தமிழருக்காக குரல் கொடுத்தால் என்னை இனவாதி என்பதா? | தினகரன் வாரமஞ்சரி

தமிழருக்காக குரல் கொடுத்தால் என்னை இனவாதி என்பதா?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வாரமஞ்சரிக்கு மனம் திறந்து வழங்கிய பேட்டி

கிழக்கில் இனமாற்றங்களும் காணி அபகரிப்புக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன

‘ஒட்டுமொத்த பதவிதுறப்பு அவர்களின் ஒற்றுமையைக் காட்டி நின்றாலும் பள்ளிவாசல்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தபோது இதே அமைச்சர்கள் பதவிகளை ஏன் துறக்க முன்வரவில்லை?’ 

''நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவனல்ல; முஸ்லிம் தலைவர்களையே விமர்சிக்கின்றேன்''

கேள்வி: கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட மூன்று பேரின் ராஜிநாமாவைக் கோரி நீங்கள் மட்டு.காந்தி பூங்காவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தீர்கள், இதனை தாமாகவே முன்வந்து செய்தீர்களா? அல்லது யாருடைய அழுத்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதா? 

பதில் : 2015ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் மட்டக்களப்பில் அதிகளவு மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது நான்தான். அதே ஆளுனரின் செயற்பாட்டை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக நான் எதிர்த்தேன், அந்த கிழக்கு மாகாண ஆளுனரின் இனவாதச் செயற்பாடு வெட்ட வெளிச்சமானது என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவரை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன். 

கடந்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் எமக்கிருந்தன. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பாக மகிந்த ராஜபக்ச சொல்லி உண்ணாவிரதம் இருந்தீர்களா என்றும் என்னிடம் சிலர் கேட்கின்றனர். அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச கையொப்பம் இடவில்லை, நான் அதில் 12ஆவது நபராக கையொப்பம் இட்டேன். 

என்னைத் தெரிவு செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக செயற்படுகின்றேன். அதனால் நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வருகின்றேன். முஸ்லிம் மக்களின் நலன் பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் வாதிகளும் பேசினால் அவர்கள் நல்லவர்களாகவும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளாகிய நாங்கள் பேசினால் எம்மை இனவாதியாகவும் பார்க்கின்றார்கள். இதில் என்ன நியாயம் இருக்கின்றது? 

“எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழருடைய காளிகோயிலை தகர்த்து அங்கே மீன் சந்தை கட்டினேன், நீதிபதியை மாற்றினேன்,” என தெரிவித்துள்ளார். இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்த்துப் பேசவில்லை, 

தற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பது ஒரு அமைச்சர் மீதும், இரண்டு ஆளுனர்கள் மீதும்தான். ஆனால் தற்போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள். இதனை தமது சமூகத்திற்காகச் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு சமூகத்திற்காக செய்வதாயின் ஏப்ரல் 22ஆம் திகதி செய்திருக்க வேண்டும். ஏப்ரல் 21நடந்த சம்பவத்தால், தமிழ்ச் சமூகத்திற்கே பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது, நேர்மையானவர்களாக இருந்தால் எமக்கு இந்த அமைச்சு வேண்டாம் என அன்றே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். 

 கேள்வி : முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 

பதில் : முள்ளிவாய்க்காலில் எமது தமிழினம் கொன்று குவிக்கப்பட்டபோது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டு சந்தோசத்தை அனுபவித்தார்கள் ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ஆகியோர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார்கள், ஆனால் இதுபோன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்று ஏன் அவர்கள் சொல்ல வில்லை.? 

தற்போதுகூட றிசாட் பதியுதீன் போன்றோர் அவர்களது வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை பற்றித்தான் கதைக்கின்றார்களே தவிர, இறந்த எமது மக்களைப் பற்றி பேசவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பற்றிப் பேசுகின்றார்கள், ஆனால் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் இன்றுவரை தமிழ் மக்களைப் பற்றிப் பேசவில்லையே! இது என்ன நியாயம். 

கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தச் சொல்லி காலகாலமாக அந்தப் பகுதி மக்கள் போராடுகின்றார்கள்! இதற்கு, எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் பேசவேயில்லை. இதுவரையில் ஒத்துழைப்பும் இல்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளை தமிழ் அரசியல்வாதிகள் செல்லப் பிள்ளைகளாக பார்க்கவேண்டும், ஆனால் தமிழினம் அழிந்து போவது பற்றிக் கவலைப்படக்கூடாது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது? 

எதிர்காலத்தில் வைத்தியராக வரவிருந்த தமிழ்ப் பிள்ளையை மூளைச் சலவை செய்து, தீவிரவாதியாக மாற்றி, தற்கொலைக் குண்டுதாரியாக்கியது யார்? இதனைத் தட்டிக் கேட்டால் நாங்கள் இனவாதியா? இதனைக் கேட்காமலிருந்தால் நல்லிணக்கம் என்கின்றார்கள். நல்லிணக்கம் என்றால் நியாயமாக நடைபெறவேண்டும், அதற்காக எமது சமூகம் தலைகுனிந்திருக்க முடியாது. 

கேள்வி: கட்சி பேதமற்ற முறையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்கள் இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு அவர்களது அமைச்சுப் பதவியை துறந்துள்ளார்கள் இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில் : ஒரு அமைச்சருக்காக அனைத்து கட்சி முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் ஒற்றுமையை அது காட்டிநிற்கின்றது. அவர்களது சமூகத்தின் அழுத்தங்களை அவர்கள் மதிக்கின்றார்கள். ஆனால், கடந்த காலங்களில் பள்ளி வாசல்களில் அசம்பாவிதங்கள் இடம்பெற்றபோது இதே அமைச்சர்கள் அப்போதைய நிலையிலும் அமைச்சர்களாகத்தான் இருந்தார்கள். ஏன் இவர்கள் அப்போது அமைச்சுப் பதவிகளைத் துறக்கவில்லை? தற்போது குறிப்பிட்ட சிலர் மீது குற்றம் சாட்டப்படும்போது அனைவரும் பதவி துறக்கின்றார்கள். 

மாறாக முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பாதிக்கப்படும்போது பல மக்கள் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் இருந்தார்கள். ஏன் அப்போதிருந்த எமது தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றிற்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடியாமல் போனது? ஏன் அவர்களால் பதவி துறக்க முடியாமல் போனது? நான் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற 16நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒன்றிணைந்து எமது “அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், இல்லையேல் நாங்கள் 16பேரும் எமது எம்.பி பதவியிலிருந்து இராஜனாமா செய்வோம் என சொல்லியிருக்கலாம் அல்லவா? இதற்கு நான் தயார்! ஏனையோர் தயாரா? 

முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி துறந்ததை வாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. முதலில் இதனை தமிழ் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். தமிழ் சமூகத்திற்காகச் செய்து காட்டுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகளே முன்வாருங்கள்! 

அத்துரலிய ரத்தன தேரர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இந்நிலையில், கிழக்கில்தான் இனமாற்றங்களும் காணி அபகரிப்புக்களும், இடம்பெறுகின்றன. அத்துரலிய ரத்தன தேரர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல, எமக்காக அவர் உண்ணாவிரதம் இருந்து போராடும் போது ஏன் அவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது? எமது சமூகம் சார்ந்து ஒருவர் குரல் கொடுக்கும் போது ஏன் நாம் அதனை வலுப்படுத்த முடியாது. 

கேள்வி : அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்களின் பேரில் நீங்கள் உண்ணா நோன்பிருந்து போராட்டம் நடத்தாமல் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாகத்தானே நீங்கள் செயற்பட்டீர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றதே? 

பதில் : அரசியல் கைதிகளுக்காக நான் எத்தனையோ ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் செய்துள்ளேன். காணிவிடுவிப்பை சில இடங்களில் வெற்றிகரமாக செய்தோம், இவ்வாறு, கூறுகின்றவர்கள் கடந்த காலத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்தார்களோ தெரியாது. எங்கள் போராட்டத்தில் மைலம்பாவெளி காணி விடுவிப்பு, படாலைக் காணிவிடுவிப்பு, தளவாய் காணி விடுவிப்பு, தொடர்பில் ஒரு காணி ஆணையாளர் சுடப்பட்டார், அதற்கு எதிராக ஆர்பாட்டங்களைச் செய்தோம், எனவே அரசியல் கைதிகள் விடயம், மற்றும் காணி விடுவிப்பு போன்ற பல விடயங்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கின்றோம்.  

சுமார் 32இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்திருக்கின்றோம். தமிழ் மக்களின் இருப்பை அபகரிக்கின்றவர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகவர்களான தமிழ் பகுதிகளில் செயற்பட்டு, தையல் மெசின் போன்ற பொருட்களைப் பெற்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பவர்களுந்தான் இவ்வாறான கட்டுக் கதைகளைச் சொல்லி வருகின்றார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிகளிலுள்ள 16கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. மாறாக தமிழ் மக்கள் வாழும் பகுதியில் 44தொடக்கம் 45கிராம சேவை உத்தியோகஸ்த்தர் பிரிவுகளுக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற ரீதியாகவே இதுவரையிலும் காணப்படுகின்றது.

இலங்கையில் முதலாவது நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் மட்டக்களப்பில்தான் உள்ளது. எனவே அபிவிருத்திகள் செய்யும்போது முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் மாத்திரம் அமைச்சர்கள் மேற்கொள்ளாது அனைத்து பகுதிகளையும், உள்ளடக்கியதாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் துறைசார்ந்த அமைச்சர்களின் செயற்பாடுகள் சிறந்ததாக அமையும். இனிவரும் காலங்களில் முகவர்களின் செயற்பாடுளை எமது மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்மைப்பின் கொள்கை கோட்பாடுகள் எமது மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, இன்னுமொரு தமிழ் கட்சிக்குத்தான் எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். 

முன்பெல்லாம் எம்மால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. எமது மாகாணம் சார்ந்த முடிவுகளை எம்மால் தன்னிச்சையாக எடுக்க முடியாது, நாங்கள் வடக்கில் இருப்பவர்களிடமும், கொழும்பிலுள்ளவர்களிடமும் தான் முடிவுகளைப் பெற்று செயற்பட வேண்டியிருந்தது.  

“கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஓர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் போன்றுதான் காணப்படுகின்றார்கள். அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ளவர்களுக்கு சிகிச்சைகளை மெது மெதுவாகச் செய்ய முடியாது. மிக துரித வேகத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிக வேகமாக சில அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும்  நாங்கள் தமிழ் மக்களை ஏறி மிதிப்போம். ஆனால், தமிழர்கள் பேசாமல் இருக்கத்தான் வேணும், ஆனால் அப்போதும் நாங்கள் நல்லிணக்கம்தான் கதைப்போம் என்கின்ற நிலைமைதான் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது. 

 கேள்வி : முஸ்லிம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி துறப்பு இலங்கையில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்களா? 

பதில் : எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

 கேள்வி : இதனால் தமிழ் மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? 

பதில் : எந்தவொரு பாதிப்பும் இவர்கள் பதவி துறந்ததனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை, நன்மைகள்தான் ஏற்படும். ஏனெனில், பதவி துறந்த இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட ‘அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கிய விடயங்களிலும், பாரபட்சம் காட்டினார்கள். எமது கிழக்கிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும், இதனைத் துணிச்சலுடன் கூறுமுடியுமா? அவ்வாறு பாரபட்சம் இல்லை என எந்த தமிழ் அரசியல்வாதிகளும் சொல்வார்களேயானால் நான் 24மணித்தியாலத்தில் எனது பதவியைத் துறப்பேன்.! 

மாவட்ட அபிவிருத்திக் குழுப் பதவியை வைத்துத்தான் நீதிபதியை மாற்றினேன் என ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். தென்னிலங்கையிலுள்ள தமிழ் தலைமைத்துவங்கள் கிழக்கில் வந்து ஒரு மாதம் வாழ்ந்து பார்க்க வேண்டும். அதன்பின்னர்தான் கிழக்கு மாகாணத்தைப் பற்றிக் கதைக்க வேண்டும். 

இதுவரைக்கும் 28இந்துக் கோயில்கள் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் போயிருக்கின்றன. 8தமிழ் கிராமங்கள் வெளிப் பிரதேசங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களிடத்தில் சுமார் 10இலட்சத்திற்கு போகக்கூடிய காணிகளை 50இலட்சம் கொடுத்து வாங்குகின்றார்கள், ஹிஸ்புல்லாவிள் ஹிரா பௌண்டேசனுக்கு இவ்வாறு பல ஏக்கர் காணிகள் உள்ளன. சாதாரண முஸ்லிம் மக்களிடத்தில் இவ்வாறு காசு இல்லை. இதனை அப்பாவி முஸ்லிம் மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் சிங்களவர்களோடு நின்றுதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றார்கள். 

கேள்வி : இனங்களுக்கிடையில் அரசியல் தலைமைகள் முட்டிக்கொள்ளும் போது அப்பாவி பொதுமக்களின் இன நல்லுறவு பாதிக்கப்படுகின்றதே? 

பதில் : ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே காணப்பட்ட இன நல்லுறவைக் குலைத்தது யார்? ஏப்ரல் 21இற்கு முன்பும்தான், அதற்குப் பின்னருந்தான், அரசியல் ரீதியாகவும்தான்.. இன நல்லுறவைச் சீர்குலைத்தது யார்? முஸ்லிம் தீவிரவாதி சஹரான் தலைமையிலான குழு ஏன் தமிழ் பக்தர்கள் செல்லக் கூடிய தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள்? நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களை எதிர்த்தால், அவர்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா? 30வருட கால யுத்தத்தில் நொந்துபோய் இருக்கும் தமிழ் சமூகத்தில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதனால்தான் தமிழ் மக்களைக் குறி வைத்து தாக்கினார்கள். 

கேள்வி : இன நல்லிணக்கம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்? 

பதில் : நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராவனன் கிடையாது. அப்பாவி முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் குறைகூற மாட்டேன். ஆனால், அவ்வாறான முஸ்லிம் மக்களை வைத்து அவர்களின் தலைவர்கள் அரசியல் செய்கின்றார்கள். யாராவது சொல்லட்டும், நான் எங்கேயாவது முஸ்லிம்களுக்கு எதிராக கதைத்திருக்கின்றேன் என்று! ஒருபோதும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அதனை ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தாக கொண்டு செல்கிறார்கள் இதனை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் ஆபத்தாக வந்துமுடியும். 

நல்லாட்சி அரசாங்கத்தில் வாகனேரி தொடக்கம் 11இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன. மாடுகளை வெட்டி ஆலயத்தின் மூலஸ்த்தானத்தில் போடப்பட்டிருந்தன. இதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று சொல்லா விட்டாலும், தமிழர்களின் புனித ஸ்தலத்தினுள் மாடுகளை வெட்டி போட்டது பிழை என எந்த முஸ்லிம் அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ கருத்துத் தெரிவிக்கவில்லை. 

எனவே முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து பேசி தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோல் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோலத்தான் சிங்கள மக்கள் மத்தியிலும் செயற்பட வேண்டும், அப்போதுதான், இலங்கையில் முறையான நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட முடியும். எப்போது ஒருவர் தான் சார்ந்த மதத்தைப்போல் பிற மதங்களையும் நேசிக்கின்றாரோ அங்குதான் நல்லிணக்கம் உதயமாகின்றது’ நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் நான் இந்துக் கோயிலுக்குச் செல்கின்றேன், அங்கு அடிக்கல் நட்டு வைக்கின்றேன். 

கேள்வி : பல கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் பதவி துறந்தார்கள். அதுபோலவே தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் பல விடயங்களைச் சாதித்திருக்கலாம் என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்களே! இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 

பதில் : அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமில்லாத நிலையிலும் யுத்த காலத்தில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னரும், அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தோம், ஆனால், அப்போது அரசாங்கத்திடம் எதுவும் பேரம் பேசவில்லை, 2015ஆம் ஆண்டிலிருந்தாவது நல்லாட்சி அரசாங்கத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்திருக்கலாம், அரசியல் தீர்வு பெற்றிருக்கலாம். இது பற்றி பலமுறை சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தபோது “சின்னச் சின்ன விடயங்களைக் கேட்டு பெரிய விடயங்களை நாங்கள் இழக்க முடியாது. நாங்கள் அரசியல் தீர்வை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார். இறுதியில் சிறிய விடயமும், இல்லை பெரிய விடயமும் இல்லை என்றாகி விட்டது. 

பேரம்பேசக்கூடிய அரசியல் சாணக்கியம், எமது மக்களுக்காக களத்தில் இறங்கக் கூடிய தன்மை, தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை, வெறும் கதையாடுவதே எம்மவர்களிடத்தில் காணப்படுகின்றது. அதுதான் அவர்களுக்கும் இலகுவான அரசியலாக காணப்படுகின்றது. 

குறிப்பாக, முன்னாள் ஆளுனர் இராஜினாமா செய்தது தமக்கு கவலை அளிப்பதாக கிழக்கிலுள்ள எந்த தமிழனும் அறிக்கை விடட்டுமே! யாரும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் எமது மக்களின் உள்ளங்களை தொடும் அளவிற்கு யாரும் பணி செய்யவில்லை.

எனவே எமது தமிழ் மக்களைப் திருப்திப்படுத்தக் கூடிய வேலைகளைத்தான் எமது தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும். இனவாதம் நமக்கு வேண்டாம், இனவாதம் இல்லாமல் நாங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும்.    

நேர்கண்டவர் 
வ. சக்திவேல்

Comments