முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கிவிடாதீர்கள் | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கிவிடாதீர்கள்

தாக்குதல் நடத்தியோரின் திட்டத்திற்கு யாரும் துணைபோகவேண்டாம்

முல்லைத்தீவில் ஜனாதிபதி

தேர்தலை இலக்காகக் கொண்டு  இனவாதம், மதவாதம் தூண்டக்கூடாது

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டில் பெரும் பிரச்சினை உருவானது.  அதே போன்று முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள். அண்மைய  தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கிலேயே நடத்தப்பட்டது. அதை  அடைய இடமளிக்க வேண்டாம். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாமென  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.  

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை  உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம்  பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம்.

இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம்  என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.  

முல்லைத்தீவு பிரதேச சபை விளையாட்டரங்கில் நேற்று (08)  நடைபெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” முல்லைத்தீவு மாவட்ட செயற்திட்டத்தின்  இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

முல்லைத்தீவில் மட்டுமல்ல, வடக்கிலும் பல பிரச்சினைகள் உள்ளன.  அவற்றில் ஒன்று வறுமை. மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில்  பிரிந்துள்ளோம். நாம் ஒன்றாக இல்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதான  சவால் அது. இதனால் தான் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' என்ற திட்டத்தை  உருவாக்கினோம். 

இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து  பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. தவறாக  செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும். ஏப்ரல் 21குண்டு வெடிப்பின் பின்னர்  300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.  இனங்களுக்கு இடையில் பிளவு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். 

தச்சு வேலைத்தளங்கள், மர ஆலைகளுக்கான புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் தான் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்துப் பலரும் போதிய புரிந்துணர்வின்றிக் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் வனப் பரம்பல் துரிதமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக இன்னும் 15 – 20வருடங்களுக்குள் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்களின் உயிரைப் போன்றே வன வளங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எந்தவோர் அரசியல்வாதியும் தேர்தலை இலக்காகக் கொண்டு இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.  

இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு தற்போது அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், இதன்போது இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிடுதல் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுவெடிப்புக்களை நடத்திய பயங்கரவாதிகளின் நோக்கங்களை வெற்றியடையச் செய்வதற்கு உதவியளிப்பதற்கு சமமாகும் எனவும் இத்தகையதொரு பின்னணியில் நாட்டிற்காக ஒன்றிணைந்து அனைவரும் தத்தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.  

ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' செயற்திட்டத்தின் நான்காவது கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி கடந்த 03ஆம் திகதி முதல் பல்வேறு வேலைத்திட்டங்கள் மாவட்டத்தின் 06பிரதேச செயலக பிரிவுகளிலும் 136கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் 1178க்கும் அதிகமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், சுமார் 52.4மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக முப்பதாயிரம் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.   நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது மாவட்ட மக்களுக்கான காணி உறுதிகள் வழங்குதல், புதிய பயனாளி குடும்பங்களுக்கான சமுர்த்தி முத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

இதனிடையே, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லாவி மருத்துவமனையில் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவினை டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி இதன்போது திறந்துவைத்ததுடன், முல்லைத்தீவு மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா பிராந்திய அலுவலகத்தையும் திறந்துவைத்தார்.

நமது நிருபர்

Comments