற்றுவோம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சுட்டிக்காட்டியிருக்கிறார். 

காத்தான்குடி மற்றும் மருதானை பிரதேசங்களில் கைது செய்யப்பட்ட  இரு முக்கிய சந்தேக நபர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு  பொலிஸாரினால் பல்வேறு கோணங்களில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்   சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு  குற்றப் புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நாளுக்கு நாள் முன்னேற்றம்  காணப்படுவதுடன் இந் நபர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளது  என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, முப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துவரும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  இதேவேளை, பயங்கரவாதி மொகமட் சஹ்ரானின் வலது கரமாக விளங்கியவரும் இரண்டாவது தாக்குதலை நடத்தவிருந்தவருமான மொகமட் மில்ஹானை, சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கை புலனாய்வுத்துறையினரின் தகவலுக்கு ஏற்ப சவூதி அரேபிய பொலிஸார் அவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

மக்காவுக்குச் சென்றுள்ள அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் தற்கொலைத் தாக்குதல் பயிற்சியைப் பெற்றுக்ெகாண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2018நவம்பர் 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைச் சுட்டுக்ெகான்ற சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும் இவர்தான் என்று தெரியவந்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களை ரி56ரக துப்பாக்கியால் சுட்டுக்ெகான்றவர் இவர்தான். அதேநேரம், மாவனல்லையில் அமைச்சர் கபீர் ஹாசிமின் செயலாளரைச் சுட்டுக்ெகால்ல முயற்சித்ததும் இவர்தான் என்றும் பொலிஸ் விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

மக்காவிலிருந்து கடந்த 30ஆம் திகதி நாடு திரும்பவிருந்த மில்ஹான், அவரது பயணப் பொதியை மட்டும் இலங்கைக்கு அனுப்பியிருக்கிறார். சவூதி விமான நிலையத்தில் மறைந்திருந்த அவரை, இலங்கை வழங்கிய தகவலுக்கமைய சவூதி அரேபிய அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அதேவேளை, இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய உளவுத் தகவலின் அடிப்படையில், மேலும் இருவரை சவூதி அரேபிய அதிகாரிகள் கைதுசெய்ததாக இந்தியாவின் இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. அந்தச் செய்தியின்படி, கைதுசெய்யப்பட்டவர்களுள் சஹ்ரானின் மைத்துனரும் அடங்குவதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட மூவர் சவூதி அரேபியாவில் இருக்கின்றனர். அவர்களை இலங்கையிடம் கையளிப்பதற்கான நடவடிக்ைகயை சவூதி அரேபிய அரசு மேற்கொண்டிருப்பதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஃது இவ்விதமிருக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சஹ்ரானின் குழுவில் வெடிபொருள் தொடர்பான விசேட நிபுணர்கள் இருவரும் இருந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. வெடிக்க வைக்கப்பட்ட சகல குண்டுகளையும் இந்த இருவரே தயாரித்துள்ளனர். ஒருவர் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி இறந்த ஹஸ்துன் என்பவராவார். மற்றையவர் சாய்ந்தமருதில் குண்டை வெடிக்கச் செய்த றிழ்வான். இவர் சஹ்ரானின் சகோதரராவார்.  றிழ்வானின் ஒரு கண்ணும், கைவிரல்களும் இழக்கப்பட்டது குண்டு தயாரிக்கும்போது தவறுதலாக ஏற்பட்ட வெடிப்பினால் என்பதையும் பொலிஸார் கண்டறிந்துகொண்டுள்ளனர். காத்தான்குடியில் இருந்த பயிற்சி முகாமிலேயே இந்த அனர்த்தத்திற்கு அவர் முகங்கொடுத்துள்ளார் என்று பொலிஸார் கூறுகிறார்கள். பயிற்சி முகாமில் சஹ்ரானின் ஆதரவாளர்களுக்குக் குண்டுகளை வைப்பதற்கு இந்த விசேட நிபுணர்களே பயிற்சியளித்துள்ளனர். இதில் றிழ்வானே முன்னிலையில் இருக்கிறார். அவர் இணையத்தளத்தின் உதவியுடன் குண்டு வைப்பதற்கான அறிவைப் பெற்றிருக்கிறார் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கருகில் வான் ஒன்றில் இருந்து வெடித்த குண்டு தொடர்பாக ஆச்சரியமான தகவல்களைப் பொலிஸார் பெற்றுக்ெகாண்டுள்ளனர். தேவாலயத்திற்கு மிக அருகிலுள்ள ஓர் இடத்தில் வைத்தே வானில் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் அனுமானிக்கின்றர். அது தொடர்பான காணொலி பற்றித் தற்போது படைத்தரப்பில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

சஹ்ரான் மிகக் குறுகிய காலத்தில் தமது கொள்கைக்கு ஏற்ப நூற்றுக்கணக்கானவர்களைப் பயிற்றுவித்துள்ளமையையும் படையினர் கண்டறிந்துகொண்டுள்ளனர். நாட்டில் தமது தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைக் கட்டியெழுப்புமுகமாகப் பல பள்ளிவாசல்களையெல்லாம் நிர்மாணித்து வந்த சஹ்ரான், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி ஏன் இறந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள புலனாய்வுத் துறையினருக்கும் கேள்வி எழுந்திருக்கின்றது. அது குறித்து அவர்கள் மிக ஆழமாக ஆராய்ந்து வருவதாகப் பாதுகாப்புத் தரப்புகள் கூறுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 20இற்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் இரண்டாகப் பிரிந்ததன் காரணமாக இலக்கினை அடைய முடியாது போயிருக்கிறது. என்றாலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சிகளைப் பெற்றுக்ெகாண்டுள்ளவர்கள் யார் யார் என்பதைப் பற்றி அறிந்து இந்தப் பயங்கரவாதத்தை இலங்கையில் பூண்டோடு ஒழித்துக்கட்டுவதற்குப் பாதுகாப்புப் படையினர் துரித நடவடிக்ைககளை மேற்கொண்டு வருவதாகப் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எந்தவித பாதுகாப்பு நடவடிக்ைகயின்போதும் சாதாரண முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுவிடாமல் பார்த்துக்ெகாள்ள வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்ைக. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதனை வலியுறுத்தியுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் இந்தக் கருத்தை உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

1980களில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியால்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தமிழ் இளைஞர்கள் அதிகமாகச் சேர்ந்தார்கள். அதேபோன்று, தற்போது அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்ைக எடுக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.

தமிழ் மக்களின் போராட்ட  காலத்தில் அரசு விட்ட தவறுகளைத் திருத்திக் ெகாண்டு படிப்பினைகள் மூலம் கற்றுக்ெகாண்ட பாடத்தைக்ெகாண்டு எதிர்கால நடவடிக்ைககளை மேற்கொள்வதே ஆரோக்கியமான நகர்வாக இருக்கும்!

விசு கருணாநிதி

Comments