இன்னும் எவ்வளவு காலத்துக்கு முகவரியற்ற சமூகமாக நாம் நீடிப்பது? | தினகரன் வாரமஞ்சரி

இன்னும் எவ்வளவு காலத்துக்கு முகவரியற்ற சமூகமாக நாம் நீடிப்பது?

நிரந்தர முகவரி என்பது சுதந்திர உரிமை. இதன் மூலமே தபால் விநியோகம் உள்ளிட்ட அனைத்து தொடர்பாடல்களும் நடைபெற முடிகின்றது. இது இல்லாதவிடத்து பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பெயர் தடுமாற்றம் காரணமாக தபால்கள் கைமாறிப்போவது இதில் முக்கியமானது. இதன் மூலம் ஒரு குடும்பத்து இரகசிய விடயங்களை சம்பந்தமே இல்லாத பிறிதொரு குடும்பம் தெரிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. கைமாறிய கடிதம் என்ற போதும் அதனைப் பிரித்துப் பார்த்துவிட்ட காரணத்தால் உரியவரிடம் மீண்டும் கையளிக்க தயக்கம் ஏற்பட்டு அது கையளிக்கப்படாமலே அடுப்பில் போடப்படுவதும் உண்டு. வரும் கடிதம் தமக்கல்ல என்று தெரிந்தபோதும் அதில் என்ன அடங்கியிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்துவிட்டுத் திருப்பித்தரும் நபர்களும் இல்லாமல் இல்லை.  

காசோலைகள் கைமாறும்போது திருப்பித் தரப்படுவது இல்லை. ஆவணங்கள் ஏதும் முகவரி (பெயர்) மாறி கைக்குக் கிடைத்தால் உரியவர் மனஸ்தாபத்துக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில் திருப்பிக் கொடுக்கப்படும் வாய்ப்பே இருக்காது. இதுபோலவே தொழில் ரீதியாக வரும் அஞ்சல்கள் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புகள் குறித்த நேரத்தில் உரியவர்கள் கைக்குப் போய்ச்சேராததன் காரணமாக தொழில் வாய்ப்புகளை இழந்தவர்களும் உண்டு. பதிவுத் தபால்கள் உரிய காலத்தில் கையேற்கப்படாததன் காரணமாக அவை தபால் நிலையத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வுகளும் நடந்தேறி உள்ளன.  

பெருந்தோட்டக் கட்டமைப்பு தனியொரு சமூகப் பிரிவினராக பெருந்தோட்டச் சமூகத்தை வைத்திருப்பதையே இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டது. இக்கட்டுக்குள் இருந்து வெளியேறுவதை சம்பந்தப்பட்டவர்கள் விரும்புவதில்லை. இதில் அரசியல்வாதிகளும் அடக்கம். தவிர பெருந்தோட்ட மக்களுக்கான தபால் விநியோகம் என்பது தோட்ட நிர்வாகத்தின் வசதியைப் பொறுத்த சமாச்சாரமாகவே மாறிப்போயுள்ளது. இதனால் நிர்வாகத்தோடு முரண்படும் நபர்களுக்கு கடிதம் வரும் நிலையில் அது கையளிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது. கடிதம் வந்திருக்கின்றது என்ற தகவல் கசிந்திருந்தால் கூட நிர்வாகத்திடம் கேட்கமுடியாது. கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை.  

பொதுவாக தோட்டத்தில் தபால் விநியோகத்துக்கென ஒருவரே சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றார். இவர் காலை வேளையில் நகரத்தில் இருக்கும் தபால் நிலையங்களுக்குச் சென்று கடிதங்களைப் பொறுப்பேற்றுக் கொள்வார். அதன் பின்னர் ஐயாமார்களின் (ஸ்டாப்ஸ்) தேவைகளை கடைகடையாக ஏறி வாங்கிக் கொண்டு நண்பகல் அளவில் தோட்டப் பனிமனை திரும்புவார். கடிதங்கள் அடங்கிய பை தோட்டப் பணிமனையில் ஒப்டைக்கப்படும். இவை மாலை நான்கு மணியைப் போல் கொழுந்து நிறுக்கும் மடுவம் அல்லது பிரட்டுக் களத்தில் வைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படும். தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான தபால் விநியோகமும் கூட தோட்ட பணிமனைக் கூடாகவே இடம்பெறுகின்றன. இதனால் கடிதங்கள் கைதவறிப் போவதும் அது கண்டு கொள்ளப்படாமல் விடப்படுவதும் சர்வசாதாரணம். பொதுவாக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான கடித விநியோகம் காலாகாலத்தில் இடம் பெறாமைக்கு தோட்ட நிர்வாகங்களின் அசிரத்தையே பிரதான காரணமாக விளங்குகின்றது. இதில் தலையிடும் நிலையில் தபால் காரியாலயங்களும் இல்லை. இதைத் தட்டிக்கேட்க மலையக அரசியல்வாதிகளும் தயாரில்லை. அதனால் ஏனோதானோ என்னும் ரீதியிலான தபால் விநியோகம் இங்கு தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. 2003களில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு 100க்கும் அதிகமான முகவர் தபால் நிலையங்களைப் பெருந்தோட்டப் பகுதிகளில் அமைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அமைக்கப்பட்ட தபால் நிலையங்களின் தற்போதைய நிலைமை எப்படி இருக்கின்றது? இவற்றுள் பல மூடப்பட்டுக் கிடக்கின்றன. சில திறக்கப்படாமலே உள்ளன. சில அத்திவாரம் போடப்பட்டதோடு சரி. சில தபால் நிலையங்கள் வீடுகளாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூட தகவல்கள் உள்ளன.  

ஏன் இப்படி? தபால் நிலையங்களை அமைப்பதற்காக பெருந்தொகைப்பணம் செலவிடப்பட்டும் அவை பயன்பாட்டுக்கு உதவாதபடி கைவிடப்பட்டமைக்கு அடிப்படைக் காரணம் முறையான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டதேயாகும் என்கிறார்கள் அவதானிகள். இதனால் இத் தபால் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள் பலர் வேலை வாய்ப்புகளை இழந்திருப்பதாக தெரிகின்றது. இவர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளே இந்நிலையைத் தோற்றுவித்துள்ளது. மூடப்பட்டுள்ள முகவர் தபால் நிலையங்களில் இருந்த பொருட்கள் நாசமடைந்து போயுள்ளன. சில இடங்களில் கதவுகள் கூட களவாடப்பட்டுள்ளன. முறையான திட்டமிடலோ முகாமைத்துவத்துக்கான முன்னேற்பாடோ இல்லாமையால் இத்தபால் நிலைங்கள் செயற்படுவதற்கான முயற்சிகள் முழுமை பெறாமலே முடங்கிப் போய்விட்டன. இப்படி எத்தனையோ முடக்கங்கள் இந்த மலையகத்தில்.  

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பலகோடி ரூபா செலவில் தபால் நிலையங்களை அமைத்தது. ஆனால் இவை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. அதன் காரணமாகவே முகவர் தபால் நிலையங்களாக இவை இயங்க வேண்டி நேர்ந்தது என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். 2008இல் சி.பி. ரத்நாயக்க தபால் தந்தி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது 350பேர் மலையகத்துக்கான தபால் விநியோக ஊழியர்களாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

மாத்தறை மாவட்டத்தில் 05பேர், காலி மாவட்டத்தில் 04பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 16பேர், கொழும்பு மாவட்டத்தில் 07பேர், கண்டி மாவட்டத்தில் 20பேர், பதுளை மாவட்டத்தில் 116பேர், கேகாலை மாவட்டத்தில் 11பேர், நுவரெலியா மாவட்டத்தில் 138பேர், மாத்தளை மாவட்டத்தில் 13பேர், களுத்துறை மாவட்டத்தில் 13பேர் என நியமனம் பெற்றார்கள். எனினும் இத்தொகை பெருந்தோட்ட தபால் விநியோகம் சீராக நடைபெற போதுமானதாக இல்லை என்பதே புத்திஜீவிகளின் பதிவாக இருக்கின்றது.  

இவ்வாறான பின்புலத்திலேயே மலையகத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறையாகி வருகின்றன. எனினும் முழு மலைகமும் இத்திட்டத்தினால் மாற்றத்தை அடைவதற்கு நீண்டகாலம் எடுக்கும். எனவே தற்போது பெருவாரியான மக்கள் லயவரிசை வீடுகளிலேயே வசித்துவரும் நிலையில் அந்த லயக்கம்பிராக்களையே தனித்தனி வீடுகளாகக் கருதி இலக்கங்கள் வழங்குவதன் மூலம் தனித்தனி முகவரிகளாக மாற்ற முடியும். இது சம்பந்தமான தமது அவதானத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு செலுத்தியுள்ளதாக கிடைக்கும் செய்திகள் திருப்தியைத் தரவே செய்கின்றன. இது குறித்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு உடனடியாக உரிய செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மனித உரிமை ஆனைக்குழு பணிப்புரை விடுத்துள்ளதாக ஊடகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மூன்றுமாத காலத்துக்குள்ளாக இது சம்பந்தமான நகர்வு குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் ஆலோசனையின் பேரில் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் அனைத்து மாவட்டச் செயலகங்களுக்கும் இவ்விடயம் சம்பந்தமான விளக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பிரதேச செயலகங்கள் நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இரு தசாப்தகால இழிநிலைக்கு தீர்வுகிட்டும் என்பது நிச்சயம்.  

இதன் மூலம் ஓரு சமூகத்துக்கான முகவரி நிரந்தரமாகும் சூழ்நிலை உதயமாகவே செய்யும். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முயற்சி அதையொட்டிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் முனைப்பு என்பன முழுமையான அடைவினை எட்ட மலையக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகின்றது.

ஏனெனில் இதுவரை இப்பெருந்தோட்டச் சமூகத்துக்கு கெளவரமானதும் நிரந்தரமானதுமான முகவரியைப் பெற்றுக்கொடுக்க முறைமையான செயற்றிட்டங்கள் எதனையும் இத்தலைமைகள் முன்வைத்தபாடில்லை. கிடைத்த வாய்ப்புகளைக் கூட சரியாக பயன்படுத்திக் கொண்டு தாம் சார்ந்த சமூத்துக்குச் சரியான அடையாளத்தைப் பெற்றுத்தர முடியாத கையறு நிலையில் இருப்பதை சீர்செய்து கொள்ள இதுவே சரியான சந்தர்ப்பம்.  

பன். பாலா 

Comments