இராஜினாமா கற்பிக்கும் பாடம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

இராஜினாமா கற்பிக்கும் பாடம் என்ன?

நல்லிணக்கமும் நாட்டு நலனும் எல்லா இடத்திலும் தோன்றவேண்டும் 

உயிர்த்த ஞாயிறு பயங்கராவாதத் தாக்குதல், வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதம் போன்ற சம்பவங்களுக்குப் பின்னர், இப்போது முதன்மையிடம் பெற்றிருப்பது முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமா! 

உள் நாட்டில் மாத்திரமன்றிப் பிராந்திய அரசியல் வட்டாரங்களிலும் இதுதான் இப்போதைய முக்கிய பேசுபொருள். எவரும் எதிர்பார்த்திராத முடிவுதான்! இந்த அரசியல் முடிவு. அதனால், இலங்கை பற்றி மத்திய கிழக்கு நாடுகளும் வேறு உலக நாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன. 

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் இல்லாத ஓர் அரசாங்கம் முன்னெடுக்கப்படுவதால், முஸ்லிம்கள் பற்றிப் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இருந்தாலும், அந்த இராஜினாமா தொடர்பிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே இராஜினாமா செய்தார்களா, இல்லை அறிவிப்பு மட்டுந்தானா? என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய பதிலை வழங்கியிருக்கிறார். அதாவது அனைத்து அமைச்சர்களும் ஒரே கடிதத்தில் இராஜினாமா செய்திருந்தார்கள். இப்போது தனித்தனிக் கடிதங்கள் சமர்ப்பிக்கப்படுள்ளன என்று பிரதமர் வெளிப்படுத்தியிருக்கிறார். 

இலங்கை அரசியலில் இவ்வாறான ஒரு கூட்டு இராஜினாமாவை 1983இல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். ஜூலை இனக்கலவரத்திற்குப் பின்னர், பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் செயலுக்குக் கண்டனத்தையும் மறுப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக வெளிப்படுத்தினார்கள். அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பாராளுமன்ற உறுப்புரிமையை அதாவது மக்கள் பிரதிநிதித்துவத்தையே இராஜினாமா செய்தார்கள். இஃது அரசியலிலும் அரசாங்கத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச ரீதியாகவும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவு உற்று நோக்கப்பட்டது. அரசியலமைப்பின் திருத்தத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக ஜனநாயக மறுப்புக்கு வழிவகுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அப்போது தமிழ் உறுப்பினர்கள் தெரிவித்திருந்தார்கள். 

அந்தச் சம்பவத்தையும் தற்போது முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவையும் ஒப்பிட முடியாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில், அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. 

ஓர் அமைச்சர், இரண்டு ஆளுநர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தன தேரர் கண்டியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தேரரைப் பொறுத்தவரை கடந்த காலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில் முக்கியமாக, போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு ஜப்பான் தலைமையிலான உதவி வழங்கும் நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்காக கண்டியில் நடத்திய மாநாட்டின்போது, பகிரங்கமாக மாநாட்டின் மண்டபத்திற்கு மத்தியில் எழுந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியவர். 

இலங்கை மதுபான விற்பனை நிலையங்களில், காட்சிப்படுத்தப்பட்டிருந்த சிங்கத்தின் முகத்தைக் கொண்ட அறிவிப்புப் பலகையை நீக்குவதற்குப் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நடவடிக்ைக எடுத்தவர் ரத்தன தேரர். அண்மையில் கிளைபோசெற் களை நாசினிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். 

அவருடைய பாராளுமன்ற அங்கத்துவம் தொடர்பான சர்ச்சையை எதிர்நோக்கியிருந்த ரத்தன தேரர், உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய செல்வாக்கை தூக்கி நிறுத்திக்ெகாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்குப் பக்கபலமாக நின்றவர் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர். அத்துடன், இந்த இரண்டு தேரர்களுக்கும் ஆதரவாக நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள தேரர்கள் ஆதரவுக் கரம் நீட்டியிருந்தனர்.  

முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவர் மீதான குற்றச்சாட்டுகள் ஓர் இனப்பார்வையுடன் சமூகத்தின் மீதான குற்றச்சாட்டாகவே முஸ்லிம்கள் தரப்பில் பார்க்கப்பட்டது. அதற்குக் காரணம், அரசாங்கத்திற்கு கலகொட அத்தேஞானசார தேரர் 24மணித்தியால காலக்ெகடு கொடுத்திருந்த நிலையிலும் ரத்தன தேரரின் கோரிக்ைக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர், தேரர்கள் தலைமையில், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிய ஒரு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இரண்டு ஆளுநர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்தார்கள். அந்தச் செய்தியை அறிந்த பின்னரே ரத்தன தேரர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். 

ரத்தன தேரருக்கு ஆதரவாக ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்களும் நிறைவுக்கு வந்தன. இந்தப் பின்னணியோடுதான் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்தார்கள். பௌத்த தேரர்கள் இனவாதப் போக்குடன் அரசாங்கத்திற்குள் செல்வாக்குச் செலுத்திவிட்டார்கள் என்பது முஸ்லிம் அமைச்சர்களின் குற்றச்சாட்டு. 

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதுர்தீன் மீது ஆரம்பம் முதலே சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். வில்பத்து முதல் கூட்டுறவு வரை அவர் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆளுநர்கள் மீதும் அவ்வாறுதான், பயங்கரவாதத்திற்குத் துணைபோனார்கள் என்றும் இனரீதியாகச் செயற்பட்டார்கள் என்றும் ஆதாரங்களில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஆனால், ஓர் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளைத் தாமும் ஏற்றுக்ெகாண்டதைப்போல், ஏனைய அமைச்சர்களும் பதவிகளைத் துறந்தமைதான் இனவாதம் என்கிறார்கள் பௌத்த மக்கள். அதேநேரம், முஸ்லிம் அமைச்சர்கள் அவ்வாறு தீவிரமான முடிவை எடுக்கவும் அவர்களை இனவாதமாகச் சிந்திக்கவும் வழிசமைத்தவர் ரத்தன தேரர் என்று இப்போது குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு கலகொட ஞானசார தேரரும் சுமத்தியிருக்கிறார். 

இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயம் யாதெனில், இனவாதமும் இனத்துவமும் பிரித்தறிந்துகொள்ளாமையே எனலாம். ரத்தன தேரரும் சரி அல்லது வேறு தேரர்களும் சரி, அதேநேரம், முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது இனத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் சிந்திப்பது ஒருபோதும் இனவாதமாக முடியாது. தமது இனத்தைப் பற்றிப் பேசுவது இனத்துவம். பிற இனத்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பதும் செயற்படுவதுதான் இனவாதம். எனவே, இதில் எந்தெந்தத் தரப்புச் சரியாக சிந்தித்தது? என்பது கேள்விக்குறி. 

தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் இந்த விடயத்தில் விதிவிலக்கானவர்கள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள் எப்போதும் தமது சொந்த இனத்தைப்பற்றியன்றிப் பிற இனத்தவர்களின் சார்பில் குரல்கொடுப்பதற்கு எப்போதும் பின்னிற்பதில்லை. அரசியல் வியூகம் வகுத்துச் செயற்பட்டு வெற்றியைப் பற்றிக்ெகாள்வதில், முஸ்லிம் அரசியலாளர்கள் திறமை மிக்கவர்கள். இந்தச் சந்தர்ப்பத்திலும் அவர்களின் அரசியல் சாணக்கியம் துல்லியமாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. 

என்றாலும், அமைச்சரவை அந்தஸ்துகொண்ட தேசிய அமைச்சுப் பதவிகளிலிருந்தவர்கள், தங்களின் பதவிகளை இனத்திற்காகவும் சமூகத்திற்காகவும் துறந்திருப்பதுபற்றிப் பௌத்த மக்கள் மத்தியில் ஒரு விமர்சனப் பார்வை முன்வைக்கப்பட்டிருப்பதையும் இங்குக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதாவது, தேசிய ரீதியாகச் சிந்தித்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் சேவையாற்ற வேண்டியவர்கள், தங்களின் சொந்த சமூகத்தின் நலன் கருதி பதவி விலகியது சகித்துக்ெகாள்ள முடியாமல் உள்ளது என்கிறார்கள் சிங்கள மக்கள். அதனால், இனிவரும் காலங்களில் அவர்களுக்கு அவ்வாறான பொறுப்பினை வழங்க முடியுமா? என்பது அவர்களின் ஓர் ஐயப்பாடு! இந்த இடத்தில், ஓர் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டு, அனைவரும் பதவிகளைத் துறப்பது பற்றி இரண்டு தடவை சிந்தித்திருக்கலாமோ! என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

அதேநேரம், நடந்தவற்றை மறந்துவிட்டுப் பொறுப்புகளை மீள ஏற்றுக்ெகாள்ள முன்வருமாறு பௌத்த மகா சங்கத்தினர் முஸ்லிம் அமைச்சர்களிடம் கோரிக்ைக விடுத்துள்ளனர். ஆயினும், இது காலங்கடந்துவிட்டது; எமது முடிவில் மாற்றம் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துவிட்டார். 

ஆனாலும், பௌத்த மகா சங்கத்தினரைச் சந்தித்து விளக்கம் அளிப்பதாகவும் ரவூப் ஹக்கீம் அறிவித்திருக்கிறார். இந்தப் பதற்றமான சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்ற கருத்தும் மேலோங்கியிருக்கிறது. 

அரசியல் தீர்வு, நல்லிணக்கம் பற்றிய சிக்கல்களை அவிழ்த்துக்ெகாள்வதற்குப் பௌத்த மகா சங்கத்தினரைச் சந்திக்கும் பழக்கம் நாட்டில் வழக்கமாகவே நடந்து வருகிறது. தமிழ் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை அவர்கள் மதத் தலைவர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்ெகாண்டபோது மாத்திரம் திரு.இரா.சம்பந்தன் மகா சங்கத்தினரைச் சந்தித்திருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஒரு முறை சந்திப்பினை மேற்கொண்டிருந்தார் என்று விமர்சிக்கப்பட்டிருந்தது. 

அண்மையில், முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவி விலகலை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் கலந்தோலோசனை நடத்தியே மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் நல்லிணக்கம் என்பது ஓர் இடத்தை மையப்படுத்தியதாக இருக்க முடியாது. அஃது இந்த நாட்டு மக்களின் நலன்கருதி எல்லா இடங்களிலிருந்தும் தோற்றம் பெற வேண்டும். அதனை அரசியல்வாதிகள் வலுப்படுத்த முன்வர வேண்டும். 

விசு கருணாநிதி  

 

Comments