சாணேற முழம்? | தினகரன் வாரமஞ்சரி

சாணேற முழம்?

வேகமாகப்பெருகிவரும் சனத்தொகையின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமாயின் விவசாயமே அடிப்படையாகக் காணப்படும். என்ன தான் வேறு தொழிற்றுறை, சேவைகளை நாடிப் பலரும் சென்றாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் விவசாயி தன் கடமையைச் செவ்வனே செய்து கொண்டிருப்பதால் தான் நாம் உயிர் வாழ முடிகிறது.  

இத்தகையதோர் நிலையிலே தான் உலகளாவிய ரீதியில் முக்கியமான விவசாயப் பாரம்பரிய முறைமைகளை உலக விவசாய ஸ்தாபனம் ஊக்குவித்து வருகிறது. இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகின்றபோதும் உலக வரைபடத்தில் ஒரு சிறு புள்ளியாகவே தெரிகின்ற இலங்கையிலும் கூட அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய, தனித்துவமான முறைமைகள் காணப்படத்தான் செய்கின்றன. அவற்றின் பெறுமதி பற்றி எமக்குத் தெரிந்திருக்கிறதோ இல்லையோ உலகுக்குத் தெரிந்திருக்கிறது.  

முதலாவது உலர்வலயங்களில் காணப்படும் சிறு குளங்களின் தொகுதியாகும். இலங்கையின் உலர் வலயம் ஜீவ நதிகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. மாரி காலங்களில் அவை பெருக்கெடுக்கும். கோடை காலங்களில் அவை வற்றிவிடும். ஆதலினால் மழை நீரின் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்காக ஆறுகள் பாய்ந்தோடும் பாதையிலே நில அமைவுகளையும் சாய்வையும் கருத்தில் கொண்டு அவற்றை மறித்து அணை கட்டி சிறியதும் பெரியதுமான ஆயிரக்கணக்கான குளங்களை எம்முன்னோர்கள் கட்டினர். உதாரணமாக ஒரு குளம் இருக்கும் பகுதியில் மழை பெய்தால் அக்குளம் நிரம்பி மீதமான நீர் ஆற்றின் வழியே ஓடி சாய்வு வரிசையில் இருக்கும் அடுத்த குளத்தைச் சென்றடையும். இப்படையே ஆற்றின் பாதை வழியே காணப்படும் சகல குளங்களையும் நிரம்பிய பின்னரே மழை நீரால் கடலைச் சென்றடைய முடியும்.  

“வானிலிருந்து வீழும் ஒரு துளி நீரையேனும் கடலினுள் கலக்க விடமாட்டேன்” என மகா பராக்கிரமபாகு மன்னன் கூறியதன் அடிப்படையும் இது தான்.  

தொழில் நுட்ப வசதிகள், நவீன விஞ்ஞான வசதிகள் எவையுமின்றிய காலம் என நாம் கருதும் காலத்திலேயே மிச்சிறந்த நுட்பத்துடன் கட்டப்பட்ட குளங்கள் தான் இன்றும் உலர்வலயத்தில் பாவனையில் இருக்கின்றன. இலங்கையின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் உலர்வலயத்தின் ஆதாரமே இக்குளங்கள் தான். ஆனால் அபிவிருத்தி என்ற பெயரிலே இக்குளத் தொகுதிகளின் வலையமைப்பை விளங்கிக் கொள்ளாது அலட்சியம் செய்வதோடு மட்டுமல்லாது அவ்வலையமைப்பு செவ்வனே இயங்க இயலாமல் தடுப்பதிலும் நாம் பெரும்பங்காற்றுகிறோம்.  

வலையமைப்பிலே நீரோடும் பாதைகளைப் பேணாது அவற்றை வேறு அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதும் குளங்களுக்கிடையிலான இடைத் தொடர்புகளைக் கவனியாது அவற்றை விஸ்தரிப்பதும் பராமரிக்காமல் விடுவதும் நகரப்பகுதிக் குளங்கள் அத்துமீறிப் பிடிக்கப்பட்டு வருவதும் பொதுமக்களாக, அவற்றைக் கண்டும் காணாமல் விடுவதும் என நவீன அபிவிருத்தியின் போர்வையில் மனித நடவடிக்கைகளால் சந்ததிகளாகப் பேணி வந்த பாரம்பரியம் மறக்கடிக்கப்பட்டு வருவதை எவரும் மறுக்க இயலாது. உலர்வலயங்களில் ஏற்படும் அதீத வெள்ளப்பெருக்கும் வரட்சி நிலைமைகளும் இந்தக் குள வலையமைப்புகளை நாம் ஒழுங்காக ப் பேணாமையால் தான் ஏற்பட்டவையோ எனச் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.  

ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனம் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இக்குள வலையமைப்பை முக்கியத்துவம் பெற்ற பாரம்பரிய விவசாய முறைமையாக அங்கீகரித்திருக்கிறது. அத்துடன் ஜப்பான் நாட்டு நிதியுதவிகள் கிடைக்கப்பெற்று உலர்வலயத்திலே இத்தகைய பல குள  வலையமைப்புகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் பொதுமக்கள்  மத்தியிலும், நாளை இந்த நாட்டை ஆளப்போகும் இளைஞர்கள் மத்தியிலும் இது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாவிட்டால், ஏற்பட்டிருக்கும் காணி இல்லா நெருக்கடி நிலைமையின் மத்தியில் அவற்றைப் பேணுவது எளிதாக இருக்காது.  

இரண்டாவது முறைமை கண்டிய வீட்டுத்தோட்ட முறைமையாகும். உயிர்ப் பல்வகைமையைப் பொறுத்தவரையிலும் மழைக் காடுகளைப்பொறுத்த வரையிலும் மத்திய கோட்டு வலய நாடுகள் அதிஷ்டம் வாய்ந்தவை. ஏனெனில் சூரிய ஒளியின் உச்ச அளவு அந் நாடுகளுக்கு மாத்திரமே கிடைக்கிறது. உலகின் உயிர்ப்புக்கு சூரிய ஒளியே அடிப்படை ஆதாரமாகும். தாவரங்கள் சூரிய ஒளியை சக்தியாக மாற்றுவதிலிருந்து உணவுச்சங்கிலிகளும் உணவு வலைகளும் ஆரம்பிக்கின்றன. ஆதலினால் தான் மத்தியகோட்டு வலய மழைக்காடுகளில் உயிர்ப்பல்வகைமை செறிந்து காணப்படுகிறது. இம்மழைக்காடுகளைத் தான் ‘உலகின் சுவாசப்பை’ என வர்ணிப்பர். ஆயினும் அவற்றின் மரங்களுக்கான தேவையும் அதிகரித்த வண்ணமே செல்கிறது. ஆதலினால் தான் இயற்கை வளங்களை சாபம் என்பர். அதற்கமைய குறிப்பாக இந்த மழைக்காடுகள் அதிக அச்சுறுத்தலை எதிர் நோக்கி வருகின்றன . ஏனெனில் அவற்றில் செறித்திருக்கும் உயிர்ப்பல்வகைமையின் பெறுமதி எண்ணற்றது. பண ரீதியாக மதிப்பிட முடியாதது. பலரும் அறிந்திராது. மத்திய கோட்டு வலய நாடுகளிலே இந்த மழைக்காடுகள் காணப்படும் நாடுகளிலே அவற்றினால் வழங்கப்படும் சேவைகளை ஒத்த சேவைகளை வழங்க க் கூடிய மற்றுமோர் சூழல் தொகுதியும் காணப்படுகிறது. அதுதான் வீட்டுத்தோட்டமாகும். வன ங்களிலே காணப்படும், உணவுக்கும் மருந்து மற்றும் வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படக்கூடிய தாவரங்களை காலத்துடன் தம் அனுபவங்களால் கண்டறிந்து அவற்றை தமது நிலங்களிலே மக்கள் வளர்க்கத்தொடங்கினர். காலப்போக்கில் அவை வீட்டுத் தோட்டங்களாக்கப்பட்டு தனித்துவமான சூழல் தொகுதிகளாக மாற்றமடைந்தன. இலங்கையிலும் கண்டிமாவட்டம், அதனை அண்டிய பகுதிகளிலே இவ்வீட்டுத்தோட்டங்களை இன்றும் காண முடியும். அவற்றின் சிறப்பு யாதெனில், அவ்வீட்டுத்தோட்ட உரிமையாளர்களுக்கு வருமானமானது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கென்றல்லாது வருடம் முழுவதும் பரந்துபட்டுக் கிடைக்கும். அத்துடன் மழைக்காடுகளை ஒத்த சூழல் தொகுதிகளால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இவ்வீட்டுத்தோட்டங்களால் வழங்க முடியும்.  

ஆயினும் இலங்கையைப் பொறுத்த வரையிலே பொதுவாக இளஞ்சந்ததியினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் போகவும், சந்ததிகள் கடக்க, காணிகள் துண்டாடப்படவும், நகரமயமாக்கலுடன் நிலத்தின் மதிப்பு அதிகரிக்க நிலப் பாவனை மாறூவது தவிர்க்க முடியாமல் போகவும் இக் கண்டிய வீட்டுத் தோட்ட முறைமைகள் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்குகின்றன. அவை அழிந்து போகும் போது இலங்கைக்கே உரித்தான பல சுதேச தாவர இனங்களும் அவற்றிலே தங்கியிருக்கும் ஏனைய உயிரிங்களும் கூட அழிந்துபோகும் அபாயத்தை எதிர் நோக்குவன.  

இத்தகைய பாரம்பரிய விவசாய முறைமைகளைப் பாதுகாத்தால், நில வடிவமைப்பை மட்டுமன்றி கலாசாரம், உயிர்ப்பல்வகைமை, அவற்றுடனிணைந்த அறிவையும் பேண முடியும். அடிப்படையில் உணவு, விவசாயம் சார் துறைகள் யாவும் ஒருங்கிணைந்த வடிவில் பேணப்பட வேண்டும். பொருளாதார, சமூக, சுற்றுச் சூழல் தொடர்பிலான விட்டுக் கொடுப்புகள் ஆராயப்பட்டு வரைபடங்களில் குறிக்கப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தரவுகளிந்றி எழுந்தமானமாக மேற்கொள்ளப்படும் எந்த முடிவும் பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்க வல்லதாக இருக்கும். 

அவை சார்ந்த பிரதானமான பிரச்சினைகள் காரண காரியங்களுடன் ஆராயப்பட்டே அத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  

உதாரணமாக உலகிலேயே அதிகளவு நீர்ப் பாவனையை மேற்கொள்ளும் துறை விவசாயமாகும். உணவையும் நீரையும் பகிர்ந்தளிக்க சக்தி அவசியம். உணவு உற்பத்தியிலும் விநியோகச்சங்கிலியிலும் சக்தியின் நுகர்வு மிக அதிகமாக இருக்கும். இத்துறைகளில் கொள்கைத் தீர்மானங்களினை மேற்கொள்ளும் போது ஒன்றின் பாதிப்பு மற்றொன்றில் வெளிப்படுத்தப்படும். இதனால் ஆர்வமுடையவர்கள் மத்தியில் சல சலப்பு ஏற்படுவதோடல்லாமல் நோக்கங்கள், விட்டுக்கொடுப்புகள் தொடர்பில் சிக்கலான நிலைமை தோற்றுவிக்கப்படும்.  

அறிந்தோ அறியாமலோ, மிகச் சிறிய நாடாகிலும் நாம் உலகமயாமதலுக்கு ஆட்பட்டு விட்டோம். இந் நிலையில் எவரையும் பகைக்க இயலாது. நாட்டுக்குள்ளும் சரி நாட்டுக்கு வெளியே நாடுகளுக்கிடையேயும் சரி எமது நடவடிக்கைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் முன்னாலும் பலரது பங்களிப்பு காணப்படும். அவை ஒவ்வொன்றும் இருந்தால் மாத்திரமே அந் நடவடிக்கை வெற்றியளிக்கும்.

இது நாம் மாட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எவரும் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை.  

விவசாயத்துறையும் இவ்வடிப்படைக்கு விதி விலக்கல்ல. வல்லமை மிக்கவர்களுடன் இணைந்து உரிய துறைகள், நிறுவனங்கள் கட்டமைப்புகள் வலுப்பட வேண்டியது மிக அவசியமாகும். அப்போது தான் வளங்களுக்கான அணுகல் கிடைப்பதோடு வினைத்திறன் மிக்கதாகவும் இருக்கும்.  

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு நாடொன்று இணங்கியிருக்கிறதென்றால் அதன் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு இணங்கியிருக்கிறான் என்றே அர்த்தப்படும். அவ்வாறு இணங்கி நான்காவது வருடத்தின் நடுப்பகுதிக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தசாப்தம் மாத்திரமே எஞ்சியிருக்கிறது. இலக்குகளோ சில வேளைகளில் பேராசை மிகுந்தனவாகவும் கூடத் தென்படும். ஆயினும் இணங்கி விட்டால் அடைய முயற்சி செய்தே ஆக வேண்டும். செய்யாவிட்டால் தண்டனை ஏதும் இல்லையாயினும் அபிவிருத்திக்கான நிதியின் வருகை கேள்விக்குறியாகி விடும். சாணேற முழம் சறுக்கிய கதையாக இல்லாமல், காலத்தின் தேவையை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக ஒன்றிணையாவிட்டால் அபிவிருத்திக்கான 3 டிரில்லியன் அமெரிக்க டொலர் நிதி எமக்கு எட்டாக் கனியாகவே மாறிவிடும்.

சாரதா மனோகரன் 

Comments