ஜனாதிபதித் தேர்தலை டிச.7க்கு முன்னதாக நடத்த முன்னேற்பாடு | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதித் தேர்தலை டிச.7க்கு முன்னதாக நடத்த முன்னேற்பாடு

கட்டுப்பணத்தை அதிகரிக்க யோசனை

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்னர் அதாவது செப்டம்பர் மாதமளவில் வேட்பு மனுக்கள் கோருவதற்கு எண்ணி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற கட்சிகளின் செயலாளர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தியதாகவும் கூறினார். உரிய காலத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தாலும் சட்டச் சிக்கல் காரணமாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும் சட்டச்சிக்கல் நிவர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மாகாணசபைத் தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியுமெனவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது. அதற்கேற்றவிதத்தில் செப்டம்பர் மாதத்தில் வேட்பு மனு கோரதிட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களை தவிர்த்து சுயாதீன வேட்பாளர்களாக போட்டியிடக் கூடிய வேட்பு மனுக் கட்டுப்பணத்தை அதிகரிக்க வேண்டுமென்ற யோசனையொன்றையும் தான் முன்வைக்க விருப்பதாக அவர் தெரிவித்தார். தற்போது சுயாதீன வேட்பாளரிடமிருந்து கட்டுப்பணமாக 50,000ரூபா பெறப்படுகின்றது.

இன்றைய நிலையில் இத்தொகை எந்த விதத்திலும் போதுமானதாகத் தெரியவில்லை. சுயாதீன வேட்பாளர்கள் அதிகரிக்கும்போது தேர்தல் செயலகப் பணிகளும் அதிகரிக்கும். இதனடிப்படையில் கணிசமான தொகையை அதிகரிப்பதற்கான யோசனையை முன்வைக்க எண்ணியுள்ளேன். எனவும் ஆணைக்குழுத்தலைவர் தெரிவித்தார்.

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாது போனால் பதவி விலகுவதாக கூறியிருந்தீர்களே என்று அவரிடம் கேட்டபோது. பதிலளித்த மஹிந்த தேசப்பிரிய நிச்சயமாக தான் தந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றேன். மாகாண சபைத் தேர்தல்களை உரியகாலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்படுமானால் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். அதன் பின்னர் ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் எனக் கூறியனார்.

ஜனாதிபதி தேர்தல் நடந்த பின்னர். அடுத்த வருடம் 2020ஆகஸ்ட் மாதமாகும் போது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. அடுத்த ஜூன் மாதத்துக்குள் பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் இடைப்பட்டகாலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியுமா என்பது குறித்து தீர்மானிக்க முடியாதுள்ளது.

புதிய முறையில் நடத்துவதாக இருந்தால் எல்லை நிர்ணயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பழையமுறையில் நடத்துவதானால் பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும்.

இது விடயத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

(எம்.ஏ.எம். நிலாம்)

Comments