காற்றும் கதிரவனும் | தினகரன் வாரமஞ்சரி

காற்றும் கதிரவனும்

ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காற்று "உன்னை விட நான் பலசாலி" என்றது. அதற்கு சூரியன், "நிச்சயமாக இல்லை" என்று பதிலளித்தது.  

அப்பொழுது, வழிப்போக்கன் ஒருவன், பூமியில் நடந்து செல்வதை அவை கண்டன. ஒரு போர்வையை அவன் போர்த்திக் கொண்டிருந்தான். அந்த வழிப்போக்கனின் போர்வையை, எது கீழே விழ வைக்கிறதோ அதுவே பலசாலி என்று காற்றும், சூரியனும் தங்களுக்குள் பேசித் தீர்மானித்துக் கொண்டன. காற்று முதலில் முயற்சித்தது.  

பலத்த காற்று வேகமாக அடித்து, அந்த வழிப்போக்கனின் போர்வையைத் தூக்கி எரிய முயன்றது. மேலும், மேலும் பலத்துடன் வேகமாக அடித்தும் கூட, அந்த வழிப்போக்கன் போர்வையை விடாமல், உடலுடன் இறுகப் போர்த்திக் கொண்டு நடந்தான். பாவம்! காற்று தோற்றுப்போனது.  

இப்பொழுது சூரியன் முயன்றது. சூரியன் மெல்ல நகைத்து தன் வெப்பத்தை வெளிவிட்டது. சூரியனின் வெப்பத்தை வழிப்போக்கனால் தாங்கவே முடியவில்லை. உடனே அவன் தன் போர்வையை சற்றே விலக்கினான்.  

சூரியனின் வெப்பம், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. வழிப்போக்கனுக்கு, போர்வையின் தேவை இனி இல்லை. அதை உடம்பிலிருந்து எடுத்து விட்டான். "இதனால் சூரியனே காற்றை விட மிகவும் பலசாலி" என்பது நிரூபிக்கப்பட்டது.  

'முரட்டுத்தனத்தால் முடியாததை மெல்லிய புன்னகையால் சாதிக்கலாம்'  

கே. விசாலினி,  
தரம் 12, கொட்டகலை தமிழ் ம.வித்தியாலயம்,   
கொட்டகலை. 

Comments