கொலைக்கள பூமியில் கட்டப்பட்ட புனித போல் தேவாலயம் | தினகரன் வாரமஞ்சரி

கொலைக்கள பூமியில் கட்டப்பட்ட புனித போல் தேவாலயம்

(சென்றவார தொடர்)

அவர் மயான பூமியின் கடந்த காலம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.   “நான் இந்த மயானபூமி மேற்பார்வை தொழிலுக்கு வருவதற்கு முன்னர் சுற்றுலாத்துறை சார்ந்த ஹோட்டல்களில் வேலை செய்தேன். கடந்த கால யுத்த நடவடிக்கைகள் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தமையினால் எனது தொழிலை இழந்தேன். பின்னர் புனித போல் தேவாலயத்திற்குரிய கட்டட நிர்மாணப்பணியில் மேற்பார்வையாளனாக வேலை செய்தேன். 2013ம் ஆண்டு பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கைக்கு வந்தபோது இம்மயான பூமி காடாகிக் கிடந்தது. எனவே இதனை புனரமைக்கும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு வருட காலத்தில் புனரமைப்பு வேலைகளை பூர்த்திசெய்தோம். பின்னர் விருப்பமிருந்தால் இங்கு தொழில் செய்யுமாறு கூறினார்கள். அதன்பின்னர் நான் இங்கு தொழிலுக்கு வந்தேன்.  

‘கெரிசன்’ எனப்படுவது இராணுவத்தினர் பாவிக்கும் ஒரு சொல்லாகும். முகாம் என்று பொருள்படும். கி.பி 1817ம் ஆண்டு பிரித்தானிய இராணுவத்தில் பணிபுரிந்தவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர். மத்திய மலைநாட்டில் கோப்பிப் பயிர்ச் செய்கைக்காக இங்கு வருகை தந்த ஆங்கிலேயர்களும் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மலேரியா முதலான கடும் நோய்களினால் பீடிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியிருந்தனர்.  

1816ல் கண்டி ஸ்ரீ விஷ்ணு கோவில், நாத தேவாலயம், (சிவன் கோவில்) பத்தினி (கண்ணகி) தேவாலயம், ஸ்ரீ தளதா மாளிகை என்பன அமைந்திருந்த ‘தேவசங்ஹிந்த’ என்னும் இடத்தில் புனித போல் தேவாலயத்தை ஆங்கிலேயர் கட்டினர். அந்த இடம் எஹலபொலவின் மனைவி குமாரிஹாமி மற்றும் பிள்ளைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடம் என கூறப்படுகின்றது. அன்று அந்த இடம் சேற்றுடன் காணப்பட்ட சதுப்பு நிலமாகும். அதை மண்கொண்டு நிரப்பி அதன் மீது தேவாலயத்தை எழுப்பியுள்ளனர். இவ்வாறு கெரிசன்’ காணியில் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கு முன்னர் மதவழிபாடு மேற்கொள்வதற்காகவே தேவாலயம் கட்டப்பட்டது. அவ்வாறு தேவாலயத்தில் ஆராதனைகள் நடத்தப்பட்டு தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்ட முதலாவது பூதவுடல் ஜேம்ஸ் மெக்கெல்ஷன் என்னும் இருபத்தாறு வயது இராணுவ அதிகாரியினுடையது. அவர் போரினால் மரணமடையவில்லை. கொடிய காட்டுக்காய்ச்சல் (மலேரியா) காரணமாகவே உயிரிழந்தார்.  

கி.பி. 1873ம் ஆண்டு இம்மயான பூமியை பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக மாஹியாவ மயானத்தை உருவாக்கினர். 1951ம் ஆண்டு இங்கு இறுதியாக அடக்கம் செய்யப்பட்ட பூதவுடல் திருமணமாகாத ஆங்கிலேய பெண்ணொருத்தியினுடையதாகும்.  

அப்பெண்ணுக்குச் சொந்தமான காணி கண்டிவாவிக்கு மேற்புறமாக இருந்தது. அக்காணியில் மிகப்பெரிய வீடொன்றில் அவள் வசித்து வந்தாள். தனது மரணத்திற்கு முன்னதாக இறுதி உயில் எழுதிய அந்தப் பெண், தனக்குச் சொந்தமான காணிகள் அனைத்தையும் புனித போல் தேவாலயத்திற்கு உரித்தாகும் வண்ணம் எழுதியிருந்தாள். இன்று கண்டி ‘ஹில்வூட் கல்லூரி’ அந்த காணியிலேயே அமைந்துள்ளது. இக் கல்லூரி மேற்படி தேவாலயத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.  

எனவே அப் பெண்ணின் பூதவுடலை கெரிசன் மயானத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டுமென தேவாலய நிர்வாகம் தீர்மானித்தது. அவளது உறவினர்களும் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்தமையினாலும் தேவாலயத்தின் சார்பில் இவ்விதம் முடிவெடுக்கப்பட்டது. எனினும் அன்றைய கண்டி மாநகரசபை அதற்காக அனுமதியை வழங்க மறுத்தது. அதற்கு அவர்கள் தெரிவித்த காரணம், கெரிசன் மயானத்தில் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதாகும் அதன் பின்னர் அப்பெண்ணின் பூதவுடல் மாஹியாவ பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

சில தினங்களின் பின்னர் தேவாலயத்தின் சார்பில் கண்டி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவளது உறவுக்காரர்கள் கெரிசன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமையினால் அவர்களின் இரத்த உறவுக்காரியென்ற முறையில் அவளது பூதவுடல் அங்கு அடக்கம் செய்யப்படுவதே நியாயம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. தேவாலயத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கெரிசன் மயானத்தில் அப்பெண்ணின் பூதவுடலுக்கு இடமளிக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது. அதனைத்தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்ட அப் பெண்ணின் பூதவுடல் மாஹியாவ பொது மயானத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு கெரிசன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுவே இங்கு நிகழ்ந்த கடைசி நல்லடக்கமாகும். அதன்பின்னர் இம்மயானத்தில் இறுதிக்கிரியைகளும் நல்லடக்கங்களும் நிகழவில்லை” என்று பேசினார்.  

மூன்றேகால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கெரிசன் மயானத்தில் 163நினைவுத்தூபிகள் காணப்பட்ட போதும் 450ஆங்கிலேயர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஒரே புதைகுழியில் நான்கைந்து பூதவுடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது.  

இவர்களில் ஐம்பது வயதைத் தாண்டி உயிர் வாழ்ந்தவர்கள் பதினொரு பேர் மாத்திரமே. ஏனைய அனைவரும் அதனைவிட குறைந்த வயதிலேயே மரணமடைந்துள்ளனர்.  

இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்க பிரமுகராக ஜோன் டொயிலி கருதப்படுகின்றார். இறக்கும்வரை திருமணமாகாதவராக வாழ்ந்து 1924மே மாதம் 24ம் திகதி மரணத்தைத் தழுவியபோது அவரது வயது 49ஆகும்.  

1815ம் ஆண்டு முழு இலங்கையும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வருவதில் முக்கியமானவராகக் கருதப்பட்ட இவர், தேசத்தைக் கைப்பற்றியதன் பின்னர் ஒன்பது வருடங்கள் மாத்திரமே உயிர் வாழ்ந்தார். அவர் பிரித்தானிய பேரரசுக்கு பெருஞ்சேவை புரிந்தவராயினும் இலங்கை தனது ஒரே சுதந்திர இராச்சியத்தை இழப்பதற்கு அவரே முக்கிய காரணகர்த்தா.  

கி.பி. 1774ம் ஆண்டு ஜூன்மாதம் 06ம் திகதி இங்கிலாந்தில் சசெக்ஸ் மாநிலத்தில் மதகுரு குடும்பமொன்றின் இரண்டாவது குழந்தையாக பிறந்த ஜோன் டொயிலி, 1796ம் ஆண்டு பி.ஏ. பட்டத்தைப் பெற்றார். 1978ம் ஆண்டு இராஜாங்க தகவல் அதிகாரியாக பதவியேற்க இலங்கைக்கு வந்தார். முதன்முதலாக இலங்கையின் கரையோர பிராந்திய அரச நிர்வாக சேவையில் பணியாற்றிய டொயிலி, பின்னர் கொழும்புக்கு வந்து சிவில் நிருவாகம் பற்றிய பயிற்சியைப் பெற்று மாத்தறையில் வரியிறுப்பாளராக கடமையாற்றினார்.  

அன்றைய இலங்கையின் பிரிட்டிஷ் ஆளுநர் பிறட்ரிக் நோர்த், இலங்கையில் சிவில் சேவையில் ஈடுபட்டுள்ள சகல ஆங்கிலேயர்களும் சிங்கள மொழி கற்றல் அவசியமென கருதினார். அதன் பிரகாரம் 1803ம் ஆண்டு முதல் மாத்தறை மற்றும் காலி பிரதேசங்களில் அரச அதிபராக பதவியேற்ற கொறத்தொட்ட தம்மானந்த மற்றும் மொறத்தொட்ட தம்மானந்த ஆகிய பிக்குமார்களிடம் சிங்கள மொழி, இலக்கியம், பௌத்த சமயம், சிங்கள கலாசாரம் என்பனவற்றைக் கற்றார்.  

இத்தகைய நிலைமைகள் காரணமாக ஆயுத பலத்தினால் கண்டியை கைப்பற்ற முடியாதென கருதிய ஆளுநர் மாற்று வழியொன்றை கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார். அம்மாற்றுவழியை நிறைவேற்றுவதற்கு தகுதியானவர் ஜோன் டொயிலியே என முடிவு செய்தார். இறுதியாக சிங்களவர்களைப் போன்றே மொழி கலாசாரம், மதம் என அனைத்தையும் நன்கறிந்தவராகிய டொயிலி மூலமாக கண்டி இராசதானியை தம்வசப்படுத்தலாம் என எண்ணினார்.  

யுத்தமின்றி இரத்தசிந்தலின்றி கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்ற ஜோன் டொயிலி காரணமாக இருந்தான். எனவே அவனை ஆங்கிலேயர் வீரன் எனக்கொண்டாடினர்.  

கண்டி ஆங்கிலேயரிடம் வீழ்ந்த பின்னர் மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனால் மறைத்து வைக்கப்பட்ட அரச சொத்துக்களை தேடும் பணியிலும் டொயிலி ஈடுபட்டான். கற்குகைகளில் மறைத்துவைக்கப்பட்ட பெருந்தொகையான பெறுமதி மிக்க சொத்துக்கள் சேகரிக்கப்பட்டன. 1820ல் லண்டனில் நிகழ்ந்த பிரமாண்டமான ஏலவிற்பனையில் கண்டி மன்னர்களின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு பெரும் பணம் ஈட்டபட்டது.  

மத்திய மலைநாட்டின் முதலாவது ஆணையாளராக நியமிக்கப்பட்ட டொயிலி தன் பதவிக்காலத்திலேயே மலேரியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மரணமானான்.  

பிறந்த நாட்டையும், உற்றார் உறவினர்களையும் விட்டு வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டில் யாருமற்ற அநாதையாக மரணித்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டான் டொயிலி. அவனது கல்லறையில் பூசப்பட்டுள்ள சாந்துப் பூச்சுகள் உலர்ந்து விழுவதைப் போன்று டொயிலி பற்றிய நினைவுகளும் இந்நாட்டு மக்களிடமிருந்து நீங்கிப் போயின.  

மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜோர்ஜ் டர்னர், சந்தன மரத்தினாலேயே பாலமொன்றை நிர்மாணித்த பொறியியலாளர் ஸ்கினர், வெளிநாட்டு போர்கள் பலவற்றிக்கு முகம்கொடுத்த கேப்டன் மெக்கிராசன், இலங்கையில் தேயிலை உற்பத்தியை ஆரம்பித்த ஜேம்ஸ் டெய்லர், அவருக்கு உதவிய ஒட்லண்ட் ரூடு ஆகியோரின் பூதவுடல்களும் கண்டி கெரிசன் மயானபூமியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.   

சி.கே.முருகேசு

நன்றி சிகிர குமார பண்டார  

(ரசவித்த) 

Comments