ஆசிரியர்மார் உடை கலாசாரம் அல்ல முக்கியம்; மாணவர் சார்ந்த கலாசாரமே முதன்மைப் படுத்தப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஆசிரியர்மார் உடை கலாசாரம் அல்ல முக்கியம்; மாணவர் சார்ந்த கலாசாரமே முதன்மைப் படுத்தப்பட வேண்டும்

அண்மைக்காலமாக இன மற்றும் மதம் சம்பந்தமான உரிமை ஒரு முக்கியமான பேசுபொருளாக இருந்துவருகின்றது. குறிப்பாக முஸ்லிம் பெண் ஆசிரியைகளின் உடை சம்பந்தமான உரிமையும் அதேவேளை தமிழ் பாடசாலை தமிழ் அல்லது இந்து பிள்ளைகளின் கலாசார, மத மற்றும் கல்வி – சிறுவர் உரிமை பற்றிய கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் மனித உரிமை செயற்பாட்டாளர் பி.பி. சிவப்பிரகாசத்தை சந்தித்தோம்.  

கேள்வி: - அண்மைக்கால பயங்காரவாத அல்லது பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?  

அண்மைகாலமாக இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினைகள், பயங்கரவாத நடவடிக்கைகள், அதன் விளைவாக இடம்பெற்ற மனித படுகொலைகள் என்பவை பல்வேறு புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. மிக மிலேச்சத்தனமான தாக்குதல்கள் அவை. இதன் எதிர் விளைவாக முஸ்லிம்கள் குறிப்பிடதக்களவு சொத்துக்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. மேலும் இலங்கையின் சமூக பொருளாதார துறையில் பாரிய அளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை மிக மோசமாக பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத நடவடிக்கையினால் உயிரிழந்த மக்களின் உறவுகள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறுவர்கள், படுமோசமான உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இப்பின்னணியில் மலையக பிரதேசங்களில் பல்வேறு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.  

கேள்வி:- நீங்கள் மலையக பிரதேசங்களில் பல்வேறு புதிய பிரச்சினைகளை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிடுகின்றீர்கள், அதாவது....  

அண்மையில் புவாக்பிடிய தமிழ் மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்து வந்த போது அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேல்மாகாண ஆளுனரின் தலையீட்டில் அவ்வாசிரியைமார் வேறு பாடசாலைகளுக்கு இட மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக பதினெட்டு முஸ்லிம் ஆசிரியர்கள் இப்பாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். பெற்றோர்களின் எதிர்ப்பு மாத்திரமல்ல; அவ்வாசிரியைகள் பாதுகாப்புக்கு ஏற்பாடுகளுக்கும் உடல் ரீதியான பரிசோதனைக்கும் இடம் கொடுக்காமல் நடந்துகொண்டமையும் விட்டுக்கொடுப்புக்கு இடம் கொடுக்காமையும் காரணம் எனக் கூறப்படுகின்றது. ஹிஜாப் சம்பந்தமான பிரச்சினையானது குறிப்பிட்ட அப்பாடசாலைக்கு மாத்திரமன்றி ஏற்கனவே கிழக்கு மாகாணத்திலே மற்றோரு பாடசாலையிலும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு தமிழ் பாடசாலைகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படலாம்.  

கேள்வி:- முஸ்லிம் ஆசிரியைகள் தமது கலாசார சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்பொழுது ஆளுனரிடம் சென்றதில் என்ன தவறு இருக்க முடியும்?  

அதில் ஏதும் தவறில்லை. ஆனால் கல்வி திணைக்கள முறைமைப்படி இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. அதாவது கோட்டக் கல்வி பணிப்பாளர், வலயக் கல்வி பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண செயலாளர் என பல்வேறு தரப்பினர் உள்ளனர். ஆனால் இங்கு அவற்றுக்கொல்லாம் அப்பால் நேரடியாக ஆளுனரிடம் சென்றதாகவே தெரிகிறது. அவ்வாறெனின் இது எவ்வாறு இடம்பெற்றது? ஏன் இடம் பெற்றது? என்ற கேள்விகள் எழவே செய்கின்றன.  

கேள்வி:- நீங்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார அல்லது மத உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?  

நிச்சயமாக முஸ்லிம் ஆசிரியைகள் கலாசார ரீதியான உடை அணிவதற்கான உரிமை சர்வதேச உடன்படிக்கைகளிலும் அதேபோல் இலங்கை யாப்பின் அடிப்படை உரிமைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது தனிநபர்களோ, குழுக்களோ அவரவர் கலாசாரத்தையும், பண்பாட்டையும், சமய நம்பிக்கைகளையும் பின்பற்றுவதற்கான உரிமை சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வாறான கலாசார உடை என்பது வரைவிலக்கணப்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் பெண்களின் சமய மற்றும் கலாசார அடிப்படையில் உடை சம்பந்தமாக தீர்மானங்களை எடுப்பது ஆண் ஆதிக்கவாதத்தை கொண்ட அமைப்புக்களாகும். இவ்வடிப்படையில் முஸ்லிம் ஆசிரியைகள் அவர்களின் கலாசார, சமய, நம்பிக்கை அடிப்படையில் என்று கூறப்படுகின்ற கறுப்பு நிற ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு செல்லுவது அவர்களின் உரிமையாகும்.  

கேள்வி:- அப்படியென்றால் தமிழ் மாணவர்களின் சமய, கலாசார உரிமைகள் பற்றி இங்கு பேசப்படாமல் இருப்பது பாரதூரமான மனித உரிமை மீறல் என்று நீங்கள் கருதவில்லையா?  

தமிழ் பிள்ளைகள் அல்லது தமிழ் (இந்து மற்றும் கிறிஸ்தவ பிள்ளைகள்) பாடசாலைகளில் உள்ள தமிழ் மாணவர்களின் (இந்து) கலாசார, சமய, பண்பாட்டு உரிமைகளும் மேற்படி சர்வதேச உடன்படிக்கைகளிலும் அதேபோல் இலங்கை யாப்பின் அடிப்படை உரிமைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதை தகுதிவாய்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அண்மைகால ஊடக அறிக்கைகளின்படி முஸ்லிம் ஆசிரியர்கள் உரிமைகள் பற்றி அரசியல்வாதிகளும், கல்வித்துறைசார்ந்தவர்களும், ஆசிரியர் சங்கங்களும் பேசிவருகின்றனர். ஆனால் பாடசாலையின் மையமே பிள்ளைகள்தான். அவர்களின் உரிமை பற்றி பேசாது இருப்பது கவலைதருகிறது.  

ஆரம்ப வகுப்பு சிறுபிள்ளைகள் தங்களது கற்றல் செயல்பாடுகளில் கறுப்பு நிறமன்றி வேறு வண்ணவண்ண நிறங்களை பார்ப்பது ஆரோக்கியமானது என உளவியல் ரீதியாக ஊக்குவிக்கப்படுகின்றது. எனவே தமிழ் கலாசார பின்னணியை கொண்ட தமிழ் பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு அவர்களின் கலாசாரத்தை அனுபவிப்பதற்கான, சமய உரிமைகள் இல்லையா? அந்த உரிமைகள் பற்றி ஏன் இதுவரைகாலம் பேசப்படவில்லை? அந்த உரிமைகள் ஏன் இதுவரைகாலம் மறைக்கப்பட்டன அல்லது மறுக்கப்பட்டன? என்ற கேள்விகள் எழுகின்றன.  

கேள்வி:- முஸ்லிம் பாடசாலையில் படிக்கின்ற தமிழ் மாணவிகள் இஸ்லாமிய கலாசார உடைகளை அணியவேண்டும் எனக் கேட்கப்படுவதாக ஒரு கூற்று உள்ளது.  

பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற தமிழ் மாணவிகள் முஸ்லிம் மாணவிகள் போல் உடை அணிந்துவருமாறு கேட்கப்படுகின்றனர். இதனூடாக தமிழ் இந்து மற்றும் கிறீஸ்தவ சிறுவர்களின் சிறுவர் உரிமை மாத்திரமல்ல அவர்களின் சமய கலாசார உரிமையும் பாதிக்கப்படுகின்றது. அதேபோல் சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அவர்களின் கலாசாரத்தை விட்டுக்கொடுத்து பொதுவான பாடசாலை கலாசாரத்தை பின்பற்றுமாறு கேட்கப்படுகின்றனர். இதுவும் மனித உரிமை குறித்த பிரச்சினையை எழுப்புகின்றது. எனவே இங்கு முஸ்லிம் ஆசிரியைகளின் உரிமைகள் பாதிக்கப்படுகின்ற அதேவேளை தமிழ் சிறுவர்களின் உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. இப்பின்னணியில் பார்க்கும்போது ஆசிரியைகளின் சமய, கலாசார உரிமைகள் பற்றியே அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இலட்சக்கணக்கான மலையக மற்றும் தமிழ் பாடசாலை பிள்ளைகளின் சமய கலாசார உரிமைகள் பற்றியோ அவர்களின் உளவியல்  தாக்கங்கள் பற்றியோ (பயம், அச்சம்) கவனம் எடுக்கப்படாமை அல்லது அதுபற்றிய திடமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை பாரியதொரு பின்விளைவை ஏற்படுத்தக்கூடும்.

கேள்வி:- மலையக பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களின் பங்கு எவ்வாறு இருகின்றது?  

தமிழ் பாடசாலைகளில் பெரும்பாலான முஸ்லிம் ஆசிரியைகள் / ஆசிரியர்கள் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். அதேபோல் தமிழ்பிள்ளைகள் முஸ்லிம் பாடசாலைகளிலும், முஸ்லிம் பிள்ளைகள் தமிழ் பாடசாலைகளிலும் கல்வி பயின்று வருகின்றனர். மற்றும் தமிழ் ஆசிரியர்கள் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர். மலையகத்தை பொறுத்தவரையில் நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட தோட்ட தமிழ் பாடசாலைகளில் பெரும்பாலான ஆசிரியர் பணியில் முஸ்லிம்களே அமர்த்தப்பட்டுள்ள அதேவேளை சில தமிழ் பாடசாலைகளில் அதிபர்களாக முஸ்லிம்களே காணப்படுகின்றனர். ஆகவே இங்கு மலையக மக்கள் ஆசிரியர் பணியில் உள்ள முஸ்லிம்களை திறந்த மனதுடன் உள்வாங்கியுள்ளனர். இதுவே இந்த நாட்டின் இனங்களுக்குயிடையே விட்டுகொடுப்புக்கும், சகஜத்தன்மைக்கும் உதாரணமாகும். இதை அம்மக்களின் பலவீனமாக கருதக்கூடாது. அரசியல் மற்றும் பொருளாதாரத்திலே பலவீனமாக இருக்கின்ற குறிப்பாக மலையக மக்களை தொடர்ந்தும் அடிமைநிலைக்கு இட்டுசெல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.  

கேள்வி:- எவ்வாறெனினும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஹிஜாப் அணிவதற்கான உரிமை இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளதே?  

ஆம், ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையின்படி முஸ்லிம் ஆசிரியைகளுக்கு ஹிஜாப் அணிவதற்கான உரிமை அவர்களின் சமய, கலாசார உரிமை என்றும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இங்கு ஒருசில ஆசிரியைகளின் உரிமை பற்றி பேசப்பட்டிருந்ததே தவிர, இலட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக்கான உரிமை பற்றியோ, அவர்களின் உளவியல் பிரச்சினைகள் பற்றியோ சமய- கலாசார உரிமை பற்றியோ கவனம் எடுக்கப்படவில்லை. இது ஒரு சமுதாயத்திற்கு எதிரான பாரியதொரு மனித உரிமை மீறல் என்று குறிப்பிடலாம். எனவே மனித உரிமை ஆணைக்குழு இவ்விடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.  

மனித உரிமைகள் என்றால் முஸ்லிம் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி தமிழ் பிள்ளைகளாக இருந்தாலும் சரி உரிமைகள் சமமானவை. பாடசாலைகளும் ஆசிரியர்களும் மாணவர்களுக்காகவே அன்றி, பிள்ளைகள் ஆசிரியர்களுக்காகவன்று. என்றாலும், தமிழ் பாடசாலைகளை பொறுத்தவரையில் ஒருசில ஆசிரியைகளின் சமய, கலாசார உரிமைகளை முக்கியத்துவப்படுத்துவதா? அல்லது இலட்சக்கணக்கான தமிழ் மாணவர்களின் சமய கலாசார உரிமைகளை முக்கியத்துவப்படுத்துவதா?  மேலும் அவர்களின் உளவியல் தாக்கங்கள் பற்றி கவனம் எடுப்பதா? என்பது பற்றி கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் ஆசிரியைகள் தங்களின் சமய கலாசார அடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் முற்றுமுழுதான சிங்கள அல்லது தமிழ் பாடசாலைகளுக்கு அக்குறிப்பிட்ட சமய மற்றும் இன கலாசார உரிமைகளை கவனத்திற்கொள்ளாது அல்லது மதிக்காமல் செல்லுவார்களேயானால் முரண்பாடுகள் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகிவிடலாம்.  

கேள்வி:- எனவே இப்பிரச்சினை குறித்து நீங்கள் எவ்வாறான யோசனையை முன்வைக்க விரும்புகின்றீர்கள்?  

இலங்கையில் தொடர்ந்தும் எந்த ஒரு இனத்தின் மீதான மனித உரிமை மீறலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் அர்த்தம் நசுக்கப்படுகின்ற இனக்குழுக்களின் மீது அரசியல், பொருளாதார பலம் கொண்ட இனங்கள் நசுக்குவதை குறிப்பிடவில்லை. இலங்கையில் தமிழ், சிங்கள பாடசாலைக்குமிடையில் உடை மற்றும் கட்டமைப்பு என்பவற்றிலே பாரிய வித்தியாசம் காணப்படுவதில்லை. எனவே இலங்கையில் தமிழ், சிங்கள பாடசாலைகள் போன்று முஸ்லிம் பாடசாலைகளும் அவர்களின் சமய கலாசார உரிமைகளை பேணிக் கொள்வதோடு ஒரு பொதுவான ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். ஆசிரியைகள் தங்களின் சமய கலாசார உரிமைகளை மதிப்பது போல் தாங்கள் யாருக்காக கல்வியை வழங்க செல்கின்றார்களோ அவர்களின் சமய, கலாசார, மொழி உரிமைகளை முதன்மைபடுத்த வேண்டும். ஏனெனில் பிள்ளைகளை முதன்மைபடுத்திய கல்வி முக்கியத்துவம் பெற வேண்டுமே தவிர ஆசிரியர்களை மையப்படுத்திய கல்வி அல்ல. எனவே பிள்ளைகளின் சமய, கலாசார விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கவேண்டும். எனவே இலங்கையில் குறிப்பாக மாணவர்களின் உரிமைகள் முதன்மைப்படுத்தப்படவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு ஒழுங்கானதும், உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாத கல்வி வாய்ப்புக்களை வழங்கவேண்டியது, இந்நாட்டின் அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும்.      

Comments