தர்மம் பிறழும் ஊடகங்கள் | தினகரன் வாரமஞ்சரி

தர்மம் பிறழும் ஊடகங்கள்

பக்குவமில்லாத செயற்பாடுகளால் மனநிலை குலையும் மக்கள் 

அனர்த்தம் மிகக்கொடியது. இயற்கையின் அகோரத்தால் உருவாக்கப்படும் அனர்த்தமானாலும் சரி, மனிதனால் மனித குலத்துக்கு இழைக்கப்படும் செயற்கை அனர்த்தமானாலும் சரி, சம்பவத்தன்று மட்டுமன்றி என்றும் நினைவில் நிலைத்திருந்து கொல்லும் பலம் படைத்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் இழப்புகள், துன்பங்கள், வலிகள், வேதனைகள், ரணங்கள், அனுபவங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அதிலிருந்து மீண்டும் மீளமுடியாமலும் பரிதவித்துப்போய் இருக்கும் மக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரில் அதிக செல்வாக்குச் செலுத்தும் துறையென்றால் அது ஊடகமாகத்தான் இருக்க முடியும்.  

எந்தவொரு சம்பவமும் இடம்பெற்ற மாத்திரத்திலேயே அதுபற்றிய முழுமையான விவரங்களையும் தொடர் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள நம்மை யறியாமலேயே நாம் நாடிச்செல்லும் ஒரே துறையாகவும் இந்த ஊடகம் விளங்குகின்றது. என்றாலும் ஊடகத்துறையின் நாயகர்களான ஊடகவியலாளர்கள் அனர்த்தங்களை அறிக்கையிடும்போது தமது ஊடக தர்மத்தை முழுமையாக கடைப்பிடிக்கின்றார்களா என்பது இன்னமும் கேள்விக்குறியே!   இதற்கு அண்மையில் இடம்பெற்ற 21/4சம்பவம் சிறந்த எடுத்துக்    காட்டு. இயற்கை அனர்த்தத்தின்போது, 'ஏதோ விதி' என்று மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் மனிதனின் இயல்புநிலை மனிதர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் செயற்கை அனர்த்தங்களின்போது மட்டும் ஏனோ உருவாக மறுத்து விடுகின்றது. மாறாக வைரியம், குரோதம், பகையுணர்வு, பழிவாங்கும் எண்ணம், சந்தேகம் போன்ற எண்ணங்களே நான் முந்தி நீ முந்தியென மனதுக்குள் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கின்றது. இத்தகைய எண்ணங்களின் வலிமையை குறைக்கும் பொறுப்பு ஊடகவியலாளர்களுடையது.

இனம், மதம், உயிர், இரத்தம் சம்பந்தப்பட்ட அசம்பாவிதங்களை அறிக்கையிடும்போது அரசியலை விமர்சிப்பது போன்று எடுத்தோம் கவிழ்த்தோமென எழுதிவிட முடியாது. அதற்கு ஊடகவியலாளர்களுக்கு மிகச் சிறந்த பக்குவம் அவசியம். இவை உணர்திறன் கூடிய விடயங்கள். இவற்றை பார்க்கும்போது கல் நெஞ்சத்தார் கூட கரைந்துவிடுவார்களென்றால் இளகிய மனம் படைத்தோர், மனநோயாளிகள், மனநோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் சிறுவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் எதிர்காலத்தில் இவை எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற தூரநோக்குடன் செயற்பட வேண்டிய நிலைக்கு ஊடகவியலாளர்கள் தள்ளப்படுகின்றார்கள். வளர்ந்தோர் எதையும் விரைவில் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடுவர். ஆனால் சிறுவர்களின் மனதில் ஏற்படும் தாக்கம் பசுமரத்தாணி ​போன்றது. எனவே செய்திகளை நாசூக்காக அறிக்கையிட வேண்டும்.  

இனம், மதம், குலம், நாடு ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்ட நடுநிலையானவர்களே ஊடகவியலாளர்கள். அவர்களுடைய ஒரே இலக்கு மனிதகுலமாக மட்டுமே இருக்க வேண்டும். நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் அவசியமானதை மட்டும் தெரிந்து உள்ளதை உள்ளபடி மிகைப்படுத்தாமல் கூறவேண்டுமே தவிர எந்தவொருவிடயம் தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளவோ விமர்சிக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. எந்தவொரு சம்பவத்தையும் அவர்கள் இனரீதியான உணர்வுடன் கையாளக்கூடாது. பலதரப்பினதும் கருத்துக்களை கோடிட்டுக் காட்டலாமே தவிர தனது கருத்தை திணிக்க முற்படக்கூடாது. றுதி தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிட வேண்டும். சந்தேக நபர்களை இனரீதியாக குறிப்பிடுவதையோ இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துவதனையோ முற்றாக தவிர்க்க வேண்டும். இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையே முறுகல்நிலையை தோற்றுவிக்கும் வகையிலான சம்பவங்களின் காரத்தை குறைத்து அறிக்கையிட வேண்டும். குறிப்பாக பார்த்தவுடன் ஆத்திரமூட்டும் வகையிலான தலைப்புகள் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை. பயங்கரமான இரத்தக் காட்சிகள், சடலங்கள் என்பவற்றின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படக்கூடாது.  

ஊடகங்கள் சம்பந்தமில்லாத நிகழ்வுகளை ஒலி, ஒளி பரப்பு செய்தமை மற்றும் எழுதியமையால் அண்மையில் நாம் பாரிய இக்கட்டுகளை சந்திக்க நேரிட்டிருந்தது. அன்னையர் தினத்தன்று தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கருத்துக்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டமை மற்றும் பாடசாலைகளுக்கு அண்மையில் பாதுகாப்பு ​கெடுபிடிகளுக்கு குறைவிருப்பது போன்ற செய்திகள் காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப மறுத்தனர். புலனாய்வுப் பிரிவினரால் பாதுகாப்புத் தரப்புக்கு வழங்கப்பட்ட சந்தேகத்துடன்கூடிய தகவல்களை பெருந்தலைப்புடன் அம்பலப்படுத்தியமையால் நாடே சில தினங்களாக முடங்கிப்போயிருந்தது ஞாபகத்துக்கு வருகின்றது.  

அதேபோன்று சொற்பிரயோகங்களின் கையாள்கையும் ஊடகத்தில் முக்கிய இடம் பிடிக்கின்றது. தற்கொலை குண்டுதாரிகளின் செய்கைகள் மற்றும் திட்டங்களை புத்திசாதுரியமான செயல்களாக மிகைப்படுத்தி விமர்சிப்பதனை ஊடகங்களால் அறவே கைவிட வேண்டும். ஒருவர் பயங்கரவாதியாகவோ தற்கொலை குண்டுதாரியாகவோ மாறுகின்றார், என்றால் அவர் சாதாரண மனநிலையில் இல்லாதவர் என்பது தெட்டத்தெளிவு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் முட்டாள்கள், மதப்பித்தர்கள், மனநோயாளிகள் போன்ற வார்த்தைகளால் அவர்களின் இயலாமையை மட்டுமே மக்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டுமென உளவள ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளின் பணவசதி, படிப்பு, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிப்பதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வசதிபடைத்தவர்களின் மனநிலை மாற்றமுறும் என்றால் பட்டினியுடன் வறுமையில் வாழும் ஒருவரின் மனநிலை மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது. அதற்கு ஊடகவியலாளர்கள் காரணமாகிவிடக்கூடாது என்பதுதான் இதன் ஒரே குறிக்கோள்.   மக்கள் மத்தியில் உடனடி செல்வாக்குச் செலுத்தும் ஊடகமாக தற்போது சமூகவலைத்தளங்கள் உள்ளன. பொறுப்புவாய்ந்த ஊடகவியலாளர்களாக பணியாற்றும் பலர் தமது தனிப்பட்ட பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளில், நாம் இப்போது பயங்கரவாதியை பிடிக்கப்போகின்றோம் என எழுதுவதும் படையினர், வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் நின்று செல்ஃபி எடுத்து போடுவதும் வெகு அண்மைக்காலமாக ஊடகத்துறையை கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது ஊடகவியலாளர்கள் பாரபட்சமின்றிய செய்தியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.  

இதுவரை ஊடகங்களை தொழில்சார்ந்த துறையாக கருத்திற்கொள்ளப்படாமை, உள்வாங்குவதற்கான கல்வித் தகைமை வரையறை செய்யப்படாமை போன்ற அம்சங்களும் இத்துறையிலுள்ள பெரும் குறைபாடுகளாகும். புற்றீசல்போல அதிகரித்து வரும் செய்தி வலைத்தளங்களை, ஆழம் அனுபவம் இல்லாத துடிப்புள்ள இளம் தலைமுறையினர் சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் வழிகாட்டல்களின்றி முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இதுபோன்று ஊடக தர்மம் பிரள்வதை அவதானிக்க முடிகிறது. பேனா முனையால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.  ஆனால் அந்த சாதனை மக்களை ஆதங்கப்படுத்தும் நோக்கிற்காக அன்றி ஆசுவாசப்படுத்தும் நோக்கிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் உறுதி செய்து கொள்வோம்.     

Comments