வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்! | தினகரன் வாரமஞ்சரி

வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும்!

வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் கற்பதல்ல.   புத்தகம் மனிதனின் சிறந்த நண்பன். ‘கண்டது கற்க பண்டிதனாவான்’ எனும் முதுமொழி இதனை பறைசாற்றுகிறது.  வாசிப்பு இல்லாமல் கற்றல் எனும் செயற்பாடே நிறைவு பெறாது.

ஒரு சிறந்த வாசகனால் மட்டுமே சிறந்த எழுத்தாளனாக  முடியும். ஒரு சிறந்த எழுத்தாளனால் மட்டுமே சிறந்த பேச்சாளனாக முடியும். ஆகவே மனித தொடர்பாடலின் மையப்புள்ளியே வாசிப்பு ஆகும்.

எவன் ஒருவன் வாசிக்காதவனாக இருக்கிறானோ அவன்   மனதில், அறிவில், அறியாமை இருள் படிந்திருக்கும். வாசிப்பு என்பது ஒரு மனிதனின் குழப்பமான மனநிலையை அகற்றி நன்னிலைப்படுத்த உதவுகிறது. இதேபோன்று புதிய  விடயங்கள் மனதில் இடம்பிடித்துக் கொள்வதற்குரிய சந்தர்ப்பத்தை வாசிப்பு ஏற்படுத்துகிறது.

மேலும், நல்ல நூல்கள் எமக்கு சிறந்த வழிகாட்டியாக  அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் நண்பனாக பல்வேறு பாத்திரங்களை வகிக்கின்றது. ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஒரு சிறைச்சாலை  மூடப்படுகிறது! என்று வீவேகானந்தர் கூறியுள்ளார். உலகில்  தோன்றிய எல்லாத் தலைவர்களும் வாசிப்பதன்  மூலம் தம்மை முழுமைப்படுத்திக் கொண்டவர்கள்.

‘ஒருகோடி ரூபாய்  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன்!? என ‘மகாத்மா காந்தி’ கூறியுள்ளார். இதே போன்றுதான், உலகின் தலைச்சிறந்த  தத்துவ ஞானியான 'சோக்ரடீஸ்’ தனக்கு நஞ்சூட்டப்படும் வரை வாசித்துக் கொண்டு இருந்தார் என்று வரலாறு கண்ட உண்மை. வாசிப்பதன் மூலம் ஒருவனது மொழித்திறன் விருத்தி, சொல்வான்மை, பொது அறிவு

வளர்ச்சி தன்னம்பிக்கை ஆளுமை விருத்தி ஞாபகசக்தி, அதிகரிப்பு, கிரகித்தல் என்பன எம்முன் வளர்கிறது. எனவே,  மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு வாசிப்பு.  வாசிக்காதவன்  அரை மனிதன் ‘வாசிப்பவனே’ முழு மனிதன் ஆகும்.

யூசுப் உஸ்பான்,
தரம் 04, கொ/சாஹிரா கல்லூரி,
கொழும்பு.

Comments