நம்பிக்கையில்லா பிரேரணை; குற்றச்சாட்டுகளுக்கு பரிகாரமாக அமையாது | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கையில்லா பிரேரணை; குற்றச்சாட்டுகளுக்கு பரிகாரமாக அமையாது

அமைச்சர் ரிஷாத் விடயத்தில் கிழக்கில், மன்னாரில், வவுனியாவில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிலைப்பாடு சம்பந்தனின் அணியைச் சேர்ந்தவர்களின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்டதாக இருக்கின்றது என்கிறார் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. பங்காளிகளின் கருத்துக்களையோ, ஏனையவர்களின் உணர்வுகளையோ கணக்கிலெடுக்காமல் தலைமையிலிருப்பவர்கள் முடிவை எடுக்கும் வழமையான நடைமுறையே கூட்டமைப்பில் இனியும் அரங்கேறும் என்றும் கூறுகின்றார் அவர். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கி செவ்வியிலேயே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார். பேட்டியின் முழு விபரம் வருமாறு.

கேள்வி: அமைச்சர் ரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதென நோக்கப்படக் கூடாதென்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்திருக்கின்றார். நீங்கள்  அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் எனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றேன். அந்தவகையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புகளோடு தொடர்புபட்ட பயங்கரவாதிகள் சிலரின் உறவினர்களுடன் தொடர்பு மற்றும் சிலரை விடுதலை செய்வது தொடர்பாக இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டிருப்பது போன்ற பத்து குற்றச்சாட்டுகள் அமைச்சர் ரிஷாத் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அமைச்சர் ரிஷாத் கூறியிருக்கின்றார். இவ்விடயத்தில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்கும், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தெளிவுபடுத்தப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படுவதற்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும், அதற்கு தடை ஏற்படுத்தாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் ரிஷாத் எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

இவ்வாறான முன்னுதாரணங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அமைச்சர்களான, திலக் மாரப்பன, ரவி கருணாநாயக்க, விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது அவர்கள் தமது பதவிகளை விட்டு விலகி அந்த விடயங்களை தெளிவுபடுத்திய பின்னர் மீண்டும் அமைச்சர்களாகியிருக்கின்றார்கள்.

சகோதரர் ரிஷாத் நாட்டின் தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் சகோதரர்கள் மீது சுமத்துவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகளையும், அவர்களோடு தொடர்புட்டவர்களை தேடிப் பிடிக்கும் அல்லது கைது செய்யும் நடவடிக்கைகளில் அப்பாவி முஸ்லிம்கள் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதை ஏற்கனவே நான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளேன். அதாவது பயங்கரவாத சட்டமும், அவசரகாலச் சட்டமும் கடந்த யுத்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதுபோல் களைகளுக்குப் பதிலாக பயிர்களையும் அழித்துவிடுவதாக இருக்கக் கூடாது என்பதை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன்.

கேள்வி: அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு என்ன? அந்த நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன?

பதில்: எமது நிலைப்பாடு என்ன? என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். அவர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் ஜூன் 18,19ஆம் திகதிகளில் நடத்துவதென சபாநாயகர் அறித்துள்ளார். சபாநாயகர் அவ்வாறு அறிவித்திருந்தாலும், அந்த விவாதங்கள் நடக்குமா? வாக்கெடுப்பு நடக்குமா? என்பதெல்லாம் தெளிவற்றதாகவே இருக்கின்றது.

எனவே அவ்வாறான பொழுதில் நாம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுப்போம்.

இதற்குக் காரணம் என்ன? என்று கேட்பீர்களானால், அமைச்சர் ரிஷாத்தின் விடயத்தை தென் இலங்கையில் ஒவ்வொருவரும் தமது அரசியல் ஆதாயங்களிலிருந்தே பார்க்கின்றனர். ஆனால் எமக்கு அவ்விதமான அரசியல் நோக்கம் எதுவுமில்லை. அதுதவிரவும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதன் ஊடாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பரிகாரம் காணமுடியாது.

எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வெற்றி, தோல்வியானது எவ்வாறானதாக அமைந்தாலும் அது தீர்வல்ல. எனவே அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

கேள்வி: தமிழர்கள் சார்பாக அவர்களின் ஏகபோக ஆதரவை வென்ற கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டுமென நினைக்கின்றீர்கள்

பதில்: தமிழ்ர்களின் ஏகபோக ஆதரவைப் பெற்றவர்களல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். தமிழ் மக்களிடையே மாற்றுச் சிந்தனையும், ஜனநாயக வழிமுறையிலான விருப்பமும் இருக்கின்றது என்பதற்கு நானே சாட்சியாக இருக்கின்றேன்.

ஆகையால்தான் தமிழ் மக்களால் தொடர்ந்தும் ஆறாவது முறையாகவும் நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பப்பட்டிருக்கின்றேன். தனியான கட்சியாகக் கேட்டால் தோற்றுப்போய்விடுவார்கள் என்ற பயமும், போலித் தமிழ்த் தேசியம் பேசி ஒரு கூட்டுக்குள் போகாவிட்டால் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்க முடியாது என்ற அச்சமும் நீங்கள் கூறும் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. அந்தப் பயம் எனக்கு இல்லை.

இன்று கூட்டமைப்பிப்புக்குள்ளே இருந்தும் மாற்றுக் கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வியாழேந்திரன் போன்றோரும் இன்னும் சிலரும் இப்போது கூட்டமைப்பின் தரகு அரசியல் தொடர்பாகவும், அதன் தலைமை என்போரால் கூட்டுப் பொறுப்பற்று தமிழ் மக்களுக்கு பயனற்ற தீர்மானங்கள் தான்றோன்றித் தனமாக எடுக்கப்படுவது தொடர்பாகவும் துணிச்சலாக தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வகை, தொகை இல்லாமல் தமிழ் மக்கள் பலியாக காரணமான அழிவு யுத்தத்தை அப்போது கூட்டமைப்புக்கு இருந்த 22 நாடாளுமன்ற உறுப்புரிமை என்ற அரசியல் பலத்தை பிரயோகித்து தடுத்து நிறுத்த வாருங்கள் என்று நான் கூறியதையும் கூட்டமைப்பு கேட்கவில்லை. அன்று எனது ஆலோசனையை கேட்டு ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால் தமிழ் மக்கள் இத்தனை அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்திருக்கமாட்டார்கள். துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை.

அதன் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும் நான்   தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அதுவிடயமாக உளப்பூர்வமாக செயற்படுமாறு வலியுறுத்தியிருக்கின்றேன். உதாரணமாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அதைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு கோரிக்கைவிடுத்தேன். ஆனால் இவர்களோ, பல நொண்டிச் சாட்டுக்களைக் கூறி அவருடன் பேசவில்லை.

அன்றைய நிலையில் மஹிந்த ராஜபக்ச தீர்வொன்றை வழங்கக் கூடிய பலத்தோடு இருந்தார். தமிழ்த் தரப்போ அதற்காக முயற்சிக்காமல், சர்வதேச சமூகம் வந்து தீர்வைப் பெற்றுத்தரும் என்று சாக்குப் போக்குகளைக் கூறி அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டார்கள்.

அதன் பின்னர் இவர்களே ஆட்சிபீடமேற்றியதாகவும், தமது கோரிக்கைகளை இந்த ஆட்சியாளர்களைக் கொண்டு தீர்வைப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்த ஆட்சி அமைந்த 100 நாள் வேலைத் திட்டத்திலோ அல்லது இந்த ஆட்சியாளர்கள் அவசரம் அவசரமாக தம்மைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய 19ஆவது சட்டத்திலோ தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கும், ஏனைய தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளான, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணிகளை மீளப்பெறுவது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நீதியான தேடலுடன் கூடிய விசாரணைகள் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்த்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யவில்லை.

இவர்களோ ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதிலும் அதற்கு கைமாறாக தமது தரப்பு நலன்களையுமே பெற்றுக்கொண்டார்களே தவிர தமிழ் மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

வாசுகி சிவகுமார்

Comments