அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென மலை யக மக்கள் முன்னணி தலைவர் அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஹற்றன், வெளிஓயா தோட்டத்தில் மக்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு (18) நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவித்ததாவது,  அமைச்சர் ரிஷாட் பதியூதின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பாராளுமன்றத்தில் முதலில் குரல் கொடுப்பவன் நானாகவே இருப்பேன். ஆனால், அதைவிடுத்து அரசியல் இலாபத்திற்காக அவர் மீது குற்றம் சாட்டுவதையும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டு வருவதையும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை, அமைச்சர் மீது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாகும். 

அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றவர்களின் சதித் திட்டமாகவே இதனை மலையக மக்கள் முன்னணி பார்க்கின்றது. சிறுபான்மை கட்சிகளும், சிறுபான்மை மக்களும் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். 

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை குழு அமைக்கப்பட்டு அவர் மீது குற்றம் இணங்காணப்படும் பட்சத்தில் அதற்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நான் வழங்க தயாராக இருக்கின்றேன். 

அதைவிட்டு வெறுமனே வதந்திகள் மூலமாகவும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கு தனது அரசியல் இலாபத்தின் நோக்கத்துடனும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஹற்றன் விசேட நிருபர் 

 


 

Comments