வன்முறை சம்பவங்களின் பின்னணியில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் | தினகரன் வாரமஞ்சரி

வன்முறை சம்பவங்களின் பின்னணியில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்

புலனாய்வுத்துறை தகவல்

வடமேல் மாகாணத்தையும், மினுவாங்கொடை பிரதேசத்தையும் மையப்படுத்தி கடந்த 13ஆம் திகதி கட்டவிழ்ந்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்புலத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான் உள்ளரெனப் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இப்பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்களைத் தோற்றுவிக்க இவர்கள் தெளிவாகத் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்துக்கு அண்மித்த வர்த்தக நிலையங்களைத் தாக்குதலுக்கு உட்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். முற்றாக முகத்தை மறைக்கும் ஹெல்மட் மற்றும் கருப்பு அங்கியை அணிந்து மினுவாங்கொடையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

இதேவேளை, நாத்தாண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் பின்புலத்திலும் இக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்தான் உள்ளனரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வன்முறை சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இவர்கள், இந்த இடத்தில் இரகசிய கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, பிங்கிரிய போன்ற பிரதேசங்களிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களே வன்முறைச் சம்பவங்களைத் தோற்றுவித்துள்ளனர்.    ஜனாதிபதியை படுகொலை செய்யவுள்ளதாக இரகசிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்த நாமல் குமார என்பவர் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை களத்தில் இருந்ததுடன், சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் சில திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காகவே இங்கு வருகைத்தந்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

நாமல் குமார, எதிர்க்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவிருந்ததுடன், குருணாகலையிலுள்ள வர்த்தகரொருவருடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றையும் கட்டியெழுப்பியுள்ளாரெனப் புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.  

வடமேல் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Comments