ரமழான் தக்வாவின் பாசறை | தினகரன் வாரமஞ்சரி

ரமழான் தக்வாவின் பாசறை

மனிதனின் புலன்களை பயிற்றுவித்து ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் பயிற்சிப் பாசறையான புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. மறுமையை நோக்கிய முஃமினின் பயணத்திற்கு தேவைப்படும் வழித்துணைச் சாதனங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதனை கற்றுக்கொடுக்கும் பாசறையே புனித ரமழான் மாதமாகும். ஆடைகளில் சிறந்த ஆடையாகிய தக்வா எனும் ஆடையை ஆன்மாவுக்கு அணிவிக்கக் கற்பித்துத்தரும் மாதமே புனித ரமழான் மாதமாகும். 

'இறைவிசுவாசம் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.'    (2:183)

அஷ்ஷெய்க் யூஸுப் அல்கர்ழாவி இறைவழிபாடுகளின் தத்துவங்களை விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றார்; 'முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹு த்தஆலா இரு முக்கிய கூறுகளின் மூலம் படைத்தான். ஒன்று களிமண் மற்றது அல்லாஹ் தன்னிடமிருந்து ஊதிய ரூஹ். மனிதனில் இருக்கும் இவ்விரு கூறுகளுக்கும் மத்தியில் நிரந்தரப் போராட்டம் இருந்து கொண்டேயுள்ளது. களிமண்ணினாலான முதற்பகுதி மனிதனை தாழ்வின் பக்கமும், ரூஹினாலான இரண்டாம் பகுதி உயர்வின் பக்கமும் அழைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனிலும் இருக்கும் இப்போராட்டத்தில் முதற்பகுதி மிகைத்து விட்டால் மனிதன் தனது மனோ இச்சைகளுக்கு அடிமையாகி சடவாதத்தில் மூழ்கி ஒரு மிருகத்தின் நிலைக்கு அல்லது அதைவிடவும் இழிவான நிலைக்கு ஆளாகிவிடுகின்றான். இதற்கு மாறாக இரண்டாம் பகுதியான ரூஹ் மிகைத்து களிமண் கூறு தோற்கடிக்கப்படும்போது மனிதன் உயர் நிலையை அடைந்து 'மலாயிக்கா' பண்புகளைப் பெருவதன் மூலம் இறைதிருப்தியைப் பெற்று உலக வாழ்வின் உயர் இலட்சியத்தை அடைந்துகொள்கின்றான். இவ்வுயரிய இலட்சியத்தைத் தனது அடியார்கள் அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் இவ்வுலகை ஒரு சோதனைக்களமாக ஆக்கி மனிதன் மீது சில கடமைகளை விதியாக்கியுள்ளான். நோன்பு அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகும்.' 

அல்லாஹ் மனிதன் மீது விதித்த கடமைகளின் பின்ணணியில் நாம் அறிந்த தத்துவங்களைவிட அறியாத தத்துவங்களே அதிகமுள்ளன. இறை வழிபாடுகளில் மனிதன் ஈடுபடுவதன் மூலம் நன்மையடைபவன் மனிதனாகவே உள்ளான். ஏனெனில் மனிதர்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதன் மூலமோ அல்லது மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிராகரிப்பதன் மூலமோ அல்லாஹ்வுக்கு எந்தவித இலாபத்தையோ, நஷ்டத்தையோ ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில் அல்லாஹ் தேவையற்றவன். இதனையே பின்வரும் வசனம் விளக்குகின்றது. 

'எவர் நன்றி செலுத்துகின்றாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தம(து நன்மை)க்குத்தான். மேலும் எவர் (அவனை) நிராகரிக்கின்றாறோ (அவர் தனக்கே தீங்கினைத் தேடிக்கொள்கின்றார். ஏனெனில் ) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழப்படுபவன்.' (31:12) 

இறைவழிபாடுகளின் பின்னாலுள்ள தத்துவங்களை நாம் புரியவில்லை என்பதற்காக தத்துவங்களே இல்லை என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. உடல் நோயைக் குணப்படுத்த வைத்தியர் தரும் மாத்திரைகளை ஏன்? எதற்கு? என வினவாமல் நம்பிக்கையுடன் அவற்றை உட்கொள்ளும் எமக்கு உளநோய்களைக் குணப்படுத்த அல்லாஹ் விதித்த கடமைகளில் தத்துவங்கைள ஆராய்வதோ ஏன்? எதற்கு? என வினாத்தொடுப்பதோ ஈமானியப் பண்பல்ல. 

இறைவழிபாடுகளின் தத்துவங்கள் மனிதர்களால் முன்வைக்கப்படும்போது அதில் நிறையத் தப்புத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது மாத்திரமல்லாமல் அவைகளுக்கு நிரந்தரத்தன்மையும் கிடையாது. ஆனால் அல்லாஹ்வும், அவனது ரஸுலும் தத்துவங்களை முன்வைக்கும்பொழுது அது நிரந்தரமானதாகவும், என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக வும் இருக்கும். இந்தவகையில் நோன்பு எம்மீது விதியாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக்கொண்டுள்ள வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தி உள்ளான். 

இவ்வசனம் மூலம் நோன்பு விதியாக்கப்பட்டதன் நோக்கம் தக்வாவை அடைந்துகொள்வதாகும் என்பது புலனாகின்றது. மேலும் ஸஹீஹுல் புகாரியில் பதிவான ஒரு ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் நோன்பின் நோக்கத்தைப் பின்வருமாறு விளக்குகின்றார்கள். 

'நோன்பு ஒரு கேடயம். எனவே நோன்பு வைத்தவர் தீய வார்த்தைகளைப் பிரயோகிக்க வேண்டாம். அறியாமையின் செயல்களிலும் ஈடுபட வேண்டாம். நோன்பாளிக்கு ஒருவர் திட்டினால் அல்லது சாபமிட்டால் நான் ஒரு நோன்பாளி என இரு முறை கூறிக்கொள்ளட்டும்' 

இதன்மூலம் நோன்பின் இலக்கைத் தெளிவாக விளங்கக்கூடியதாயுள்ளது. அனைத்துப் பாவச்செயல்களைவிட்டும் தடுக்கும் கேடயமாகவே நோன்பு இருக்கின்றது. நோன்பாளியை ஒருவர் திட்டி சபிக்கின்றபோது அவர் 'நான் நோன்பாளி' எனக்கூறட்டும் என்ற நபியவர்களது போதனை தான் நோன்பாளியென்பதைப் பிறருக்கு அறியப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல. மாறாக தான் நோன்பாளியென தனக்குத்தானே ஞாபகமூட்டி தன்னை முற்றாகப் பாவச்செயல்களிலிருந்து தடுத்துக்கொள்வதுவே இப்போதனையின் உயரிய நோக்கமாக உள்ளது. இதுவே உண்மையான தக்வாவாகவும் உள்ளது. 

தக்வா (இறையச்சம்) எனும் சொல்லுடன் தொடர்புடைய சொற்கள் புனித அல்குர்ஆனில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு எனும் அர்த்தத்தைக்கொண்ட 'விகாயத்' எனும் மூலச்சொல்லிருந்து 'தக்வா' எனும் சொல் பெறப்பட்டுள்ளது. இவ்விரு சொற்களுக்குமிடையிலான தொடர்பினை உற்று நோக்கும்பொழுது இரு சொற்களும் 'பாதுகாப்பு' எனும் அர்த்தத்தைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. தக்வாவின் மூலம் மனிதன் தன்னை பாவச் செயல்களிலிருந்தும், ஷைத்தானிடமிருந்தும், நரகிலிருந்தும் பாதுகாத்துக்கொள்கின்றான். தக்வாவின் மூலம் இவ்வுயரிய நிலையை ஒவ்வொரு முஃமினும் அடைந்துகொள்ள அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கியுள்ள கடமைகளில் நோன்பு பிரதான ஒன்றாகும். 

தக்வாவின் யதார்த்தத்தை விளக்கும் அறிஞர்களின் கருத்துக்களையும் உற்று நோக்கினால் பின்வரும் விளக்கங்களைக் கண்டுகொள்ள முடியும். 

இப்னு மஸ்ஊத் (ரழி): 'தக்வா என்பது அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பட்டு மாறுசெய்யாதிருத்தல், அவனை ஞாபகமூட்டி மறக்காதிருத்தல், அவனுக்கு நன்றி செலுத்தி நிராகரிக்காதிருத்தல் என்பனவாகும்.' 

தடைசெய்யப்பட்டவைகளை தவிர்ந்து கொள்வதை தக்வா என அபூஹுறைரா (ரழி) விளக்கியுள்ளார். அவரிடம் தக்வாவைப் பற்றி வினவப்பட்டபோது 'முட்பாதையில் நீர் நடந்து செல்லும் போது முட்களிலிருந்து உன்னை பாதுகாத்து நடப்பதுவே தக்வாவாகும்' என பதிலளித்தார். 

இப்னுல்​ைகய்யும்: 'தக்வாவின் யதார்த்தம் என்னவெனில் இறைகட்டளை, தடை இரண்டிலும் பூரண விசுவாசத்துடன் அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்பபடுவதாகும. அல்லாஹ் எதனை ஏவியுள்ளானோ அதனை பூரண விசுவாசத்துடனும், அல்லாஹ்வின் வாக்குறுதியில் பூரண நம்பிக்கையுடனும் செயற்படுவதாகும். அத்தோடு அல்லாஹ் விலக்கியுள்ளவைகளை பூரண விசுவாசத்துடனும், அவனது எச்சரிக்கைகளில் பயத்துடனும் விட்டுவிடுவதாகும்.' 

இப்னு ரஜப்: 'அடியான் எதனைப் பயந்து அஞ்சுகின்றானோ அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆக்கிக் கொள்ளும் தடயமே தக்வாவாகும்.' 

அஹ்மத் இப்னு ஹன்பல்: 'நீ ஆசைப்படும் ஒன்றை நீ அஞ்சும் ஒன்றிற்காக விட்டு விடுவதே தக்வாவாகும்.' 

தக்வாவை சொந்தமாக்கிக் கொண்டோர் விலைமதிக்க முடியாத செல்வத்தின் சொந்தக்காரர்களாவார்கள். அவர்களே உண்மையான நிம்மதியையும், சந்தோசத்தையும் ஈருலகிலும் அடைந்து கொள்வார்கள். 

'இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி

(யுடையோரு)க்குத் தான்.' (20:132) 

கடந்தகால ரமழான் மாதங்களில் நோன்பு நோற்றதன் மூலம் நோன்பின் இலக்காகிய தக்வாவை அடைந்து அதனை பாதுகாத்துக் கொண்டுள்ளோமா என எம்மை நாமே சுய விசாரணை செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். ரமழான் மாதத்தில் மாத்திரம் தக்வாவின் உச்சகட்டடத்தை அடைந்து ரமழான் முடிந்ததும் பழைய நிலைக்குத் திரும்பி விடுவது முத்தகீன்களின் பண்பன்று. முத்தகீன்களின் பண்புகள் புனித அல்குர்ஆனில் பல இடங்களில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. 

தக்வா நற்பண்புகள் யாவையும் உள்ளடக்கியிருப்பதோடு அனைத்துத் தீய கருமங்களிலிருந்தும் பாதுகாப்பாகவும் உள்ளது. இதனாலேயே இமாமுல் முத்தகீன் முஹம்மத் (ஸல்) அன்னவர்கள் கூட தக்வாவை வேண்டி அதிகம் பிரார்த்தனை செய்பவராக இருந்தார்கள். இப்புனித ரமழானில் நோன்பின் இலக்கை அடைந்துகொண்ட முத்தகீன்கள் கூட்டத்தில் எம்மனைவரையும் அல்லாஹுதஆலா ஆக்கிவைப்பானாக.

அஷ்ஷெய்ஃ

தாஹிர் ஏ நிஹால்...?

(அஸ்ஹரி) (அதிபர், கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி-

வடதெனிய, வெலம்பொட)

Comments