ரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நானே முதலாவதாக கையொப்பமிட்டேன் | தினகரன் வாரமஞ்சரி

ரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் நானே முதலாவதாக கையொப்பமிட்டேன்

சந்தர்ப்பவாத அரசியலை பயன்படுத்திக் கொண்டு நல்லிணக்க அரசியல்  செய்வதாக தங்களைக் காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள்  எங்களுக்குள்ளும் இருக்கிறார்கள் என்கிறார்  மட்டு. மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்.  தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய  பேட்டியிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். பேட்டியின் முழு விபரம்  வருமாறு.... 

கேள்வி:- நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் பற்றிய உங்கள் கருத்தென்ன?  

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தை அனுஷ்டிப்பதற்காக  தேவாலயத்திற்கு சென்றபோது இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுகளை  வெடிக்க வைத்துள்ளனர். பலரும் துடிதுடித்து இறந்துள்ளார்கள் 500க்கும்  மேற்பட்டவர்கள் காயப்பட்டு உள்ளனர். இன்னும் பலர் அதிதீவிர  சிகிச்சைப்பிரிவில் வைத்தியசாலையில் உள்ளார்கள். குண்டுவெடிப்பு தொடர்பான  முன்கூட்டிய அறிவித்தல்கள் கிடைத்தும் இந்த நாட்டு மக்களுக்கு  அறிவிக்கப்படாமல் இருந்தமைக்கான காரணம் என்னவென்பது புரியாத  புதிராகவுள்ளது. குண்டு வைத்ததாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த  சஹரான் குழுவினருக்கு கடந்த காலத்தில் நீதிமன்றத்தில் பிடி ஆணை  பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.  குண்டுவெடிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு காத்தான்குடி பாலமுனை  பகுதியில் குண்டுவெடிப்பு பரிசோதனை ஒன்று நடைபெற்றிருந்தது.போலிசார்  அவ்விடத்திற்குச் சென்றார்கள்.  இது தொடர்பான விசாரணைகளை மேற் கொண்டார்கள்.  ஆனால் எதுவித முடிவும் எட்டப்படவில்லை. பொலிசார் சரியான விசாரணைகளை  மேற்கொண்டு இதுதொடர்பானவர்களை கைது செய்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்து  இருக்கத் தேவையில்லை. நாட்டில் இவ்வாறான ஒரு துர்பாக்கியமான நிலை  ஏற்பட்டிருக்கவே மாட்டாது. இந்த அரசாங்கமே இந்த குண்டு வெடிப்பிற்கு  பொறுப்பேற்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.  தற்போது இந்த நாட்டிலே சில அரசியல்வாதிகளும்,  அவர்களோடுசம்பந்தப்பட்டவர்களுக்கும் இந்த குண்டு  வெடிப்போடுசம்பந்தப்பட்டவர்களுக்கும் இடையில் தொடர்பு  இருப்பதாகதெரிவிக்கப்படுகின்றது. இப்படியானவர்களை அமைச்சுப் பதவிகளிலும்,  உயர்பதவிகளிலும் வைத்துக்கொண்டு விசாரணை நடத்துவது ஒரு நீதியான விசாரணை ஆக  இருக்காது. அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிக்க வாய்ப்பு  உள்ளது. ஆகவே இந்த அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தி அடைய, நீதி கிடைக்க  தீர்க்கமான விசாரணை நடைபெற வேண்டும். தற்பொழுது றிஷாத் பதியுதீனுக்கு  எதிரான நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்  தொடர்பான சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது நீதியாக  விசாரிக்கப்பட வேண்டும். அத்தோடு எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா தொடர்பாக  குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தும்முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவர்கள்  உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதில் ஒன்றை விளங்கிக் கொள்ள  வேண்டும். தங்களை அரசியலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும்  சில அரசியல்வாதிகளும், அவர்களோடு சம்பந்தப்பட்டவர்களும் இவ்வாறான  கருத்துக்களை அப்பாவி முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பி எங்களை இனவாதிகளாக  எங்களுடைய கருத்துக்களை வெளியே கொண்டுவரும் ஊடகங்களை இனவாத  ஊடகங்களாகவும்வெளிக்காட்டுகின்றனர். இந்த நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லிம்  மக்களை நாங்கள் நேசிக்கிறோம் அவர்கள் தொடர்பாக அவர்களுக்கு எதிராக, நாங்கள்  எப்போதும் கருத்து தெரிவித்தது இல்லை.  

கேள்வி:- மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட ஷரியா பல்கலைக்கழகம் பற்றி நீங்கள் சொல்கின்றீர்கள்?  

பதில்:- என்னைப்பொறுத்தமட்டில் இதன் 90 வீதம் உடமையாளர்களாக  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும், அவருடைய மகனுக்கும் உள்ளார். இந்த  காணி வழங்கப்பட்ட காலத்திலிருந்த  அந்த நாட்களில் நாங்கள் அரசியலில்  இருக்கவில்லை. பல்கலைக்கழகம் தொடர்பான பல வகையான முரண்பாடான கருத்துகள்  வெளியிடப்படுகின்றன. இப் பல்கலைக்கழகத்தில் அனைத்து இன மக்களும் கல்வி கற்க  முடியும் என கூறப்படுகிறது. ஆனால் இப்பல்கலைக்கழகத்தின் அமைப்பு  முற்றிலும் முஸ்லிம் கலாசாரங்களை கொண்டதாகவும், அரபு தேசங்களில்  கட்டப்படுகின்ற கட்டடங்களை ஒத்த அமைப்பாகவும் காணப்படுகின்றது.   குறிப்பிட்ட ஒரு சமயத்தை மையப்படுத்தும் ஒரு கட்டிடமாகவே அதைப் பார்க்கக்  கூடியதாக உள்ளது. இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது தொடர்பாக சரியான  முறையில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும். இப்பல்கலைக்கழகம் ஒரு  சமூகத்திற்கு மாத்திரம் இல்லாமல் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து  சமூகத்தினரும் கல்வி கற்கக்கூடிய வகையில்  பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு  உயர்கல்வி அமைச்சின் கண்காணிப்பின் ஊடாக இந்த பல்கலைக் கழகம் தொடர்ந்து  நடைபெறவேண்டும் என்பது  எனது நிலைப்பாடாக இருக்கின்றது.  

கேள்வி:-தென்னிலங்கை சகோதர பௌத்த மக்கள் மத்தியில் கிழக்கு  மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தற்போதைய சூழ்நிலையில் பல எதிர்ப்புக்களை  சந்தித்து வருகின்றாரே? 

பதில்:- ஹிஸ்புல்லாவைப் பொறுத்தமட்டில்  தென்னிலங்கையில் மாத்திரமல்ல கிழக்கிலங்கையிலும் அவர் தொடர்பாக பல்வேறு  விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. காரணம் பாராளுமன்றத்திலும்,  வெளியிலும் அவர் பேசிய இனத்துவேசமான பேச்சுக்கள். ஆதாரத்துடன் அவர் பேசிய  பேச்சுக்கள் காணொளிகளாக தற்பொழுது வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில்  எல்லைப் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆயுதம் பெற்றுக் கொடுத்தேன் என  பகிரங்கமாக அறிக்கைவிடுகிறார். காளி கோவிலை உடைத்து மீன்சந்தை கட்டினேன்,  நீதிபதியை இடமாற்றம்செய்தேன் போன்ற இவருடைய கடந்தகால செயற்பாடு தொடர்பாக   தொடர்பான கூற்றுக்கள் பற்றி பலதரப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த  வகையிலேயே இவர் தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  

கேள்வி:- றிசாத் தொடர்பான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்க வேண்டும்?  

பதில்:- என்னைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியகூட்டமைப்பின்  நிலைப்பாடு மாத்திரமல்ல, தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து  அரசியல்வாதிகளும் இது தொடர்பாக ஒரு சரியான நிலைபாட்டில் இருக்க வேண்டும்.  சில நாட்களுக்கு முன்னர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் பிரேரணை  வந்த போதும் நான் எவரிடமும் கேட்கவில்லை. முதல் தமிழ்ப் பாராளுமன்ற  உறுப்பினர் என்ற வகையில் கையெழுத்து வைத்தேன். ஏனெனில் அவர் தொடர்பாக பல  குற்றச்சாட்டுக்கள்முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணை நீதியாக மேற்கொள்ளப்பட  வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்  சிலரும் இது தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவ்வாறு  குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்கள் இவர்கள் தொடர்பான பிரேரணைகள்  முன்வைக்கப் படும் போது எவ்வாறு நழுவிப் போக முடியும்?. அப்படியானால்  மக்களுக்காக ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும் இக்கட்டான நிலைமைகள் வரும்  போது பின்வாங்கிச் செல்வதும் மிகவும் வெட்கக்கேடான செயலாகும். எனவே  இவ்விடயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனநிலையை அறிந்து,  இவர்கள் தொடர்பாக கடந்த காலங்களில் மக்களுக்கு விடுத்த அறிக்கைகளை நன்றாக  விளங்கிக் கொண்டு, மக்களால் இவர்கள் தொடர்பாக சு மத்தப்படுகின்ற  குற்றச்சாட்டுகளை நன்றாக புரிந்து கொண்டு, தமிழ் தேசியகூட்டமைப்பு  இத்தருணத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறான ஒருசரியான ஒரு  முடிவை இவர்கள் எடுக்கவில்லை என்றால் இவர்களுக்கு வாக்களித்த தமிழ்  மக்களுக்கு எதிரான செயற்பாடாக அமையும்

கேள்வி:-இன சௌஜன்னியத்தை ஏற்படுத்த நாங்கள் எவ்வாறு தவறியுள்ளோம்...?  

பதில்: இன ஐக்கியத்தை ஏற்படுத்த நாங்கள் எவ்வாறு தவறிவிட்டோம்  என்றால் நல்லிணக்கம் என்பது வெறுமனே பேச்சு அளவில் ஏற்படுத்தப்படுகின்ற  விடயமல்ல. செயற்பாட்டு ரீதியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். சந்தர்ப்பவாத  அரசியலை பயன்படுத்திக் கொண்டு நல்லிணக்க அரசியல் செய்வதாக தங்களைக்  காட்டிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள் எங்களுக்குள்ளும்இருக்கிறார்கள்.  மாற்று சமூக அரசியல்வாதிகளோடு உரையாடுவதற்காக சந்தர்ப்பவாத அரசியலை  பயன்படுத்திக் கொள்பவர்கள் இன்று தமது சமூகம் சார்ந்து முன்னேறிக்கொண்டு  செல்கிறார்கள். நல்லிணக்கம் என்ற போர்வைக்குள்ளே ஒரு மூடத்தனமான நிலையிலே  மூழ்கிப்போன படியினால் எமது தமிழ் சமூகம் பாதிக்கப்பட்டுநிற்கின்றது  

கேள்வி:- நாடு முழுவதும் அமைச்சர் றிசாதுக்கு எதிராக அதிருப்தியும், சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளதே? 

பதில்:- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பாக அவருடைய பேச்சு  அவருடைய நடவடிக்கை பாதுகாப்பு பிரிவினர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள்  தொடர்பாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் கடந்த காலம் முதல் இருக்கின்றன. ஆகவே  இந்த குண்டு தாக்குதலின் என்பன மேலோங்கி காணப்படுகின்றன. இது தொடர்பாக  சரியான நீதியான விசாரணைகள் பக்கச்சார்பில்லாமல் முன்னெடுக்கப்பட வேண்டும்  என்பது என்னுடைய கருத்து  

க.விஜயரெத்தினம் - துறைநீலாவணை

Comments