காவி மயமாகும் இந்தியா! | தினகரன் வாரமஞ்சரி

காவி மயமாகும் இந்தியா!

உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேர்தல் திருவிழாவின் இறுதி மக்கள் தீர்ப்பு கடந்த 23ஆம் திகதி வெளிவந்து, விழாவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய மக்களின் தீர்ப்பு என்னவோ அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நரேந்திர மோடியின் பா.ஜ.க கூட்டணி  கடந்த 2014 பொதுத் தேர்தலில் 336 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 60 இடங்களைப் பெற்றது. ஆனால் இத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி மொத்த 542 நாடாளுமன்றத் தொகுதிகளில் 350 தொகுதிகளை இந்திய மாநிலங்களெங்கும் கைப்பாறியதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. இத்தகைய அசுர பலத்தை ஒரு கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றிருப்பது, பெரும்பாலும், இதுவே முதல் தடவை எனக் கருதப்படுகிறது. ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் இரண்டு தடவைகள் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றுவது 48 ஆண்டுகளின் பின்னர் இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தனைக்கும் கடந்த ஐந்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் மோடி அரசு சாதனைகள் படைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பலகோடி டொலர்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து தலைக்கு 15 இலட்சம் ரூபாவாக இந்திய மக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வேன் என்று, நிலவில் இருந்தாவது அரிசி கொண்டு வருவேன் என்று எழுபதான் ஆண்டு தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வாக்குறுதி அளித்ததைப் போல, மோடி தான் அளித்த வாக்குறுதியை பதவியேற்றதும் மறந்தே போனார். அதை விடுங்கள், அவர் காலத்தில் தான் பல கோடிக்களில் ஏமாற்றிவிட்டு தப்பியோடிய நீ ரவ் மோடியை அவரால் திருப்பிக் அழைத்து வரவும் முடியவில்லை. கிங்பிஷர் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பி வங்கிகளுக்கு ‘டாட்டா’ காட்டி விட்டு ஓடிப்போன விஜய் மல்லையாவை இன்று வரை அவரால் அழைத்துவரவும் முடியவில்லை. மோடி ஏழைப் பங்காளன் அல்ல, அம்பானிகளின் அடிமை என்ற பெயரை அவரால் துடைத்தெறியவும் முடியவில்லை. தலைக்கு 15 இலட்சம் வைப்பு செய்வேன் என்று சொன்ன அவர்தான் திடீரென ஆயிரம் மற்றும் 500 ரூபா நோட்டுகள் செல்லாது எனக் கூறி கறுப்புப் பண ஒழிப்பில் கங்கணம் கட்டி நின்றார். விஷயத்தை முன் கூட்டியே அறிந்து கொண்ட அம்பானிகள் தங்கம், வைரங்களை வாங்கிக் குவித்து கறுப்பை வெள்ளையாக்கிக் கொண்டார்கள். இதை முன் கூட்டியே அறிந்து கொண்ட அன்றைய தமிழக முதல்வரும் அவரது இணை பிரியா தோழியும் பல கோடி ரூபாவுக்கு வைரங்களை வாங்கிக் குவித்துக் கொண்டனர் என்றால், பண மதிப்பிழக்க நடவடிக்கையின் இரகசியம் எவ்வளவு தூரம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். 

இப் பண மதிப்பிழக்கத்தால் நாடெங்குமுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சிலர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. மத்திய ரிசர்வ் வங்கித் தலைவரே, இப் பண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வியடைந்தை ஒப்புக் கொண்டார். இதற்கிடையே ரஃபெல் விமான கொள்வனவில் பெருமளவு ஊழல் நடந்ததாகவும், அம்பானிக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்ட போர் விமான கொள்வனவுக்கான நிறுவனம், முன் இத்தகைய முன் அனுபவமற்றதாகவும் கருதப்படும் ஒரு நிறுவனத்திடமே விமான பேர ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும் சந்தேகங்கள் எழவே, விமான பேர ஊழல் சூடு பிடித்தது. ராகுல் காந்தி இவ்விடயம் தொடர்பாக மோடியுடன் நேரடியாக விவாதம் நடத்தவும் முன் வந்தார். எனினும் மோடி அதில் அக்கறை காட்டவில்லை. மேலும் தன் பதவிக் காலத்தில் அவர் பாராளுமன்றத்துக்கு வருவதில் அக்கறை காட்டவுமில்லை கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றியதும் மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் மட்டுமே!  

கங்கை நதியை சுத்தப்படுத்துவது முக்கியமான திட்டமாக அறிமுகப்படுத்தியது பா.ஜ.க ஆட்சி, எனினும் கங்கை இன்றைக்கும் அசுத்தமாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது கடந்த ஐந்து வருட கால ஆட்சியில் வட இந்தியாவில் இந்து அடிப்படைவாதம் பெரு வளர்ச்சி கண்டதோடு அது வன்மம் கொண்டதாகவும் மாறிப்போனது. பெரும்பாலான வட மாகாணங்கள் வறிய மக்களையும் படிப்பறிவில் மிகக் குறைந்தவர்களையும் கொண்டவை. சில குக்கிராமங்களில் பால்ய விவாகம், அரிதாக உடன் கட்டை ஏறுதல், விதவை மறுவிவாகரத்துக்கான வாய்ப்பின்மை, கடுமையான மூடநம்பிக்கை என்பனவற்றைக் காணமுடியும். இம் மாநிலங்களில் சாதி அமைப்பு கடுமையாக கடை பிடிக்கப்படுவதோடு சமூக ஏற்றத்தாழ்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால், வட மாநிலங்களில் மிகச் சுலபமாக இஸ்லாமிய எதிர்ப்பு, பாகிஸ்தான் வெறுப்பு வாதங்களை விதைத்து அறுவடை செய்ய முடியும். இதை கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு வெற்றிகரமாக வட மாநிலங்களில் செய்து முடிந்ததன் விளைவாகவே, இம்முறை பா.ஜ.க.வினால் அசுர பெரும்பான்மை பெற முடிந்திருக்கிறது என்பது மிகவும் வெளிப்படையானது.  

மத்திய பிரதேசத்தில் இந்த ஆட்சிக்காலத்தில்தான் யோகி ஆதித்யநாத் என்ற இந்துத் துறவி முதல்வராக பதவியேற்றார். அம்மாநிலத்திலேயே மாடு அறுப்புக்கு அவர் தடை விதித்தார். மாமிசம் புசிப்போரின் உரிமைகளையும் எளிய வழிகளில் புரதசத்தை சாதாரண மக்கள் பெறக் கூடிய வாய்ப்பை மறுத்ததும் அவர் செய்த புண்ணிய காரியம். ராஜஸ்தானில் மாடுகளை லொறிகளில் ஏற்றிச் சென்றவர்களை வழி மறித்து தாக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு சம்பவத்தில், மாடு பிடிக்கச் சென்ற தமிழக அதிகாரிகளை வழி மறித்த கும்பல் மாடுகளை விடுவித்து அதிகாரிகளை நையப்புடைக்க முனைந்தது. ஒரு நபர், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த ‘குற்றத்’துக்காக கொலை செய்யப்பட்டார். அடிப்படையில் பா.ஜ.க.வும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சும் இந்து இந்தியாவையும் அகண்ட இந்தியாவை (பாகிஸ்தான், வங்கதேசம், உள்ளடங்கலாக) யும் தமது இலக்குகளாகக் கொண்டவை. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாடு என்ற கோஷத்தின் விரிவாக்கம், நாடு முழுவதும் பேசப்படும், ஆராதிக்கப்படும் ஒரே மொழியாக சமஸ்கிருதம் (தேவபாஷை) அல்லது மேலும் பல சமஸ்கிருத சொற்கள் கலந்த இந்தி மொழி விளங்க வேண்டும் என்பதும், ஒரே சமயமாகவும் பண்பாடாகவும் நாடெங்கும் இந்து சமயம் அதன் வர்ணாசிரம அடையாளங்களுடன் கோலோச்ச வேண்டும் என்பதாகும். 

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சக் கட்ட பொழிப்புரைகள், எப்படி இந்நாடு பெளத்த, மதத்தையும் கலாசாரத்தையும் சிங்கள மொழியை மட்டும் கொண்ட நாடாகவும் விளங்க வேண்டும் என்பதை பொருளாகக் கொண்டுள்ளதைப் போலத்தான் மோடியின் அரசும் இந்தியாவின் தன் காவிக் கொள்கையை பரப்பி வருகிறது. 

கடந்த 23ம் திகதி வெளியான இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. நாடுதழுவிய மகத்தான வெற்றி பெற்றிருப்பதை இந்தப் பின்புலத்திலேயே நாம் பார்க்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க எதையும் பெரிதாக சாதித்ததாக தெரியவில்லை. அதாவது 349 லோக்சபா ஆசனங்களை கைப்பற்றும் அளவுக்கு மோடி அரசு எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் முக்கியம். அப்படியும் இவ்வளவு பெரியதும், பரவலானதுமான வெற்றியை அக் கட்சி பெற்றிருக்கிறது என்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது. 

எனினும் மக்கள் தீர்ப்புக்கு நாம் மரியாதை செய்தாக வேண்டும். ஆனால் மக்களின் அறியாமை, சிந்தனைத் தெளிவின்மை, பாரம்பரிய நம்பிக்கைகளில் கொண்டிருக்கும் உறுதியான பற்று என்பனவற்றைப் பயன்படுத்தி, இனவாதத்தையும், மதவாதத்தையும் தமக்கு சாதகமாகக் கொண்டு பெறப்பட்ட வெற்றியே இது என்பது சுதந்திர சிந்தனையாளர்களின் கருத்தாக உள்ளது.  

இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான கிலோ லட்டுகள் தயாரிக்கப்பட்டு டமார ஓசைகளுக்கு மத்தியில் சந்தோஷமாக பா.ஜ.க. ஆதரவாளர்களிடம் விநியோகிக்கப்பட்டிருக்க, சோகம் கப்பிய முகங்களுடன் திரிகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். இவ்வளவு சோகமானதும் இக்கட்டானதுமான ஒரு சூழல் காங்கிரசுக்கு முன்னொருபோதும் ஏற்பட்டிருக்காது. பாலகங்காதர திலகர், கோகலே, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஈவேரா பெரியார், காமராஜர், நேருஜி, இந்திராகாந்தி, ராஜேந்திர பிரசாத், ராஜாஜி போன்ற பெருந்தலைவர்களால் ஒரு காலத்தில் புது டில்லியலும் மாநிலங்களிலும் வழி நடத்தப்பட்ட ஒரு பேரியக்கம், சுதந்திர இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்து வந்திருக்கும் ஒரு கட்சி, இன்று முழு இந்தியாவிலும் 92 ஆசனங்களைப் பெற்று கூனிக் குறுகியிருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. 

ராஜீவ் காந்தி காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் சரிவு ஆரம்பமாகி இருந்தது. அதன் பின்னர் தலைமைப் பதவியேற்ற சோனியா காந்தி காலத்தில் நாட்டை காங்கிரஸ் ஆட்சிசெய்த போதும் அதனால் தனிப்பெரும் கட்சியாக வர முடியவில்லை. ராஜீவ் காலத்தோடு காங்கிரசின் பொற்காலம் முடிவுக்கு வந்து, கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்கும் நிலைக்கு அக்கட்சி வந்திருந்தது. சோனியாவின் எண்ணம், தனக்குப் பின் ராகுல் காந்தியிடம் ஒரு வலுவான காங்கிரசை ஒப்படைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் சோனியா, சோதனைகள் நிறைந்த ஒரு காங்கிரசையே, அதுவும் இந்துத்துவாபேசும் மோடிக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டிய கட்சியையே, ராகுலிடம் கையளித்திருக்கிறார். 

சாதாரண இந்தியக் குடிமகன், தோற்றப் பொலிவும், பேச்சுத் திறமையும், நம்பகத் தன்மையும் கொண்ட ஒரு திரைப்பட நாயகனைப் போன்ற நபரே தனது தலைவராக வர வேண்டும் என விரும்புவான். அவனது புராண வழிச் சிந்தனையும் சரி பின்னர் வந்த திரைப்பட மசாலா கதாநாயகர்களும் சரி, அரசியல் தலைவர்களை இப்படித்தான் கட்டமைத்துள்ளனர். நேருஜியும், இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இத் தோற்றப் பொலிவையும் அரசியல் அறிவையும், நிர்வாகத் திறமையும் பெற்றிருந்ததோடு தலைமைத்துவத்தின் வசீகரத்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். சோனியா காந்தி இத்தகைய பண்புகளைக் கொண்டிருக்காத போதிலும், வேறு வசீகரிக்கக் கூடிய தலைவர்கள் இல்லாததால் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை உச்சாணிக் கொம்பில் ஏற்றி ஒரு மாயச் சூழலை உருவாக்குவதில் வெற்றிபெற்றனர். அவர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வழிபடத்தக்க ஒரு நபரைப்போல சித்தரிக்கப்பட்டார். இந்த மாயையில் கலைஞர் கருணாநிதியும் சிக்கிக் கிடந்து, அன்னை சோனியா என்றே அழைத்து வந்தார். ஆனால் மன்மோகன் சிங்கின் இரண்டு பதவிக் காலத்திலும் இந்திய மக்களை ஆச்சரியமூட்டும் அல்லது வசீகரிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்படவில்லை. இது, அக் கட்சியின் ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயற்படுத்தப்படவில்லை என்ற பொருளைத் தராது. எனினும் சாதாரண மக்களை மன்மோகன் ஆட்சி வசிகரிக்கத் தவறியது என்பதே உண்மை.  

2014இல் நடைபெற்ற தேர்தலில் மோடி அலை ஆர்ப்பரித்ததற்கு, மிகவும் திட்டமிட்ட ரீதியாக பா.ஜ.க காய்களை பல ஆண்டுகளாக நகர்த்தி வந்தமையே காரணம். காங்கிரஸ் மதச் சார்பின்மை என்றால், பா.ஜ.க இந்துத்துவம் பேசி தன்னை மண்ணின் மைந்தர்களாகக் காட்டிக் கொண்டது. வட மாநிலங்களில் படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்துத்துவ எழுச்சிக்கு எதிராக காங்கிரசின் மதச்சார்ப்பின்மை வலிமை கொண்டதாக அமையவில்லை. புதிதாக எந்தவொரு கொள்கையையும் அதனால் நிலை நிறுத்தவும் முடியவில்லை. எனவே, ஆழமான அனுபவ அறிவற்ற, தோற்றப் பொலிவு குறைந்த, இந்திய குடிமகனின் உளவியலைச் சரியாக புரிந்து கொள்ள இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி வலிமை குன்றிய காங்கிரஸ் கட்சியை பொறுப்பேற்க வேண்டிதாயிற்று. 

பொறுப்பேற்ற பின்னர் அவர் அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்து வந்த நிலையில் இத் தேர்தலில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். அவர் தன் நிலை இக்கட்டாக இருப்பதை உணர்ந்ததாலேயே இந்திரா காந்தியின் தோற்றப் பொலிவைக் கொண்ட பிரியங்கா காந்தியை பிரசாரத்துக்காக அழைத்துவர நேர்ந்தது. பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும் என்பதே காங்கிரஸ் இரண்டாம் மட்ட மற்றும் பெருவாரியான தொண்டர்களின் அபிலாஷையாக இருந்தது. ஆனால் காந்தி குடும்பம் அம் முடிவை எடுக்கவில்லை. தன் மகனை முன்நிறுத்தலாம் என சோனியா கருதியிருக்கலாம். பிரியங்காவை துரும்புச் சீட்டாகக் களமிறக்கலாம் என்பது திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்திராவின் தோற்றப் பொலிவு மட்டும் மோடியை வீழ்த்தாது என்பது மட்டுமல்ல; ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் காப்பாற்றவும் செய்யாது என்பதை இத் தேர்தல் நிரூபித்துள்ளது. இப்போது காங்கிரஸ் அம்பறாத் தூணியில் கையிருப்பாக எந்த அஸ்திரமும் இல்லாத நிலையில் காங்கிரஸ் திக்குத் தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கிறது. 

இப்போது ராகுல் காந்தி என்ன செய்யப் போகிறார்?  

சாதாரணமாக சிந்தித்தால் அவர் இராஜிநாமா செய்ய வேண்டியிருக்கும். அநேகமாக அவர் அதைச் செய்யவும் முற்படலாம். ஆனால் அவருக்குப் பதிலாக யார் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்கள்? பிரியங்கா காந்தியா? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. பிரியங்கா இல்லையென்றால், வெளியில் உள்ள ஒருவரிடமே அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டியிருக்கும். அவ்வாறு ஒப்படைத்தால் நேரு குடும்பத்தின் காங்கிரஸ் மீதான செல்வாக்கு அத்துடன் அஸ்தமித்துவிடும். காந்திமார்கள் இந்திய அரசியலில் தெருப்புழுதியாகி விடுவார்கள். 

எனவே, ராகுல் காந்தியை ராஜிநாமா செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ராகுலை அகற்ற வேண்டும் என்ற குரல் காங்கிரசில் வலுக்குமானால் அவருக்குப் பதிலாக பிரியங்கா அரியணை ஏறலாம். 

இனித் தமிழக அரசியலுக்கு வருவோம். 

தி.மு.க. கூட்டணிக்கு 37 இடங்கள் கிடைத்திருப்பதற்கான ஒரே காரணம். மோசமான எடப்பாடி அரசு மட்டுமே! காங்கிரஸ் எப்படி படிப்படியாக மவுசு குன்றிச் சென்றதோ அதே போலத்தான் தி.மு.கவும் கலைஞரின் இறுதிக் காலக்கட்டத்தில் வலிமை குன்றியதாகக் காணப்பட்டது. எம்.ஜி.ஆர். என்ற வலிமைமிக்க தலைமைக்கு எதிராக கலைஞரால் வெற்றிக் கொடி நாட்ட முடியவில்லை. தி.மு.கவின் துரதிர்ஷ்டம், எம்.ஜி. ஆரின் பின்னர் இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா வந்து சேர்ந்தார். அவர் ஆட்சி நடத்திய விதம் எப்படியிருந்தது என்பது வேறு விஷயம். ஆனால் எம்.ஜி. ஆரைவிட அதிக மக்கள் செல்வாக்கை ஜெயலலிதாவினால் வளர்த்துக் கொள்ள முடிந்தது, திரும்பவும் தி.மு.க.வுக்கு தலைவலியையே ஏற்படுத்தியது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் தனிக்கட்சியாக நின்று 38 பாராளுமன்ற ஆசனங்களை அவரால் வெற்றிகொள்ள முடிந்ததும், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்று வந்த பின்னரும் ஆர்.கே. தொகுதியில் அவரால் வெற்றிபெற முடிந்ததும் அவரது தனித்துவமான சாதனைகள். 

எம்.ஜி.ஆர். மறைந்த பின்னரே கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது போலவே ஜெயலலிதா மறைந்த பின்னரேயே தி.மு.க.வின் தமிழக வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனியாளாக சாதித்துக் காட்டியதை இம்முறை தி.மு.க தன் தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து சாதித்து காட்டியிருக்கிறது. வலுவான போட்டி இல்லாத நிலையில்தான் தி.மு.க ஜெயிக்கும் என்பது மறுபடியும் நிதர்சனமாகியுள்ளது. 

தி.மு.க இந் நாடாளுமன்றத் தேர்தலில் கொடி கட்டும் என்பது எதிர்பார்க்கப்பட்ட அதே சமயம் 22 சட்ட சபை இடங்களுக்கான இடைத்தேர்தலில் 20 இடங்களையாவது அள்ளும் என்றே பலரும் கருதியிருந்தனர். உண்மையைச் சொன்னால், சட்டசபை இடைத் தேர்தலில் தி.மு.கவுக்குக் கிடைத்தது அதிர்ச்சி கலந்த வெற்றிதான்!  

தி.மு.க முக்கிய பிரமுகர்கள் 22 ஆசனங்களும் தி.மு.க. வசம் வீழ்ந்துவிடு என்றும் இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆட்சியைக் கலைத்து விடலாம் என்றும் கருதி வந்த நிலையில் அ.தி.மு.க ஒன்பது இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே எடப்பாடிக்கு 2021 வரை கவலையில்லை. ஆனால் குதிரை பேரம் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஒன்பது தொகுதிகளில் ஒரு பலவீனமான அ.தி.மு.கவினால் வெற்றிபெற முடிகிறது என்றால், இன்றைக்கும் அ.தி.மு.க உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்பதுதானே அர்த்தம்! எனவே, எடப்பாடி அரசு தன்னைத் திருத்திக் கொண்டு 2021வரை நல்லாட்சி தந்தால், தி.மு.க வுக்கு சவால் விடக்கூடிய அளவில் தன்னை வளர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா வாக்கு வங்கிகள் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருந்து இரட்டை இலையை காப்பாற்றி வருகிறது.  

இம்முறை நாம் அவதானிக்க வேண்டிய ஒரு விஷயம், நாம் தமிழர் சீமானும், மக்கள் நிதி மய்யத்தின் கமல்ஹாசனும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியிருப்பது தான். இந்த இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 15 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. கமலினால் மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட 14 மாதங்களில் இத்தகைய வளர்ச்சி தனக்கு திருப்தி அளிக்கிறது என்றும் பணப் புயல் மத்தியிலும் கிராமங்களில் நிலவும் ‘பாதுகாக்கப்பட்ட ஏழ்மை’யின் காரணமாகவும் தன்னால் இந்தளவு வெற்றியை பெற முடிந்ததே பெரிய விஷயம் என்பது கமலின் கருத்து. கிராமங்களை வேண்டுமென்றே ஏழ்மை நிலையில் இந்த அரசியல்வாதிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும் கமலின் பார்வையாக இருக்கிறது.  இதே சமயம் மிகக் குறைவான வாக்குகளையே பெற்று வந்திருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி இம் முறை திருப்திகரமாக செயற்பட்டிருக்கிறது. கமலுக்கும் சீமானுக்கும் திருப்தியளிக்கும் இடைத்தேர்தல் இது! 

தி.மு.க. 37 இடங்களை லோக் சபாவில் பெற்றிருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இயங்க முடியாத உறுப்பினர்களாகவே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்க நேரிடும். இதனால்தான், தி.மு.க, மோடி அரசில் இணையலாம் என்ற பேச்சு மீண்டும் சென்னை அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஆனால் தி.மு.கவின் வெற்றிக்குக் கைகொடுத்ததே தமிழக மக்களின் மோடி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு மனோநிலைதான். தமிழகம் மறுபடியும் இது பெரியாரின் சுயமரியாதை திராவிட மண் என்பதை நிரூபித்திருக்கிறது. மோடிக்கு தி.மு.கவின் 37 அவசியமில்லை என்றாலும் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதற்காக அவர் ஸ்டாலினை அரசில் சேர்த்துக் கொள்ள விரும்பலாம். ஆனால் தி.மு.க.வின் வேர் திராவிட மண்ணில் ஊன்றியிருப்பதால் ஸ்டாலின் இந்தத் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. 

எனினும், கடந்த முறை ‘டிபொசிட்’ இழந்த தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை கனிமொழியை எதிர்த்து இரண்டு லட்சம் வாக்கு பெற்றிருப்பது, அ.தி.மு.கவின் துணையுடன் தான் என்பது உண்மையானாலும், தமிழக மண்ணில் வேரூன்ற பா.ஜ.க. எடுத்து வரும் பகீரத முயற்சியில் இது ஒரு முன்னேற்றம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.    

அருள் சத்தியநாதன்

Comments