கரையோர பிரதேசங்களையும் ஊவாவையும் இணைக்கும் பாலமாக விளங்கிய முஸ்லிம் வர்த்தக சமூகம் | தினகரன் வாரமஞ்சரி

கரையோர பிரதேசங்களையும் ஊவாவையும் இணைக்கும் பாலமாக விளங்கிய முஸ்லிம் வர்த்தக சமூகம்

ஆங்கிலேயர்களின் ஆட்சி கண்டியில் ஆரம்பமாகியதும் முதலமைச்சர் பதவியை ஏற்குமாறு எஹலபொலை கேட்டுக் கொள்ளப்பட்டார். அதற்கு எஹலபொல மறுப்பு தெரிவித்ததையடுத்து மறுபேச்சின்றி அப்பதவியை மொல்லிகொடைக்கு வழங்கியது புதிய அரசு. பதவிச் சுகம் இல்லாமல் எஹலபொலையினால் இருக்க முடியாது என்பதால் சதித்திட்டங்கள் தீட்டுவதில் ஈடுபடுவான் என்பதை உணர்ந்த முதலமைச்சர் மொல்லிகொடை, ஆளுநர் பிரவுன்றிக்கிடம் எஹலபொல பற்றிய விடயங்களை அறிவித்திருந்தான்.  

ஓர் அரசனுக்குரிய பாவனையை எஹலபொல மேற்கொண்டுவருவதாகவும், கண்டியை சிங்கள பௌத்த மதத்தலைவனாகிய மன்னனொருவனே ஆளவேண்டுமெனக் கோரிவரும் அவன் அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் எஹலபொல மீதான புகார்களை மொல்லிகொடை சுமத்திவந்தான். எதிர்பார்த்திருந்தவை கிட்டாமை காரணமாக போலியாக அரச வேடம் தரிப்பதாகவும் அதனால் விளையப்போவது எதுவுமில்லையெனவும் முதலமைச்சர் மொல்லிகொடையின் புகார்களை மழுங்கடித்தான் ஆளுநர் பிரவுன்றிக். உதட்டளவில் இவ்வாறு பிரவுன்றிக் தெரிவித்திருந்தாலும் அவனது இதயம் எச்சரிக்கை அடைந்தது. ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எஹலபொலையுடன் மக்களும் கூட்டு சேரலாம் எனவும், தலைக்கு மேல் வெள்ளம் வருமுன் தடுத்துக் கொள்வதே சிறந்ததென வியூகம் அமைக்க ஆரம்பித்தான் ஆளுநர்.  

ஆளுநரின் அச்சம் பற்றிய தகவல்களை டொயிலி அறிந்து கொண்டபோதும் அதனை ஒரு பொருட்டாக கருதியதாகத் தெரியவில்லை. எனவே எந்நேரத்திலும் எஹலபொலையை கைது செய்வதற்கும் அவனை கண்டியில் தரித்திருக்க விடாமல் கொழும்புக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் டொயிலிக்கும், இராணுவ கட்டளைத் தளபதிக்கும் முன்கூட்டியே தெரிவித்திருந்தான் ஆளுநர். நாளடைவில் எஹலபொல பற்றி மொல்லி கொடையின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது முதன்மைப் பணியென முடிவு செய்தான் பிரவுன்றிக். 

தனக்கு அரச மரியாதையுடன் கூடிய உயரிய பதவி வழங்கப்படாவிட்டால் தனது சொந்த பிரதேசத்தில் வசித்துக் கொண்டே முழு நாட்டையும் உலுக்கக் கூடியதான மாபெரும் கிளிர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக எஹலபொல கூறியிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருவதாகவும் மேலும் மொல்லிகொடை ஆளுநருக்கு அறிவித்தான். இதனால் இவ்விவகாரம் குறித்து பரிசீலனை மேற்கொள்வதென முடிவெடுத்தான் பிரவுன்றிக். 

நாயக்கர்களாகிய அரசர்களுக்கு அளிக்கப்பட்ட கௌரவமும், மரியாதையும் தனக்கும் கிட்ட வேண்டுமென தாம் எதிர்பார்த்ததாகவும், அத்தகைய மதிப்பும் மரியாதையும் தமக்குத் கிட்டுவதற்கு ஒத்தாசை புரிபவர்கள் உள்ளனர் எனவும் எஹலபொல பகிரங்கமாக ஒப்புக் கொண்டான். 

எஹலபொலையின் இந்த ஒப்புதல் பிரித்தானிய அரசுக்கு இழுக்கை ஏற்படுத்துமெனவும் அவ்வெண்ணத்தைக் கைவிடுமாறும் ஆளுநர் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே தமது எண்ணத்தைக் கலைத்துவிட தீர்மானிப்பதாக எஹலபொல அறிவித்தான். எனினும் ஆங்கிலேய ஆளுநரின் பணிப்புரையின் பிரகாரம் தேடப்பட்டுவந்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனால் மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷங்களைக் கைப்பற்றுவதற்கு எஹலபொல மேற்கொண்டிருந்த முயற்சிகள் பற்றி அறியக்கிட்டியமையினால் ஆளுநர் பிரவுன்றிக் எஹலபொல மீது மீண்டும் பலத்த சந்தேகம் கொண்டான். எனவே எஹலபொலையின் முயற்சிகள் குறித்து பரவலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தாம் அவ்வாறு பொக்கிஷங்களை அடைய முயற்சிக்கவில்லையென அறிவித்தான் எஹலபொல.  

அரச சொத்துக்களாக விளங்கிய பெருந்தொகையான பெறுமதிமிக்க பொருட்கள் ஆங்கிலேய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. கண்டியின் அரசர்கள் பயன்படுத்திய பழமைவாய்ந்த சிம்மாசனம், பாதாசனம் முதலியனவும் மேலும் பல முக்கிய பொருட்களும் இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

திரிசங்கு நிலைக்கு எஹலபொல தள்ளப்படுவதற்கு அவன் மேற்கொண்ட நடவடிக்கைகள் மாத்திரம் காரணமன்று. கண்டியின் பிரபுக்களின் பூரண ஒத்துழைப்பு எஹலபொலைக்குக் கிட்டாமையும் ஒரு காரணமாகும். அவன் மீது தனிப்பட்ட குரோதமும், அழுக்காறும் இருந்தபோதும் அவனது சிங்கள தேசத்தைச் சிங்களவர்களே ஆளவேண்டும். அதுவும் பௌத்த சமயத்தவனாக இருக்க வேண்டுமென்னும் கொள்கை மீது அவர்களுக்கு பிடிப்பு இருக்கவே செய்தது. போர்க்குற்றவாளிகளாக கருதப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த பல தமிழர்கள் மீண்டும் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தனர். இது 1816ஜூன் மாதத்தில் நிகழ்ந்தது. மேலும், மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த போராயுதங்கள் அனைத்தும் அரசிடம் முழுமையாக திருப்பி கையளிக்கப்படாதிருந்ததாக ஆயுத களஞ்சிய அறிக்கைகள் தெரிவித்தன. அத்தோடு 1816வருட இறுதிக்குள் ஒரு பெரும் கிளர்ச்சிக்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகின. 

மலைநாட்டு பிரபுக்கள் சிலர் பௌத்த பிக்குமார்களுடன் இணைந்து அயல்நாடொன்றிலிருந்து இளவரசன் ஒருவனை அழைத்துவந்து முடிசூட்டுவதற்கு ஏற்பாடுகள் நிகழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக எக்னெலிகொடையின் ஆதரவும் கோரப்பட்டது. முழுமனதுடன் இத்திட்டத்தை ஆதரிப்பதாக உறுதியளித்த எக்னெலிகொடை உடனடியாக ஆங்கிலேய அதிகாரிகளுக்கு இதுபற்றி அறிவித்தான். இதன்காரணமாக கண்டியில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காப்பாற்றப்பட்டது. ​ 

தோல்வியுற்ற மேற்படி சதித்திட்டத்தை தீட்டுவதில் பௌத்த பிக்குமார்களே பெருமளவில் ஈடுபட்டிருந்தனர். காதோடு காது வைத்தாற் போன்று அவர்களால் இத்திட்டம் தயாராகியது. தங்கு தடையின்றி எவ்விடத்திற்கும், எச்சந்தர்ப்பத்தில் சென்றுவரும் சுதந்திரம், பிக்குமாருக்கு இருந்தது. பிரபுக்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரையிலும் பிக்குமார்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிலவியது. அவர்களது உரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பது பாவமான விடயமாக மக்கள் கருதினர். கற்றவர்களாகவும், விடயங்களை விபரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாகவும் அவர்கள் விளங்கியதால் ஆளுநர் அவர்கள் பற்றி கரிசனை கொண்டிருந்தான்.  

1816டிசம்பர் மாதத்திலும் 1817ஜனவரி மாதத்திலும் புதிய அரசை கவலைக் கொள்ளச் செய்யும் நிகழ்வுகள் இடம் பெறத் தொடங்கின. ஆங்கிலேயர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பிக்குமார்களும், பிரபுக்களும் மீண்டும் பாரிய அளவிலான கிளர்ச்சியொன்றுக்கு தயாராவதாக செய்திகள் வந்தன. இது பற்றி மத்திய மலைநாடுபற்றிய ஆங்கிலேய அரசின் செயலாளர் சதர்லண்ட்டுக்கு பல தடவைகள் டொய்லி தகவல்களை அனுப்பிவைத்தான். பெப்ரவரி மாதம் 4ம் திகதி டொய்லி மரண மடைந்தான். அதன்பின்னர் அவனது கவலைகளுக்குக் காரணமாக விளங்கிய விடயங்கள்பற்றி ஆளுநர் பிரவுன்றிக் உதாசீனமாக செயற்படலானான். எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாட்டின் உள்ளக பிரதானிகளுக்கு அறிவுறுத்தல்களை விடுத்து அவர்களைத் தயார்படுத்தினான்.  

சரியான தகவல்கள் அரசுக்குக் கிடைத்துவந்தன. அவை கிளர்ச்சி, புரட்சி, சதி முதலிய எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டிராதவையாக அமைந்தன. பல்வேறு அபிவிருத்திப் பணிகள் கிரமமாக நிறைவேறின. இராணுவத்தினர் சுகதேகிகளாக வாழ்ந்தனர். பொதுமக்கள் தமது அறுவடை உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக விநியோகிப்பதில் காட்டிய உற்சாகம் அவர்கள் ஆட்சி பற்றிய திருப்திகரமான மனோநிலையில் இருப்பதை வெளிப்படுத்தியது. அதன் காரணமாக இராணுவத்தின் தேவைக்காக பொதுமக்களின் கால்நடைகளை பலாத்காரமாக சுவீகரித்துக் கொண்டிருந்த நடைமுறை தளர்க்கப்பட்டது. அதற்கான கட்டளைகள் ஆளுநர் பிரவுன்றிக்கிடருந்து வெளிவந்தது. மொத்தத்தில் போலியான பாதுகாப்புக்குள் பிரித்தானியர்கள் அமைதியாக வாழ்ந்தனர். 

‘முழுமையான நிம்மதியுடன் கூடிய நம்பிக்கையான சூழல் காணப்படுகின்றது’ என 1817ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆளுநர் பிரவுன்றிக் அறிக்கை ஒன்றின் ஊடாக பிரித்தானிய அரசுக்கு அறிவித்தான். எனினும் அதன் பின்னர் ஆறுமாத காலத்தில் மத்திய மலைநாடு கிளர்ந்து எழுந்தது.  

நுவர கலாவிய பிரதேசம் தவிர்ந்த கண்டி இராச்சியத்தினுள் மிக பின்தங்கிய, அபிவிருத்தியடையாத வெளியுலகு அறியாத பிரதேசமாக ஊவா மற்றும் வெல்லஸ்ஸ பிரதேசங்கள் காணப்பட்டன. மிகக் குறைந்த குடியிருப்புகளே காணப்பட்ட இப்பகுதி மக்கள் பிந்தென்னையில் வாழ்ந்த ஆதிவாசி பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தைவிட உயர்வான வாழ்க்கையை மேற்கொண்டிருந்ததாக கூறமுடியாது.  

சிறிதளவான காணிகளே பயிர்செய்கைக்கு உட்பட்டிருந்தன. மக்கள் வறுமைக் கோட்டின் கீழேயே வாழ்ந்து வந்தனர். ஊவா மற்றும் வெல்லஸ்ஸ பிரதேசங்கள் சுதேச மன்னர்களின் ஆட்சிக் காலங்களிலும் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தபடியால் மிகவும் பின் தங்கிய பிராந்தியங்களாக அவை விளங்கின. 

அரசுக்கும் இப்பிரதேசத்தில் வாழ்ந்த வேடர்களுக்கும் இடையில் காணப்பட்ட தொடர்பு என்பது, தேன் மற்றும் தேன் மெழுகு முதலியவற்றைக் கொண்டுவந்து கப்பம் செலுத்துவதாகவே இருந்தது. ஆண்டுக்கொருதடவை தேன் பருவகாலத்தில் மாத்திரமே அதுவும் நிகழ்ந்து வந்தது. இருப்பினும் இப்பிராந்தியம் பழைய ஆட்சியாளர்களுக்கு சார்புடைய போக்கினையே பின்பற்றி வந்தது. 

1815ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின் போது இப்பகுதி மக்கள் அனைவருமாக அல்லது ஒரு சாராரேனும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாக இருக்கவில்லை. ஊவா பிராந்தியத்தின் அனைத்து நிலப்பரப்பும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டிருக்கவில்லை. மத்திய மலைநாட்டு இராசதானியை ஆங்கிலேயர் கைப்பற்றி சில மாதங்கள் கழிந்தபின்னரும் மக்கள் பீதியுடன் காணப்பட்டனர். அச்சத்தினால் காடுகளுக்குள் தஞ்சம் புகுந்திருந்த ஊவா மக்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் வருவதில் தயக்கம் காட்டினர். இராணுவத்தினர் கொள்ளையிடும் சம்பவங்கள் பல நிகழ்ந்தன.                (தொடரும்)

கிராமத்தலைவர்களிடமிருந்த அளவுக்கு மீறிய அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டமையால் அவர்களும் அரசின் மீது வெறுப்புடன் இருந்தனர். தமது வாழ்க்கையில் எவ்வித மாற்றமும் காண முடியாதவர்களாக ஊவா மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழக்கலாயினர். இதன்காரணமாக ஊவா பிராந்தியத்தின் தலைமைபீடமாக பதுளையை தெரிவு செய்து அங்கு ஆளுநரின் உப அலுவலகமொன்றை நிறுவி மக்களின் நல்லபிப்பிராயத்தைப் பெரும் வண்ணம் அங்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார் ஆளுநர். 

இவ்வாறு கண்டியிலும், பதுளையிலும் பிரபுக்களும், பொதுமக்களும், பிக்குமார்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோது பிரித்தானியர்களுக்கு முழு ஆதரவளிப்பவர்களாக முஸ்லிம்கள் காணப்பட்டனர்.  

இராணுவ தளபதி மேஜர் ஹாடி இது தொடர்பாக இவ்வாறு கூறியுள்ளான்.  

‘பெருந்தொகையினராக வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் அனைவரும் எமக்கு சார்பாக இருப்பதனால் ஊவா பிராந்தியத்திற்கு வேறு படையணியொன்று தேவைப்படாது’  

ஊவா மற்றும் வெல்லஸ்ஸ பிரதேங்களில் காணப்பட்ட முஸ்லிம் குடியேற்றப் பகுதிகள், நில உரிமையாளர்களினாலும், வியாபாரிகளினாலும் நிரம்பிய வசதியானவர்களுக்கான பகுதிகளாக காணப்பட்டன.  

உப்பு மற்றும் புடவை வியாபாரம் இவர்களின் கைகளில் தங்கியிருந்தமையினால் கரையோர பிரதேசங்களையும், ஊவா, வெல்லஸ்ஸ பிரதேசங்களையும் இணைக்கும் சமூகமாக இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தனர். இப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கால்நடைகளில் பெருந்தொகையானவை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவையாகவும் காணப்பட்டன. கரையோர பகுதிகளிலிருந்து சரக்குகளை கொண்டு செல்வதற்கும் கொண்டு வருவதற்கும் தேவையான வண்டிகளையும் எருதுகளையும் இவர்கள் வைத்திருந்தனர். இராணுவ மக்கள் தொடர்பாடல் பிரிவுக்கு வண்டில்களை வழங்குவதையும் முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்தனர். இவர்களை முன்னிலைப்படுத்தியே அடுத்து வந்த பெரும் கலகம் ஆரம்பமாகியது. (தொடரும்)  

சி.கே. முருகேசு

(தகவல் – கலாநிதி கொல்வின்
ஆர். டி சில்வாயட்டத்தே (பிரித்தானியரின்
கீழ் இலங்கை) 

Comments