ஒரே மொழி பேசும் மக்களை பிரிப்பது காலத்துக்கு ஒவ்வாதது | தினகரன் வாரமஞ்சரி

ஒரே மொழி பேசும் மக்களை பிரிப்பது காலத்துக்கு ஒவ்வாதது

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாகாணங்களாகும். அவர்கள் இணைந்தும், பிணைந்தும் வாழவேண்டும்” இலங்கை ஓர் அழகான பல்லினங்கள் வாழும் நாடு, அதில் வடக்கும், கிழக்கும் இரு மாகாணங்கள் அம் மாகாணங்களில் தமிழ், முஸ்லிம், சிங்கள, இனங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வாழ்கின்றன. கடந்த வாரம், கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமாச் செய்த ஹிஸ்புல்லா சமீபத்தில் பேசிய பேச்சுக்கள் காணொளிகளாக பரவியுள்ளன. அவர் அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து இருக்கக் கூடாதென்றும், கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும். அதனால் “வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” என்ற கோட்பாடு இல்லாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அண்மையில் தனது பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தவருமான அலிஸாகிர் மௌலானாவின் கருத்துக்களை தினகரன் வாசகர்களுக்காக அறிய முற்பட்டபோது அவருடைய கருத்துக்கள் நேர்காணல் மூலமாக இங்கே தரப்படுகிறது.  

கேள்வி: ஹிஸ்புல்லா இரண்டு விசயங்களை முன்வைத்துள்ளார். முதலாவது வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணையக் கூடாது. இரண்டாவது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டும் இதுபற்றிய உங்களது கருத்து எவ்வாறு இருக்கிறது?  

பதில்: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டும் தமிழ் பேசும் மக்களைக்கொண்ட மாகாணங்களாகும். அவர்கள் இணைந்தும், பிணைந்தும்   வாழவேண்டும் என்பதில் நான் மாற்றுக் கருத்துடையவனல்ல. ஆனால் அங்கு வாழுப்போகும் மக்கள் சந்தோசமாக, முரண்பாடுகளின்றி, பிரதேசப் பாகுபாடுகளின்றி, கலாசாரங்களின் தனித்துவங்களுக்கு அச்சுறுத்தலின்றி, தத்தம் வரப்பிரசாதங்களை பாதுகாத்துக் கொண்டு, ஒரு இனம் இன்னோர் இனத்தின்மேல் ஆளுமை செலுத்தாமல் வாழும்வகையை அரசியல் தலைவர்களாகிய நாம் செய்து கொடுக்க வேண்டும். இது நம்முடைய கடமை, நம்மை அறியாமல் நம்மீது வந்து விழுந்துள்ள சுமை,   அல்லது பணி எனலாம். அதிலிருந்து தலைமைகள் முஸ்லிம்களாகவோ, தமிழராகவோ,சிங்களவராகவே இருக்கலாம் இதை நாம் செய்தே ஆகவேண்டும் இன்னொருவகையில்  பார்க்கப்  போனால், அரசியலமைப்பு 13வது திருத்தச் சட்டமும் இவ்வாறுதான் சொல்லியுள்ளது. அரசியலமைப்பக்கு மாறாக நாம் செயற்பட முடியாது.  

தமிழர்களும் முஸ்லிம்களும் மதத்தால் வேறுபட்டாலும் பேசுகின்ற மொழியால் ஒன்றுபட்டவர்கள். நாம் அவ்வாறு பிரித்துப் பார்த்ததுமில்லை பிரித்துப்பார்க்கவும் கூடாது. உலக நாடுகளே சுருங்கி ஒரு குடையின் கீழ்வரும்போது நாம் பிரிந்து போவது கூடாது. முரண்பாடுகள் வரக் கூடாது, முரண்பாடுகளே பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. முரண்பாடுகளை யதார்த்தமாக சிந்தித்து அவைகளை சமாதானமாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம்   தீர்த்துவிட்டால் இன ஐக்கியமும், மாகாணங்களுக்கிடையே ஐக்கியமும் தோன்றிவிடுமல்லவா? இதைச் செய்யாமல் ”வானத்தில் பறப்பதும், மக்களை பிரித்து விடுவதற்கான கருத்துக்களை வெளிவிடுவதும்  காலத்திற்கு ஒவ்வாத ஹிஸ்புல்வாவின் பழக்கம்.  

ஒரு கருத்தை யாராவது கூறினால் அந்தக் கருத்தைக் கூறியவரின் நடவடிக்கை, அவரது கடந்காலச் செயற்பாடுகள், அவருடைய மனச் சாயல் என்பவைகளையும் அறிந்திருக்க வேண்டும்.  

கேள்வி: நாட்டில் ஒரு பெரிய சாதனையை முஸ்லிம் அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து தேசிய நலனை கருத்திற் கொண்டும் முஸ்லிம் இனத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டும், பௌத்த தேசியவாதத்திற்கு எதிராகவும் தத்தம் பதவிகளை ஒரே நேரத்தில் இராஜினாமாச் செய்ததாக பேசிக் கொள்ளப்படுகிறது. இது பற்றிய   உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?  

பதில்: அரசியலில் ஈடுபடுகிறவர்கள், முதலில் தேசிய நலனையும்,இரண்டாவதாக தாம் சார்ந்த சமூகத்தின் நலனையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். அதனை நாங்கள் கட்சி நலனுக்கும், பிரதேச நலனுக்கும் அப்பால் முஸ்லிம் சமூகம் சார்ந்து சிந்தித்து ”ஒற்றுமையே பலம்” என்ற கருத்திற்கேற்ப இராஜினாமச் செய்துள்ளோம். அப்போதைய ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத்சாலி, மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்போர் பயங்கரவாதத்திற்கு துணை போனார்கள் என்றே பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசப்பட்டது. வண. அத்துரலிய தேரர் பாராளுமன்றத்திற்கு பிரேரணையை முன் மொழிந்துவிட்டு ஸ்ரீதலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிவிட்டார் இது அவர்விட்ட பாரிய தவறு அவருக்குப்பின்னால் ஒரு கூட்டம் நிற்கிறது. இங்கேதான் பௌத்த தேசிய வாதம் தலை தூக்குகிறது இராஜினாமாவுக்கு காலக் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.  

அடுத்தது என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். பயங்கரவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார்தான் அதற்காக நாங்கள் எல்லோரும் இராஜனாமாச் செய்து விசாரணைக்க வழிவிட்டோம். இது எமது சாணக்கியம்.

உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள்எமது நாட்டுக்கு உதவுகின்றன ஆனால் எம்மை எம் நாட்டவர் அன்னியராக பார்க்கக் கூடாது. உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் தங்களது சேமம் பற்றியும் தமது இனத்தின் அபிவிருத்திபற்றியும் சிந்தித்து செயலாற்றிவருகின்றன. அதில் எமது நாடும் இணைக்கப்பட்டிருக்கின்றது. அந்தநாடுகளினூடாக எமது நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன. சின்னத்தனமான விசயங்களால் எங்களது நாட்டுக்கு கிடைக்கவிருக்கும் பாரிய நன்மைகளை இழந்துவிடும் செயற்பாடுகளில் எம்நாட்டவர்கள் இறங்கிவிடக் கூடாது என்பது எனது தயவான வேண்டுகோள்.

எஸ்.தவபாலன்

Comments