எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவுடன் முஸ்லிம் எம்.பிக்கள் குழு சந்திப்பு | தினகரன் வாரமஞ்சரி

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவுடன் முஸ்லிம் எம்.பிக்கள் குழு சந்திப்பு

அறிக்கை வெளியிடுவதாக மஹிந்த அறிவிப்பு

முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென முஸ்லிம் எம்பிக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள  எதிர்க்கட்சித் தலை வர் மஹிந்த ராஜபக்ஷ, இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (08) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்,  

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, இராஜினாமாச் செய்த பின்புலம் பற்றி விளக்கமளித்தனர். 

இந்த நடவடிக்கைகள் ஊடாக இனங்களுக்கிடையில் மோசமானதொரு துருவப்படுத்தல் ஏற்பட்டுவிடக்கூடாதென இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் எம்.பிக்கள், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தனர். 

அதேநேரம், இந்தத் தீர்மானத்தை எடுக்கவேண்டியேற்பட்டதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் எதிர்க்கட்சித்தலைவருக்கு சகல விளக்கத்தையும் முஸ்லிம் எம்பிக்கள் குழுவினர் முன்வைத்தனர்.  

தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளில் எதிர்க்கட்சித்தலைவர் முன்னின்று சில விடயங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனூடாக பதற்றத்தைத் தணிப்பதற்கு அவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் முஸ்லிம் எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர். 

முஸ்லிம் எம்பிக்கள் குழுவினர் தன்னுடன் நடத்திய பேச்சுவார்த்தை விடயங்களை வைத்து தான் அறிக்கையொன்றை விடுப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது முஸ்லிம் எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌசி, ரிஷாத் பதியுதீன், அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், அமீர் அலி, அப்துல்லாஹ் மஃறூப், இஷ்ஹாக் ரஹ்மான், ஏ.எல்.எம். நசீர், வீ.சி. எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன. கெஹலிய ரம்புக்வெல்ல, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

 

Comments