நகர்ப்புறங்களிலும் மலையக இளைஞர்களுக்கு மறுக்கப்படும் தொழில் உரிமைகள் | தினகரன் வாரமஞ்சரி

நகர்ப்புறங்களிலும் மலையக இளைஞர்களுக்கு மறுக்கப்படும் தொழில் உரிமைகள்

நசுக்கப்படுவது என்றால் அது நாமாகவே இருப்போம் என்பது இன்னும் எவ்வளவு காலத்துக்கு?

'இவர்களில் பலர் அன்றாடம் அல்லது வாராந்தம் சம்பளம் பெறும் கூலித் தெழிலாளர்களாகவே பயன்படுத்தப்படுவதால் தொழில் பாதுகாப்பு, தொழில்சார் உரிமைகள் பற்றி வேலை வழங்குவோர் கவலைப்படுவது கிடையாது. கைக்கு வரும் பணத்தையே குறியாகக் கொண்டு உழைப்பை முதலீடு செய்வதால் தமக்கு நேரும் அநீதி பற்றியோ மறுக்கப்படும் தொழிசார் உரிமைகள் பற்றியோ சிந்திப்பதில்லை' 

தோட்டத் தொழிலாளியின் பிள்ளைக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கு இல்லையென்று சொல்வதற்கு தயக்கமாக இருக்கின்றது. ஆனால் மறைமுகமான காரணிகள் இதனைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. பெருந்தோட்டத் துறையில் ஆண்கள் 65சதவீதம் பெண்கள் 52சதவீதமும் வேலையற்றவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வேலையற்றோர் பட்டியலில் 95சதவீதமானோர் 14-  _33வயதுக்கிடைப்பட்டவர்கள். 14வயது என்பது பாடசாலை செல்லும் வயது. ஆனால் பூர்த்தி செய்யப்படாத கல்வி நிலை இங்கு அதிகரித்துவரும் நிலையில் சிறுவர்களும் வேலையற்றோர் கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.  

வேலையில்லாப் பிரச்சினையால் வறுமை தலைகால் விரித்து ஆடுகிறது. பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் தமது பிள்ளைகள் தம்மைப் போல் தோட்டத் தொழிலில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. குறைந்தது 14வயதுக்கும் மேற்பட்டவர்களைத் தொடர்ந்தும் வீட்டில் வைத்துக்கொள்ள பொருளாதாரம் இடம் தருவதும் இல்லை. இதன் காரணமாகவே இளைஞர்களோடு சிறுவர்களும் வேலைதேடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் படையெடுக்க வேண்டி நேரிடுகின்றது. இதேவேளை க.பொ.த.சாதாரண தரத்தை முடித்திருந்தாலும் கூட மலையக இளைஞர்களை தோட்ட உத்தியோகத்தில் சேர்த்துக்கொள்ள தோட்ட நிர்வாகங்கள் முன்வருவதில்லை.  

குறிப்பாக, கீழ்மட்ட உத்தியோக நிலைகளாகக் கருதப்படும் பிள்ளைக் காப்பக உதவியாளர், பிரசவ மாது, நலன்புரி உத்தியோகத்தர், சாரதி, மின் இணைப்பாளர், இயந்திரம் பழுதுபார்ப்போர் வேலைகளில் கூட இவர்களை இணைத்துக்கொள்ள தயாரில்லை. இதனால் கட்டாயமாக வெளியிடங்களிலேயே வேலைவாய்ப்பைத் தேடியாக வேண்டியுள்ளது. அடிப்படைத் தகமைகள் இல்லாத நிலையில் பல இளைஞர்களைப் பொறுத்தவரை ஆடைத் தொழிற்சாலைகள், கடை சிற்றூழியர்கள், வேலைத்தள உதவியாளர்கள், விற்பனையாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், தேனீர்ச்சாலை பணியாளர்கள் போன்ற வேலைகளுக்கே உள்வாங்கப்படுகின்றார்கள். சிறுவர்களில் அநேகமானோர் சில்லறைக் கடைகளில் எடுபிடிகளாகவும் வீட்டு வேலையாட்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.  

இவ்வாறு வெளியிடங்களில் வேலை செய்வோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களாகும். ஆனால் இவர்கள் எத்தகைய பின்புலத்தில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளார்கள் என்பது பிரச்சினைக்குரிய சங்கதியாகவே பார்க்கப்படுகின்றது. தொழில் ரீதியில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் ஏதுமிருப்பதில்லை. தவிர தொழில் தர்மங்களோ உரிமைகளோ இங்கு பேணப்படுவது கிடையாது. இவர்களது உழைப்பானது அன்றாடம் சுரண்டப்படுகின்றது. உறிஞ்சப்படுகின்றது. இவர்களது வியர்வை உரிய பயன் தராத அறுவடையாகிப் போகின்றது. நாட்டின் எந்தப் பகுதியிலாவது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முதலில் முகம் கொடுப்பது இவ்வாறு தொழில் புரியும் மலையக இளைஞர் யுவதிகளே ஆவர். இதனால் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகுவதோடு உளவியல் ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.  

கொழும்பில் காணப்படும் அநேகமான இரும்புக் கடைகளில் மலையக இளைஞர்களே தொழில் புரிவதைக் காணமுடியும் இதேபோல புடவைக் கடைகளிலும் இவர்கள் தொழில் செய்தும் வருகின்றார்கள். தற்போதைய நிலையில் பெருவாரியானோர் கட்டுமாணப் பணிகள் நடைபெறும் இடங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். எது எப்படி ஆயினும் இவர்களில் பலர் அன்றாடம் அல்லது வாராந்தம் சம்பளம் பெறும் கூலித் தெழிலாளர்களாகவே பயன்படுத்தப்படுவதால் தொழில் பாதுகாப்பு, தொழில்சார் உரிமைகள் பற்றி வேலை வழங்குவோர் கவலைப்படுவது கிடையாது. கைக்கு வரும் காசினையே குறியாகக் கொண்டு உழைப்பை முதலீடு செய்வதால் தமக்கு நேரும் அநீதி பற்றியோ மறுக்கப்படும் தொழிசார் உரிமைகள் பற்றியோ சிந்திப்பதில்லை.  

எமது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தொழில்சார் சட்டங்கள் எல்லாத் துறையினருக்கும் சமமானதே ஆகும். இன்னும் சொல்லப் போனால் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோருக்கு சிறப்புச் சட்டம், ஊழியர் பணிக்கொடை சட்டம், மகப்பேற்று கட்டளைச் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதிச் சட்டங்கள், சுகாதாரம், தொழில் உத்தரவாத சட்டங்கள் என்று ஏராளமாகவே இருப்பதை அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் மனித உரிமை சாசனத்தின் மூலம் நிவாரணம் தேட முடியும். தவிர தொழில் நேரத்தில் பாதிப்புகள் இழப்புகள் என்பவற்றுக்கு இழப்பீடு வழங்கவும் சட்டம் வகை செய்கின்றது. இவைகள் முறையாக கிடைக்காத நிலையில் தொழில் நீதிமன்றங்களை நாடவும் இடமுண்டு. ஆனால் இது சம்பந்தமான புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது? தொழில் வழங்குனர்கள் இச்சட்டங்களை அறிந்திருந்தாலும் அதனை அலட்சியப்படுத்தவது போலவே நடந்து கொள்கிறார்கள்.  

இவர்களுக்கு எதிராக எவருமே குரல் தரமாட்டார்கள் என்பதே இவர்களது பலம்.  இதனாலேயே மலையக இளைஞர் யுவதிகளை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள இந்த முதலாளிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையின் தொழிற் சட்டங்களின்படி தொழில் சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைய உண்டு.

பாதுகாப்புக் கவசங்கள், வேலைத்தள பாதுகாப்பு, கழிவறை வசதிகள், முதலுதவி வசதிகள் எதுவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எப்படி கிடைப்பது இல்லையோ அதே போலவே கொழும்புப் போன்ற இடங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கும் வழங்கப்படுவது இல்லை. மருத்துவ காப்பீடு ஏதும் கிடைப்பது இல்லை. சில முதலாளிகள் பொய் வாக்குறுதிகளை வழங்கி வேலையை வாங்கிக் கொண்டு அம்போவென கைவிடும் கைங்கரியங்களிலும் ஈடுபடுவதாக தகவல்கள் உள்ளன. இவ்வாறு வேலைவாய்ப்பை பெற்றிருப்போரில் அநேகமானோர் தற்காலிக வேலை செய்வோராகவே இருக்கின்றனர். ஒரு சிலரே நிரந்தரமான தொழி புரிவோராக உள்வாங்கப்படுகின்றார்கள்.  

வேலை செய்யும் இடங்களில் வழங்கப்பட வேண்டிய அனுகூலங்கள் பற்றிய தெளிவு இந்த இளைஞர் மத்தியில் சும்மாவே வந்து சேரப்போவது இல்லை. இதற்கான பின்னூட்டல்கள் இடம்பெற ஏதுக்களும் இல்லை.

இவர்களை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்னும் எதிர்பார்ப்போடு வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் தொழில் அதிபர்கள் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வார்கள் என்று எங்ஙனம் நம்ப முடியும்?  

இது பற்றி மலையக இளைஞர் சமூகமும் சிந்திக்க வேண்டும். மலையக அரசியல் தலைமைகளும் சிந்திக்க வேண்டும். மலையகத்தில் தொழிற் பேட்டைகளை அமைத்து இளைஞர் துயர்துடைப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகள் இவர்களுக்கு மறந்து போயிருக்கலாம். வாக்களித்த மக்களுமா மறப்பது? தட்டிக்கேட்க வேண்டிய தருணம் இது. உழைப்பை விற்று களைப்பை மட்டுமே வாங்கக்கூடிய தொழில்களால் நாளைகளின் நம்பிக்கை என்பது தொலைந்து போன கனவுகளாகவே போய்விடலாம் எச்சரிக்கை.    

பன். பாலா

Comments