பிள்ளைகளின் நண்பர்களாக பெற்றோர் மாறவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பிள்ளைகளின் நண்பர்களாக பெற்றோர் மாறவேண்டும்

உலகெங்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பரவலாக நடைபெறுவதை ஊடகங்கள் வாயிலாக அறியக் கூடியதாகவுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு, தண்டணை முறைகள் பற்றிய தெளிவின்மை காரணமாக இவ்வாறான குற்றங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.  

கம்பஹாவில் செயா செத்மி எனும் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா, காத்தான்குடி மாணவி பாத்திமா சீமா போன்ற சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இது மக்களால் பரவலாக பேசப்பட்ட விடயங்களாகும். உலக ரீதியாக சுமார் பதினெட்டு இலட்சம் வரையான சிறுவர்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  

கடந்த காலங்களில் இணயத்தினூடாக நீல திமிங்கலம் (blue whale game) விளையாட்டில் ஈடுப்பட்ட பலர் மனநிலைப்பாதிக்கப்பட்ட நிலையிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டதையும் அதிகமானவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். இலங்கையில் இதன் பாதிப்பு இல்லாவிட்டாலும் உலக ரீதியில் பல விதமான வேதனைதரும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் முகநூல் காதல் என்ற ரீதியில் முகம் அறியாதவர்களுடன் தொடர்பு கொண்டு இறுதியில் தங்களது வாழ்வினை சீரழித்தும் தொலைத்தும் கொண்டவர்களை குறித்து பலவிதமான செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலம் அதிகமாக சிறுவர்களே பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.  

'சிறுவர் பாதுகாப்பும், ஊடகத்தின் பங்களிப்பும் எனும் தலைப்பில் அண்மையில் இலங்கை பத்திரிகை பேரவையில் நடைபெற்ற கருத்தரங்கில் PEACE நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநர் மொஹமட் மஹரூப் 'சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் நேரலை ஊடாக ஏற்படும் சிறுவர் பாலியல் சுரண்டல்' குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.  

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (National Child Protection Authority) அறிக்ைகயின்படி நாளாந்தம் சுமார் 8 - 10பேர் வரை சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. சுமார் 90நிமிடங்களில் ஒரு துஷ்பிரயோகம் நடைபெறுகின்றது. சிறுவர்கள் எனப்படுபவர்கள் பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்களாவர். ஆனால் தொழில் செய்யும் வயதெல்லை 14ஆகும். அதேநேரத்தில் 16வயதுக்குட்பட்டவர்கள் கட்டாய கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. திருமண வயது 18எனவும் குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் 18வயதிற்குட்பட்ட அனைவரையும் சிறுவர் என வரையறுக்கின்றது.  

சிறுவர் துஷ்பிரயோகம்:

புறக்கணிப்பு: சிறுவர்களை ஒரு நிகழ்ச்சியில் இணைத்து மறுக்கப்படுவது, அத்துடன் குடும்பத்தில் கூட குறிப்பிட்டவர்களுக்கு கூடுதல் கரிசனை காட்டுதல் மூலம் பாதிக்கப்படுபவர்கள் தான் புறக்கணிக்கப்படுவதாக நினைக்கும் நிலை, பாடசாலையில் கூட மாணவர்களின் விருப்பு வெறுப்புகளை புறக்கணித்தல். இப்படியான நடவடிக்ைககளினால் பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாகலாம். பிள்ளைகளை மட்டம் தட்டுவதினாலும் பாதிப்புக்குள்ளாகளாம். சிறுவர் ஒருவரை புறக்கணித்தல், மறுத்தல், தடுத்தல், துன்புறுத்தல் ஆகியவைகள் சிறுவர் துஷ்பிரயோகமாகும்.  

உடல் ரீதியான துஷ்பிரயோகம்: சிறுவர்களை அடித்தல், குட்டுதல், சூடுபோடுதல், காயப்படுத்தல், கொடுமைப்படுத்தல் போன்றன சிறுவர் துஷ்பிரயோகமாகும்.  

உளரீதியான துஷ்பிரயோகம்: தீயநோக்குடன் தொடுதல், மர்ம அங்கங்களை வருடுதல், புறக்கணித்தல், ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்குதல், பயமுறுத்தல், கடத்தல், அச்சுறுத்தல், வாய்மொழியால் தாக்குதல், அவமானப்படுத்தல், அத்துடன், இழிவுபடுத்தும் செயல்களும் ஆரோக்கியம் மற்றும் மேம்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களும் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகமாகும்.  

பாலியல் துஷ்பிரயோகம்: 18வயதுக்குட்பட்டவர்களுடன் அவர்களின் விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும் பாலியல் துஷ்பிரயோகமாகும். அத்துடன் ஆபாச படங்களை காட்சிப்படுத்தல், பாலியல் தேவைகளுக்கு இணங்க வைத்தல், பாலியல் வன்முறைகள், தீங்கினை விளைவித்தல், சிறுவர் திருமணம், இணையம் ஊடாக சிறுவர்களை நிர்வாணமாக படமெடுத்து பதிவு செய்தல், காட்சிப்படுத்தல் ஆகியனவாகும்.  

துஷ்பிரயோகம் உள்ளாவதற்கான காரணம்:

சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலும் துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் ஆளாவதற்கு பல காரணங்கள் உள்ளன. கட்டிளமைப் பருவத்தில் ஏற்படும் உடல், மனவெழுச்சி மாற்றங்கள, அறியாமை, படிப்பறிவின்மை, பாலியல் தூண்டலை ஏற்படுத்தும் படங்கள், ஆபாச படங்கள்,  ஆபாச ஒளி/ ஒலி போன்றன. சிறுவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருத்தல், தீய நண்பர்களின் சகவாசம், பெற்றோரின் கவனயீனம், பெற்றோர் வெளிநாடு சென்றிருத்தல், குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்திருத்தல், சிறுவர் வேலைக்குச் செல்லல், செல்லிடப்பேசி, இணையத்தினூடாக தவறான நண்பர்களின் சகவாசம், இணையத்தை தவறாகப் பயன்படுத்தல் போன்றன  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எளிதில் ஆளாவதற்கு ஏதுவாகுகின்றன.  

இதற்கான காரணமாக வறுமை, அறியாமை, பெற்றோரின் கண்காணிப்பு இன்மை, பெற்றோர் பிரிந்து வாழுதல்,  

அடுத்தவரில் தங்கி வாழுதல், அவர்களை இணைத்துக் கொள்ளலாம் புறந்தள்ளுதல், பாரபட்சம் காட்டுதல் ஆகியன.  

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் 35வீதமானவைகள் அவர்கள் வாழும் வீட்டுச் சூழ்நிலைகளிலும், சமூகத்திலும் அதிகமாக நடைபெறுகிறது. 24வீதமானவைகள் பாடசாலை, கல்வ நிறுவனங்கள் சூழ்நிலைகளிலேயே இடம்பெறுகின்றன. 14வீதமானவைகள் நண்பர்கள் மத்திலும் உறவினர்கள் மத்தியிலும் நிகழுகின்றன. ஏனைய விகிதங்கள் பல இடங்களில் இடம்பெறுகின்றன. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தான 2017ஆம் ஆண்டு 9014முறைப்பாடும் 1174பாலியல் துஷ்பிரயோகம் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 92முறைப்பாடுகள் சைபர் கிரைமில் செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு 9512முறைப்பாடும் 1283பாலியல் துஷ்பிரயோகம் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 65முறைப்பாடுகள் சைபர் கிரைமில் செய்யப்பட்டுள்ளது.  

இதற்கு யார் பொறுப்பு தற்காலிக பாதுகாவலர், மற்றும் தாயின் காதலன், தத்தெடுத்த பெற்றோர், அவர்கள் வாழும் சூழ்நிலையில் தவறாக வழிநடத்தப்படல், அதிகாரம் செலுத்துபவரினால், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் காரணமாவர்.   பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து கூறும் போது பெற்றோர் அல்லது ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புக்கள் குறித்து மனம் திறந்து கூற பயப்படுவார்கள்.

பெற்றோர் பிள்ளைகளுடன் சிறந்த நண்பர்களாக பழகும் போது பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் பாதம், விருப்பமன்ற செயல்பாடுகள் குறித்து தங்களின் பெற்றோருக்கு அறிவிப்பார்கள். ஆனால் பெற்றோர்களே அவர்களுக்கு பூதமாக காட்சியளித்தால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பாதகத்தை இன்னொரு நண்பர் அல்லது நம்பிக்ைகக்குரியவர்களிடமே கூற வேண்டிய நிலை ஏற்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் சிறந்த நண்பர்களாகவும் நம்பிக்ைகக்குரிய மாதிரிகளாகவும் இருந்தால் பிள்ளைகளை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

குடும்பங்களில் சமய விழுமியப் பண்புகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பதன் மூலம் இவற்றைக் குறைக்கலாம் என்பது சமயத் தலைவர்களின் கருத்து. அத்துடன் சமயத் தலங்களினுடாக சிறுவர் துஷ்பியோகங்களைத் தடுப்பதற்கு ஆன்மிகரீதியான பண்புகளை வளர்த்து ஆன்மிக மனமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோங்கள் இடம்பெறா வண்ணம் சிறுவர்களைப் பாதுகாத்து கொள்வோம். சிறுவர்கள் துஷ்பிரயோம் இடம்பெற்றால் அதனை உடனடியாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1929 மற்றும் பீஸ் அமைப்பு 0112819397 தொலைபேசிக்கு அறிவிக்கலாம். பிள்ளைகள் குறித்து பெற்றோர் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  

போல் வில்சன்  

Comments