யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி? | தினகரன் வாரமஞ்சரி

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி?

யாழ். போதனா வைத்தியசாலை

இலங்கை சுகாதார சேவைகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கை மருத்துவ சேவை ஆளணியினரது முதல் நியமனத்திலிருந்து சிரேஸ்ட வைத்திய நிர்வாக தர அதிகாரிகள் வரை மத்திய சுகாதார அமைச்சே நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. 1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42ம் இலக்கத் திருத்தம் செய்யப்பட மாகாண சபைகள் சட்டத்தின் பின்னரும்கூட இன்றுவரை மத்திய சுகாதார அமைச்சே இந்த நியமனங்களை நாட்டின் சகல பாகங்களுக்கும் மேற்கொண்டு வருகிறது. 13 ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு காணி பொலீஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எழுத்தில் உள்ளபோதும் இதுவரை அது நடைமுறையில் இல்லை. இந்த நிலையில் இந்தப் பணிப்பாளர் நியமனத்தில் மாத்திரம் ஏன் அதிகாரப் போர்க்கொடி?

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக ஏனிந்த பிரச்சினை எழுந்துள்ளது?

இந்த நியமனத்தில் மத்திய அரசின் அதாவது ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநருக்குதான் அதிகாரம் உண்டு என்பதன் மூலம் மத்திய அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற நிலைப்பாடு ஏன்?

உண்மையில் அதிகாரம்தான் பிரச்சினையா? அல்லது சத்தியமூர்த்திதான் பிரச்சினையா? யாழ்ப்பாணத்தில் உள்ள நயினாதீவு ஆதார வைத்தியசாலைக்கு கூட மத்திய அரசினால் பணியாற்றும் இடம் குறிக்கப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி வடக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்குப் பணிப்பாளர்களை கூட மத்திய சுகாதார அமைச்சே நியமிக்கிறது. இப்பத்தியானது மத்திய அரசு இவ்வாறு நியமிப்பதனை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நியாயப்படுத்தவோ இல்லை. மாறாக மேற்படி இந்த நியமனங்களின் போதெல்லாம் எழுப்பப்படாத அதிகாரப் பிரச்சினை வைத்தியர் சத்தியமூர்த்தியின் தற்காலிக நியமன விடயத்தில் மட்டும் ஏன் பூதாகரமாக்கப்பட்டுள்ளது? அதன் உள்நோக்கம் என்ன என்பதை ஆழமாக ஆராயும் நோக்குடனேயே எழுதப்படுகிறது.

வடக்கில் தற்போது தலை (போகும்)யாய பிரச்சினையாக மத்திய சுகாதார அமைச்சு மற்றும் மாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றிற்கிடையே நடைபெறும் பனிப்போர் மாறியிருக்கிறது. 

பிறந்து மூன்றே நாளில் உடலில் நீர்ச்சத்து இல்லாது இறந்த குழந்தையினையும் இதய சத்திர சிகிச்சைக்கு ஆளாகுபவர்கள் அடுத்தடுத்து இறந்துபோகும் அவலங்களையும் மேவி மறைத்தபடி இந்தப் பனிப்போர் நிடக்கிறது. 

இந்தச் சிக்கல்களுக்கு ஆதிமூலம் எது எனப் பார்த்தால் அதிர்ச்சிதான் எஞ்சுகிறது. இங்கே எவரும் சனங்களுக்காகவோ அல்லது சுகாதார சேவையினை விருத்தி செய்வதற்காகவோ அடிபடவில்லை. மாறாக தத்தமது சுயநலங்களுக்காக காய் நகர்த்தி தேரை இழுத்துத் நடுத்தெருவில் விட்டு விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். 

தமது உறுப்பினர்கள் இருவரை அவர்களது வருடாந்த இடமாற்றக் கட்டளையின் பிரகாரம் விடுவித்த யாழ்ப்பாணப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ‘பாடம் படிப்பிக்க’ என்றே ‘பஸ் மற்றும் ரயில்’ பிடித்து கொழும்பு சென்று சுகாதார அமைச்சரது வீட்டில் இரவு விருந்துண்ட ஒரு வடமாகாண வைத்தியர் குழுவே இந்தப் பனிப்போருக்கான பிள்ளையார் சுழியினை எழுதி வைத்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள பிரதான பாத்திரங்களது கடந்தகால வரலாறுகளை ஆராய்ந்து பார்ப்பதே இந்தப் பொம்மலாட்டத்தின் சூத்திரங்களை விளங்கிக்கொள்ள உதவும். 

பணியாளர்களது எதிர்ப்புகள் காரணமாகத் தான் வகிக்கும் நிர்வாகப் பதவிகளிலிருந்து தொடர்ச்சியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிர்வாக சேவையின் ஒரு பிரதிப் பணிப்பாளர் தர அதிகாரியே தனது நலன்களுக்காக இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தியிருகின்றார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஆதரவாக கடந்த காலம் தொட்டு தற்போது வரை மாகாணத்தில் மத்திய அரசின் ஆள்பதியாக இருப்பவர்களுக்கு அருகில் உள்ள மூத்த அதிகாரியும் உடந்தை என்றே உள்வீட்டுத் தகவல்கள் சொல்கின்றன. 

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி 2000 ஆம் ஆண்டு மருத்துவ துறைக்குள் வந்து  இன்றுவரை பல்வேறு சவால்களையும் கடந்து பணியாற்றி வருகின்றார். 

இவர் 2002ம் ஆண்டிலிருந்து 2009 முள்ளிவாய்க்காலின் இறுதி நாளான மே மாதம் 18ம் திகதி வரை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்க மருத்துவ நிர்வாகியாவார். இவ்வேளையிலே மருத்துவ நிர்வாகசேவையின் முதுமாணிப் பரீட்சையிலும் இவர் சித்திபெற்றுச் சாதனைபடைத்தார். 

2010 ஆம் ஆணடு ஆவணி மாதம் ஒரு வருடத்திற்கு மேலான சிறைவாசத்தினைத் தொடரந்து விடுதலையான வைத்தியர் சத்தியமூர்த்தி மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவியுடன் இதே ஆண்டில் செட்டிகுளத்தில் தங்கியிருந்த வன்னி மக்களது சுகாதார ஒருங்கிணைப்பு பொறுப்பதிகாரியாகவும் மாகாண ஆளுனரால் இவர் நியமிக்கப்பட்டார். இவற்றுடன் தனது மேற்படிப்பினை விடாது தொடர்ந்த இவர் மருத்துவ நிர்வாகசேவை கலாநிதிப் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 

2011ம் ஆண்டில் வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இவர் இப் பதவியுடன் மாவட்டத்தின் டெங்கு ஒழிப்பு செயலணியின் தலைவராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். வவுனியாவில் கடுமையாகப் பரவிய டெங்கு நோய் இவரது தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன் இவர் மேற்கொண்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் நடைமுறைக்கு வந்தன. 

2015ம் ஆண்டில் சிறிதுகாலம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பணியாற்றிய இவர் 2015ம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டிலிருந்து அதே வைத்தியசாலையில் நிரந்தரப் பணிப்பாளராக இவர் பதவி உயர்வுபெற்றார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக இலவச தனியார் கல்வி நிலையங்கள் உட்படப் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் இவர் பல்வேறு மக்கள் சேவை விருதுகளைத் தமதாக்கியுள்ளார். 

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் பதில் செயலாளார் 17.04.2019 அன்று வைத்தியர் சத்தியமூர்த்திக்கு யாழப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பதவியை தற்காலிக அடிப்படையில் உடனடியாகப் பொறுப்பேற்குமாறு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்தார். இக்கடிதத்தின் பிரதிகள் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆகியோருக்குப் பிரதியிடப்பட்டிருந்தன. 

இதுவே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. இந்தப் பதவியை தற்காலிகமாகக் கவனித்து வந்த பிரதிப் பணிப்பாளர் தர அதிகாரி ஒருவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என அரசியல்வாதிகள், ஆளுநர், அதிகாரிகள் என அனைவரிடத்திலும் முறையிடத் தொடங்கியதன் விளைவே இன்று அதிகாரப் பிரச்சினையாக உருமாறி சந்தி சிரிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. இந்த இழுபறிகளின் காரணமாக ‘ஆளுனரிடம் பணிப்பாளர் நியமனத்திற்கு ஒப்புதல் பெறாததால் அதனை ஏற்கமுடியவில்லை. எனவே இந்த நியமனத்தினை விலக்கி நிரந்தரப் பணிப்பாளரை நியமியுங்கள்’ என மத்திய சுகாதார அமைச்சினைக் கோரியும், ‘ஆளுனர் இந்த நியமனத்தினை ஏற்கவில்லை. உடனடியாக வைத்தியர் சத்தியமூர்த்தியை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து விடுவியுங்கள்’ என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவிட்டும் ஆளுனர் மாளிகையிலிருந்து அவரச கடிதங்கள் பறந்தன. 

03.06.2019 அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுனர் மாளிகையின் மேற்படி கடிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கோரி ஒரு கடிதத்தினை அனுப்பிவைத்தார். 

இக் கடிதத்திற்கு பதிலாக 04.06.2019ம் திகதியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனையில் ‘13வது திருத்தச்சட்டம் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் ஆகியனவற்றினை மேற்கோள் காட்டி மத்திய சுகாதார அமைச்சிற்கே வைத்தியர்களை நியமிக்கும் தத்துவம் உண்டெனத்’ தெரிவித்திருந்தார். 

இக்கட்டுரை எழுதப்படும் தினத்தில் உள்ள நிலவரங்களின்படி ஆளுனர் அலுவலகம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கிய பதிலினை ஏற்காது தாம் அனுப்பிய கடிதங்களுக்கான பதிலை மத்திய சுகாதார அமைச்சு வழங்கவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதாகத் தகவல். 

இந்த அமளிக்குள் வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு ஊடக அறிக்கையினை அனுப்பிவைத்தார். 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபைகள் சட்டம் குறித்த வியாக்கியானங்களுடன் குறித்த ஊடக அறிக்கை காணப்பட்டது. இதில் 13 ஆவது அரசிலமைப்பு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று அவர் எடுத்துக்காட்டியிருந்தார். சட்டமா? வர்த்தமானி அறிவித்தலா? என்ற விவாதம் எழும் போது சட்டமே மேலோங்கி நிற்கும் எனவும் குறிப்பிட்ட அவர் சில உதாரணங்களையும் காட்டியிருந்தார். ஆனால் மருத்துவத்துறை அதிகாரிகளோ ‘ஆளுநர் மாகாணத்திற்கு உரியவர் அல்லர். அவர் ஜனாதிபதியின் (மத்தியின்) பிரதிநிதி. எனவே மத்திய சுகாதார அமைச்சிற்கும் மாகாண ஆளுனருக்கும் இடையே எவ்வித வித்தியாசமும் இல்லை. எனவே மாகாண ஆளுனருக்கு நியமன அதிகாரம் உள்ளது என்பது மறைமுகாக மத்திக்கு உரிய அதிகாரமே.’ என்ற சாரப்படக் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

அரசியல் அமைப்பின் 13ம் திருத்தம், மாகாணசபைகள் சட்டமூலம் மற்றும் மாகாண சுகாதார நியதிச் சட்டம் 

1987ம் ஆண்டின் 42ம் இலக்க மாகாணசபைகள் சட்டமூலத்தின் பிரகாரம் மாகாணப் பொதுச் சேவைகளின் கீழ்வரும் அலுவர்களது நியமனம், இடமாற்றம், ஒழுக்காற்று விசாரணை மற்றும் பதவி நீக்கம் ஆகியவற்றிற்கான அதிகாரம் மாகாண ஆளுனருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தில் அனைத்து இலங்கைச் சேவையின் கீழ்வரும் அலுவலர்களை நியமிப்பதற்கான அதிகாரம் ஆளுனருக்கு அளிக்கப்படவில்லை. 

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் இலக்கம் 01/2015 பகுதி I, 2 (2) இன் பிரகாரம் “திணைக்களத்தினைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்றுக்கட்டுப்பாடு என்பவற்றின் அதிகாரமானது (அனைத்து இலங்கை சேவையினைச் சார்ந்த உத்தியோகத்தர்களைத் தவிர) 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க திருத்தம் செய்யப்பட்ட மாகாணசபைகள் சட்டத்தின் பகுதி IV இற்கிணங்க ஆளுநருக்கு உரித்தானதாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வடக்கு மாகாண நியதிச் சட்டமும் அனைத்து இலங்கைச் சேவையினைச் சார்ந்த உத்தியோகத்தர்களை நியமிக்கும் அதிகாரத்தினை வட மாகாண ஆளுனருக்கு வழங்கவில்லை என்பது தெளிவாகிறது. 

எனவே வைத்தியர்கள் அனைத்து இலங்கை சேவையினைச் சேவையினைச் சேர்ந்தவர்களாயின் அவர்களது நியமனமானது மாகாண ஆளுனரால் மேற்கொள்ளப்பட முடியாது என்பது தெளிவாகிறது. 

25.11.2011 பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மற்றும் 11.10.2014 அன்று பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சேவையினருக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை மருத்துவசேவை ஆளணியினர் அனைத்து இலங்கை சேவையினைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாகவே வரைவிலக்கணப்படுத்தப்படுகிறார்கள். 

எனவே, ஒட்டுமொத்தத்தில் ஒரு சில வைத்தியர்களது வருடாந்த இடமாற்றத்தில் தொடங்கிய முரண்பாடு மத்திய சுகாதார அமைச்சு மாகாண ஆளுனரது ஒப்புதலைக் கோராது செய்த நியமனத்தால் தீவிரமடைந்து பல அதிகாரிகளது ஒட்டுமொத்த பலவீனங்கள் காரணமாக இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளமையானது தமிழினம் தற்போது அடைந்துள்ள மோசமான நிலைக்க நல்ல உதாரணமாகும். 

எனவே, இங்கு உண்மையில் நடப்பது அதிகார பிரச்சினையா? அல்லது தனிநபர் பிரச்சினையா? என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. ஆளுமைகளை பயன்படுத்திக்கொள்ள தெரியாத அல்லது ஆளுமைகளை தட்டிக்கழிக்கின்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் காணப்படுகிறதா என்பதுதான் முக்கிய கேள்வி! 

மு. தமிழ்ச்செல்வன்

Comments