உரலையும் உலக்கையையும் இப்ப மியூசியத்திலதான் பார்க்க முடியும் | தினகரன் வாரமஞ்சரி

உரலையும் உலக்கையையும் இப்ப மியூசியத்திலதான் பார்க்க முடியும்

வாழ்க்கை என்ன சுகமானது. அதை வாழும்படி வாழ்ந்தால், நாம் நமக்காக வாழும் நிலை வரும்வரை அது சோகமானதாகத்தான் இருக்கிறது. உலக மாந்தர் அனைவருமே பிறருக்காகத்தான் வாழ்கிறார்கள். அதாவது பிறர் என்ன நினைப்பார்களோ மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? ஊரார் இதை ஏற்பார்களா? என்கிற அபிப்பராயங்களை நிரவல் செய்துதான் வாழ்கிறார்கள். எவராவது ஒருவர்  வந்து இந்த சமுதாய கட்டமைப்பில் உடைவை ஏற்படுத்தும் வரை அது அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் காலத்துக்கு காலம் யாரோ ஒருவர் தன்னை சேதப்படுத்திக் கொண்டு இந்த சமுதாய உடைப்பை செய்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் பெண்கள் ரொம்பத்தான் பாடுபடவேண்டியதாக இருந்தது. 

ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து எட்டாம் ஆண்டு, றலி நிறுவனத்தின் கனதியான ஆண்கள் பயன்படுத்தும் மிதிவண்டிகளே ஊருக்குள் இருந்தபோது கிராமத்தில் மிகச்சிலரே அதை வைத்திருந்தனர். எல்லா ஆண்களும் அதை ஓட்டப் பழகவில்லை. அதன் விலையும் மிக அதிகம் நூற்றிஐந்து ரூபா. ஆக பெரும் தனக்காரர்களிடமிருந்து அவர்களது பாவனை கடந்த பழைய மிதிவண்டிகளை எழுபத்தைந்து, எண்பது ரூபாவுக்கு வாங்கி ஓட்டினர். இப்போது கலகலப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும் திருகோணமலை, கெப்பிட்டிபொலாவ வீதியில் நிலவிலே மிதிவண்டி ஓடப்பழகினார்கள். அப்போது அந்த வீதி பகலிலும்கூட ஒரு நாலைந்து வாகனங்களையே கண்டது. சுமார் ஒரு வருடத்துக்குள்ளாகவே சரளமாக மிதிவண்டிகள் ஊருக்குள் நுழைந்துகொண்டது. 

1959இனக்கலவரம் முடித்து வவுனியாவிலேயே தங்கிய மலையக மக்கள் நெடுந்தூரம் நடந்து சென்று வேலைக்குப் போனார்கள். கால்நடையாகவே இரண்டு கையிலும் ஐஸ்பழம் சுமந்தும் புடவைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என்றும் சுமந்து விற்றார்கள். 

இதேகாலப்பகுதியில்தான் நான் மிதிவண்டி ஓடக்கற்றுக் கொள்ள விரும்பினேன். அது சமுதாயப்புரட்சி என்று அப்போது தெரியாமல், விளைவு எனது தாயார் அவதூறுக்கு ஆளானார்கள் காரணம் பொம்பிளப்பிள்ளைய வளக்கத் தெரியேல்ல 

ஆச்சா, இரண்டு வருடங்களுக்குள் எமது மண்ணில் பெண்களுக்கான சைக்கிளோட்டப்போட்டியே நடந்தது. எனக்கு அவதூறு சூட்டிய பெருமாட்டிகளின் பிள்ளைகளே பெரும்பாலும் கலந்து கொண்டார்கள்.  

ஆரம்பத்தில் பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்று போருக்கு தயாரானாலும் புலிகளின் அப்போதய தளபதிகள் அவர்களை ஏளனமாக வேவு பார்த்தார்கள். அவர்களுக்கென புதிய துப்பாக்கிகளை அனுப்பியபோது அவர்களிடமிருந்த அவற்றைத் தட்டிப்பறித்துவிட்டு பழையவற்றை கொடுத்தார்கள். தாக்குதல்களுக்கு செல்லும் போது அவர்களை சமைக்கவும் தமது ரைபிள்களை சுத்தம் செய்யும் பணியிலும் விட்டுவிட்டுச் சென்றார்கள். என்னடி காச்சட்டைக்கை நுழைஞ்சாப்போல, பெட்டையள் எண்டத மறக்காதையுங்கோ என்ற தளபதியை, கண்ணீர் மல்க பார்த்த  கதை பெண் போராளிகளிடம் உண்டு.   

பெட்டையள் துவக்கு தூக்கிறதோ உது நான் இருக்கிற வரை நடக்காது என்று சவால் விட்ட பிரபல தளபதியும் வீரராக போற்றப்பட்டார்.  இவர்களுக்கான நினைவு நாட்கள் வரும் போது எமது பெண்கள் இவற்றை மறக்காமல் சொல்லி மனசுக்குள் வெந்து கொள்வார்கள்.  இப்படியெல்லாம் கூட நடந்தது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.  இன்னும்கூற உளுத்துப்போன பழைய நினைவுகள் என்னிடம் உண்டு. என்றாலும் இந்த வகையில் பெண்களின் வெளியேற்றத்துக்காக தம்மைப் பலியிட்டவர்கள் மிக அதிகம் ஆனால். 

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் வெளியேற்றம் முன்னேற்றப்பாதை யிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டது. சமுதாயமும் தனது கட்டுப்பாட்டை வெகுவாக தளர்த்திவிட்டது என்றாலும் எமது வாழ்க்கையை நாம் அழிவுப்பாதை க்கே கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். அண்மையில் நான் கேட்ட ஒரு கானா பாடல் வரிகள், 

கரண்டுதான் எல்லாத்துக்கும் தேவை,  

அது இல்லையின்னா கையில அரைப்பம் மாவை. 

ஆம் அடிப்படை வசதிகளுள்ள கிராமங்களில்கூட இப்போது சலவை மிசின் சமையல் உபகரணங்கள், சமைக்கும் பாத்திரங்கள், துணிதுவைக்கும் சோப்வகைகள் சலவைப்பவுடர்கள், அரைத்த மசாலாப் பொடிகள், என எக்கச்சக்கமான பொருட்கள் வந்துவிட்டன. முன்னர் எமது வீட்டில் ஒரு விழாவாக நடக்கும் வேலைகளில் எவ்வளவு விடயங்களை கற்றோம். முற்றத்தில் ஒரு பரண் கட்டி வைத்திருப்போம். அதில் என்றைக்கும் ஏதாவது ஒரு பொருள் வெயிலில் காயும் . வீட்டுக்குத்தேவையான மிளகாய்த்தூள் ஒரு மாதத்துக்கு தேவையான செத்தல்மிளகாய் சரக்குகள் கழுவி காயவைத்து வறுத்து அதை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க ஒருநாள். 

எள்ளை காயவைத்து அதை இடித்து எண்ணெய் எடுத்து பின்னர் அந்த பிண்ணாக்கில் சீனி சேர்த்து பிடிபிடியாக திரட்டி எம்மை தின்ன வைப்பாள் பாட்டி. எள் இடித்த உலக்கையை என் தம்பிகளின் மார்பில் வைத்து அழுத்தி வீமனுடைய பலம் வர வாழ்த்துவாள். எள்நெய் எமது உணவின் ஒரு பிரதான பங்காகும். இப்ப உரலையும் உலக்கையையும் மியூசியத்திலயாவது பார்க்க முடியுமா  தெரியவில்லை. இதெல்லாம் சமுதாய மாற்றமாக வந்துவிட்டதா? எமது பிள்ளைகளுக்கு இது தெரியுமா? எதையோ கலந்து எள்நெய் என்று விற்கிறார்கள். எதையோ பிசைந்து பிண்ணாக்கு எள்ளுருண்டையாக வருகிறது. ஆனால் அதையும் எமது பிள்ளைகள் உண்ண மறுக்கிறார்கள்.  எமது நாகரீக தாய்மார் பக்கட்டுகளில் பகட்டாக அடைத்துவரும் பொருட்களையே பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் பெண்களுக்கு சமைக்க விருப்பமுமில்லை நேரமுமில்லை. வேலை முடித்து வரும் கணவனை மறுபடி ஹோட்டலுக்கு அனுப்பி உணவு வாங்கிவரச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சமுதாய மாற்றமாகி வருகிறது உணவு விடுதிகள் மூடப்பட்டுக்கிடக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிகவும் அலுப்புடன் ஏதோ சமைக்கிறார்கள் அல்லது நண்பர்கள் உறவினர் வீடுகளுக்கு செல்கிறார்கள்.  

பெண்கள் வெளியே சென்று உழைப்பதும் வீட்டின் வருமானத்தில் சம பங்கேற்பதும் சமுதாய மாற்றமானால் அதன் பின்னணியில் நாம் இழந்து போன எமது ஆரோக்கியத்தை எப்படி மீட்கப்போகிறோம்.

வீட்டு வேலைகளில் கண்டிப்பாக கணவனும் உதவுவானானால் அந்த வீட்டின் ஆரோக்கியம் காப்பாற்றப்படும். என்றாலும் நமது பிள்ளைகள்தான் எமது எதிர்காலம். அவர்களது ஆரோக்கியமும் பழக்க வழக்கங்களும் நமது பொறுப்பில்தான் உள்ளது. நாமாக அதை பன்னாட்டுக் கம்பனிகளில் அடகு வைத்துவிட்டு, முதலில் பீட்சா பர்கர் பக்கட் பொருட்கள் என்று செலவு செய்துவிட்டு பின்னர்  மருந்து மாத்திரை கிளினிக் என்று கொப்பியும் கையுமாக அலைவதும் சமுதாய மாற்றமாகிவிட்டது. என்பதை நாம் உணரவேண்டும் புதுமைப் பெண்கள் வேண்டும்தான் அதற்காக. புரட்சி என்ற பெயரில் சமுதாய வரட்சியை ஏற்படுத்தலாமா ஆண்களே முன்வந்து அவர்களுக்கு உதவுங்கள். உங்களுடைய நலனுக்கும் அதுவே தேவை. 

Comments