மண்சரிவின் மரண அபாயத்தை 'ஆறஅமர' கையாண்டு வரும் அரசு நிறுவனங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மண்சரிவின் மரண அபாயத்தை 'ஆறஅமர' கையாண்டு வரும் அரசு நிறுவனங்கள்

பதுளை மாவட்ட, ஹாலி எல தேர்தல் தொகுதியிலுள்ள நமுனுகுல மலைச்சரிவில் அமைந்துள்ள பலாங்கொட பிளான்டேஷன் கம்பனியால் நிர்வகிக்கப்படும் கிலன் எல்பின், தியனகல தோட்டம் பதுளை நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது. இந்த தோட்டத்திற்குச் செல்லும் பாதை நீண்டகாலமாக நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதால் சாதாரண மனிதரால்கூட நடந்துசெல்வதே பெரும் சிரமமாகும். இது மட்டுமல்ல, பள்ளிசெல்லும் பிள்ளைகள், நோயாளிகள் போன்றோர் படும் கஷ்டங்கள் சொல்லுந்தரமன்று. எனினும் பாராளுமன்ற அங்கத்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததால் அவர்களின் நிதியுதவியால் ஓரளவுக்கு கொங்ரீட் இடப்பட்டுள்ளது.  

இதேநேரத்தில் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்ததைப் போல; 2014ம் ஆண்டு நவம்பரில் பெய்த கடும் மழையால் இத்தோட்டத்தில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டது. இதை ஆராய்ந்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் (N.B.R.O), கடுமையான பாதிப்பை எதிர்நோக்கும் இத்தோட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று வீடுகளை வழங்க வேண்டுமென்று அறிவித்தால் ஹாலி எல பிரதேச செயலாளரால் அவசரக் கடிதம் தோட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் வருடங்கள் பல கடந்தும் எவ்வித மாற்று வீடுகளும் வழங்காமல் கூரைத் தகரங்கள் மட்டும் வழங்கப்பட்டது. மண்சரிவு அபாயம் ஏற்படும்போது உடனடியாக மக்கள் ஓடிப்போய் கூரைத் தகரங்களால் அமைக்கப்பட்ட கொட்டகைகளில் அடைக்கலம் பெற்று உயிரைமட்டும் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் பெய்த கடும் மழை, சூறாவளியால் கூரைத் தகடுகள் பாதிப்படைந்ததுடன் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்ததால் தோட்ட மக்கள் எங்கும் ஓடமுடியாமல் பெரும் அல்லோல கல்லோலப்பட்டனர். பெரிய கற்பாறைகள் மலை உச்சியிலிருந்து உருண்டு வந்து பாதையும் பாதிப்புக்குள்ளானது. மிகச்செழிப்பான தேயிலை தளிர்கள் உற்பத்தியாகும் இத்தோட்டம் பெரும் இலாபத்தில் இயங்குகின்ற போதிலும் நிர்வாகம் மக்களின் சேமநலன்களில் எந்த அக்கறையும் செலுத்துவதாக இல்லை.  

மண் சரிவு அயாயத்தை எதிர்நோக்கும்  குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க ஏற்பட்ட காலதாமதம் சம்பந்தமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் ஹாலி எல பிரதேச செயலாளரை 14.12.2017ல் அவரது காரியாலயத்தில் சந்தித்தனர்.   மண் சரிவு அவலங்களை தெளிவுபடுத்தியதை மிகவும் அவதானமாக செவிமடுத்த பிரதேச செயலாளர் தோட்ட அதிகாரிக்கு அவசரக் கடிதமொன்றை 19.12.2017ல் அனுப்பிவைத்தார். அக்கடிதத்தில் தான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிட்டதோடு, இனிமேல் இந்ததோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டு மனித உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென   குறிப்பிட்டிருந்தார்.  

இக்கடிதத்தின் பிரதிகள் பலாங்கொடை பிளான்டேஷன் கம்பனியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன. தோட்ட அதிகாரி இக்கடிதம் கிடைத்த மறுநாளே, பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்புக்கு (TRUST) தான் 2014ம் ஆண்டே மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க  வேண்டுமென பெருந்தோட்ட மனித அபிவிருத்தி பொறுப்பு பணிப்பாளரை கேட்டுள்ளதாக ஒரு கடிதத்தை பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.  

போதிய வீடுகளை அமைக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது  அத்தியாவசியமாகும் என சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் நடவடிக்கைகள் மேற்கொள்வதில் தாமதமே தொடர்ந்தது. இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 21.12.2017ல் கடிதமூலம் முறைப்பாடு செய்ததால், இவ்விடயம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு பாரப்படுத்தப்பட்டது. பின்னர் தேசிய அனர்த்த நிவாரண வேலைகள் நிலையத்தின் பணிப்பாளர் 20.06.2018ல் பதுளை மாவட்ட செயலாளருக்கு (அரசாங்க அதிபர்) இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்து அவசிய நடவடிக்கைகள் எடுக்கும்படியும் அதன் அறிக்கையை பிரதமர் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கும்படியும் கோரப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் மாற்றம் ஏற்படவில்லை. 

இத்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினை மிகவும் பயங்கரமானதாக இருந்ததால் இதற்கு மாற்றுவழியில் தீர்வுகாண இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதுளை இணைப்பாளருக்கு ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கத்ததால் சகல விபரங்களையும் கொண்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக 15.05.2018 ல் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் 2014.11.14 ம் திகதி தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கையின்படி  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டபடி கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைச்சின் செயலாளர் என்.ஆர். ரஞ்சனி 2018ம் ஆண்டு அமைச்சின் நிதியால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எழுத்துமூலம் தெரிவித்தார். ஆனால் இதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டதால் மீண்டும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.  

இதன் பயனாக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளருக்கு 2019.03.11  திகதியிடப்பட்டக் கடிதத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் மூலம் 10 இலட்சம் ரூபா செலவில் 50 வீடுகள்  2019 மே மாதத்தில் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தின்  பிரதிகள்  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர், ஹாலி எல பிரதேச செயலாளர் மற்றும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் பொதுச் செயலாளர் அகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

மீரியபத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவால் மரணித்தவர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடத்தை இங்கு நாம் நினைவூட்டுவதோடு மீண்டும் அவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவங்கள் ஏற்படாமலிருக்க தியனகல தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினை தீர்வுக்கு சகலரும் முன்வரவேண்டும்.  

ஆ. முத்துலிங்கம்,
(பொதுச் செயலாளர்)
ஐக்கிய தோட்டத் தொழிலாளர்  சங்கம்

Comments