பெருந்தோட்ட கட்டமைப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட கட்டமைப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்!

'பெருந்தோட்டத்துறை என்பது கைத்தொழில் துறையாக இருந்தபோதும் கூட அதில்  தொழில் மாத்திரம் இன்றி அந்தத் தொழில் சார்ந்த சமூகத்தையும் நிர்வகிக்கும்  கட்டமைப்பைக் கொண்டதாக கட்டி எழுப்பப்பட்டமையானது வரலாற்றுத் தவறாகும்  என்பது திலகராஜ் எம்.பியின் பார்வை'

கூட்டு ஒப்பந்த நடைமுறையில் இருந்து விடுபட்டு மாற்றுப் பொறிமுறைக்குச் செல்ல வேண்டும். அதேவேளை தேயிலைத் தொழிற்றுறையில் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய கொடுப்பனவு முறைமைகளில் இருந்து மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமென பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர அண்மையில் ஆலோசனை ஒன்றைத் தெரிவித்திருந்தார்.  

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம் மீதான அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து விடுபடக்கூடிய ஒரு மாற்றுப் பொறிமுறையின் தேவையை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உண்மையிலேயே உள்வாங்கிக் கொண்டுள்ளதா என்ற கேள்வி எழவே செய்கின்றது. பெருந்தோட்ட நிர்வாக முறைமை என்பது வலுவான கட்டமைப்பைக் கொண்டு இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. பொதுவாக தோட்டக் கம்பனிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இந்நிர்வாக முறைமை இருந்து வருகின்றது. இதனால்தான் கூட்டு ஒப்பந்த முறையில் சம்பளம் தீர்மானிக்கப்படும் விதம் தொழிலாளர்களது தேவைக்கேற்ற ஏற்பாடுகளைக் கொண்டதாக இல்லை என்று விமர்சிக்கப்படுகின்றது.  

பெருந்தோட்டத்துறை நட்டத்தை எதிர்நோக்குகின்றது என்னும் ஒரே வாதத்தை வைத்துக்கொண்டு தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க தொடர்ச்சியாகவே மறுத்துவரும் போக்கினைக் காட்டி நிற்கின்றது தோட்ட முதலாளிமார் சம்மேளனம். உண்மையில் தேயிலைக் கைத்தொழில் நட்டத்தில்தானா நடக்கின்றது? இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப்புள்ளி விபரங்கள் 2018என்னும் விபரத்திரட்டின்படி தேயிலைக் கைத்தொழிலின் தற்போதைய சந்தை நிலைமை சாதகமான தன்மைகள் கொண்டதாக இருப்பதைத் தெட்டத் தெளிவாக அறியத் தருகின்றது.  

அந்நூல் 2009 _ - 2017வரையிலான காலப்பகுதிக்கான தகவல்களைத் தருகின்றது அதன்படி 2009ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி 291மில்லியன் கிலோவாகும். இதன் மூலம் ஈட்டப்பட்டுள்ள தொகை 36.2பில்லியன் ரூபா. 2010இல் தேயிலை உற்பத்தி 331மில்லியன் கிலோ. அடையப்பட்ட தொகை 162.8பில்லியன் ரூபா. 2011இல் 320மி.கிலோ மூலம் 164. 9பி. ரூபாவும் 2012இல் 328மி.கிலோ மூலம் 180 .9பி ரூபாவும் 2013இல் 340மி. கிலோ மூலம் 1994பில்லியன் ரூபாவும் 2014இல் 338மி கிலோ மூலம் 212. 6.பி ரூபாவும் 2015இல் 320மி கிலோ மூலம் 182.பி. ரூபாவும் 2016இல் 293கி மூலம் 184.8பி ரூபாவும் 2017இல் 308கி மூலம் 233.3பி. ரூபாவும் ஏற்றுமதி மூலம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.  

தேயிலை உற்பத்தி செய்யும் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் 2008ஆம் ஆண்டில் இருந்து 2016வரை இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. ஏற்றுமதி சதவீத கணிப்பீட்டின் அடிப்படையில் சீனா முதலாம் இடத்திலும், கென்யா இரண்டாம் இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை 2008இல் 188.3ஹெக்டேயரில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை 2016இல் 202.8ஹெக்டேயராக வளர்ச்சி கண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதியில் உலகத் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடனான ஒப்பீட்டின்படி 2008இல் 318.7மி.கிலோ 2016இல் 292.6மி கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இத்தரவுகள் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சியையோ விற்பனையில் தளர்ச்சியையோ காட்டவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

ஆக, பெருந்தோட்டத்துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படுவது எல்லாம் அப்பட்டமான ஏமாற்று என்பது அம்பலமாகின்றது. இதனால் சம்பள அதிகரிப்பு வழங்குதில் சிரமம் இருக்கப்போவது இல்லை. ஆயினும் அது சாத்தியம் இல்லை என்று சாதிக்கின்றது தோட்ட முதலாளிமார் சம்மேளனம். அவ்வாறு கூறி கையை விரிப்பதற்குச் சாதகமான தன்மைகளைக் கொண்டிருக்கும். கூட்டு ஒப்பந்த யதார்த்தம் இப்படி இருக்கையில், கூட்டு ஒப்பந்த முறைக்கு மாற்றுப் பொறிமுறை அவசியம் என்று அச்சம்மேளனம் ஆலோசனை கூறுவது நம்பக்கூடியதாகத்தான் உள்ளதா?  

ஆனால் ஏதோ வகையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கின்றதோ என்னும் ஐயமும் எழாமல் இல்லை. ஒட்டுமொத்த மலையகமும் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு எதிராக குரல் எழுப்புவதால் குழப்பமா? அல்லது அரசியல் தரப்பில் எழும் பெருந்தோட்ட மக்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கையால் வந்த மயக்கமா? என்பதுதான் புரியவில்லை.  

எனினும் கூட்டு ஒப்பந்த முறைமை பாரம்பரிய சம்பள கொடுப்பனவு முறைமை இரண்டிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவு மலையக தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உடன்பாடான சங்கதிகளே ஆகும்.  

அத்தியாவசிய தேவைகளான தோட்டப் பாடசாலைகள், சுகாதாரம், பாதை, அஞ்சல் தொடர்பு (தபால் சேவை) அனைத்துமே தோட்ட நிர்வாகங்களின் பொறுப்பிலேயே விட்டு வைக்கப்பட்டன. இதனால் பாதகமான பின்னடைவுகள் ஏற்படுவதை அறிந்தும் அறியாதது போல அலட்சியமாக இருந்துவந்துள்ளன, கடந்தகால அரசாங்கங்கள். தபால் முகவரி கூட தனக்கில்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலைமை தோட்டமக்களுக்கு. நேரடியான கடித விநியோகம் இடம்பெறும் நிலை இன்னும் தோற்றம் பெறவில்லை. தபால் திணைக்களம் இது பற்றிக் கவலைப்படுவது கிடையாது. நேரடி தபால் சேவையை நிலைபேறாக்க முன்வருவதும் இல்லை.  

இது போன்றே இதர துறைகளும் கண்டுகொள்ளப்படாமலே கைவிடப்பட்டன. பிரஜாவுரிமை இருக்கின்றது. வாக்குரிமை இருக்கின்றது. அதனை அநுபவிக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்னும் அவலம். இதில் மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வாய்ப்பை மலையகத்துக்கான அதிகாரசபை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பெருந்தோட்டத் துறையில் உற்பத்தி முறைமை மாற்றம் பெற வேண்டும் என்னும் கோரிக்கையானது சம்பள கொடுப்பனவை மட்டும் நோக்காக கொண்டது அல்ல என்கிறார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ். தவிர ஒட்டு மொத்த சமூக மாற்றத்துக்கான தேவையை இது வலியுறுத்தி நிற்பதாவும் அவர் கூறுகின்றார். பெருந்தோட்டத்துறை என்பது கைத்தொழில் துறையாக இருந்தபோதும் கூட அதில் தொழில் மாத்திரம் இன்றி அந்தத் தொழில் சார்ந்த சமூகத்தையும் நிர்வகிக்கும் கட்டமைப்பைக் கொண்டதாக கட்டி எழுப்பப்பட்டமையானது வரலாற்றுத் தவறாகும் என்பது திலகராஜின் பார்வை. அது மிக மிகச்சரியான பதிவுதான்.  

இதனாலேயே இச்சமூகம் இவ்வளவு காலமாக தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான வாய்ப்புகளை இழந்து போய் நிற்கின்றது. இச்சமூகம் பற்றி பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தோட்டக் கட்டமைப்பிலிருந்து பெருந்தோட்ட மக்கள் விடுபடுவதை விரும்பாதவர்களைப் போலவே நடந்து கொண்டிருந்தார்கள். தோட்டத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் இருந்து மரணித்த பின்னர் இறப்புச் சான்றிதழ் பெறும் வரைக்குமான அத்தனை நிர்வாகமும் தோட்டக் கட்டமைப்பின் பொறுப்பிலேயே இருப்பது தனியொரு நிர்வாக அலகாகவே தெரியும் இந்த நிலைமையை நீக்கவேண்டியுள்ளது. இதற்கு தற்போதுள்ள பெருந்தோட்ட உற்பத்தி முறைமை முழுமையாக மாற்றம் பெறவேண்டியது அத்தியாவசியம். இன்று தனிவீட்டுத் திட்டம் செயற்பட்டு வருகின்றது. நவீன கிராமிய கட்டமைப்பு லய வாழ்க்கையிலிருந்து மலையக சமூகத்தை நாகரிக வெளிக்கு நகர்த்த இது உதவும். எனினும் இது மட்டும் இம்மக்களின் வாழ்க்ைக தரத்தை மேம்படுத்த உதவாது.  

இதன் மூலம் சமூக ரீதியிலான மாற்றத்துக்கு வித்திடப்பட வேண்டும். அதற்கு பெருந்தோட்டக் கட்டமைப்பின் பிடியிலிருந்து விடுபட்டாக வேண்டும். உற்பத்தி முறைமையிலான மாற்றம் கட்டுப்பாடுகளைக் களைத்தெறியும். தமது பொருளாதார வளத்தை தாமே வரையறுத்துக் கொள்ள வழி பிறக்கும். இதற்காகவே பெருந்தோட்ட மக்கள் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றம் பெறவேண்டும்.   இது பாரம்பரியக் கொடுப்பனவு முறைமைகளில் இருந்து வேறுபட உதவும். தவிர ஒரு சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தொழில் வழங்கும் குழுக்களிடம் இருந்து விலக்கிக் கொள்ள வழிவகுக்கும். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் ஈடேற பெருந்தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள பல்தேசிய கம்பனிகளின் உள்நாட்டு நிர்வாகங்கள் எந்தளவு பங்களிப்பினை வழங்கப் போகின்றன என்பதுதான் தெரியாத சங்கதி!  

Comments