செல்லப்பிராணிகளிடத்தில் காட்டும் பரிவு பெற்றோரிடத்தில் இருக்கின்றதா? | தினகரன் வாரமஞ்சரி

செல்லப்பிராணிகளிடத்தில் காட்டும் பரிவு பெற்றோரிடத்தில் இருக்கின்றதா?

“ நாய் வீட்டைக்காக்கும்”  

 “ நாய் நன்றியுள்ள மிருகம்.”  

 “நாய் எசமானைக் காக்கும்”  

இந்த நாய்களின் நன்றியுணர்வுகள் பற்றி பிரபலமான சிறுவர் கதைகளும் உண்டு. நாய் வளர்க்காத வீடுகளே இல்லை. நாய்களை வளர்ப்பவர்கள் தமது படலைகளில் ‘நாய் கடிக்கும் கவனம்’ என்றொரு விசேட அறிவிப்பையும் கொழுவி வைப்பார்கள்.  

நாய்களுக்கு பெயர் வைப்பதிலும் விசேட கவனம் செலுத்துவோம். அநேகமாக அது ஆங்கிலப்பெயர்களாகவே தெரிவு செய்வோம். வெள்ளையர்கள் மீது எமக்கிருந்த கோபம், அவர்களது பெயர்கள் மீதிருந்த வெறுப்பு, அவற்றை நாய்களுக்கு சூட்ட வைக்கிறது என்று, என் தந்தை சொல்வார். அதிகமானோர் தமது நாய்களுக்கு ‘பொலிஸ்’ ‘டைகர்’ எனப் பெயர் வைப்பார்கள். டைகர் என வைத்தாலும் ‘டேக்கர்’ என்றே அழைப்பார்கள். கால மாற்றத்தில் நாங்களும் வேடிக்கையான பெயர்களை நாய்களுக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறோம். எமக்குப் பிடிக்காத அரசியலாளர்களின் பெயரை வைத்து மகிழ்ந்திருக்கிறோம். ‘இடி அமீன்’் எங்கள் வீட்டில் வளர்ந்த சிறந்த வேட்டைக்காரன். மடு ரோட்டிலிருந்து கொண்டுவந்த ஒரு நாய்க்குட்டி. சாகும்வரை ‘மடுரோட்’ என்றே அழைக்கப்பட்டது. பெயர் வைக்க காலதாமதமாகி குட்டி என்ற பெயருடனேயே சாகும்வரை வாழ்ந்த நாய். வயல்வெளியில் பல புடையன் பாம்புகளிடமிருந்து என்னை காப்பாற்றியிருக்கிறது. என்பது மட்டுமல்ல இறுதியில் நமது கோழிக்கூட்டுக்குள் புகுந்த விரியனை கடித்துக்குதறியபோது அதன் பல்லுப்பட்டு தன் உயிரைவிட்டது. மனிதச்சாவுக்கு நிகராக எம்மை அழவைத்த நாய்களின் வரிசையில் இது முதலிடம் பெறுகிறது.  

 அப்பா வன்னி காடாக இருந்த காலத்தில் நிரம்ப காடுகளை அழித்து கழனியாக்கியவர். எப்போதும் இரவில் காட்டுவிலங்குகளின் சூழலில்தான் வாழ்ந்தோம். பாம்புகள் படுக்கைவரை வரும். பன்றிகள் வீட்டின் பின்புறம் உறுமும் மான்கள் அயலில் கூவும், அவர் ஒரு வேட்டைக்காரன். மிருகங்களின் நடமாட்டைத்தை மணந்து சொல்லும் வல்லவர். அதை எனக்கும் இயன்றளவு கற்பித்தார். எம்மிடம் ஒரே சமயத்தில் ஆறேழு நாய்கள் இருக்கும். எம்மிடம் மட்டுமல்ல வீட்டுக்கு வீடு இப்படித்தான்.  

வன்னியில் வேலன்குளம் என்றொரு கிராமம். ஒரு சிறு மண்வீடு. அங்கு நிரம்ப பிள்ளைகள் அந்த வீட்டு அம்மாள் பதினாறு பிள்ளைகளை பெற்றிருந்தாள். அவர்கள் வீட்டில் பதினாறு நாய்கள் இருந்தன. வீட்டுக்கு வீடு இப்படித்தான் நிரம்ப நாய்கள் இருக்கும். காட்டிலிருந்து வயலுக்கு செல்வதுவரை இவற்றுக்கு வேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. நிரம்ப பால்மாடுகள் அவற்றை மறித்து மேயக் கொண்டு செல்வதே நாய்கள்தான் பாலும் தயிருமாக (தேனை சொல்லவில்லை தேன் நாய்களுக்கு நஞ்சு) குடித்து ஒவ்வொன்றும் உழுத்தங்காய்களைப்போல அப்படி திரண்டிருக்கும். நான்கைந்து நாய்களாக சேர்ந்து யானையையே கலைப்பதை நான் கண்டிருக்கிறேன். எட்டுக்கு எட்டடியே கொண்ட அந்த மண்சுவர்கூட முட்ட சுவர் வைக்காத குசினியில் பிள்ளைகளோடு பிள்ளைகளாக நாய்களும் சாப்பிடும். அவற்றை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களோடு கூடி குளத்தில் நீச்சலடிக்கும். மாதமொருநாள் அவைகளுக்கு மூலிகை அரைத்து தேய்த்து, இந்த நீச்சல் நடக்கும். வாசலுக்கு வெளியே தீமூட்டம் போட்டு அவற்றின் அருகே அவை படுக்க அனுமதிக்கப்படும். நாய்கள் வீட்டைக் காக்கும் என்பது மட்டுமல்ல நம்மையும் காத்த வரலாற்றை பெரும் நாவலாகவே எழுதலாம்.  

 போராளிகளுக்கு நாய் வளர்க்க அனுமதி இல்லை. அது கண்ட நேரத்தில் குலைத்து, எதிரியை ‘அலேட்’டாக்கிவிடும் என்பதால் அத்தோடு காட்டு முகாம்களில் நாய்களின் நடமாட்டம் இருந்தால் எதிரிகள் இலகுவாக முகாமைக் கண்டுகொள்வார்கள். என்பதாலும் இருக்கலாம். ஆனால் அன்டன் பாலசிங்கம் அவர்களிடம் ஒரு நாய் இருந்தது. ஒருதடவை ஒரு பேச்சு வார்த்தைக்கு அரசதரப்பினர் வந்தபோது, அன்டன் பாலசிங்கம் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. ஆனால் வந்திருந்த ராணுவ அதிகாரி புறப்படும் போது,  

“பாலா அங்கிளை பார்க்கலாமா?” என்று கேட்டாராம். 

“அவர் வந்தாரா என்ன?” என மற்றவர்கள் கேட்டதற்கு,  

“அவருடைய நாய் இங்கே நின்றது அவரும் இங்குதான் இருக்கிறார்” என்றாராம்.  

 இதைப்பின்பற்றி தலைவரும் நாய்களை வளர்த்தார். ஆரம்பத்தில் புலிக்குட்டிகளை வளர்த்தாலும் ஒரு வயதுப் பக்குவம் வந்த போது காட்டு விலங்குகளை காடுகளுக்குள் விடும்படி கட்டளையிட்டார். அதன்படி போராளிகள் உருவாக்கியிருந்த பூங்காக்களில் அடைக்கப்பட்ருந்த புலிகளும் பறவைகளும் ஏனைய விலங்குகளும் காட்டில் விடப்பட்டன. அவருடைய அபூர்வமான நாய்களை இறுதிக்கட்டப்போரின் போது வெள்ளான் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு கொண்டு சென்று அங்கே சுட்டுக்கொன்றார்கள்.  

 போச்சா! கதை திசைமாறிப் போய்விட்டது. நாங்கள் எமது கட்டுரைக்கு திரும்புவோம். எனது பேத்தி இருபதாயிரம் ரூபாவுக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கியிருக்கிறாளாம். ஏன் வீட்டுக்கிழவன் சொல்வது போல ‘அது ஒரு அலுமோனியன் நாய்க்குட்டியாம்.(அல்சேசன்)’ அதற்கு மறுநாளே ஊசி போட்டு தடுப்பு மருந்துகள் கொடுக்க விலங்குகளின் வைத்திய நிலையத்துக்கு கொண்டு போனதால் அன்றைய வேலைக்கு லீவு போட்டுவிட்டேன் என்றாள்.  

 “படிக்காம இருந்தா" மாடுமேய்க்கத்தான் போவாய்?” என்று என் மாமா ஏசுவது என் காதில் கேட்கிறது. அவர்  செத்துப்போனார். இருந்திருந்தால் நான் சொல்வேன்.  

“படிக்காதவன் மாடுமேய்க்கிறான். சரி படிச்சவன் பணக்காரன் நாய்மேய்க்கிறான்.”  

 நாய் வீட்டைக் காக்கும் அப்ப. நாயை வீட்டுக்காரன் காக்கிறான் இப்ப. வாசலில் போட்ட சாக்கில படுக்கிற நாய்கள் அப்ப அதுவும் இல்லாவிட்டாலும் அது புழுதியில் படுக்கும். இப்ப நாய்களுக்கும் கட்டிலென்ன மெத்தையென்ன கட்டிமுத்தமாடலென்ன? நாங்கள் சாப்பிட்டிட்டு  போடுற எலும்புகளையோ மீதமிருந்த உணவையோ சாப்பிடுகிற நாய் எமது நாட்டின் நாய்கள். புத்தம்புதிதாக முட்டையும் மீனும் இறைச்சியும் பக்குவமாக சமைத்து போட்டால் சாப்பிடும் வெளிநாட்டின நாய்கள். ஏதாவது உணவில் குறைபாடென்றால் அவற்றை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் இந்த நாகரீக எசமானர்கள், தம்மை பெற்றவர்களை இப்படி கவனிக்கிறார்களா..என்றால் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இந்த நாய்கள்மீது செலுத்தியுள்ள முதலீடு அதிகம். சரி இவ்வளவு பணமுதலீட்டுக்கு என்ன பயனடைகிறீர்கள். என்றால் மீளவும் குட்டி போட்டால் அதை பல ஆயிரங்களுக்கு விற்கலாமே. அதை வாங்குபவருக்காவது ஏதாவது பயனுண்டா? இதைத்தான் சொல்லுறது,  

“கிடக்கிறதெல்லாங் கிடக்கட்டும் கிழவனத் தூக்கி மடியில வை” என்று

Comments