ஊடகவிருட்சம் க.ப.சிவம் | தினகரன் வாரமஞ்சரி

ஊடகவிருட்சம் க.ப.சிவம்

உரிமைகளுக்காக

அச்சமின்றி குரல் கொடுத்த

பத்திரிகையாளர்! 

 

கண்டி மாநகரில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என சகல மக்களாலும் ‘ஐயா’ என அழைக்கப்பட்டுவந்த மூத்த பத்திரிகையாளர் கருப்பண்ணன் பிள்ளை பரமசிவம் (க.ப.சிவம்) கடந்த வியாழக்கிழமை (6.6.2019) அன்று கண்டி பொது மருத்துவத்துவமனையில் காலமானார்.

அடுக்குத் தமிழ் பிரயோகத்துடன் மிகவும் வசீகரமாக உரையாற்றக்கூடியவர் க.ப.சிவம். 1966ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகையின் கண்டி செய்தியாளராக அவர் தொடர்ந்து சேவையாற்றி வந்திருக்கிறார். எத்தனையோ பத்திரிகைகள், ஊடகங்கள் அவரை தம்முடன் வந்துவிடுமாறு கேட்டுக்கொண்டபோதிலும் கொள்கை பற்றாளராக நின்று வீரகேசரிக்கு மட்டுமே பணிசெய்வேன் என்ற பிடிவாதத்துடன் இருந்தவரே க.ப.சிவம்.

நீங்கள் இதுரையில் வாரிசுகளையோ, சிஷ்யர்களையோ, உருவாக்கவில்லையே என அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

“நான் இந்தத் துறைக்கு வந்து பட்ட கஷ்டம் போதும். போதிய வருமானம் தராத இந்தத் துறையை நான் இன்னொருவருக்கு சிபாரிசு செய்யத் தயாரில்லை” என்று ஒரே போடாகப் போட்டார் ஐயா சிவம்!

வீரகேசரி பத்திரிகை 1930ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சுப்பிரமணியம் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டதும் அப்பத்திரிகைக்கு நம்பிக்கை பெர்னாண்டோ என்பவர் கண்டி நிருபராக பணியாற்றிவந்தார். கண்டியைச் சேர்ந்த காலமேகமும் கண்டியை பற்றி எழுதிவந்த காலத்தில் கல்வி அதிகாரியாக பணியாற்றிய எஸ்.எம்.ஏ. ஹசன் நிருபராக கடமையாற்றிவந்தார். பின் 1966இல் க.ப.சிவம் கண்டி செய்தியாளராக பணியாற்ற வந்தார். இவருடன் மலைத்தம்பி ஐசெக் வத்துகாமம் நிருபராகவும், குவால்டீன் ஆரம்பத்தில் தெல்தெனிய நிருபராகவும் பின்னர் செங்கடகலை நிருபராகவும் இணைந்து சேவையாற்றினர். இக்காலத்தில் தினகரனின் சொக்கன், ஜெயராஜ் ஆகியோர் சேவையாற்றிவந்தனர்.

சில சமயம் அவராகவே தனது அந்தகால செய்தியாளர் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.

“செய்தி எழுதி அந்தச் செய்தி கொழும்புக்கு கிடைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன். அக்காலத்தில் பெக்ஸ் கிடையாது. ரயில் நிலையத்துக்கு சென்று ரயில் எஞ்சின் டிரைவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும். பஸ்சில் கொடுத்தனுப்ப வேண்டும். பத்திரிகை வேன் வரும்வரை காத்திருந்து செய்தியை அனுப்ப வேண்டும். தபாலில் என்றால் இரவு 8.40க்கு முன் கண்டி தபால் நிலையத்தில் சேர்த்துவிட வேண்டும். இவ்வாறு செய்தியை கொழும்புக்கு அனுப்பிவிட்டு வீடு செல்லும் போது இரவு பத்துமணியைத் தாண்டி விடும்” என்று சொல்லும் போது பத்திரிகைகளில் செய்திகள் வருவதற்காக அக்கால செய்தியாளர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்களின் வலியை புரிந்துகொள்வேன்.

இவரது வீடு மீகனுவ அம்பிட்டியவில் இருந்தது வீட்டியிருந்து கண்டி குளக்கட்டுக்கு இரண்டு கிலோமீற்றர் இருக்கும். குளக்கட்டு வழியாக கண்டிக்கு ஒரு கிலோ மீற்றர். எனவே மூன்று கிலோ மீற்றர் நடந்தே வருவார். காலில் செருப்பு போடவே மாட்டார். அது அவருக்கு பழகிப்போயிருந்தது. பஸ்ஸில் வரவே மாட்டார். அதுவே அவருக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது.

அவர் ‘மலைநாடு’ என்ற சொற்பத்தில் அதிகம் அக்கறை கொண்டிருந்தார். முத்தாரம், முரசொலி, குமுதம், ஆனந்தவிகடன், உமா, கங்கை, கலைமகள் ஆகிய இலக்கிய பத்திரிகைகள் கண்டியில் கோலோச்சிய காலத்தில் ‘மலை முரசு’ என்ற மாதச் சஞ்சிகையை பன்விலை ஈழக்குமாருடன் இணைந்து ஆரம்பித்தார். இரண்டாவது இதழிலிருந்து அதை க.ப.சிவம் தனித்தே நடாத்தி வந்திருக்கிறார்.

1962முதல் 1963வரை ஒன்பது இதழ்கள் வெளிவந்துள்ளன. இதில் பல மலையக எழுத்தாளர்கள் தமது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளனர். இவ்வகையில் இலக்கியவாதிகளுக்கு களம் அமைத்து கொடுத்த பெருமை க.ப. சிவத்தையே சாரும். வீரகேசரியில் ‘தோட்ட வட்டாரம்”, தினகரனில் மலைநாட்டு தபால்’ என்ற மலையக பகுதிகள் வெளியிடப்பட்ட காலத்திலேயே மலைமுரசு இதழில் மலையக எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதியுள்ளனர். இர. சிவலிங்கம் ‘மலையாண்டி’ என்ற பெயரில் பல கட்டுரைகளை இதில் எழுதியுள்ளார். எனவே பலருக்கு அடிஎடுத்து கொடுத்தவர் க.ப.சிவம் என்றால் மிகையாகாது.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் பரவிய காலத்தில் சஞ்சிகைகளும் வேகமாக வளர்ச்சி பெற்றன. 1932ல் இலங்கையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1939இல் முல்லோயா போராட்டம் நடைபெற்றது. சமசமாஜ கட்சி மலையக மக்கள் மத்தியில் அக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது. 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம் பெற்றது. சுயமரியாதை இயக்கம் பின்னர் திராவிட இயக்கமாக உருவானது. இலங்கையிலும் இலங்கை திராவிட இயக்கம் உருவாகியது. அதன் பொதுச் செயலாளராக ஏ. இளஞ்செழியன் தெரிவானார். கண்டி பொறுப்பாளராக க.ப. சிவம் நியமிக்கப்பட்டார். போகம்பரை கூட்டம் க.ப.சிவம் ஒழுங்கு செய்து நடைபெற்றது. அன்றிலிருந்து திராவிட கொள்கையை வரிந்து கட்டிக்கொண்டே க.ப. சிவமும் அப்பாணியிலேயே உரையாற்றுவது வழமையானது.

கண்டி தேர்சபை உருவாகிய போது அதில் உறுப்பினராக இருந்தார். இதுவே பின்னர் மத்திய மாகாண இந்து மாமன்றமாக மாற்றம் பெற்றது. மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் ஆயுட்கால உறுப்பிராக இருக்கும் வரை பதவி வகித்தார். இவரது சிரேஷ்டத் துவத்தினை பாராட்டி மத்திய மாகாண இந்து மாமன்ற காரியாலயத்தில் இவரது புகைப்படம் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி போகம்பரை சிறைச்சாலையில் பொங்கல், புதுவருடம், தீபாவளி பண்டிகைகளுக்கு லக்கிலேண்ட் முத்தையாவை பிரதம விருந்தினராக அழைப்பார்கள். அவருடன் சிறந்த பேச்சாளரான க.ப.சிவமும் கலந்து கொள்வது வழக்கம். முத்தையா சார்பாக தமிழிலும் சிங்களத்திலும் பண்டிகை வரலாறு, அதன் முக்கியத்துவம் பற்றி சிறப்பாக உரையாற்றுவதை நான் கேட்டிருக்கிறேன்.

கண்டியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பயிற்சி கருத்தரங்குகளை நடாத்தினாலும் அதில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக க.ப.சிவம் கலந்து கொள்வார். மொழி பெயர்ப்பு துறையில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

மாகாணசபை அமர்வாக இருந்தால் என்ன வேறு பொதுக் கூட்டங்களாக இருந்தால் என்ன, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் “சிவம் ஐயா கோ?” என்றுதான் இவரைத் தேடுவார்கள். அவர் அமர்ந்திருந்தால் அருகே வந்து விசாரித்து விட்டுப் போவார்கள். அந்த அளவுக்கு வி.ஐ.பி. மாரைக் கவர்ந்தவராக அவர் விளங்கினார். மேலும் சிங்கள பத்திரிகையாளர்கள் அன்புடன் ‘கொடியா’ (புலி) என்றே அழைப்பார்கள். அச்சப்படாமல் எழுந்து ஏன் இது தமிழில் இல்லை, ஓரவஞ்சனை செய்கிறீர்களா? என்றெல்லாம் உரிமை குரல் எழுப்புவதால் தான் அவரை ‘அன்பான புலி’ யாக கருதி அப்படியே அழைத்தார்கள்.

போராட்டங்களில் முன்னிற்கும் வழக்கம் கொண்ட அவர் அதிரடியாகக் கேள்வி எழுப்புவதிலும் புலிதான். பிரமுகர்களின் உரையை எழுதவும் கேள்விகள் கேட்கவும் பல சிங்கள ஊடகவியலாளர்கள் சிவத்தையே அணுகுவார்கள்.

சிவம் கல்வி கற்றது அம்பிட்டிய பெரவட்ஸ் கல்லூரியில். பெயர்பெற்ற ரோஸா டயஸ் போன்ற ஒலிம்பிக் வீரர்கள் இந்த பாடசாலையில் இவர்காலத்தில் கற்றவர்கள். பின்னர் புனித சில்வெஸ்டரில் கல்வி கற்றார். இங்கும் ஆங்கிலம் தமிழ் மொழிகளை சிறப்பாக கற்றுள்ளார். பி.டி. ராஜன், சேக்ஸ்பியர் சுப்பிரமணியம் ஆகியோரும் இங்கு கற்பித்தவர்கள் எனவே இரண்டு மொழிகளிலும் அவருக்கு சொல்வளம் இருந்தது.

இவரது ஊரான மீகணுவ இவரால் புகழ்பெற்றது. தனது ஊருக்கு தண்ணீர் வசதி இல்லை என்பதால் எந்த அமைச்சரைக் கண்டாலும் கண்ணீர் வசதி செய்து தரும்படி கேட்பார். இவரால் ஊருக்கு தண்ணீர் கிடைத்தது. அதுபோல ஊருக்கு பஸ்போடவேண்டும் என கோரிக்கை வைத்து பஸ் வசதியை பெற்றுத் தந்தார். இறுதியாக ஊருக்கு கார்பட் வீதி போடுவதற்கும் காரணமாக அமைத்தார். எனவே ஊர் மக்கள் இவரை அன்புடன் பாராட்டி மரியாதையாக நடத்தினர். இவரது பொதுச் சேவைகளையும் ஊடக மூப்பு மற்றும் அனுபவத்தையும் பாராட்டி இவரது பேட்டியை பெற்றுத் தருமாறு வாரமஞ்சரி என்னிடம் கேட்டிருந்தது.

ஐந்து தடவைகள் அவரை இது தொடர்பாக சந்தித்து பேசினேன். வாரமஞ்சரியுடனும் பேசவைத்தேன். ஆனால், பிறகு பார்க்கலாம் என்றும் நான் அவ்வளவு சீக்கிரத்தில் இறந்துபோக மாட்டேன் என்றும் சொல்லிச் சொல்லியே காலத்தை கடத்தினார். ஒரு விரிவான உரையாடலை அவருடன் நடத்தும் சந்தர்ப்பத்தை அவர் ஏற்படுத்தித் தந்திருந்தால் ஒரு 125வருட கால கண்டி மற்றும் கண்டித் தமிழர் வரலாற்றை பதிவு செய்திருக்க முடியும். இந்த விடயத்தில் எனக்கு அவர் மேல் கோபம்தான். இக் கடமையை தேர்ந்த ஊடகவியலாளர் என்ற வகையில் அவர் செய்யத் தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன். பொது இடங்களில் மற்றவர்களோடு ஒத்துப்போகும் தன்மை அவரிடம் குறைவு. வேண்டுமென்றே விவகாரத்தை ஏற்படுத்தி விதண்டாவாதம் செய்வது அவருக்கே உரித்தான ஒரு பண்பு.

கண்டி ஊடக வட்டாரத்தில் இனிமேல் அந்த பரபரப்பான காட்சிகள் மிஸ்ஸிங், நீண்ட காலத்துக்கு அவரைப்பற்றி நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

ஆர். மகேஸ்வரன்
பேராதனை பல்கலைக்கழகம்

Comments