ரிஷாத்துக்கெதிரான பிரேரணை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரானது | தினகரன் வாரமஞ்சரி

ரிஷாத்துக்கெதிரான பிரேரணை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரானது

அமைச்சர்களின் பதவி விலகலும் அதையே பறை சாற்றுகின்றது 

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலியுடனான நேர்காணல் 

இந்நாட்டில் முஸ்லிம்கள் சனத்தொகையில் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால் நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகளே. சிறுபான்மை என்பதற்காக நாம் இரண்டாம் தரத்தினர்கள் அல்ல நீதியும், நியாயமும் எமக்கும் சமமாக இருக்கவேண்டும். எமக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதையே நாம் வலியுத்திவருகின்றோம். நாம் இங்கு வாழும் அனைத்துச் சமூகங்களோடும் சமாதானமாக வாழவே விரும்புகின்றோம். சமாதான சகவாழ்வுக்காக நாம் பல தியாகங்களைச் செய்திருக்கின்றோம். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் முஸ்லிம்கள் உயர் பங்களிப்பை செய்துள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது என்று முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணலின்போது தெரிவித்தார். 

நாட்டில் உருவாகியுள்ள பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வாரம் அமைச்சுப்பதவிகளை இராஜினாமாச் செய்த ஒன்பது பேரில் பாராளுமன்ற உறுப்பினர் அமீரலியும் ஒருவராவார். இவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலைவராவார். அவருடனான நேர்காணலை இவ்வாரத்தில் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தருகின்றோம். 

கேள்வி – நாட்டில் இன்று உருவாகியுள்ள அரசியல் நெருக்கடி குறித்து தெளிவுபடுத்த முடியுமா?  

பதில் – நாட்டில் தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றோம். ஜனநாயக நீரோட்டத்தில் இவ்வாறான சவால்கள் புதுமையானதாகக் கொள்ள முடியாது. இந்த நாடுபெரும்பான்மையாக பௌத்தர்களைக் கொண்டநாடு. முஸ்லிம்களும், தமிழர்களும் சிறுபான்மைச் சமூகத்தவர்களாவர்.  ஆனால் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்டம், நீதி, நியாயம் அனைத்தும் பெரும்பான்மையினரைப் போன்று சிறுபான்மைச் சமூகங்களுக்கும் சரிசமமாகவும், பொதுவானதாகவும் இருக்கவேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கிடமிருக்க முடியாது.  

முஸ்லிம்கள் சிறுபான்மைச் சமூகம் என்பதற்காக அவர்களை இரண்டாம் தர பிரஜையாக கருதமுடியாது சனத்தொகையில் குறைந்தவர்களாக முஸ்லிம்கள் இருந்த போதிலும். நாட்டின் பொருளாதாரவளத்துக்கும், ஜனநாயக அரசியல் இருப்புக்கும் சமமான பங்களிப்பைச் செய்துள்ளோம். செய்து வருகின்றோம், இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து இனவாதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாதுள்ளது. எமது பக்க நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளும் எடுக்கப்பட்ட போதும் பயனற்றுப்போன நிலையில் தான் அரசியல் ரீதியில் நாம் ஒன்றுபட்டு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். முஸ்லிம் சமூகத்துக்கு நியாயம் கிட்ட வேண்டும் என்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம். 

கேள்வி – இன்றைய நிலையில் உலமாசபையின் வழிகாட்டல்கள் எந்தளவுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பற்றி தெளிவு படுத்தமுடியுமா? 

பதில் – ஏப்ரல் 21ல் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு முன்னரும் அதன்பின்னரும் கூட முஸ்லிம் சமூகம் மிகவிழிப்புடண் செயற்பட வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலும் பாராட்டப்படவேண்டும் . இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. எடுத்த எடுப்பில் அரசியல்வாதிகளின் வாய்கள் அடைக்கப்பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தில் மாத்திரமல்ல சகல விடயங்களிலும் ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டலும், புத்திஜீவிகளின் ஆலோசனைகளும் பாராட்டப்படவேண்டிய விடயம். 

இதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் சமூகத்தின் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கு உரியபலத்தை ஜம்இய்யாவின் ஒத்துழைப்பு மிக பொருத்தமானதாக கருதமுடியும். அது மாத்திரமல்ல முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்த உம்மாவும் ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்குள் உள்ளனர் என்பதை மறந்து விடமுடியாது. 

ஜம்இய்யாவின் பங்குபற்றுதல் எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியலை தூய்மையானதாக முன்னெடுத்துச் செல்வதற்கு எம்மை மெருகூட்டி இருப்பதாகவே சொல்லவேண்டும். தேசியத்தில் இருக்கின்ற சகல விடயங்களிலும் ஜம்இய்யாவின் பங்குபற்றுதல் மிக முக்கியமானது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும். 

கேள்வி – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் போன்றோரின் விவகாரம் அவர்களது தனிப்பட்ட விவகாரமென்றும் இது முஸ்லிம் சமூகத்தோடு தொடர்புபட்டதல்லவெனவும் கூறுகிறார்கள் இது பற்றிய உங்களது பதில் எவ்வாறானது? 

பதில் – ரிஷாத் பதியுதீன், அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தனி மனிதர்களாக இருந்து அல்லது அரசியலில் சம்பந்தப்படாதவர்களாக இருந்து ஏதோவொரு வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு தலைமைத்துவம் கொடுக்க முடியாதவர்களாக அல்லது வேறு அமைப்புகளின் தலைவர்களாக இருந்து அரசியலில் இல்லாத குற்றச்சாட்டாக இருந்தால் இதனை தனிமனித குற்றச்சாட்டாக கொள்ளமுடியும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் அசாத்சாலி ஆளுநராக வந்ததன் பின்னரானது.  

ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக வந்ததன் பின்னரானது.  ரிஷாத்பதியுதீனுக்கு நீண்டகாலமாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டாகும். ரிஷாத் பதியுதீனின் குரலை நசுக்க வேண்டுமென்பதற்காக கொண்டு வரப்பட்டதாகும். 

இது தனிப்பட்ட விடயம் எனச்சொல்வதாக இருந்தால் இத்தகைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களும் பதவிகளை தூக்கி எறிந்து விட்டுப்போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதிலே ஒரு வஞ்சகம் மறைந்திருக்கின்றது. ரிஷாத் பதியுதீனை குறிவைத்து அது போன்று ஆளுநர்களான அசாத்சாலி ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை குறிவைத்து அல்லது எதிர்காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு உயர்ந்த பதவிகள் வழங்கப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தேசியத்துக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் பௌத்த இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை சொல்ல வேண்டுமென்பதற்காக இனவாதத்தை தூண்டுகின்ற சிறிய குழுக்களின் வேலைத்திட்டமேயன்றி வேறொன்றுமில்லை என்றே சொல்லவேண்டும். 

கேள்வி – அண்மையில் பொதுபலசேனா அமைப்பின் கலகொட அத்தே ஞான சாரதேரோ ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டு, நாங்கள் செய்த வேலையால் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள் பௌத்தர்களான நாங்கள் தான் பிளவுபட்டுள்ளோம் என்பதாகக் கூறினார்.  அதுபற்றிய உங்கள் கருத்து எவ்வாறானது? 

பதில் – கலகொட அத்த ஞானசார தேரருக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது அவரது தலைமைத்துவம் அல்லது தான் கொண்டிருக்கும் ஹீரோயிசம், மற்றொரு காவியுடை தரித்த ஒருவருக்குப் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாக எழுந்தது என்றே நான் கருதுகின்றேன். 

ஆனால் முஸ்லிம் உம்மா ஒன்று சேர்ந்திருப்பது காலத்தின் தேவை கருதி எடுக்கப்பட்ட முடிவாகும். இவர்களுடைய இனவாதத்தினால் தூண்டப்பட்டு எமது முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு முஸ்லிம்களை துவம்சம் செய்யவேண்டுமென்ற முனைப்பும் இதற்கு கால்கோளாக அமைந்திருக்கின்றது. எனவே இனவாதம் பேசப்படாமல், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் சேதமாக்கப்படாமல் பள்ளிவாசல்கள், புனித குர்ஆன்கள் தீக்கிரையாக்கப்படாமலிருந்தால் எம்மை ஜனநாயக ரீதியில் எதிர்நோக்கி இருந்தால், செயற்பட்டிருந்தால் இந்த ஒற்றுமை ஏற்பட்டிருக்குமா என்பதில் எனக்கொரு சந்தேகம் தான்.  

ஆனால், அடிப்படையிலே எமது பள்ளிவாசல்கள் திருக்குர்ஆன்கள் மீது கைவைப்பது என்பது யாராலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. கலிமாவை மொழிந்த எந்தவொரு முஸ்லிமும் தாங்கிக் கொள்ளமாட்டான். எனவே இதனை அவர்கள் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இந்த ஒற்றுமை என்பது எதிர்காலத்தில் இந்த இனவாதம் இவ்வாறான நிகழ்வுகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தூவப்படுகின்றதோ அந்த காலத்தில் நாங்கள் அரசாங்கத்தில் இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம் இதனை முன்னுதாரணமாக கொண்டு எதிர்காலத்தில் வருகின்ற அரசியல்வாதிகள் செயற்பட முடியும் என்பதை நாம் சொல்லி வைக்க விரும்புகிறோம். 

 

கேள்வி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் விடயத்தில் ஒரு அசமந்தப்போக்கில் செயற்படுவதாக ஒருபார்வை காணப்படுகின்றது. அந்தத் தலைமைத்துவத்தோடு சேர்ந்து இந்தக் கூட்டமைப்பு எந்தளவுக்கு சாத்தியப்பட முடியும். இதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்ல முடியும் என்று கருதுகிறீர்கள்? 

பதில் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பற்றி அவர்களது அரசியல் பயணம் குறித்துப் பேசுவதற்கு நான் தயாராக இல்லை. ஆனால் இந்தக் கூட்டு என்பது நாங்கள் ஏற்கனவே 52நாட்கள் வேலைத்திட்டத்தின் போதும் ஐக்கியதேசியக் கட்சிக்காக, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக, ஐக்கிய தேசிய கட்சியோடு இருந்தோம்.  ரிஷாத் பதியுதீனுக்கிருந்த அழுத்தம் அந்த நேரத்தில் கைவிட்டுவிட்டு வரவேண்டுமென்பது எதிர்பார்ப்பாக இருந்தது. அதனுடைய பின்புலம்தான் இப்போது அவருக்கு எதிராக தாக்கப்படுகின்ற வேலைத்திட்டமாகும். தாங்கள் ஆட்சியமைக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அது கைநழுவிப்போனதால் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான வேலைத்திட்டமேயன்றி வேறில்லை. 

அது மாத்திரமல்லாமல் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையல்ல. அதுமுஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையாகும். இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவும் அதனை அவ்வாறுதான் பார்கின்றது. நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இளைஞனும், உலமாக்களும், படித்தவர்களும் பெண்களும், பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் அவ்வாறுதான் பார்க்கின்றன. இது ரிஷாதுக்கு எதிரான விடயமல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவுக்கு எதிரானதொருவிடயமென்பதை மிகத் தெளிவான பார்வையோடு இருக்கின்றார்கள்.  

உங்களது கேள்வியை பொறுத்தமட்டில் 52நாள் வேலைத்திட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடும். அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமோடும் அந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றித்துப் பயணித்தவர்கள் நாம். அதேபோன்றதொரு கட்டத்துக்கு இன்றும் வந்திருக்கின்றோம். இதிலும் நாங்கள் ஒன்றித்துப் பயணிக்கின்றோம். இந்தக் கூட்டு என்பது நிரந்தர இணைப்போ, நிரந்திரப்பிரிவோ என்பதல்ல காலத்தின் தேவைக்கேற்ப முஸ்லிம் உம்மாவின் அவசியத்திற் கேற்ப அந்த வேலைத்திட்டங்களை நாம் எதிர்காலத்திலும் முன்னெடுப்போம். 

 

கேள்வி – இதேவேளை இரண்டொரு தினங்களுக்கு முன்னர் கண்டி அஸ்கிரிய பீடத்தில் மகாசங்கத்தினர்களின் கூட்டம் இடம்பெற்றது அதில் அஸ்கிரிய, மல்வத்தை சியம்,நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்கள் கூடித் தீர்மானம் எடுத்து ஒரு அறிவிப்பை விடுத்திருக்கின்றனர். இன்றைய நிலையில் அது மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. எல்லா இனங்களும் ஒன்று. அனைவருகம் இலங்கையர்கள் இந்த நேரத்தில் சமூகத்திலிருந்து முஸ்லிம்களை தூரமாக்கிச் செயற்படமுடியாது. எல்லா இனங்களும் ஒன்றிணைந்தது தான் இலங்கை என்று அந்த அறிவிப்பு காணப்படுகின்றது. அது எவ்வாறான மாற்றத்தை தோற்றுவிக்கும் எனக் கருதுகின்றீர்கள்? 

பதில்- -– இந்த நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிக்கின்ற அரசியல் தலைவர்களுக்கு இந்த அஸ்கிரிய மல்வத்தை, சியம் நிக்காயாக்களின் அறிவிப்பானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றே ஒருதுகின்றேன். 

நாட்டைப் பற்றிய அவர்களுடைய துரதிருஷ்ர  பார்வை, நாட்டில் வாழும் அனைத்து பெரும்பான்மை, சிறுபான்மைச் சமூகம் குறித்த பார்வை, நாட்டில் வாழும் முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ மக்களின் அடையாளங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்படி நிலைநிறுத்தப்பட்டால் தான் நாடு ஒரு பல்லினத்தன்மை கொண்டநாடு, என்ற விடயத்துக்கும், ஜனநாயக நாடு என்பதற்கும் சர்வதேச அங்கீகாரத்துக்கு நாம் தலைகுனியத் தேவையில்லை என்ற விடயத்துக்கும் தூரதிருஷ்டியோடு பார்க்கும் பார்வை அவர்களிடம் வெளிப்பட்டிருக்கின்றது. இதில் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மாவும் சந்தோஷமடைகின்றது. 

அந்த வகையில் அவர்களது அழைப்பை நாம் உதாசீனம் செய்வதாக இல்லை. என்றாலும் நாங்கள் ஏற்கனவே சொன்னது போன்று எமக்கு ஒரு தார்மீக பொறுப்பு இருக்கின்றது நீண்டகாலமாக பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் இனவாதம் தூவப்பட்ட விடயம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற விடயம் எம்மிடத்தில் இருக்கின்றது. அந்த வகையில் நாங்கள் ஒரு மாதகால அவகாசம் கொடுத்திருக்கின்றோம். எங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் தெளிவான முடிவுக்கு வரவேண்டும். எந்தத்திணைக்களமாக இருப்பினும் சரி எந்த உயர் அதிகாரசபையாக இருப்பினும் சரி அவற்றை கேள்விக்குட்படுத்தி உண்மைகளை   வெளிக்கொண்டுவருவதன்மூலம் எமது முஸ்லிம் தலைவர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை பெரும்பான்மை சமூகத்துக்கு உரத்துச் சொல்லவேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. 

இந்தக்காலக்கெடுவை நாங்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிப்போம். அதன்பின்பு எல்லோருமாக இருந்து ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் மற்றும் உள்ள தலைவர்கள் எடுத்துக்கொண்ட முடிவின் அடிப்படையில் உரியமாற்றங்களைச் செய்யமுடியும். அடுத்த கட்ட நகர்வுக்குள் நுழைய முடியும். என்று நினைக்கின்றோம். 

கேள்வி – முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பாக இளைஞர் சமூகத்துக்கு கொடுக்கும் செய்தி என்ன? 

பதில் – முஸ்லிம் சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமாக சொல்வது சௌஜன்யம் என்ற நல்லுறவு காலத்தின் கட்டாயத்தேவையாகும். கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் சமூகமும் இதில் தவறி இருக்கின்றோம். பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியிலே எமது பழக்க வழக்கங்கள் என்ன? எமது ஹராம் ஹலால் என்ன? நோன்பு, தொழுகை ஹஜ் என்பனவெல்லாம் என்ன இஸ்லாம் என்ன சொல்கிறது. அதன்படி நாம் அவர்களோடு பழகினோமா அவர்களுக்கு அந்த உயர்ந்த பண்புகளை எங்களூடாக எடுத்துக் காட்டினோமா? என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கின்றது. 

நாங்கள் எங்களை அவர்களிடத்தில் பட்டை தீட்டி நாம் உண்மையானவர்கள் என்ற யதார்த்தத்தை காண்பிக்க வேண்டும். நாம் தான் அதனைச் செய்யவேண்டும்.

எம்மைப் பற்றிய சரியான புரிதலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். எமது பழக்கவழக்கங்கள் மீது மதத்தின் மீது குர்ஆன்மீது, ஹதீஸின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக மறுக்கமுடியாது அவர்களுக்கு ஒரு அச்சம், சந்தேகம் இருக்கின்றது.

இது நியாயமும் கூட அந்த அச்சத்தை, சந்தேகத்தைப் போக்க வேண்டிய, நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் உலமாக்களுக்கும் இருக்கின்றது என்பதை சொல்லியாக வேண்டும். 

அந்த வகையில் சட்டத்தை மதித்தது நடப்பது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சட்டத்தை எமது கைகளில் எடுக்காமல் சட்டத்தை மதிக்கவேண்டும். எதிர்காலத்தில் நாம் நாட்டுக்குத் துரோகமான செயற்பாடுகளில் கிஞ்சித்தும் எம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலும், எமது முஸ்லிம் உம்மா இந்த நாட்டில் சிறப்பாக தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் அந்த விடயங்களில் விழிப்பாகவும் கவனமாகவும் விஷேடமாக இலங்கையர் என்ற நாட்டுப்பற்றும் எம்மிடம் ஏற்படவேண்டும். 

வாய்ப்பேச்சளவில் செயற்படாமல் இதய சுத்தியோடும், மனச்சாட்சிப் படியும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படும் வகையில் எம்மை நாம் மாற்றிக்கொள்வது மிக முக்கியமானதாகும்.   

எம்.ஏ.எம். நிலாம் 

Comments