புதிய சகாப்தத்துக்கான ஆரம்பமாக ட்ரம்ப்பின் ஐரோப்பிய விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய சகாப்தத்துக்கான ஆரம்பமாக ட்ரம்ப்பின் ஐரோப்பிய விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஒரு வார அரசமுறைப் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். அமெரிக்கா ஐரோப்பிய மூதாதையரைக் கொண்ட நாடு. ஐரோப்பாவுக்குள்ளும் அமெரிக்காவுக்குள்ளும் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சந்தர்ப்பத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் விஜயம் ஐரோப்பா நோக்கி நிகழ்ந்துள்ளது. இரண்டாம் உலக யுத்த நினைவாக நோமண்டியில் நிகழவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வது பிரதானமாக அமைந்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் நிறைவடைந்து 75ஆவது ஆண்டை நினைவு கூரும் நிகழ்வு பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்படுகிறது.  ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்க தலைவருடன் ஒன்று கூடும் நிகழ்வாகவும் மீண்டும் ஒரு யுத்தத்தை தவிர்க்கவும் இச்சந்திப்பு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது. இது 75ஆவது ஆண்டு நிகழ்வாக அமைந்திருப்பதனால் அதி-க முக்கியத்துவம் பெறுகிறது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதியின் ஐரோப்பிய பயணம் உணர்த்தும் செய்திகளை வெளிப்படுத்துவதாக அமையவுள்ளது.  

நோமண்டித் தாக்குதல் என்பது இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் பிரான்சின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள ஜேர்மன் துருப்புக்கள் மீது நிகழ்த்திய வெற்றிகரமான தாக்குதலாகும். ஏறக்குறைய 24ஆயிரம் படைகள் தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் ஜேர்மன் கட்டளைத் தளபதி எர்வின் ரொம்மாவை திட்டமிட்டு கையாண்டு அப்போரில் வெற்றியை நேச அணி நாடுகள் தமதாக்கியதுடன் அதில் கொல்லப்பட்ட படைகளின் நினைவாகவும் வெற்றியின் ஆரம்ப நினைவாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இத்தாக்குதல் முப்படைகளினது கூட்டுத்தாக்குதலாக அமைந்திருந்ததுடன் எதிரிப்படைகள் பகுதி பகுதியாக்கப்பட்டு உடைக்கப்பட்டு, தகர்க்கப்பட்ட நிகழ்வும் நடை பெற்றது. ஜேர்மனியப்படைகளின் வலு, பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. அதுவரை அதிக எதிர்பார்க்கையுடன் நகர்ந்த ஜேர்மனியப்படைகளுக்கு நோமண்டித் தாக்குதல் அதிர்ச்சியையும் சிதைவையும் தந்தது. அந்த அடிப்படையிலேயே நினைவு கொள்ளும் நிகழ்வில் அமெரிக்க தலைவரின் பிரசன்னம் முதன்மையானதாக அமைந்திருப்பது வழமையாகும். அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தை தனது மண்ணில் இல்லாத சூழலில் ஐரோப்பாவுக்குள் முதன்மைப்படுத்திக் கொண்டது. அதன் மூலம் அதன் வாய்ப்புக்களும் அழிவுகளும் சாதகமான விளைவைத் தந்தது. அதனாலேயே அமெரிக்க பொருளதாதாரமும் இராணுவ வல்லமையும் உலகளாவிய அரசியல் பலமும் அதிகரித்தது. ஐரோப்பாவே அமெரிக்காவின் பலமாகும். அமெரிக்காவின் இருப்பு முழுவதும் ஐரோப்பாவுக்குள்ளாலேயே சாத்தியமானது. அதன் பொருளாதார பலமும் அரசியல் இருப்பினையும் ஐரோப்பா மீதான சிதைவுகளே வளர்ச்சிக்கு வழிசமைத்தது. ஐரோப்பாவின் அழிவுகளை சரிசெய்வதென்ற அடிப்படையிலேயே அமெரிக்காவின், ஐரோப்பா நோக்கிய பாய்ச்சல் சாத்தியமானது. பின்னர் ஐரோப்பாவுடன் சேர்ந்து அதிலும் மேற்கு ஐரோப்பாவுடன் சேர்ந்து முழு உலகத்தையும் கைப்பற்ற திட்டமிட்டு ஐரோப்பாவுடன் அமெரிக்கா பங்கு போட்டுக் கொண்டது. அதன் விளைவாகவே ஐரோப்பிய அமெரிக்க நெருக்கம் அதிகமாக அமைந்திருப்பதுடன் இரு சக்திகளும் சேர்ந்த நகர்வுகள் உலகளாவிய ரீதியில் காணப்படும். அதிலும் பிரித்தானியாவுடனான அமெரிகக நெருக்கம் மிக அதிகமானது. காரணம் அமெரிக்க குடியேற்ற பரம்பலில் அதிக முக்கியத்துவம் பிரித்தானியாவுக்கு உண்டு. அவர்களே அமெரிக்க குடியேற்றத்தை நிறுவியவர்களாகவும் அவர்களே அமெரிக்காவுக்கு சுதந்திரப் பேராட்டத்திற்கு வழிவகுத்தவர்களாகவும் விளங்கினர். குறிப்பாக பிரித்தானியாவை எதிர்த்தே அமெரிக்க மக்கள் ஐக்கிய அமெரிக்கா என்பதை உருவாக்கினர். அதன் மூலமே அவர்கள் அமெரிக்க அரசியல் உறுதிப்பாட்டை சாத்தியப்படுத்தியவர்கள். அந்த வகையிலேயே அமெரிக்க பிரித்தானிய உறவு தனித்துவமானதாகக் கருதப்படுகின்றது. அதன் நினைவாகவும் ஜேர்மனியிடமிருந்து ஐரோப்பாவை காத்தவர்கள் என்ற வகையிலும் அமெரிக்கர்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றனர்.  

இவ்வகை முக்கியத்துவத்தை கொண்ட நோமண்டி தாக்குதல் உலக வரலாற்றில் இடம்பிடித்த ஒரு பதிவாக அமைந்துள்ளது. இதனை அண்டி ஐரோப்பாவுக்குள் சென்ற டிரம்ப் அதிக சிக்கலை பிரித்தானிய நகர மேயருடன் ஏற்படுத்திக் கொண்டார். அவர் ஒரு அபாய மனிதன் என்று தனது டுவிட்டரில் விமர்சித்ததன் விளைவாக எழுந்த முரண்பாடு பிரித்தானியாவில் டிரம்ப்க்கு எதிரான ஆர்ப்பட்டத்திற்கு காரணமாக அமைந்தது. அது மட்டுமன்றி பதவி விலகும் சூழலில் இருக்கும் பிரிட்டன் பிரதமர் திரேசா மே மற்றும் பிரிட்டன் மக்கள் டிரம்ப்பின் வருகையை அதிகம் ஏற்க முடியாதவர்களாக காணப்பட்டனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை அரசியல் குழப்பமாக மாற்றியுள்ள சூழலில் அந்த நாட்டில் ஆட்சியின் உறுதியின்மை அடிக்கடி ஏற்படுவதனாலும் அதன் பொருளாதார இருப்பு பாதிக்கப்படுவதும் அதிக ஏமாற்றத்தை பிரித்தானிய மக்களுக்குத் தந்துள்ளது. இதனால் டிரம்ப்பின் வருகை அவர்களது உணர்வுகளில் வெறுப்பினைத் தந்ததாகவே அமைந்துள்ளது.  

ஆனாலும் அமெரிக்க ஜனாதிபதி முழுமையாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறினாலும் அதன் பாதிப்புகளை விட அமெரிக்காவுக்கு நன்மையானதாக கருதுகின்றது. அது ஐரோப்பாவை விட அமெரிக்காவுடன் வர்த்தக மற்றும் பொருளாதார உடன்பாட்டினை உருவாக்குமாறு மீள மீள வலியுறுத்தி வருகிறது. ஐரோப்பாவுடன் உள்ள உறவைக்காட்டிலும் அமெரிக்காவுடன் பிரிட்டன் உறவு வைத்துக் கொள்வது பொருளாதார ரீதியில் இலாபகரமானது என அமெரிக்கா கருதுகிறது.

சீனாவுடனான விரிசலை எதிர்கொள்ள அத்தகைய உறவு அவசியம் என அமெரிக்கா கருதுகிறது. அத்தகைய போக்கிலேயே பிரிட்டனின் நெருக்கடி நிலையை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா முயலுகிறது. அதற்கான விஜயமாகவே அமெரிக்க ஜனாதிபதியிஜன் நகர்வு அமைந்துள்ளது. பிரான்ஸில் நிகழவுள்ள நிகழ்வைக் காட்டிலும் அமெரிக்காவுக்கு பிரிட்டனுடனான பொருளாதார உறவே இலக்காகும். அதனை அடைவதற்காகவே பிரிட்டனுடன் அதிக பேச்சுக்களை உருவாக்கி வருகிறது.  

இதனை விட அமெரிக்க ஜனாதிபதி பிரான்ஸ் நாட்டுடனான உறவையும் பொருளாதார இராணுவ கட்டமைப்பையும் உருவாக்குவதற்கான பேச்சுக்களில் அதிக கரிசனை கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார ரீதியில் சீனாவுடனும் ஏனைய நாடுகளிடனும் அமெரிக்கா கொண்டுள்ள விரிசலை சரி செய்ய திட்டமிட்ட நகர்வாகவே ஐரோப்பிய விஜயத்தை டிரம்ப் வரைந்துள்ளார். பிரான்ஸில் ட்ரம்ப் உரையாற்றும் போது பிரான்சுக்கும் தமக்குமான உறவு வரலாற்றில் வேறு எந்த நாட்டுடனும் அல்லாத ஒன்று என்றார். இரு தேசங்களினதும் சுதந்திரத்தை பாதுகாப்போம் என்றார்.  

எனவே அமெரிக்க அதிபரின் ஐரோப்பிய விஜயம் புதிய அத்தியாயத்தை அமெரிக்க வெளியுறவில் ஏற்படுத்தும் என இராஜதந்திரிகள் கருதுகின்றனர். 

Comments