மீண்டும் திறக்கப்படும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் திறக்கப்படும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுவெடிப்புக்கு இலக்காகி பேரழிவுக்கு உள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகளுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. 

 மறுநாள் 13ஆம் திகதி காலை மிக அமைதியான முறையில் எத்தகைய ஆடம்பர நிகழ்வுகளும் இன்றி திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளது. 

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 184வருட வரலாற்றில் கொடியேற்றம், திருச்சொரூப பவனி, இதர கொண்டாட்டங்கள் இல்லாமல் மிக எளிமையாக கொண்டாடப்படும் திருவிழா  இதுவாகும்.

இது கத்தோலிக்க மக்களுக்கு கவலையளித்தாலும் மீண்டும் ஆலயம் திறந்து வைக்கப்பட உள்ளமை ஓரளவு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். 

நாட்டில் கோர யுத்தம் இடம்பெற்று பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாட ஆயத்தமாகிய கிறிஸ்தவ மக்களுக்கு தலையில் பேரிடி விழுந்தது. 

அந்த பேரிடி பல உயிர்களை பலிகொண்டு மகிழ்ச்சியாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாக இருந்த மனங்களில் துன்பத்தையும் துயரத்தையும் வழங்கிய பேரிடியாக அமைந்துவிட்டது. 

அன்றைய தினம் இழப்புகளைச் சந்தித்த குடும்பங்கள் இனி எந்த  ஈஸ்டர் தினத்தையும்  மகிழ்ச்சியுடன்  கொண்டாட முடியாது. 

சில குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்து பெற்றோரும் உறவுகளும் நண்பர்களும் என உயிரிழந்துள்ள நிலையில் ஈஸ்டர் பண்டிகைக்கு பதிலாக உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலி கொண்டாடுவதாகவே அந்த நாள் அமையப் போகின்றது. 

அதனால் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இடம்பெற்ற அந்த சோக சம்பவம் என்றுமே மனங்களிலிருந்து மறையப் போவதில்லை. 

இத்தகைய சோக வரலாற்றுப் பின்னணியுடன் மீண்டும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு வழிபாடுகளுக்காக எதிர்வரும் 12ஆம் திகதி திறக்கப்பட உள்ளது. 

இது உறவுகளையும் உரிமைகளையும் இழந்து தவிப்பில் இருக்கும் மக்களுக்கு ஓரளவேணும் மகிழ்ச்சியை தரும் ஒரு விடயமாகும். 

கொழும்பு கொச்சிக்கடையைப் பொறுத்தவரையில் அப்பிரதேசத்தை சூழவுள்ள பெருமளவு மக்கள் கத்தோலிக்கர்களே. 

அதற்கப்பால் மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, என அதனை அண்டிய பிரதேசங்களில் அனைத்திலுமே கத்தோலிக்கர்கள் பெருமளவில் வாழ்கின்றார்கள். 

இவர்களில் பெரும்பாலானோர் எதைத் தவற விடுகின்றார்களோ இல்லையோ செவ்வாய்க்கிழமை தோறும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்கு வந்து மெழுகு திரி ஏற்றி வேண்டுதல் செய்வதை மறக்க மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போவதில்லை. பல இந்து மத சகோதரர்கள் இது பற்றி தெரிவிக்கையில், 

தாம் கொச்சிக்கடை ஆலய திருவிழாவுக்கு ஒவ்வொரு வருடமும் எத்தனை வேலைகள் இருந்தாலும் கட்டாயம் வந்து புனித அந்தோனியாரை தரிசித்துச் செல்வதாக கூறுகின்றார்கள். 

ஒரு இந்து சகோதரர் தெரிவிக்கையில், 

புனித அந்தோனியார் ஆலய கொடியேற்ற தினத்தில் தாம் ஒரு கொடியை வாங்கி கொடி மரத்தில் கட்டி தமக்கான நேர்த்திக்கடனை சமர்ப்பித்துவிட்டு செல்வாராம். அவ்வாறு தாம் எதை நினைத்து அந்த நேர்த்திக் கடனை செய்தாரோ நிச்சயம் அந்த நேர்த்தி நிறைவேறும் என்று கூறுகின்றார். 

தமது வாழ்க்கையில் அப்படியான புதுமைகள் ஏற்பட்டதால் தாம் ஒரு அந்தோனியார் பக்தன் என்றும் அப்பகுதிக்குச் செல்லும் போதெல்லாம் அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதாகவும் ஏற்பட்டுள்ள பேரழிவு வேதனையானது என மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.  இவ்வாறுதான் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு கத்தோலிக்கர்கள் மட்டுமன்றி இந்துக்களும் பௌத்தர்களும் ஏனைய மதத்தினரும் எத்தகைய பாகுபாடுமின்றி செவ்வாய்க்கிழமைகளில் அந்தோனியார் ஆலயத்துக்கு மெழுகுதிரிகளோடு வந்திருப்பதைக் காணமுடியும். 

அந்தளவு அந்தோனியார் மீது அனைத்து சமூக மக்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். 

எனவே  புனித அந்தோனியார் ஆலயம் மீள கட்டியெழுப்பப்பட்ட மையானது கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி அனைத்து மத மக்களின் நம்பிக்கையும் கட்டி எழுப்பப்பட்டதாக வே கூற முடியும்.  எதிர்வரும் 12ம் திகதி முதல் மீண்டும் நாம் அந்தோனியார் ஆலயத்துக்கு செல்லலாம். அங்கு நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். வழமைபோன்று சமய வழிபாடுகள் அங்கு நடக்கும் என நம்பிக்கை கொள்ளலாம். 

 புனரமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் எதிர்வரும் 12ஆம் திகதி மாலை 5மணியளவில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை யினால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது. 

அன்றைய தினம் சிறப்பு வழிபாடு ஒன்றும் இடம்பெறவுள்ளதுடன் மறுநாள் காலை 10மணியளவில் புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி பேராயரினால் நிறைவேற்றப்படவுள்ளது. திருவிழா நாட்களில் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் காலை 5மணி முதல் பல மொழிகளிலும் தனித்தனியாக பல திருப்பலி பூசைகள் ஒப்புக்கொடுக்கப்படும். இம்முறை அவ்வாறு பூசைகள் இடம்பெறமாட்டாது. காலை 10மணிக்கு பேராயர், ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து மும்மொழிகளிலும் திருவிழாத் திருப்பலியை ஒப்புக் கொடுக்க உள்ளனர். 

அன்றைய தினம் அந்த ஒரே திருப்பலி மட்டுமே ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது. 

திருவிழாவுக்கு முன்தினம் இடம் பெறும் வெஸ்பர்ஸ் ஆராதனை திருவிழாவன்று மாலை இடம் பெறும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி உள்ளிட்ட எந்த விசேட நிகழ்வுகளும் இம்முறை இடம் பெறாது. 

நாட்டின் பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக புனித அந்தோனியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை தெரிவித்தார். 

இது கவலை தரும் விடயம் என்றாலும் அந்தோனியார் ஆலயத்தை நாடி வரும் பக்தர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு எடுத்த இந்த முடிவு வரவேற்கத்தக்கதே. 

திருவிழாவை அடுத்து தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் வழமை போன்று திருப்பலி பூசைகள் இடம்பெறும் என அறியமுடிகிறது. எனினும் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறெனினும் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத குண்டுவெடிப்பிற்கு இலக்காகி சேதமடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை வெகு விரைவாக புனரமைத்து மீண்டும் ஆலயத்தை திறந்து வழிபாடுகளை மேற்கொள்ள வழிசமைத்த அனைவருக்கும் நாம் நன்றி கூற வேண்டும். 

குறிப்பாக அரசாங்கத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும், ஆலயத்தின் மீள் புனரமைப்பிற்காக பல்வேறு வகைகளிலும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறுவது பொருத்தமாகும். 

நிச்சயம் புனித அந்தோனியாரின் அருளும் ஆசியும் அவர்களுக்கு நிறைவாக கிட்டும். 

அதே போன்று உயிர்த்தெழுந்த திருநாள் அன்று உயிர் நீத்த விசுவாசிகளின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருநாள் திருப்பலியில் விசேட வேண்டுதல்கள் ஒப்புக் கொடுக்கப்பட உள்ளன. அந்தோனியார் ஆலயம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த ஆயிரக்கணக்கான அந்தோனியார் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இம்முறை இந்த திருவிழா திருப்பலி அமையப்போகின்றது. 

இனிவரும் காலங்களில் வழமையான திருப்பலி பூசைகளும் வழிபாடுகளும் வருடாந்த திருவிழாவும் தடையின்றி நடைபெறும் என்று எதிர்பார்ப்போம். 

நாட்டில் தற்போது நிலவும் நிம்மதியற்ற சூழல் சுமுகமாகி அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு அமைதியும் சமாதானமும் நிறைந்த நாட்டை பெற்றுத் தருமாறு நம் அரணும் அடைக்கலமுமான புனித அந்தோனியாரிடம் மன்றாடுவோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments