இலங்கை வரும் பிரதமர் மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை வரும் பிரதமர் மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம்

ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்ட வரவேற்பு

சம்பந்தனை மாத்திரம் சந்திக்க ஏற்பாடு

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்கின்றார்.

அதிவேக நெடுஞ்சாலையூடாக கொழும்புக்கு அழைத்து வரப்படும் பிரதமர் மோடி நேரடியாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் செல்கிறார். அதன் பின் அங்கிருந்து கோட்டையிலுள்ள  ஜனாதிபதி செயலகம் செல்லும் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பளிக்கப்படவுள்ளது.

இதனையொட்டி நேற்றுக் காலை முதல் கொழும்பிலும் புற நகர்ப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், விமான நிலையம் செல்வோர் சாதாரண வழித்தடத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக பாதுகாப்பு ஒத்திகைகளில் படையினரும் பொலிஸாரும் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

மாலைதீவிலிருந்து இன்று முற்பகல் பதினொரு மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடியை வரவேற்றுக் காரில் அழைத்து வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காரில் அவருடன் பயணித்தவாறே இருதரப்புப் பேச்சுவார்த்தையையும் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து நேராக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தரும் பிரதமர்கள், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்கின்றனர். அங்கு ஜனாதிபதி வளாகத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்குச் செங்கம்பள வரவேற்பும் இராணு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி மாளிகையில் மதிய போசனத்திலும் பங்குகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய இல்லத்திற்கு விஜயம் செய்கிறார்.

இந்திய இல்லத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.ஆகியோரைச் சந்திக்கின்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றிலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்கிறார்.

ஆக, இலங்கையில் சுமார் நான்கு மணித்தியாலம் மாத்திரமே தங்கி நிற்கும் பிரதமர் மோடியுடன் சந்திப்புகளை நடத்துவதற்குப் பலரும் அவகாசம் கோரியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரதமர் நரேந்திர மோடி மிகக் குறுகிய காலம் மாத்திரமே இலங்கையில் தங்கியிருப்பதால், இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

விசேடமாக, இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரான நிலவரம் குறித்தும் பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்தும் இரு தரப்பு பேச்சுவார்த்தையின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக்ெகாண்டதும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நேற்று முன்தினம் மாலைதீவுக்குப் பயணமானார். அவர் இன்று முற்பகல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது, நாட்டின் மீதான நம்பிக்ைகயைப் புலப்படுத்தும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் முதலாவது பதவிக்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஹற்றனில் பெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் இந்திய வீடமைப்புத்திட்டத்தை ஆரம்பித்துவைத்துவிட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (வி)

நமது நிருபர்

Comments