பாமரத் தனங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பாமரத் தனங்கள்

இனிதான தென்றல் காற்றின் இதமான சுகந்தம் சுவாசத்துடன் இனிதே சங்கமித்தது. பௌர்ணமி நிலவின் சுகத்தை அனுபவிப்பதற்காக அன்று கடற்கரையில் வீற்றிருந்தாள் கல்பனா. உலாவரும் நிலாவைக் காண்பதற்காக தோழிகளுடன் அவள் சென்றிருந்த பயணம் அது. கோலமதிக் குமரி நீலக்கடலினிடே பெரும் நித்திலமாய் எழுந்து நின்று குளிர்ந்த ஒளிபரப்பி ஞாலத்தை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கோல எழிலினிலே காலம் அறியாமல் மயங்கி களிப்பற்றிருந்தனர் பலர். தேன் சிந்தும் மலரெல்லாம் சுகந்தம் தென்றலில் தூதனுப்பியது. கருங்குயில் ஒன்று எங்கோ சோக தீரும் தனித்திசைத்தது.

அன்றைய நிலவின் அழகை அனுபவிக்க கூட்டம் கூட்டமாக சனத்திரன்கள் கடற்கரையெங்கும் நிரம்பி வழிந்தது. “ஐஸ் கிறீம்” விற்பவர்கள், கடலை விற்பவர்கள், கச்சான் விற்பவர்கள், கிழங்கு விற்பவர்கள் என்று வியாபாரிகள் பலர் சனத்திரளை சுற்றிசுற்றி வலம் வந்தனர். ஒரு சின்னஞ் சிறுவன் பென்னம் பெரிய “பேக்” யை சுமந்து கொண்டு கச்சான் விற்றுக் கொண்டிருந்தது கல்பனாவின் கண்களில்பட்டது.

அந்தச் சிறுவனுக்காய் அவள் மனம் இரங்கியது. இந்தச் சின்னஞ்சிறு வயதில் கச்சான் விற்குமளவிற்கு அவனுக்கு என்ன குடும்ப கஷ்டமோ? படிக்கின்றானோ அல்லது படிப்பை இடைநிறுத்தி விட்டானோ அதுவும் தெரியவில்லை.  

அவள் யோசித்துக் கொண்டிருக்கவும் சிறுவன் அவளை நோக்கி வரவும் சரியாக இருந்தது.  

“கச்சான் வாங்கிக் கோங்க. அக்கா” அவன் கொஞ்சும் குரலில் அவளிடம் கேட்டான்.  

“தம்பி, உம்மட பேரென்ன? எத்தனை வயசு உமக்கு? கல்பனா அவளிடம் கேட்டாள்.  

“என்னோட பேர் அசோக், ஏழு வயசாகுது அக்கா” அவன் பதிலளித்தான்.  

“படிக்கறீங்களோ? கல்பனா கேட்டாள்.  

“ராமகிருஷ்ண மிஷன்ல, தரம் 2படிக்கேன் அக்கா” அசோக் பதிலளித்தான்.  

“உம்மட அப்பா அம்மாவெல்லாம் எங்க என்ன செய்கிறார்கள்.?” கல்பனா கரிசனையுடன் கேட்டாள்.  

“அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அவர் தொழில் என்று எங்கும் போவதில்லை. அம்மா இடியப்பம் சுட்டு. விக்கிறது. நான் கச்சான் விக்கிற நான்.  

என்னோட அக்கா அம்மா சுடும் முறுக்கை வீடு வீடாக சென்று விற்றிவிடுவாறவ”  

அசோக்கின் கதையை கேட்ட கல்பனாவிற்கு அவன் ஒரு பரிதாபத்திற்குரிய பாத்திரமாகவே தோன்றினான்.  

அவனிடமிருந்த கச்சான் முழுவதையும் அவள் வாங்கி கொண்டாள். அவன் கண்களில் நீர் ததும்ப நன்றியுணர்வுடன் அவளை நோக்கினான்.  

“நன்றாகப் படிக்க வேண்டும்” கல்பனாவையும் மீறி அவள் குரல் வெளிப்பட்டது. அவன் தலையாட்டிவிட்டுச் சென்றான்.  

கல்பனாவில் எண்ணங்கள் அசோக்கை சுற்றி சுற்றியே வந்தது. அந்தச் சிறிய வயதில் சுமை தாங்கியாய் குடும்ப பாரம் சுமக்கின்றானேயென்று.  

தோழிகளின் குரல் கல்பனாவை சுயநினைவிற்கு கொண்டு வந்தது. ஆம். கல்பனா ஓர் இனம் பட்டதாரி ஆசிரியை. உயிரியல் கற்பிக்கின்றாள். அவளுக்கு இரண்டு அக்காமார், இருவரும் திருமணம் முடித்து குடும்பம் என்று ஆகிவிட்டார்கள். கல்பனாவிற்குத் தான் வரன் தேடும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது.  

கல்பனா பேச்சிலே கனிவு, மூச்சிலே துணிவு, நடையிலோ பணிவு, உடையிலோ எளிமை, செயலிலோ சீர்மை, இயல்பிலோ நேர்மை கொண்டவள். அவளின் தகப்பனார் ஓர் ஓய்வு பெற்ற அதிபர். தாய் ஓய்வுபெற்ற ஆசிரியை. நிலவின் அழகை ரசித்து விட்டு அன்று அவள் வீடு திரும்ப “​லேற்” ஆகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தனர்.  

“நீங்க ரெண்டுபேரும் சாப்பிட்டிருக்கலாம் தானே” என்ற குரலுடன் அவர்களுடன் சாப்பாட்டில் இணைந்து கொண்டாள் கல்பனா.  

அன்றைய பொழுது புலர்ந்து வைகறையாய் விடிய சிறிது நேரமாயிற்று. கல்பனா எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட்டு பாடசாலை செல்ல ஆயத்தமானாள். அன்று அவளுக்கு பாடசாலையில் நிறைய வேலைகள் காத்திருந்தன.  

அன்று அவளுக்கு விஞ்ஞான தினத்திற்கான வினா போட்டிக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. மாணவர்களை அழைத்து மேற்படி விடயம் தொடர்பாக எடுத்துக் கூறி மாணவர்களை பாடசாலையில் நடக்க இருக்கும் “தேர்வு” நிகழ்வுக்கு தயாராகுமாறு அவன் வேண்டிக் கொண்டாள். அன்று அவளுக்கு ஓய்வு நேரத்திலும் கூட வேலை இருந்தது. ஒருவாறு அதை செய்து முடித்தாள். வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வு அறைக்கு நுழைந்தவளுக்கு “ஏண்டா நுழைந்தோம்” என்றிருந்தது.  

சக ஆசிரியர்கள் இருவர் கதைப்பது அவள் காதிற்கு கேட்டது.  

‘ஒரு குறிப்பிட்ட வயசு வந்தா பொம்பள பிள்ளயல வைச்சிருக்க கூடாது. கல்யாணத்தை கட்டிக் கொடுத்திரணும்.” அவர்களின் கதை தொடர்ந்தும். கதைத்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென கல்பனாவின் பக்கம் திரும்பி “என்ன டீச்சர் 30வயதாகுது. நீங்கள் ஏன் இன்னும் கல்யாணம் கட்டாமல் இருக்கீங்க”?   

கல்பனா சற்றும் எதிர்பாராதவிதமாக இக்கேள்வி அமைந்திருந்தது. முகத்துக்கு நேரே அவர்கள் இப்படிக் கேட்டது அவளுக்கு என்னவோ போன்றிருந்தது. இருந்தாலும் நிலமையை சமாளித்துக் கொண்டு “கல்யாணத்தைப் பற்றி நான் இன்னும் யோசிக்கல” என்று தைரியமாகப் பதிலளித்தாள்.  

“இப்படியே இருந்தீங்கன்னா கிழவியாய் போயிருவீங்க” அவர்களின் பேச்சில் கிண்டல் இருந்தது.  

“யாருக்குத்தான் வயது போகல. யார் தான் கிழவி ஆகல” என்று சிரித்தவாறே பதிலளித்தாலும் அவள் மனதில் வருத்தம் இருந்தது. உண்மையில் இந்த சனங்களுக்கு ஒரு படிப்பறிவே கிடையாது. இல்லையில்லை. படித்திருந்தும் பாமரத்தனம் போல் நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதே மிகப் பொருத்தம்.

கல்பனாவிடம் கேள்வி கேட்ட டீச்சர் இற்கு 55அல்லது 56வயது இருக்கும் வயதிற்கேற்ற ஒரு பக்கம் இருக்க வேண்டாம். தனது வார்த்தைகளால் மற்றவர்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று யோசிக்க வேண்டாம். அவன் என்ன வேண்டுமென்றா திருமணம் செய்யாமல் இருக்கின்றாள். தகுந்த வரன் இன்னும் வந்து சேரவில்லை. சில வரன்கள் தகுந்த பொருத்தம் இருப்பதில்லை. எத்தனையோ பெண் பார்க்கும் படலங்களை அவள் தாண்டியிருக்கின்றாள். சில வரன்கள் படிப்பு பொருத்தமானதாக இருந்தாலும் பணத்திலேயே குறியாய் இருப்பார்கள். சில வரன்கள் அவளின் கெரக்டருக்கு முற்றிலும் எதிர்மாறானதாக காணப்படும். சில வரன்கள் முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. பழமை வாதம் பேசுவார்கள். இவ்வாறாக ஒவ்வொன்றாக தட்டுப்பட்டுப்போய் அவளின் திருமணம் கேள்விக்குறியாயிற்று. எது எவ்வாறிருப்பினும் வரன் தேடும் படலம் இன்னும் முடித்த பாடில்லை. பெற்றாரிற்கு கல்பனாவின் திருமணம் தள்ளிப் போவது பற்றிக் கவலை தான். இருந்தும் என்ன செய்வது? எல்லாம் இறைவனின் ஏற்பாடு என்று மனதைத் தோற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.  

முதுமானிப் பட்டம் முடித்த கல்பனாவிற்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை தான். தனக்கு வரும் சில வரன்கள் அதற்குப் பொருந்துவதில்லை. படிக்கும் எண்ணத்தை கல்பனாவும் கைவிட்டாடில்லை. தனக்கு வரும் கணவன் தனது எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவனாக இருக்க வேண்டும் என்பது கல்பனாவின் எதிர்பார்ப்பு. காலம் தான் சில விடயங்களிற்குப் பதில் சொல்ல வேண்டும்.  

பாடசாலை கலைவதற்கான மணியொலித்தது கல்பனாவின் சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. வீடு செல்ல ஆயத்தமானாள் கல்பனா, வீட்டிலும் சில கேள்விக் கணைகள் தன்னை நோக்கி காத்திருப்பதை அவள் அன்று அறிந்திருக்கவில்லை.  

கல்பனா வீட்டை நெருங்கியதும் பக்கத்து வீட்டு ‘அன்ரி’ வந்திருக்கிறார் என்பதை குரலில் இருந்து இனம் கண்டு கொண்டாள். பக்கத்து வீட்டு ‘அன்ரி’யின் கதையும் சிரிப்பும் நான்கு அல்லது ஐந்து  வீட்டு தாண்டியும் கேட்குமளவிக்கு உயர்ந்தது.  

‘என்ன அன்ரி, சுகமா இருக்கிறீங்களா?  

கல்பனாவின் வார்த்தைகள் உயர்ந்தொலித்தன.  

‘ஓம், கல்பனா. உம்மைப் பற்றித் தான் கதைத்துக் கொண்டிருக்கிறம்’, ‘என்ன? கல்பனா இது! கல்யாணமே பண்ணிக்காம இருக்கறீங்க? நெளிவுசுழிவுகள் பார்த்தா இன்றைய நாளில் கல்யாணமே பண்ணிக்க முடியாது. ஆயுள் முடியுமட்டும் தனிமரமா நிக்க வேண்டியது தான்’, ‘அன்ரி’யின் குரல் ஓங்கி ஒலித்தது.  

‘அன்ரி, நம்மட கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்கிற ஒருத்தர தான் நான் கல்யாணம் பண்ணிக்கோணும். என்றிருக்கேன் என்றாள். இப்படி பார்த்தா வயது ஏறிடும். யோசித்துப் பார்த்து முடிவெடு கல்பனா’ என்றார்.  

மனதிற்குள் ஆத்திரம் பத்திக் கொண்டு வந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் புன்னகைத்தவாறு உள்ளே நுழைந்தாள் கல்பனா. உள்ளே நுழைந்தவள் உடுப்பைக் கூட கழற்றாது கட்டிலிலே படுத்து தூங்கினாள். அழுகை பொத்துக் கொண்டு வந்தது. என்ன சமூகம். இந்த சமூகம் கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் மனதைப் புண்படுத்தும் தனமாக நடந்து கொள்கின்றது.  

பொழுது புலர இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அன்றைய வைகறைப் பொழுது ‘ஸ்நேகா’வின் வாழ்வில் பல விடியல்களை பிரசவிக்கின்ற நாளாக இருந்தது. ஆம் ஸ்நேகா, கல்பனாவின் சித்தியின் மகள். அவளுக்கு இன்று திருமணம். ​ெடாக்டர் மாப்பிள்ளையென்று சித்தியிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சீர்வரிசைகளுக்கு குறைவில்லை.  

‘ஊர்ல ஒரு வீடு, கொழும்பில ஒரு வீடு, 20ஏக்கர் காணி, போகவர கார், காசு ஐம்பது இலட்சம்”  

இவ்வளவும் சீர் வரிசையாய் பெண் வீட்டாரிடம் கேட்கப்பட்டவைகள், சித்தியிற்கு ஒரேயொரு பெண் பிள்ளை. அத்தனை சீர்வரிசைகளையும் மொத்தமாய் கொடுத்து ​ெடாக்டர் மாப்பிள்ளைக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம்.  

கல்யாண மண்டபம் சனத்திரள்களால் நிரம்பி வழிந்தது. வரவேற்புப் பகுதி கல்பனாவிற்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. வருபவர்களை வரவேற்று மண்டபத்தினுள் அனுப்புவதில் அவளும் சில பெண்களும் ஈடுபட்டிருந்தனர். பெண்கள் பகுதியில் ஒரு சலசலப்பு. தன் தாயிடம் சில பெண்கள் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவது அவள் காதிலும் ஒலித்தது.  

‘கல்பனா, ஸ்நேகாவைவிட இரண்டு வயது மூத்தவ இன்னும் கல்யாணம் வேற ஆகல. இந்த சமயத்தில் அவ வரவேற்பு பகுதியில் நிற்பது சரியா’ என சில பெண்கள் கூற அதை மேலும் சில பெண்கள் ஆமோதித்தனர். தன் தாய் அதற்கு என்ன பதில் சொன்னாரென்று கல்பனாவிற்கு தெரியவில்லை. கல்பனாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. நாக்கைப்பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டாள்.  

இன்றைய நாட்களில் திருமணம் முடிப்பதென்பது பெண்களுக்கு ஒரு பதவியுயர்வு கிடைத்தது போன்ற உணர்வை அவர்களுக்குள் வளர்த்து விடுவதாக கல்பனாவிற்கு தோன்றியது. இதனால், அவர்கள் திருமணமாகாதவர்களை தரக்குறைவாக பேசுகின்றனர். படிப்பறிவுள்ளவர்களே புரிந்துணர்வின்றி நடந்து கொள்ளும் போது படியாதவர்கள் எம் மாத்திரம்? என்று கல்பனாவிற்கு தோன்றியது. தன்னோடு கற்பிக்கும் சக ஆசிரியர்கள் கூட புரிந்துணர்வின்றி நடந்து கொண்டதை நினைத்து அவள் மனம் வேதனையுற்றது.  

ஆம், கல்பனா கோடம், படபடப்பு, உணர்ச்சி வசப்படல் அத்தனையும் நிறைத்த ஓர் உணர்ச்சிக் கலவை அவள். யாராவது ஏதாவது சொன்னால் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவாள். கல்பனாவிற்கு சட்டென்று அன்றைய நாட்களில் தான் படித்த கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வந்தன.  

‘சட்டை கிழிந்திருந்தால்  

சடுதியிலே தைத்திடலாம்  

சமுதாயம் கிழிந்திருக்கு  

தைக்க வழி ஏதம்மா?  

ஆம். சமுதாயத்தை சீர் திருத்த வழிதான் ஏது? தவறென்று உணர்ந்து செய்கின்றார்களா? உணராமல் செய்கின்றார்களா என்பதே சில நேரங்களில் குழப்பமாக இருக்கின்றது. முற்போக்கான சிந்தனைகள் கொண்ட எழுத்துக்கள் சமூகத்தை சென்றடைதல் வேண்டும். அப்போது தான் சமூகம் வளம் பெறும். இந்த சமூகத்தை திருத்துவதற்கு புதிதாய்த்தான் யாரும் அவதாரம் எடுத்தல் வேண்டும்.  

“இனியொரு விதி செய்ய வேண்டும்.  

அதில் முற்போக்கான சிந்தனைகள் புகுத்தப்பட வேண்டும்”  

என்று கல்பனாவுக்கு தோன்றியது.  

நாட்கள் தான் யாருக்காவும் காத்திருப்பதில்லையே. நாட்கள் உருண்டோடி இரண்டு மாதங்களாகி விட்டன. அன்று அவளுக்காக ஒரு நற்செய்தி காத்துக் கிடந்தது. ஆம் ஊழியர்களுக்கான கலை இலக்கியப்போட்டியில் கல்பனா எழுதிய சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்திருந்தது. இருபதினாயிரம் ரூபா பணப்பரிசு, வெற்றிக் கேடயம் என்பன அவளுக்காக காத்திருக்கின்றன. பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துகள் அவளுக்கு குவிந்தன. அதன் பரிசளிப்பு நாளுக்காக காத்திருந்தாள் அவள்.  

அன்று டீச்சர்ஸ் ஸ்டாப் ரூமில்  கல்பனாவிற்கு பரிசு கிடைத்ததைப் பற்றியே பேச்சாக இருந்தது. கல்பனா ரொம்ப திறமைசாலி எனப் பலர் கூறினர். திடீரென்று புனிதா ஆசிரியையிடமிருந்து ஒரு சத்தம். ‘கல்பனாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் இதைவிட எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்.’  

கல்பனாவிற்கு இன்னும் திருமணமாகதலால் எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் அதையே குத்திக் காட்டி பேசுவதாக கல்பனாவிற்கு தோன்றிற்று. கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத விடயங்களிற்கு கூட இதையே தொடர்புபடுத்திப் பேசுகின்றார்கள். புனிதா ஆசிரியையின் பெயரில் இருக்கும் புனிதம் அவர் எண்ணங்களில் இல்லாதது கல்பனாவிற்கு மிகவும் விருத்தமாக இருந்தது.

இன்னும் எத்தனை கல்பனாக்கள் இவ்வாறு சமூகத்தினால் துன்புறுத்தப்படுகின்றார்களோ? தெரியவில்லை. வைகறைகள் விடிந்தாலும் இந்த சமூகத்தின் இவ்வாறான பாமரத்தனங்களுக்கு விடிவே வராதோ?

றுசைனா ஹாசீம்
அக்கரைப்பற்று -02.

Comments