தமிழ் – முஸ்லிம் தலைமைகள் பேசித்தீர்க்காதவரை முடிவில்லை | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் – முஸ்லிம் தலைமைகள் பேசித்தீர்க்காதவரை முடிவில்லை

கல்முனையில் இருமுனை போராட்டம்

கல்முனையில் முஸ்லிம் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்  

தமிழ் தரப்பினர் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தவர்களான நீங்களும் உண்ணாவிரதம் இருப்பது ஏன்?  

கடந்த 30வருடங்களாக முன்வைக்கப்பட்டுவரும் தமிழர்களின்  பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் தொடர்ந்து வந்த கதை சாண் ஏற முழம்  சறுக்கிய கதையாக போய்விட்டது.  

கல்முனையை பொறுத்தவரையில் சிறியதொரு நிலப்பப்பிற்குள் மிக  நீண்ட காலமாக தமிழ் - முஸ்லிம் மக்கள் நெருக்கமான ஐக்கியத்தோடு  நிலத்தொடர்பற்ற ரீதியில் வாழ்ந்து வருகிறார்கள். இரு சமூகத்தவர்களும்  பின்னிப் பிணைந்துள்ளார்கள். தமிழர்களின் குடியிருப்புக்கு பக்கத்தில்  முஸ்லிம்களின் காணி, முஸ்லிம்களின் காணிகளுக்கு பக்கத்தில் தமிழர்களின்  குடியிருப்பு அதே போன்றுதான் வர்த்தக நிலையங்களும் அமைந்து காணப்படுகின்றன.  எனவே இங்கு தமிழ் - முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள்  இல்லாத வகையிலே இதனுடைய எல்லைகள் பிரிக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தித்  தான் நாங்கள் பள்ளிவாசல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல்  தலைவர்கள் எனப்  பலரும் ஒன்று சேர்ந்து இந்த சாத்வீக போராட்டத்தை கடந்த  மூன்று தினங்களாக முன்னெடுத்துள்ளோம்.  

சுமார் 30ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் முஸ்லிம் அரசியல்  தலைவர்களால் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறதே இதற்கு என்ன சொல்லப்  போகிறீர்கள்?  

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான் அவர்களுடைய வாக்கு  வங்கிகளை நிரப்புவதற்காக இரண்டு தரப்பினராலும் இழுத்தடிப்புச்  செய்யப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும் இதனை  வைத்து அரசியல் செய்தது. அது மாத்திரமன்றி இதன் எல்லைகளை பிரிப்பதில்  காணப்பட்ட சங்கடங்களும் இதற்கு ஒரு காரணமாகும். இந்த எல்லை பிரிப்பை  இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் இங்கு இருக்க வில்லை. அதனால்  காலம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது.  

இப்போது தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மத்தியில் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பேசப்படுகிறதே அது என்ன?  

நல்லதொரு கேள்வி சாதரண அப்பாவி மக்கள் இதனை இன்னும் அறிந்து  கொள்ளவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையிலான  குழுவினருக்கும்  பிரதமருக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம்  பலசுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. அதன் அறிக்கையை மக்களுக்கு  சொல்லாமல் இருந்தது ஏன்? இன்று இந்த எல்லை பிரிப்பானது ஒரு எல்லை நிர்ணய  ஆணைக்குழுவை நியமித்து நிலத்தொடர்புள்ளதாக தனியான பிரதேச செயலகமாக  பிரிப்பது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.  இதனை காலதாமதம் இல்லாமல் முன்னெடுக்கவேண்டும்  

 பிரதேச செயலக தரமுயர்த்த வேண்டும் என்ற தமிழ் சமூகத்தவர்களின் நியாயமான கோரிக்கைக்கு முஸ்லிம் சமூகத்தவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று பேசப்படுகிறதே?  

இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது. முஸ்லிம் - தமிழ் உறவு பிட்டும்  தேங்காய்ப் பூவையும் போன்றது என்று அன்று தமிழ்த் தலைவர்களே ஏற்றுக் கொண்டு  பேசிய வரலாறு கல்முனைக்கு இருக்கிறது. தமிழ் சமூகத்தவர்களின் நியாயமான  கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டே ஆக வேண்டும். அவர்களுக்கு இதனை  தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் சமூகத்தவர்களோ அரசியல் வாதிக்கோ அல்லது சிவில்  சமூக அமைப்புக்களோ எந்தவித தடையும் இல்லை. ஆனால் இது முறையாக செய்யப்பட  வேண்டும்.  

முறையாக என்று எதனை சொல்ல வருகிறீர்கள்?  

முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், சிவில்  சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதேபோன்று தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து  ஒரு மேசையில் இருந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான அழைப்பை  நாங்கள்  விடுக்கிறோம். இதனை விட்டு விட்டு மதகுருவை  அழைத்து வந்து சாகும்  வரையில் உண்ணாவிரதம் இருப்பது கவலையளிக்கிறது. தேரர்களை பார்த்து நான்  கேட்பது என்னவென்றால்,  இதில் அக்கறை காட்டும் நீங்கள் ஏன்? வடகிழக்கு  இணைப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், நீண்டகாலமாக இருக்கிற  அரசியல் கைதிகள் விவகாரம், வட, கிழக்கிலே காணிகளை இழந்து நிற்கின்ற தமிழ்  மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக  உண்ணாவிரதம் இருப்பீர்களா  என்று.

தமிழ்,-முஸ்லிம் மக்களின் உறவை சீர் குலைக்க எடுக்கும் இந்த  செயற்பாட்டுக்கு முஸ்லிம்- தமிழ் அரசியல் தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும்.  

அப்படி என்றால் ஏன் நீங்கள் சொல்லும் தமிழ் முஸ்லிம் அரசியல்  தலைவர்கள் நேரடியாக இங்கு வந்து இந்த மக்களுக்கு தங்களது தீர்வை வழங்க  முடியாமல் இருக்கிறது?  

இந்த எல்லை பிரிப்பு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு  எட்டப்பட்ட தீர்மானங்களை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சொல்வதற்காக  நேற்று முன்தினம் (21) அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இங்கு வந்தார்கள் இதனை  முஸ்லிம் சமூகத்தவர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழ் தரப்பினரும்  உண்ணாவிரதம் இருக்கும் தேரரும் இதனை மறுத்து பெரும் பதற்றமான சூழல்  காணப்பட்டது.  

இதன் பின்னரான அறிக்கைகள் தமிழ்-, முஸ்லிம் சமூகத்தின்  ஒற்றுமையை இல்லாமல் செய்வது போன்றுதான் எனக்கு தென்படுகிறது. இதனை  பேசித்தான் தீர்க்க வேண்டும். அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது,  எமது அப்பாவி இளைஞர்களை பாதுகாக்க வேண்டும். நாம் நிறையவே போராடி பலதை  இழந்துள்ளோம். நிதானமாக சிந்திக்கும் நேரம் இதுவாகும். தமிழ் - முஸ்லிம்  அரசியல் தலைர்கள் ஒரு மேசையில் இருந்து பேசுவதற்கு மதத்தலைவர்கள், சிவில்  சமூகத்தினர், இளைஞர்கள் இடம் கொடுக்க வேண்டும். இதனை விடுத்து உணர்ச்சி  வசப்பட்டு ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் விடயமல்ல. தமிழ் மக்களின்  அரசியல் தலைவர் இரா.சம்மந்தனையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  றவூப் ஹக்கீமையும் இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளையும் ஒரு மேசைக்கு  அழைத்து பேசித் தீர்வை பெற்றுக் கொள்வோம். இதுதான் இப்போதைக்கு  அவசியமாகும். மாறாக நஞ்சருந்தி சாவோம் என்பது மடத்தனமான பேச்சாகும்.  

இந்த போரட்டம் எப்போது கைவிடப்படும் என்று நினைக்கிறீர்கள்?  

எமக்கு ஒற்றுமையை சீர்குலைத்து, வியாபார செயற்பாட்டை முடக்கி  போராட்டம் செய்ய வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது. இதற்கு சரியான  ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமித்து இரு  சமூகத்தவர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து  பிரதேச செயலகம் பிரிக்கப்படுவதற்கு நாங்கள் எவரும் தடை கிடையாது. எதிர் கால  நலனையும் சமூக ஒற்றுமையையும் கருத்திற் கொண்டு இரு இனங்கள் வாழும் இந்த  கல்முனை மண்ணில் இதனை பேசித் தீர்ப்பதற்கு தமிழ்த் தரப்பினர் முன்வர  வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். 

நேர்கண்டவர்

 ஏ.எல்.எம்.ஸினாஸ்  

(பெரியநீலாவணை விசேட நிருபர்)  

Comments