அத்தனைக்கும் ஆசைப்படு! அடுத்தவனைப் பேசவிடு!! | தினகரன் வாரமஞ்சரி

அத்தனைக்கும் ஆசைப்படு! அடுத்தவனைப் பேசவிடு!!

"உன்னுடைய கருத்தில் நான் உடன்படவில்லையாயினும்; உனது கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாப்பதற்காக எனது உயிரைக் கூட விடுவதற்கும் நான் தயாராக இருக்கின்றேன்" என்றார் பிரெஞ்சு அறிஞர் வோல்டேயர்!  

எந்தவொரு கருத்தும், எந்தவோர் எதிர்க்கருத்தும் தடை செய்யப்படக் கூடாது. சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்குக் கேள்விகளை முன்வைப்பது, இது நியாயம்தானா? என்று அவர்களோடு விவாதிப்பது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களுக்கு வலுவான கண்டனக் குரல் எழுப்புவது, அந்தக் கண்டனங்களின் நியாயச் சீற்றம் கண்டு உரியவர்கள் தாங்களாகவே முடிவை மாற்றிக்கொள்வது, இத்தகைய அணுகுமுறையைத்தான் பலரும் ஆதரிக்கின்றார்கள். ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை பறிக்கப்படுவது என்பது, அந்தக் கருத்து என்ன என்று மக்கள் கேட்பதற்கான உரிமையும் பறிக்கப்படுகிற சர்வாதிகாரமே என்கிறார்கள் அரசியல் அறிஞர்கள்.  

வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்று பேசும் நபர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் ஒரு தனி உலகத்தில் இருப்பார்கள். பிறர் கூறுவதில் உண்மை இருப்பினும் அதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தான் தான் அறிவாளி, தனக்குமட்டுமே எல்லாம் தெரியும் என்று பெருமையாய் பீற்றிக்கொள்வார்கள்.  

இத்தகையோரிடம் வாதாடினால், நம் நேரமும் உடல் ஆற்றலும் தான் வீண் போகும். அதனால், சிலர் சொல்வார்கள், உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நேராகவே கூறிவிட்டு வந்துவிடலாம். காரணங்கள் கூறி நழுவி விடலாம். அவர் கூறுவதை புன்னகையுடன் எதிர்கொண்டு, ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிடலாம்.  

இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. அதனால் தான் தனித் தனியாக படைக்கப்பட்டுள்ளார்கள். எல்லோரும் ஒரே கருத்தில் இருக்க வேண்டும், எல்லோரும் ஒரே கருத்துடன் வாழவேண்டும் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அப்படி இருக்க வேண்டும் என்றால் எதற்கு மற்றொரு படைப்பு? அதுமட்டும் இல்லாமல், ஒரு கருத்து பிறந்தவுடன் அதற்கு எதிர் கருத்தும் பிறந்துவிடும். எதிர்க் கருத்து இல்லாமல், கருத்துக்கு எந்தப் பயனும் இல்லை. இதை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.  

இதைப் புரியாதவர்கள் தான் கருத்து திணிப்பில் ஈடுபடுவார்கள். கருத்து திணிப்பு என்பது ஓர் அராஜகம். நான் சொல்லுவது தான் சரி. உன் கருத்து தவறு என்று மறைமுகமாக சொல்லுவது தான் கருத்து திணிப்பு.  

யாராவது உங்கள் கருத்து தவறு என்று விவாதம் செய்தால், அதற்குப் பதில் விவாதம் செய்ய வேண்டாம். அந்த நபர் உங்களுக்கு தெரிந்தவராக இருந்தால், கண்டிப்பாக பதில் விவாதம் செய்வது நல்ல அணுகுமுறை கிடையாது. இது அந்த உறவை பாதிக்கும். தெரிந்தவர்களாக இருந்தால், கண்டிப்பாக நீங்கள் அந்த நேரத்தில் மௌனமாக சிறு புன்னகையுடன், சரி, என்று ஏற்றுக்கொள்ளுங்கள். இது அந்த நபருக்கு நீங்கள் செய்யும் மரியாதை. அப்படிப்பட்ட உறவே வேண்டாம் என்றால், அவர்களைத் தவிர்த்துவிடுங்கள். விவாதத்தில் ஈடுபட்டால், உங்களுக்குத் தான் தேவை இல்லாத மன உளைச்சல்!  

யார் என்று தெரியாத நபர் உங்கள் மீது கருத்தை திணிக்க முயன்றால், நாய் குரைக்கின்றது என்று விட்டு விடுங்கள். என்று அறிவுரை சொல்பவர்கள் இன்னொன்றையும் கூறுகிறார்கள், நீங்கள் எப்போதுமே மறந்துவிடக்கூடாத அந்த வாசகம் இதுதான்.  

"உங்கள் கருத்துதான் உங்கள் அடையாளம்!"  

ஆனால், அநேகர் இந்தத் தனித்துவத்தில் இருப்பதில்லை; இருப்பவர்களையும் மதிப்பதில்லை. பிறரின் தவறான எதிர்வாதத்தால், தமது சரியான நிலைப்பாட்டையே மாற்றிக்ெகாள்வார்கள். எனினும், இது தவறு என்கிறார் கவியரசு கண்ணதாசன். "எதற்காகவும் யாருக்காகவும் நீ உன்னை மாற்றிக்ெகாள்ளாதே! அப்படியென்றால், அடிக்கடி உன்னை நீ மாற்றிக்ெகாள்ள வேண்டியிருக்கும்" என்கிறார் கவிஞர். இருப்பினும், மாற்றுக் கருத்தொன்றை இன்னொருவர் முன்வைக்கும்போது அந்தக் கருத்தை ஏற்றுக்ெகாள்ளாமல், விதண்டாவாதம் செய் என்று அவர் சொல்லவில்லை. மாற்றிக்ெகாள்வது வேறு, மாற்றுக் கருத்தை ஏற்பது என்பது வேறு.  

சிலர் மற்றவரின் கதையை முற்றாக செவிமடுக்கமாட்டார்கள். சொல்லி முடிப்பதற்குள் தங்களின் கதையைச் சொல்லத் தொடங்குவார்கள். நமக்கு இரு காதுகள் இருப்பது கூடுதலாக செவிமடுப்பதற்கும் ஒரு வாய் இருப்பது குறைவாகப் பேசுவதற்குமாகும். இது பலருக்குத் தெரியாது. தனக்கு முன்னர் சொல்பவரைவிடத் தனக்கு விடயம் தெரியும் என்ற நினைப்பில் அவர்கள் தங்கள் கதையைத் தயாராக வைத்திருப்பார்கள். இதைத்தான் ஆட்டை அறுப்பதற்கு முன்னர், எதையோ அறுப்பது என்பார்கள்.  

ஒருவர் சொல்லும் விடயத்தை முழுவதுமாகக் கேட்டால் மாத்திரந்தான், அதற்குப் பதில் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். அவருடைய கருத்து பிழையாக இருந்தாலும், அவர் சொல்வதைச் செவிமடுக்க பழகிக்ெகாள்ள வேண்டும் என்பதுதான் வோல்டேயரின் கருத்து. நாம் எத்தனைக்கும் ஆசைப்படலாம்,

ஆனால், அடுத்தவனைப் பேச அனுமதிக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துதான் அவரவர் அடையாளம்! இதனைப் புரிந்துகொண்டால், முரண்பாடுகளைத் தவிர்த்துக்ெகாள்ளலாம்!

Comments