அர்த்தபுஷ்டியான துரித தீர்வுக்கு ஏங்கும் கல்முனை | தினகரன் வாரமஞ்சரி

அர்த்தபுஷ்டியான துரித தீர்வுக்கு ஏங்கும் கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்  தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திங்களன்று (17) ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகலாக இடம்பெற்றுவரும் இப்போராட்டம் வரவர வலுப்பெற்று வருகிறது.  

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவக்குருக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அ. விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவரும் தொழிலதிபருமான கே. லிங்கேஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்தனர்.  

உண்ணாவிரதிகளின் உடல் நிலை மிக மோசமாகி வருகிறது. மருத்துவர்கள் இடையிடையே வந்து பரிசோதனை செய்கின்றனர். உண்ணாவிரதிகள் வைத்தியசாலைக்குச் செல்ல மறுக்கின்றனர். இவர்கள் படுத்த படுக்கையில் கிடக்கிறார்கள். மக்களின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக காரைதீவில் பிரதேச சபைத் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் புதனன்று விபுலாநந்த சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேபோல நாவிதன்வெளியிலும் நடைபெறுகிறது. தினமும் ஒவ்வொரு தமிழ்க் கிராமங்களிலிருந்து மக்கள் பேரணி படையெடுத்து வருகிறது.  

கல்முனை மாநகரம்

அம்பாறை மாவட்டம் 1962ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இப்பிரிப்பு மற்றும் பின்னர் வந்த தெஹியத்தக்கண்டிய இணைப்புமே இன்றைய நிலைக்கு அடிப்படைக் காரணமாகும்.  

அம்பாறை கரையோரப் பிரதேசம் தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் முகவெற்றிலையாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்குவது கல்முனை மாநகரமாகும்.  

கரவாகுப்பற்று எனும் பாரிய பிரதேசத்துள் அன்று உள்ளடக்கப்பட்டு அந்நியோன்யமாக வாழ்ந்து வந்த இரு சமூகங்களும் நிர்வாக இலகுபடுத்தலுக்காக பிரதேச செயலக பிரிப்பு கொணர்ந்ததன் பிற்பாடு, ஒருவரையொருவர் விரோதமாக பார்க்கும் நிலை உருவாகியது.  

கல்முனை மாநகரப் பிரதேசமானது பெரியநீலாவணை தொடக்கம் சாய்ந்தமருது வரையிலான பிரதேசம். அதற்குள் சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை வடக்கு என்ற பிரதேச செயலகப் பிரிவுகள் தற்போது இயங்கி வருகின்றன.  

பழைய நிர்வாக அலகான இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக் காரியாதிகாரி பிரிவு முறை நீக்கப்பட்டுப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் ஒரு தனியான ஒற்றை உதவிஅரசாங்க அதிபர் பிரிவான கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ்கொண்டு வரப்பட்டது.  

இது சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய தமிழ் - முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியிருந்தது.  

இப்பிரிவு உருவான ஆரம்ப காலத்திலிருந்தே அதாவது 1980களிலிருந்தே கல்முனைத் தமிழர்களின் கோரிக்கை என்னவாக இருந்தது என்றால், இத்தனியான ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவைக் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரு தனித்தனி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக அதாவது சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடிக் கிராமங்களை உள்ளடக்கிய தென்பகுதியை நூறுவீதம் முஸ்லிம் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும், கல்முனை நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணைக் கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியைத் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாழும் தமிழ்ப் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும் ஆக்கித்தரும்படி விடுத்த கோரிக்கையை அடுத்து 12.04.1989அன்று ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் கல்முனை வடக்குக்கென்று உப செயலகம் ஒன்று திறக்கப்பெற்று அதற்குப் பொறுப்பாகத் தமிழ் உதவி அரசாங்க அதிபர் ஒருவரும் நியமிக்கப்பெற்றார். இவர் முழுமையான அதிகாரம் கொண்ட அலுவலர் அல்லர். மேலே குறிப்பிட்ட வடபகுதியில் அமைந்த கிராம சேவகர்களில் தமிழ்ப்பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கல்முனை வடக்கு உப செயலகத்திற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபரின் கீழும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் பிரதான அலுவலகத்திற்குப் பொறுப்பான அதாவது முழுக் கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த உதவி அரசாங்க அதிபரின் கீழும் கடமையாற்றப் பணிக்கப்பட்டனர்.   

இந்த ஏற்பாடு அன்றிருந்த களநிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடே தவிர இது வழமையான அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிருவாக ரீதியான நடைமுறை அல்ல.   இவ்வாறு 12.04.1989இல் ஏற்படுத்தப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்தான் இன்று வரை கடந்த முப்பது வருடகாலமாகப் பெயரளவில் 29தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவகர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.  

12.04.1989இல் உருவான கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகம் என்பது முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் காலஞ்சென்ற கே. டபிள்யூ. தேவநாயகம் அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு வழங்கிய பணிப்புரையின்படியும் பின்னர் 1989பெப்ரவரி பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் இது விடயமாக முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானத்தின்படியுமே உருவாக்கப்பட்டது. பின்னர் 1993இல் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் இருபத்தியெட்டு உப பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப் பெற்ற போது கல்முனைத் தமிழ்ப் பிரிவும் அதில் ஒன்றாக அமைந்தது.  

ஆனால் 1993இல், ஏனைய இருபத்தியேழு உப பிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப் பெற்றபோது கல்முனை மட்டும் புறக்கணிக்கப்பட்டது. இதுவே நடந்த உண்மையாகும். இப்படியிருக்கும் போது முப்பது வருடங்களும் கழிந்த பின்னர் இப்பிரதேச செயலகத்தின் உருவாக்கம் சட்டவிரோதமானது எனக் கூறுவது 'மதியீனம்' ஆகும்.   அப்படியானால், முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யு. தேவநாயகத்தின் பணிப்புரையும், முன்னாள் பொது நிருவாக உள்நாட்டு அமைச்சர் யூ. பி. விஜயகோனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானமும் பின்னர் 1993இல் அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானமும் சட்ட விரோதமானவையா? என்று நோக்கர்கள் கூறுகிறார்கள்.  

எனவே, இச்செயலகத்தை காணி மற்றும் நிதி அதிகாரமிக்கதாக மாற்றி தரமுயர்த்திதர வேண்டும் என்பது தமிழ்மக்களின் கோரிக்கையாகும். இது தனித்தமிழ் செயலகமல்ல. இதற்குள் தமிழர்கள் முஸ்லிம்கள், சிங்களவர்கள் வருகிறார்கள். எனவே, மூவினத்திற்கும் சொந்தமான செயலகம் எனக்கூறப்படுகிறது.  

எனவே, அதனை வழங்குவதில் என்ன தடையுள்ளது? என்பது அவர்களது வினாவாகும்.  

உண்ணாவிரத சூழல்

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரெலிய ரதன தேரர் வண. அம்பிட்டி தேரர் முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், ச. வியாழேந்திரன் தமிழ் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் செ. கஜேந்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், மகளிரணித் தலைவி செல்வி, த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பி. அரியநேத்திரன், வெள்ளிமலை, திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி. இ. கமலராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், சி.புஸ்பலிங்கம் (கொக்கட்டிச்சோலை), சா. மகேந்திரலிங்கம் (ஆரையம்பதி), முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான மு. இராஜேஸ்வரன், மா. நடராஜா, த.அ.கட்சி உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பல தமிழ்த் தலைவர்கள் அரசியல் வேறுபாடின்றிக் கலந்து கொண்டனர்.  

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ. ஜே. அதிசயராஜ் இது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார். அதனையடுத்து நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், உதவி அரசாங்க அதிபர் உதார ஆகியோர் வருகைதந்து உண்ணாவிரதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அப்பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.

கோடீஸ்வரன் எம்.பியின் முயற்சியில் த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தனின் தலையீட்டில் பிரதம மந்திரியோடு தொடர்பு கொள்ளப்பட்டது. கொழும்பில் பேச வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். உண்ணாவிரதிகள் கொழும்பு செல்ல மறுத்து விட்டார்கள்.  

அதனால், கொழும்புக்குப் பாராளுமன்ற உறுப்பினர், அரச அதிபர் உள்ளிட்ட ஐவர் கொண்ட குழு புதனன்று இரவு பயணித்தது.   இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க த.தே.கூட்டமைப்புத் தலைமையிடம் உறுதி கூறியதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் கூறியுள்ளார். அதாவது, அடுத்துவரும் அமைச்சரவையில் அது 25ஆம் திகதியாகவிருக்கலாம் அல்லது 2ஆம் திகதியாகவிருக்கலாம். இரண்டிலோர் அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தரமுயர்த்தலை சமர்ப்பித்துச் செய்து தருவதாக. எனவே, உச்சக் கட்டமாக அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பொறுத்திருப்போம் என்றார்.   வியாழனன்று இரவு நல்ல செய்தி கிடைத்திருப்பதாக கல்முனைத் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும், வெள்ளிக்கிழமை காலை சந்தேகம் ஏற்பட்டது. இவ்வாறு ஏற்கனவே பலமுறை உறுதியுரைகள், வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. இது நியாயமான சந்தேகம் என்பதை மறுக்கமுடியாது.  

இதேவேளை,  தீர்வுடன் அமைச்சர் மனோ கணேசனும் அமைச்சர் தயா கமகேயும் வெள்ளியன்று மாலை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் வருகை தந்து  பிரதமரின் வாக்குறுதியைத்  தெரிவித்தபோதிலும், உண்ணாவிரதிகளும் பொதுமக்களும் அந்த உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டனர்.

இதேவேளை, உண்ணாவிரதிகளின் உடல்நிலை மோசமடைய அம்பாறை அரசாங்க அதிபர் டி. எம். எல். பண்டாரநாயக்கவின் அவசர எழுத்துமூல வேண்டுகோளின் பேரில் கல்முனை ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று புதன்கிழமை நண்பகல் விரைந்துசென்று உண்ணாவிரதிகளைச் சோதித்துச் சிகிச்சை வழங்கியது.  

இந்நிலையில், தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.   வியாழனன்று (20) காலை கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் ஒன்று கூடிய அப்பிரதிநிதிகள் இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தைத் தடை செய்யக் கோரி சத்தியாக்கிரகம் மேற்கொண்டுள்ளனர்.  

 இப்போராட்டத்தை அரச சார்பற்ற பல்வேறு அமைப்புகளுடன் மாநகர மேயர் சட்டத்தரணி ஏ. எம். றக்கீப் மற்றும் உறுப்பினர்கள் உள்ளடங்களாக கல்முனை வர்த்தக சமூகம் பங்கெடுத்துள்ளது.  

மொத்தத்தில், கல்முனை மாநகரம் தினம் தினம் பதற்றத்திற்கான வீதம் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாயுள்ளது. பொலிஸ், இராணுவம், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனிடையே, வியாழனன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமதிக்காமல் விரைந்து அர்த்தபுஸ்டியான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே ரணகளத்தை தவிர்ப்பதற்கான உபாயமாகும்.

வி.ரி.சகாதேவராஜா

Comments