அபிவிருத்திக்கான வளம் கொண்ட ஒரு நாடு திருவோடு ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது எவ்வாறு ? | தினகரன் வாரமஞ்சரி

அபிவிருத்திக்கான வளம் கொண்ட ஒரு நாடு திருவோடு ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது எவ்வாறு ?

பிரித்தானியர் இலங்கையை விட்டுச் சென்றபோது இலங்கையின் சொத்துக்களைச் சுரண்டிச் சென்றனர் என்ற கருத்து பொதுவாக எல்லோர் மத்தியிலும் இருக்கிறது. காலனித்துவ ஆட்சிமுறை அவ்வாறுதான் அமைந்திருந்தது. ஆயினும் காலனித்துவ நாடுகளின் உள்ளூர் பொருளாதாரங்களில் அடிப்படையான முக்கிய மாற்றங்கள் அக்காலப்பகுதியிலேயே ஏற்பட்டன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் அம்மாற்றங்கள் அபிவிருத்தியை தீர்மானிப்பவையாகவும் அமைந்தன. அவ்வகையில் இலங்கை சுதந்திரம் பெற்றபோது காணப்பட்ட மாற்றங்கள் இலங்கையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல சகல வகையிலும் சாதகமானவையாகவே இருந்தன. அவற்றுள் பலவற்றை கடந்த வாரம் பார்த்துள்ளோம் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாடு தனது அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிக்க நிதிவளம் மிகவும் அவசியம்  

இலங்கையைப் பொறுத்தமட்டில் 1948ல் சுதந்திரம் பெற்றபோது பிரித்தானியர் சுமார் 998 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சொத்துக்களை இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நிதித்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக விட்டுச் சென்றிருந்தனர். எனவே அபிவிருத்திற்கான நிதி என்று இலங்கைக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.  

இலங்கை தொடர்பில் உலகவங்கி மிக நீண்டதோர் அறிக்கையை ஒரு அகராதியின் பருமனில் 1953ல் வெளியிட்டது. அவ்வறிக்கையில் இலங்கை ஏனைய நாடுகளைப் போலன்றி தனது பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதித்தேவையை பூர்த்தி செய்யக் கூடியளவுக்கு நிதிவளம் உள்ள நாடாக உள்ளமை சிறப்பாக கட்டிக்காட்டப்பட்டிருந்தது.  

ஆகவே ஆட்சிமுறை நிர்வாகம் உட்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு, கல்வியறிவு, சுகாதாரம், பொருளாதார மற்றும் சமூக சேவை வசதிகள், நிதிவளம் ஆகிய அபிவிருத்திப் பாதைக்கு அவசியமான பல்வேறு ஆரம்ப அனுகூலங்களை இலங்கை பெற்றிருந்தது. சுதந்திரத்தின் பின்னர் அந்த அனுகூலங்களைப் பயன்படுத்தி முன்னோக்கி செல்லுமென எதிர்பார்க்கப்பட்டது.  

இலங்கை மக்களும் புதியவற்றையும் புதிய மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தைக் கொண்டிருந்தனர். அது மட்டுமன்றி இலங்கை ஒரு மிகச்சிறிய தீவாக இருந்தபோதிலும் உலக நாடுகள் மத்தியில் அது. மிகவும் பிரபலமானதாகவும் நட்பு நாடாகவும் இருந்தது. சுதந்திரம் பெறமுன்னர் இலங்கையின் ஆட்சியில் பங்குபற்றிய உள்ளூர் தலைவர்கள் சர்வதேச ரீதியில் பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தனர். ஐக்கிய நாடுகள் தாபனம், உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டபோது அவற்றின் ஆரம்பகால உறுப்பினராக இலங்கை தன்னை பதிவு செய்து கொள்ளுமளவுக்கு அதன் உலக ஈடுபாடு அமைந்திருந்தது.  

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதன் பின்னர் ஜப்பானின் சரணாகதியுடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்றது.

அம்மாநாட்டின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஜப்பான் யுத்த நட்டஈடாக பெருந்தொகைப் பணத்தை செலுத்த வேண்டுமென யுத்தத்தில் வெற்றி கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் நிர்ப்பந்தம் செய்தன. ஏலவே அடிப்பட்டு அணுங்கிக் கொண்டிருந்த ஜப்பானுக்கு இது மிகக் கடினமாக ஒரு விடயமாக இருந்தது.  

அந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கம் சார்பில் கலந்து கொண்டிருந்த ஜே.ஆர். ஐயவர்த்தன, வெறுப்பினால் வெறுப்பினை சிதைக்க முடியாது அன்பினால் மட்டுமே வெறுப்பினை சிதைக்க முடியமென்ற தம்ம பதத்தின் வரிகளைக் கூறி அடிபட்டு நிற்கும் ஜப்பானுக்கு இப்போது வழங்கவேண்டியது அன்பையும் ஆதரவையுமே தவிர தண்டனையை அல்ல என்றும் ஜப்பான் தன்னை மீளக் கட்டியமைக்க உலக நாடுகள் உதவவேண்டும் என்றும் யுத்த நட்ட ஈடுகளைக் கோருவது நியாயமல்ல என்றும் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.  

இவ்வுரையானது வரலாற்று ரீதியில் முக்கிய ஒன்றாக அமைந்ததுடன் அந்த மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளின் மனமாற்றத்திற்கும் காரணமாகியது. இலங்கையின் புகழ் மேலோங்க இது ஒரு அடிப்படைக்காரணமாகியது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் இதே ஜே.ஆர். ஜயவர்தன இலங்கையின் ஜனாதிபதியாக 1978 பதவியேற்றபோது ஜப்பான் தாராளமாக தனது உதவிக்கரத்தை நீட்டியது. இன்றும் கூட இலங்கைக்கு கிடைக்கும் ஜப்பானிய உதவிகளுக்கு அடிப்படையில் இருப்பது இந்த சம்பவம் என்றால் அதுமிகையல்ல.  

ஆனால் உலகத்திற்கு சாந்தியையும் சமாதானத்தையும் உபதேசித்த இதே ஜே.ஆர். ஜயவர்த்தனதான் உள்ளூரில் தமிழர்களை நோக்கி யுத்தமென்றால் யுத்தம் சமாதானமென்றால் சமாதானம் என்று பேரிகை கொட்டினார். என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  

ஆகவே ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் ஏனைய முன்னாள் காலனித்துவ நாடுகளை விட மிகச்சிறந்த நிலையில் இருந்ததென்றும் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஒரு சிறந்த அந்தஸ்து இருந்தென்பதும் ஆசியாவில் அபிவிருத்திக்கு மிகச் சிறந்த ஒரு முன்னுதாரணமாக அது விளங்குமென எதிர்பார்க்கப்பட்டதும் வெளிப்படையாகத் தெரிகிறது.  

இத்தனை சாத்தியங்கள் இருந்தும் வளங்கள் இருந்தும் சாதாரணமான சூழ்நிலைகள் இருந்தும் இந்தச் சிறிய நாடு அபிவிருத்தியில் 70 வருடங்கள் கடந்த பின்னரும் தட்டுத்தடுமாறி அதே இடத்தில் தேங்கிக்கிடப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.  

இந்தக் கேள்விக்கான விடையானது மிகவும் சிக்கலானதும் நீண்ட ஆய்வு தேவைப்படும் ஒன்றாகவும் உள்ளது ஆயினும் சில காரணங்கள் நமது கவனத்திற்கு உரியன. முதலாவது சுதந்திரம் பெற்றபோது இலங்கை எதிர்நோக்கிய சவால்களைக் குறிப்பிடலாம்.

அவற்றுள் முக்கிய சவால் முனைப்படைந்து சென்ற இன முரண்பாடுகளாகும். சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதில் இலங்கையின் பிரதான இனங்கள் மூன்றும் இணைந்து செயற்பட்டாலும் இனரீதியான பிளவுபாடு 1931 இலிருந்து பல்வேறு மட்டங்களிலும் முளைவிடத்தொடங்கியிருந்தது. சிறுபான்மை இனங்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கியிருந்தன. பின்னர் 1956இன் பின்னர் இது கூர்மையடைந்து முக்கிய பிரச்சினையாக மாறியது.   இரண்டாவது, இலங்கையர்களின் அதீதமான எதிர்பார்க்கைகளும் பிழையான முன்னுரிமைத் தெரிவுகளுமாகும்.

​ இலங்கையின் ஆட்சியாளர்கள் சுதந்திரம் பெற்றபோது மக்கள் அனைவரும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு முன்னரை விட தீவிரமாக உழைக்க வேண்டுமென்ற செய்தியை சொல்லவில்லை. மாறாக இலங்கைத் தீவில் எல்லாம் இருப்பதாகவும் இலங்கைக்கு சுதந்திரம் மட்டுமே என்றும் அது கிடைத்த உடன் நாடு பொன்னும் மணியும் கொட்டிக் கொழிக்கும் ஒன்றாக மாறிவிடும் என்றே கூறிவந்தனர். இந்தியாவைப்போல சுதந்திரம் இரத்தம் சிந்திப் பெற்றதல்ல. தங்கத் தாம்பாளத்தில் வைத்து உள்ளூர் வாசிகளுக்கு வழங்கப்பட்ட ஒன்றாகவே பலரும் அதைப் பார்க்கின்றனர். எனவே மக்கள் ‘கொண்டாடும்’ மனநிலையில் வைக்கப்பட்டிருந்தார்களே அன்றி பொருளாதார வளர்ச்சிக்கு ‘பங்களிக்கும்’ மனநிலையில் அவர்கள் இருக்கவில்லை.  

இலங்கையின் முதலாவது அரசாங்கத்தின் முதற்பாதீட்டில் இலங்கையை ஒரு நலன்புரி அரசாக மாற்றுதே அதன்நோக்கம் என்று குறிப்பிடப்பட்டது ஆகவே வளங்களை பொருளாதார வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதை விடுத்து இருங்கின்ற வளங்களை எவ்வாறு பங்கிட்டு கொடுப்பது என்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.  

அபிவிருத்தி பற்றிய மக்களின் எதிர்பார்க்கைகள் அதீத மட்டத்தில் இருந்தன. அரசாங்க கொள்கைகளோ நலன்புரி அரசொன்றை ஏற்படுத்துவதாக இருந்து பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் வளங்கள் வீணடிக்கப்பட்டன. இதனால் பொருளாதாரத்தில் வெளியீடு, வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்குப் பதில் அரசாங்கத்தில் உதவியிலும் அனுசரணையிலும் தங்கிவாழும் சமூகமொன்று பரந்த அடிப்படையில் உருவாதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக அபிவிருத்திக்கு அவசியமான நிதித்தேவைகளில் பிரச்சினை இருக்காது என்ற நிலை வெகு துரிதமாக மாறி 1956ல் சர்வதேச நாணய நிதியிடம் திருவோடு ஏற்றும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.   

கலாநிதி எம். கணேசமூர்த்தி, 
பொருளியல்துறை, 
கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments