இப்படியும் நடக்கும்! | தினகரன் வாரமஞ்சரி

இப்படியும் நடக்கும்!

“அல்லாஹ் நீயே போதுமானவன்... நீதான் எல்லாரையுமே பாதுகாக்கணும்” மனதிற்குள் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவாறே, மட்டக்களப்பு, பஸ் நிலையத்திலிருந்து இலங்கைப் போக்குவரத்துப் பேருந்தொன்றில் ஏறி, லாவகமாகத் தனக்குப் பிடித்த, சாரதியின் இடதுபக்கமுள்ள ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டார் அந்த வயோதிப மனிதர். பார்ப்பதற்கு மிகவும் வறியவர் என்பது, அவருடைய ஆடைகளிலிருந்து புலப்பட்டது. பறட்டையாக வாரிவிடப்பட்ட தலைமுடி, நரைத்த பெரிய தாடி, மீசை போன்றன, அவரை அலங்கோலமாகக்   காட்டின.

ஆசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டவர், தான் போகுமிடத்திற்கான (டிக்கற்) பற்றுச்சீட்டைப் பெறுவதற்காக, தனக்குப் பின் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களுக்குப் பற்றுச் சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த பஸ் நடத்துனரைப் பார்த்து, “ஐயா, எனக்கு அக்கரைப்பற்றுக்கு ஒரு டிக்கற் தாங்க” என்று, சற்றுச் சப்தமாகக் கேட்டார். சப்தம் வந்த திசையைப் பார்த்த நடத்துனர், இவரை ஏதோ ஒன்றை அதிசயமாகப் பார்ப்பதுபோல், வேலமான பார்வையுடன் உற்றுப் பார்த்து விட்டு, “டிக்கற் கொடுத்துக் கொண்டுதானே வாறன்... இப்படிக் கத்தத் தேவல்ல, இரும் வரக்குள்ள தாறன்” என்று, அவர் ஒரு வயோதிபர் என்கின்ற, ஒரு மரியாதைகூட இல்லாமல், அழையா வீட்டுக்குவந்த ஒரு விருந்தாளியிடம் பேசுவதைப் போல மனதிற்குள் கடிந்தவாறு கூறினார்.

சற்று நேரத்தில் அந்த வயோதிபரிடம் வந்தவர், அவருக்கு அக்கரைப்பற்று போவதற்கான பற்றுச்சீட்டைக் கொடுத்தார். இவரோ ஆயிரம் ரூபா நோட்டொன்றை நீட்டினார். மறு கணமே நடத்துனரின் முகம் பேய்போல் மாறிவிட்டது.

“பஸ்ஸில போகத்தானே வாறீங்க... ஒங்களுக்கெல்லாம் சில்லறக்காசே கொண்டுவரத் தெரியாதா? எதுக்காக நீங்களெல்லாம் பஸ்ஸில ஏறி எங்கள்ட   கழுத்த அறுக்கீங்க” இவ்வாறு தொடர்ந்தவர், இன்னும் தனது வாய்க்கு வந்த எவ்வளவையோ கொட்டித் தீர்த்தார்.

கடைசியாக பெரியவரின் பற்றுச்சீட்டின் பின்புறமாக எழுதிவிட்டு, “எறங்கேக்குள்ள மிச்சக்காசத் தாரன்... டிக்கட்ட வச்சிரும்” என்று கூறி, அவரிடம் பற்றுச்சீட்டைக் கொடுத்தவிட்டு, மறுபக்கமாய் நகர்த்தார்.

பேருந்தின் சாரதி, சற்று நேரத்தில் முன் கதவால் வந்து பேருந்தில் ஏறினார். அப்போது முன் ஆசனத்தில் அமர்ந்து, கையில் பைகளுடன் அமர்ந்திருந்த வயோதிபரை, அவரும் ஏதோவொன்றைக் கேவலமாகப் பார்ப்பதைப் போல, முறைத்துப் பார்த்துவிட்டு,

“பெரியவரே... மொதல்ல, வெளியால போய், வாய்க்குள்ள நீங்க கொதப்பி வச்சிருக்கிற, வெத்துல பாக்கத் துப்பிட்டு வாங்க”, கோபத்தோடு பாய்ந்து விழுந்தார் பெரியவர் மீது. மறுகணமே பெரியவர் பயந்தவாறே, பேருந்தை விட்டும் அவசர அவசரமாக வெளியேறி, தொங்கோட்டமும் நடையுமாகக் குப்பைத் தொட்டியை நோக்கி ஓடிச் சென்றார். அதற்குள் சாரதியோ பேருந்தை செலுத்த ஆயத்தமாகி, ‘ஹோர்ண்’ ஒலியைப் பல தடவைகள் எழுப்பினார்.

வாயிலிருந்ததைத் துப்பிவிட்டு, அவசர அவசரமாக இரைக்க இரைக்க ஓடி வந்து பஸ்ஸினுள் ஏறினார். பேருந்து ஓட  ஆரம்பித்து. அப்போது சாரதியின் கைபேசி அலறியது. ஒரு கையினால் பேருந்தைச் செலுத்திவாறு மறுகையால் கைபேசியைப் பிடித்துக் காதில் வைத்து, மிக நீண்ட நேரமாகச் சுவாரஸ்யமாகச் சிரித்துப் பேசியபடியே செலுத்திக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் பேருந்திலே ஏறிக் கொள்வதற்காக எத்தனையோ பிரயாணிகள் பேருந்தை நிறுத்துமாறு, வீதியோரப் பேருந்துத் தரிப்பிடங்களிலிருந்து கையினால் சைகை செய்தார்கள். நிறுத்துமாறு சைகை செய்தவர்கள் அனைவருமே, வயோதிபர்களும், பாடசாலைச் சிறார்களுமாகும்.

யாரையுமே கண்டுகொள்ளாமலேயே, யாருக்கு என்னதான் அவசரமாயினும் எனக்கென்ன? என்ற மனநிலையில் பேருந்தை தொடர்ந்தும் நிறுத்தாமலேயே செலுத்திக் கொண்டிருந்தார்   சாரதி. இதற்கிடையில் அந்தப் பேருந்தை முந்திச் சென்றது ஒரு தனியார் பேருந்து. அதனை கண்டதுதான் தாமதம், மறுகணமே இந்தப் பேருந்தை வேகமாகச் செலுத்த ஆரம்பித்தார் சாரதி.

இரண்டு வாகனங்களுக்குப் போட்டி நடந்தது. ஆம், யாரை யார் முந்துவதென்ற பலமான போட்டி. வேகமாகச் செல்லும் பேருந்தைப் பார்த்து உள்ளிருந்த பிரியாணிகளெல்லாம் “என்ன நடக்கப்போகிறதோ” என்று மனதால் பயந்தவாறு, நடுநடுங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் அச்சம் காரணமாக, வேறு பேருந்தில் செல்லும் நோக்குடன் அரைவழியிலேயே இறங்கியும் விட்டனர்.

தமது இடம்வந்து, பெல் அடித்து பேருந்தை நிறுத்துவோரைப் பார்த்துக் கடிந்து கொண்டார் சாரதி. “ம்.... சீக்கிரதம் சீக்கிரம் சீக்கிரமா இறங்குங்க” என்று சப்தமிட்டார். ஆட்கள் இறங்க முன்னமே பேருந்தைச் செலுத்தினார். வயதானவர்கள் இரண்டு மூன்று பேர், இவரின் அவசரமான சத்தத்தினாலும், அவசரமான யுத்தத்தினாலும், கால்தடுக்கித் தடுமாறிக்   கீழேயும், வீழ்ந்தும் விட்டனர்.

அவை எதையுமே ஒரு பொருட்டாகக் கூடக் கணக்கெடுக்காமல், முன்னால் செல்லும் தனியார்ப் பேருந்தினை முந்திச் செல்லுவதைக் கருத்திற் கொண்டே, பேயாக மாறிப் பேருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். சற்று நேரப் போட்டியின் பின்பு தனியார் பேருந்து ஓரிடத்தில் நின்றதும், அதை முந்தி இந்தப் பேருந்தை அடுத்த பக்கமாகத் திருப்பி, வேகமாக முன்னேறினார் சாரதி.

மறுகணமோ பாதையோரத்தில் மழை நீரால் நிரம்பியிருந்த பள்ளத்தைத் தாண்டிச் சென்ற பேருந்து பாடசாலைவிட்டு வீடு செல்வதற்காக, நின்ற மாணவர்களின் மீதும், பாதையோரம் நின்றவர்கள் மீதும், சேற்றுக்குழியில் நிரம்பி இருந்த சேற்றை, வாரி இறைத்து விட்டுப் பறந்தது. இதனைத் திரும்பிப் பார்த்த சாரதியோ சிரித்துக் கொண்டே தன்னை மறந்து செலுத்தினார் வாகனத்தை. பாதிக்கப்பட்டோரெல்லாம் பாதையோரத்தில் அழுக்கான ஆடைகளோடு திட்டித் தீர்த்தார்கள். சற்றுத் தூரம் சென்றது பேருந்து. அக்கரைப்பற்றை அடைவதற்கோ, இன்னும் இரண்டு மூன்று கிலோ மீற்றர் தூரமே இருந்தது.

ஆறு இளம் பெண்கள், பஸ் தரிப்பே இல்லாத ஓரிடத்தில் நின்றிருந்தனர். வேகமாகச் சென்ற பேருந்து, அவர்கள் சைகை எதுவும் செய்யாமலே அவர்களின் அருகே சென்று பாரிய ‘பிறேக்’ ஒலியுடன் கிறீச் சிட்டு நின்றது. உள்ளே இருந்த பயணிகளனைவரும் திடீரென பஸ் ‘பிறேக்’ போட்டு நின்றதும், ஏதாவது விபத்துக்கள் நேர்ந்து விட்டதோ எனப் பயந்தே போனார்கள். அப்படி ஆடி அசைநது, அவர்களெல்லாம் குலுங்கிப் போனார்கள்.

கீழே நின்றிருந்த பெண்கள் ஆசிரியைகளாகத்தான் இருப்பார்கள் போலும். பேருந்தின் முன் கதவால் அவர்கள் ஏறினர். மறுகணமே “முன் சீற்றில இருக்கிறவங்களெல்லாம் எழும்புங்க... பெண்பிள்ளைகளுக்குச் சீற்றக் கொடுங்க” சாரதி முன் ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துச் சப்தமிட்டார். மறுவினாடியே வாலிபர்களெல்லாம் எழுந்து நின்றனர். புதிதாக ஏறிய இளம் பெண்களில் இருவருக்கு ஆசனமில்லை. உடனேயே “பெரியவர் நீங்க எழும்புங்கோ... எழும்பிச் சீட்டக் குடுங்கோ சீக்கிரம்” பெரியவரோ “ஏன்டாப்பா என்ன  எழும்பச் சொல்றாய்... நான் வயசாளி, எனக்கு நீக்கிறது கஷ்டம்” அவர் எழும்ப மறுத்தார்.

பேருந்தில் நின்றிருந்தவர்களெல்லாம், சாரதியின் ஈனமற்ற வார்த்தைகளால் மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்துனர் அங்கே வந்தார், “பெரியர்வர் நீங்களும், ஆச்சியும் எழும்புங்க... டைலி, இந்த டீச்சர்மார் இருக்கிற சீட்தான் இது... தயவு பண்ணி எழும்புங்க” அவர் தயவானவர் போல பேசினார்.

பெரியவரும், பக்கத்திலிருந்த மூதாட்டியும் எழும்ப மறுத்தால் சாரதிக்குக் கோபம் தலைக்கேறியது. உடனேயே பேருந்தைசாலையோரமாகப் பலமான ‘பிறேக்’ போட்டு நிறுத்தினார். “நீங்க ரெண்டுபேரும் எழும்பி, இவங்க ரெண்டு பேருக்கும் சீட் குடுக்காட்டி, இதுக்குமேல ஒரு அடி, ஒரு இஞ்ச் கூட பஸ் போகாது” என்றார் ஆத்திரத்தோடு.

பிரயாணிகளெல்லாம் இவரின்தும், நடத்துனரினதும் செயலால் கொதித்துப் போனார்கள். இருந்த போதிலும் தங்கள் பயணம் தடையாகக்  கூடாதென்ற நோக்கிலே மனத்திற்குள் வேதனையைச் சுமந்தவாறே, பேசாமலேயே இருந்து   விட்டார்கள். செய்ய வழியின்றி முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வயோதிபர்கள் எழுந்தனர்.

இளம் பெண்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்தனர். அதனைத் தொடர்ந்து தான் ஏதோ பெரிதாக உலகில் ‘கின்னஸ்’ சாதனையை ஏற்படுத்திய ஆனந்தத்துடன், பேருந்தைச் செலுத்த ஆயத்தமானார்.

மறுகணம் “தம்பி, நான் இங்கேயே இறங்கிக்கிறன்... என்ன இறக்கி விடுங்க” என்று கூறி, அங்கேயே பெரியவர் இறங்கிக் கொள்ள, பேருந்து உறுமிக் கொண்டே பறந்து சென்றது.

அடுத்த நாள் காலைப் பொழுது இனிதே புலர்ந்தது. வியாபாரங்கள், வேலைகளுக்கு அலுவலங்களுக்குப் போவோர்களால் வீதியே கழைகட்டியிருந்தது. காலை பத்து மணிக்கெல்லாம், முதல்நாள் பெரியவரைச் சிரமப்படுத்திய சாரதியும், நடத்துனரும், தங்கள் வேலைத் தளத்திற்குச் சென்று, கையொப்பமிட அலுவலகத்தினுள் நுழைந்தனர்.

பதிவேட்டைப் புரட்டி இருவரும் கையொப்பமிட முனைந்த போது, அலுவலர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். வழமைக்கு மாறாக அவர், தங்களோடு நடந்து கொண்டதைக் கண்டு, கேள்விக் குறியோடு அவரை நோக்கினார்கள்.

அவர்களிருவரையும் பார்த்து “ஒங்க ரெண்டுபேரையும், கையொப்பம் வைக்க முன்னாடி, ஜீ.எம். தன்னோட ஒப்பீசுக்கு வந்து, தன்னச் சந்திக்கச் சொன்னாரு” என்றார்.

அதைக் கேட்ட இருவருக்கும் மனதிற்குள் ஏதோ ஒரு அச்சம் பற்றிக் கொண்டது. அலுவலரைப் பார்த்து “ஜீ.எம். எங்களப்பத்தி ஏதாச்சும் சொன்னாரா?” என்றார்கள் பதட்டத்தோடு.

“ஒங்கட பதவி உயர்வுபத்தி, ஏதோ சொல்லணுமாம்ணு சொன்னாரு” அலுவலர் கூறியதுதான் தாமதம், இருவரது இதயங்களும் சூரியனைக் கண்ட தாமரையாக மலர்ந்தன. மறுகணமோ இருவரும் வில்லில் இருந்து விடுபட்ட அம்புகளைப் போன்று, அந்தப் பேருந்துச்சாலையின் முகாமையாளரின் அறையினை நோக்கி வேகமாகச் சென்றார்கள்.

அறைக்குள் சென்றவர்கள் மிகவும் பணிவாகக் கைகளைக் கட்டிக் கொண்டே “சேர்” என்றனர். சப்தம் கேட்டு அவர்களை நிமிர்ந்து பார்த்தவர், தான் எழுதிக் கொண்டிருந்த பேப்பரொன்றை ‘பைல்’ ஒன்றுக்குள் வைத்து விட்டு, “நீங்களா? வாங்க வாங்க” எனக் கூறிய கையோடு, அலுவலக உதவியாளரை அழைத்தார்.

மணிச் சப்தத்தைத் தொடர்ந்து அலுவலக உதவியாளர் பிரதான முகாமையாளரை நோக்கி ஓடி வந்தார். அவரின் காதில் மட்டும் கேட்கக் கூடியவாறு, முகாமையாளர் எதையோ சொன்னார்.

அடுத்த கணம், பக்கத்து அறைக்கு ஓடிச் சென்றவர், வயதான ஒருவரை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார். அவரைக் கண்டதும் முகாமையாளர் எழுந்து நின்றார். உடனே அங்கு நின்றிருந்த சாரதியும், நடத்துனரும் திரும்பிப் பார்த்தார்கள்.

வந்தவரைக் கண்டதுதான் தாமதம் இருவருக்கும், அப்படியே தூக்கி வாரிப்போட்டது. நேற்றுப் பேருந்தில் வந்த அதே வயோதிபர், வாயில் வெற்றிலை பாக்குச் சாறு வடிய, வாயை அசைபோட்டவாறே அங்கு வந்து நின்றார்.

 எந்த நடக்கப்போகிறதோ என்று, குற்றமுள்ள இருவரது நெஞ்சமும், அச்சத்தால் அப்படியே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. சாலை முகாமையாளர் இருவரையும் பார்த்துச் சற்று கோபத்தோடு “இந்தப் பெரியவர், நேத்தைக்கி ஒங்களோட பஸ்ஸில வந்தாரா?” என்று கேட்டார்.

அதற்கு அவர்களிருவருமே ஒருமித்த குரலில் “ஓமோம்... வந்தாரு” என்றனர். “இவரோட ஆயிரம் ரூபா காசுக்கு, டிக்கற்காசுபோக மிச்சம் கொடுத்தீங்களா?” என மீண்டும் கேட்டார் முகாமையாளர்.

இருவரும் மௌனமாக நின்றனர். முகாமையாளர் “ஏன் பேசமாட்டேங்கிறீங்க.... கமோண் டெல்மீ” கோபம் தலைக்கேற உரத்துக் கேட்டார். அதிர்ந்துபோன நடத்துனர். “சேர்... அவரு மிச்சக்காசக் கேக்க மறந்துட்டாரு நானும் வேலையால, அதக் கொடுக்க மறந்துட்டன்” தடுமாறியபடி சொல்லி முடித்தார்.

பெரியவர் தன் வசமிருந்த பேருந்திற்கான பற்றுச்சீட்டை, முகாமையாளரது கையிலே ஒப்படைத்தார். அவரோ அதை நடத்துனரிடம் கொடுக்க, பிரயாணத்திற்கான பணம் போக, மீதியைப் பெரியவரின் கையிலே, நடத்துனரோ அவரை முறைத்துப் பார்த்தபடியே ஒப்படைத்தார்.

நடத்துனரைப் பார்த்துப் புன்னகைத்த பெரியவரோ, பணம் கையில் கிடைத்தவுடன், கம்பீரமாக எழுந்து நின்றார். மறுவினாடியே தன் முகத்தில் ஒட்டியிருந்த முறுக்கு மீசை, அடர்த்தியான தாடி; தலையில் போடப்பட்டிருந்த பொய் முடி போன்றவற்றை, ஒன்றன்பின் ஒன்றாகக் களற்றி மேசை மீது வைத்தார்.

 அதன்பின் அவர் அணிந்திருந்த, அழுக்குப் படிந்த மேலாடைகளையெல்லாம் அங்கேயே களைந்து முடித்தார். அதன் பின்புதான் தெரிந்தது, அவரொரு நாற்பத்தைந்தே வயது மதிக்கத் தக்க உயர் அதிகாரியென்று.

 அதற்கொப்ப முழுக்கையில் அமைந்த சேர்ட், கழுத்துப்பட்டி (ரை), மற்றும் கோட், சூட் எல்லாமே சட்டப்படி, அவரைக் கம்பீரமான ஒரு உயர் அதிகாரியே என உணரச் செய்தன.

“வாங்க சேர்... இந்தச் சீட்டுல உக்காருங்க” என்று, அவருக்கு தனது இருக்கையைக் காட்டி, முழு மரியாதையுடன் அதிலே அமரவைத்தார், அந்தப் போக்குவரத்துச்சாலை முகாமையாளர். சாரதி, நடத்துனர் இருவருக்கும் ஒரு கனவு காண்பதைப்போல இருந்தது.

“நீங்க ரெண்டுபேரும், பிரயாணிகளோடத் தரக்குறைவாக நடந்துக்கிறதாகப் பல தடவைகள், என்னால எச்சரிக்கப்பட்டும் நீங்க திருந்தவே இல்ல... மேலிடத்துக்கும் ஒங்களப் பத்தி கொம்ப்ளைன் போயிருக்கு, அங்க இருந்து வந்த உயர் அதிகாரிதான் இவரு... மாறுவேஷம் போட்டு பஸ்ஸில ஏறி, ஒங்களப் பத்தி ரொம்பவும் தெரிஞ்சுக்கிட்டாரு” கூறி முடித்தார் சாலை முகாமையாளர்.

இருவரும் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து நின்றார்கள். மறுகணமே அந்த உயர் அதிகாரி, இரண்டு கடிதங்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார். “ஒங்க ரெண்டுபேரையுமே வேலைலருந்தே நிறுத்தியாயிடுச்சி.... பொறுப்பே இல்லாம வேலையத் துஷ்பிரயோகம் பண்ணி, பிரயாணிகள் கிட்ட ரொம்பக் கேவலமாக நடக்கிற ஒங்களுக்கும், ஒங்களப் போன்ற மற்றவங்களுக்கும் இதுதான் தண்டன” கூறிவிட்டு, வேகமாக எழுந்து வெளியே சென்று மறைந்தார் உயரதிகாரி. சாரதி, நடத்துனர் இருவரும் செய்வதறியாது, அப்படியே சிலையாக நின்றிருந்தார்கள்!

எம். ஐ. உஸனார்ஸலீம்
நிந்தவூர்

Comments