பயங்கரவாத தாக்குதலினால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

பயங்கரவாத தாக்குதலினால் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி

பொருளாதாரத்திலும் தாக்கம் -பிரதமர்

பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இது எமது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான மூலோபாயங்களையும் அரசாங்கம் துரித கதியில் வகுக்கும் என்பதுடன், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக மலைநாட்டை மாற்றிமையப்பதற்கு விசேட திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

மஸ்கெலியா, நல்லதண்ணி பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்குள்ள சமன் விகாரையில் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அதன்பின்னர் நல்லதண்ணி விடுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.    அவர் இங்கு மேலும் கூறியதாவது,  

ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக மத்திய மலைநாடு காணப்படுகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கண்டியில் 10ஆண்டு சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்திட்டம் நுவரெலியா மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும். 

பொகவந்தலாவ பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் விரும்பதக்க பிரதேசமாக கடந்த டிசம்பர் மாதம் இணங்காணப்பட்டுள்ளது. இங்கு உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் கோல்ப் விளையாட்டு மைதானமொன்றும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

பொகவந்தலாவ, நுவரெலியா, நானுஓயா மற்றும் கித்துல்கலை போன்ற பிரதேசங்களை சுற்றுலாத் தளங்களாக மாற்றியமைப்பதுடன் மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன்பிரிட்ஜ் உள்ளிட்ட பிரதேசங்களையும் சுற்றுலாத்தளங்களாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த் ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல்கள் காரணமாக சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துவருகிறது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது எமது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

க.கிஷாந்தன் 

Comments