சீன ஜனாதிபதியின் முக்கியத்துவம் வாய்ந்த வடகொரிய விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

சீன ஜனாதிபதியின் முக்கியத்துவம் வாய்ந்த வடகொரிய விஜயம்

பதின்நான்கு வருடத்திற்கு பின்னர் வடகொரியாவுக்கு சென்றுள்ள சீனத் தலைவராக ஜனாதிபதி ஜின்பிங் விளங்குகின்றார். அவரது விஜயம் அதிகமான உரையாடலை உலக அரசியல் பரப்பில் ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா மீதான அமெரிக்க நெருக்கடிக்கு பின்பு பலதடவை வடகொரியத் தலைவர் கிம் சீனாவுக்கு பயணம் செய்தாலும் சீனத் தலைவரது விஜயம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி ஜப்பானில் நடைபெறும் மகாநாட்டுக்கு செல்லும் முன்பு வடகொரியப் பயணத்தை முடித்துக் கொள்வது என்பது இராஜதந்திர நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இக்கட்டுரையும் சீன- -வடகொரிய நெருக்கம் தரப்போகும் அரசியலை உரையாடுவதாக உள்ளது. 

இரு நாட்கள் அரச முறைப் பயணமாக ஜின் பிங் வடகொரியா சென்றுள்ளார். அவரது விஜயம் மிக முக்கியமான நேரத்தில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகொரிய அமெரிக்க முறுகல் நீடித்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் தனது அணியிடம் ஆதரவை கோரும் சந்தர்ப்பத்தில் வடகொரியாவுக்கு சீன ஜனாதிபதி பயணமாகியுள்ளார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்றே கருதப்படுகிறது. இரு தலைவர்களும் தமது பேச்சுக்களை ஆரம்பிக்கும் போது முடித்துக் கொள்ளும் போதும் மிகச் சிறப்பான அணுகுமுறையைக் கொண்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமன்றி சீனத் தலைவர் குறிப்பிடும் போது இதன் மூலம் இருநாட்டுக்குமான ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துவது மற்றும் கொரிய தீபகற்பத்தில் அமைதி ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிப் போக்கினை ஏற்படுத்த முடியும் என்றார். இதன் மூலம் அவரது விஜயம் அதிக தாக்கத்தினை ஏற்படத்தக் கூடியதாக அமையவுள்ளது. 

ஒன்று ஜின் பிங்ன் விஜயம் தெளிவாக அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது வடகொரியா தனது செல்வாக்கு நாடு என்பது மட்டுமல்ல அதன் பாதுகாப்பும் அதற்கு எதிரான அச்சுறுத்தல்களும் பிற தேசங்களின் இராணுவ நகர்வுகளும் சீனாவின் பாதுகாப்பினையும் பாதிக்கும் என்பதாகும். அதனை எதிர்கொள்ள சீனாவும் தயாராக உள்ளது என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.  

இரண்டாவது வடகொரியாவின் பொருளாதாரத்திற்கு விடப்படும் சவால்களை தாம் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக மறைமுகமாக தெரியப்படுத்தியுள்ளார். சீன- அமெரிக்க வர்த்தக விரிசலை சரிசெய்யும் நகர்வுகளை செய்து வரும் சீனா கடந்த வாரம் ஜின் பிங் ரஷ்யாவுக்கு பயணமாகியதன் பிரதிபலிப்பாக நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளமை தெரியவருகிறது. தனது புவிசார் அரசியல் சக்திகளுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதன் மூலம் அந்த நாடுகளுடன் வர்த்த உறவை பலப்படுத்தி சீனாவுக்குரிய சவாலை செரிசெய்ய முடியுமென கருதுகிறது. அதனால் வடகொரியாவுக்கு வர்த்தக ரீதியில் பலமான உறவுள்ள நாடு என்ற வகையில் சீனா உள்ள போதும் அதனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. 

மூன்று இராணுவ ரீதியில் அணுவாயுத நாடுகள் என்ற வகையில் அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் சீனாவையும் பாதிக்கும் என்பதனால் சீனா அதிக கரிசனை கொண்டு செயல்பட விளைகிறது. குறிப்பாக வட கொரியாவுடன் அமெரிக்க முறித்துக் கொண்ட அணுவாயுத பேச்சுக்களை சரி செய்யவும் ஜனாதிபதி ட்ரம்ப் உடனான உரையாடலை மீளவும் சரி செய்யவும் இந்த விஜயத்தினை ஜிம் பாவித்துக் கொண்டார் என்று கூறலாம். அல்லது முடிவாக வடகொரிய விடயத்தினை கைவிட வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்க முனைய இந்த பயணத்தினை ஜின்பிங் பயன்படுத்தியிருக்க முடியும். 

நான்காவது இது ஒரு இராஜதந்திரமான நகர்வாக அமைந்துள்ளது எனலாம். குறிப்பாக சங்காய் மகாநாட்டை முடித்துக் கொண்டு ஜப்பானில் நடைபெறும் மகாநாட்டுக்கு செல்லும் ஜின்பிங் வடகொரியாவை தேர்ந்தெடுத்தமை கவனத்திற்குரியதாகும். இதன்மூலம் பல செய்திகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரதானமாக சீனாவின் கீழ் வளர்ந்துவரும் புவிசார் பிராந்திய நாடுகளை அடையாளப்படுத்துதல் முக்கியமானதாக அமைந்திருந்தது. அவ்வாறே வடகொரியா முக்கியமான நட்பு நாடு என்பதை அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு உணர்த்துதல். வடகொரியா மீது நிகழ்த்தப்படும் எந்த நடவடிக்கையும் சீனாவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த பயணத்தின் மூலம் ஜி-20மகாநாட்டில் முன்வைக்கவுள்ள வர்த்தக நடவடிக்கையில்’ சீனாவின் பங்கினையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. காரணம் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மாற்றீடுபற்றிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ள சீனா அதற்காக உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் பயன்படுத்துவதில் கவனம் கொள்கிறது. அதனால் உலகில் நிகழும் எந்த மகாநாட்டையும் பயன்படுத்தும் திறனுள்ள நாடாக சீனா விளங்குகிறது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளார். அத்துடன் சீனாவின் அணுசரணை மூலம் கொரியப் பிராந்தியத்தின் அமைதியை சாத்தியமாக்க முடியும் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார் ஜின்பிங்.  

ஐந்து உபாயத்தின் மூலம் வடகொரியாவின் பிரச்சினைக்கு சீனாவினால் உதவ முடியும்  என்ற தகவலை வழங்கியதன் மூலம் அமெரிக்காவுக்கு மாற்று என்பதை வெளிப்படுத்தியுள்ளார். அத்தகைய நகர்வு உலகளாவிய அமெரிக்க விரேத சக்திகளுக்கு பாதுகாப்பான அரணை தருவதாக அமைவதுடன் பொருளாதார அடிப்படையில் பாரிய சமதன்மையை ஏற்படுத்த சீனா தயாராக இருக்கின்றது என்பதை தெரியப்படுத்தியுள்ளார் ஜின் பிங் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கடந்த பல தசாப்தமாக சீனா மேற்கொண்டாலும் அமெரிக்கா உட்பட மேற்குலகத்தின் பிரசாரத்தினால் அத்தகைய கருத்துக்கள் அடிபட்டு போயிருந்தன. அதனை சரிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதன் ஒரேசுற்று ஒரேபாதைக்கு ஏற்பட்டுள்ள சவாலை சரிசெய்ய சீனா அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 

நிறைவாக அண்மைய ெஹாங்கொங் விவகாரம் சீனாவுக்கு தந்துள்ள நெருக்கடியை சரிசெய்ய வடகொரிய விஜயம் உதவியாக அமையவுள்ளது. அதில் ஏற்பட்ட அதிருப்தி உலகிலுள்ள அனேக நாடுகளை பாதித்துள்ளது. குறிப்பாக தீவு நாடுகள் அனைத்துமே அதிக எச்சரிக்கையுடன் சீனாவிடயத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி ​ஹொங்கொங் அனுபவத்தினை தைவான் அல்லது சீனாவுடன் உறவு கொண்டுள்ள நாடுகளே கருதக் கூடாது என சீனா விரும்புகிறது. அதற்கு எதிரான பிரசாரங்கள் பலமாக அமைந்திருப்பதுடன் அதனை முறியடிக்கும் உத்தியையும் சீனா கொண்டுள்ளது என்பதைக் காட்டுவதற்கான விஜயமாக அமைந்துள்ளது.  

எனவே வெளிப்படையாகப் பார்த்தால் இரு நாட்டுக்கும் பாரம்பரியமான உறவின் நிமித்தம் என தென்பட்டாலும் அடிப்படையில் பல உத்திகளுடன் செய்யப்பட்ட பயணமாக அமைந்துள்ளது. இரு நாடுகளும் எல்லை வழி உறவுள்ள நாடுகள் என்றாலும், ஒன்றின் இறையாண்மையை பாதிக்காத வகையில் மற்றயதன் நகர்வுகள் அமைந்துள்ளன. தற்போது வடகொரியா ஏனையவற்றை விட பொருளாதார ரீதியில் அதிக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடு என்ற வகையில் ஜின் பிங்கின் விஜயம் வடகொரியாவுக்கு பயனள்ளது. பாதுகாப்பானது. ஐ.நா. வின் பொருளாதாரத் தடையையும் கடந்து பயணிப்பதற்கு வலுவான தேசங்களின் ஆதரவு வடகொரியாவுக்கு அவசியமானது. அந்த வகையில் தனது பொருளாதாரத்தை கட்ட சீனா பெரியளவு ஆதரவைத் தந்துள்ளதாக வடகொரிய கருதுகிறது. இதனாலேயே இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் எனக் கூறப்படுகிறது.  இரு தேசங்களது நலன்களையும் மீண்டும் ஒரு தடவை உலகத்திற்கு தெரியப்படுத்திய நிகழ்வாக சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயம் அமைந்துள்ளது. நட்புறவின் பலத்தையும் ஏனைய நாடுகளை விட வடகொரியாவுக்கு முக்கியமானது என்பதையும் வெளிப்படுத்திய அடிப்படையில் பேசப்படும் விஜயமாக உள்ளது.வடகொரியாவின் அணுவாயுதத்துடன் அதன் புவிசார் அரசியல் பலமும் முதன்மையானது என்பது அமெரிக்காவுக்கும் அதன் தலைமைக்கும் விடப்படும் செய்தியாகும். 

கலாநிதி

கே.ரீ.கணேசலிங்கம்

Comments