பாடசாலைகளில் சமய பாடம் கற்பிப்பது மத நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை | தினகரன் வாரமஞ்சரி

பாடசாலைகளில் சமய பாடம் கற்பிப்பது மத நல்லிணக்கத்துக்கு உதவப்போவதில்லை

முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவரும் இ.தொ.கா உபதலைவருமான துரைசாமி மதியுகராஜாவுடன் ஓர் உரையாடல்... 

‘இனம், மதம் தொடர்பான வளர்ந்தோரின் கருத்துகளை மாற்றவியலாது. எனவே பாடசாலைகளின் ஊடாகவே இன, மத நல்லிணக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்’

‘பாடசாலைகளில் போதிக்கப்படும் மதக் கல்வி அம் மாணவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது இன்றைக்கும் விவாதப் பொருளே. சமயக்கல்வி மூலம் சிறிதளவு நன்மையேனும் கிடைத்ததாக கருத முடியவில்லை’

'இன, மொழி பாடசாலை முறையை ஒழித்துக்கட்டுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம்' 

‘நாட்டின் பல்வேறு துறைகளில் இஸ்லாமியர்கள் அளப்பறிய பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள். எனவே இஸ்லாமிய சமூகம் அச்சமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக வேண்டும்.’

‘இலங்கையில் அளவுக்கு அதிகமானோர் அரசுதுறையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு செய்வதில்லை. பதவிக்கு வரும் அரசுகளும் தமது ஆதரவாளர்களை இட்டு நிரப்பும் இடமாகவும் அரசுதுறை விளங்குகிறது. எனவே அரசு சேவைத்துறையை மட்டுப்படுத்தி தனியார் துறைக்கே வாய்ப்பு வழங்க வேண்டும்’

கேள்வி– அரசியல்வாதிகள் மேல் மக்கள் வெறுத்துப் போயிருப்பதாகவும் ஒன்றுமே நடக்கமாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்பில் இருப்பதாகவும் பரவலாக ஒரு அபிப்பிராயம் உள்ளது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக உங்கள் பார்வையை பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்– மக்கள் அரசியல்வாதிகள் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியையும், அவநம்பிக்கையையும், வைத்திருப்பது முற்றிலும் உண்மையே. எதுவும் நடக்க மாட்டேன் என்கிறதே என்பதும் உண்மையே. இந்த இரண்டு அபிப்பிராயங்களையும் நான் பொதுமக்களை சமீப காலத்தில் சந்திக்கும் போது அவர்கள் வெளிபடுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. தேசிய அரசாங்கம் 2015ஜனவரி எட்டாம் திகதி ஒரு கடுமையான ஜனாதிபதித் தேர்தலின் பின் அமைக்கப்பட்ட போது மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், நீதிக்கு புறம்பான செயற்பாடுகள், கடத்தல்கள், போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அத்தோடு மக்கள் நலம் சார்ந்த ஒரு அரசியல் போக்கு முன்னெடுக்கப்படும் என்றும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பொது மக்கள் நம்பினார்கள். வெளிப்படைத்தன்மை, ஊழலற்ற நல்லாட்சி இனிமேல் அமைக்கப்படும் என்றும் நம்பினார்கள். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்த்து போயின.

மேலும் நிறைவேற்று ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் நடந்து கொண்டிருந்த ஒரு நிழல் யுத்தத்தினால் எந்த ஒரு பொது விடயத்திலும் ஒரு நிதர்சனமான முடிவெடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

ஜனாதிபதியும், பாராளுமன்றமும், மாகாணசபையும் ஒரே கட்சியில் இருந்து. தெரிவு செய்யப்பட்டவர்களால் ஆட்சி புரியப்படும் போதுதான் நிர்வாகம் சரியாக இருக்கும் என்பதை இப்போது மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தேசிய கொள்கைகளில் கூட அரசாங்கமும், எதிர்கட்சிகளும் முரண்பட்டு நிற்பது நாட்டுக்கு ஆரோக்கியமானதாக இல்லை. இப்படியான பல்வேறு காரணிகளால் படித்த இளைஞர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நாட்டில் தமக்கு எதிர்காலம் இருக்காதோ என்ற கவலையில் வெளிநாடு செல்ல விரும்புகிறார்கள்.

எனவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தையும் தெளிவையும் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தேர்தலை குறித்த காலத்துக்கு முன்னரேயே நடத்துவது சிறந்தது என நான் கருதுகிறேன். இன்னும் இரண்டு, அல்லது மூன்று மாதங்களுக்குள் இத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

கேள்வி: இன்னொரு விஷயம். 70ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றமும் கிடையாது நாடு பின்னுக்குத்தான் போய்கொண்டிருக்கிறது. இந்த அரசியல்வாதிகள் தமது முயற்சிகளிலும் திட்டங்களிலும் தோற்றுப் போய்விட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மக்கள் எழுபது ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த அந்த மீட்பாளர் இன்னும் ஏன் நம் கண்களுக்கு தட்டுப்படவில்லை?

பதில்– இலங்கையை, மீட்பதற்கு ஒரு லீகுவான் யூவையோ ஒரு மஹதீர் மொகட்டையோ தேடிக் கொண்டிருந்தால் காலம்தான் விரயமாகும். இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் பல்வேறு விடயங்களில் தங்கியுள்ளது. வெளிநாட்டு ஏற்றுமதி, உற்பத்தி பெருக்கம், தனியார் துறையின் வளர்ச்சி, அதிகளவான மூலதனம் போன்றவை அவற்றுள் முக்கியமானவை. உலகிலேயே அதிகளவான அரசு சேவையாளர்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. மாறிவரும் எல்லா அரசுகளும் அரசு துறையை பெருப்பித்து அவர்களது ஆதாரவாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதிலேயே குறியாக இருக்கின்றன.

அரச உத்தியோகஸ்தர்களின் சேவை பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது. எதிர்மாறாக அவர்களது கொடுப்பனவுகளுக்கும் வேதனத்திற்கும் மக்களது வரிப்பணம் செலவாவதுதான் மிச்சம். அரச உத்தியோகஸ்தர்களது உற்பத்தித் திறனும் மிகக்குறைவு. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது தனியார்துறையின் வளர்ச்சிதான். அவர்கள்தான் புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். எமது பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ள சிங்கபூர், மலேசியா, இந்தியா, கொரியா, ஜப்பான், வியட்னாம் போன்ற நாடுகள் தனியார்துறையின் வளர்ச்சியின் மூலமாகவே அந்த நிலையை எட்டியுள்ளன. பொருளாதார வளர்ச்சிக்கான இயந்திரம் தனியார் துறையே! ஆகவே கொள்கை ரீதியாக அரச சேவையாளர்களை மட்டுப்படுத்தி தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து வர்த்தக ரீதியான நிறுவனங்களும் கடந்த பல வருடங்களாக பாரிய நஷ்டத்திலேயே இயங்கி வருகின்றன. ஸ்ரீலங்கன் விமான சேவை, போக்குவரத்து சபை, பெருந்தோட்ட கூட்டுத்தாபனம், மின்சார சபை, நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை என பல உதாரணங்களை காட்டமுடியும்.

கேள்வி– ஐம்பது அறுபதுகளில் மொழி ரீதியான பாடசாலைகள் இருக்கவில்லை. சிங்கள தமிழ் மாணவர்கள் ஒன்றாகப் படித்த காலம் இருந்தது. இன்று மாணவர்கள் மத, மொழி ரீதியாக போஷித்து வளர்க்கப்படுவதால் சமூகங்களிடையே திரை விழுந்திருக்கிறது. இது அகற்றப்பட வேண்டுமென்று அவ்வப்போது பேசப்பட்டாலும் எதுவும் நடப்பதில்லை. இனி மேலாவது அதிரடியான கல்விக் கொள்கை மாற்றங்கள் அமுலுக்கு வருமா?

பதில்– வருமா எனத் தெரியவில்லை. ஆனால் வரவேண்டும் என்பது எனது விருப்பம். இப்படியான ஒரு மாற்றத்தை பாடசாலை கல்வியில், ஏற்படுத்துவதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாக தற்போது நிலவும் காலகட்டத்தை நான் கருதுகிறேன். பேச்சளவில் இருமொழி பாடசாலைகள் இருக்க வேண்டுமென்றும், பல்மத மாணவர்கள் அவற்றில் கல்வி கற்க வேண்டுமென்றும் மேடைகளில் பேசப்பட்டு வந்தாலும் தேசிய மட்டக் கொள்கையாக இதைக் கொண்டுவருவதற்கு யாருமே முன்வராதது வருந்தத்தக்கது. மாகாண மட்டத்தில் இரு மொழி பாட விதானம் கொண்ட புதுப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம்.

உதாரணமாக மத்திய மாகாண சபைமூலம் தயாரிக்கப்பட்ட கண்டி ரனபிம றோயல் கல்லூரி, குருந்துவத்த றோயல் கல்லூரி போன்றவற்றை குறிப்பிடலாம்.

இனங்களிடையே நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த வேண்டுமென்றால் அது பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். இவற்றை தீவரமானதும் உறுதி மிக்கதுமான கொள்கைகள் மூலம் தான் நடைமுறைபடுத்தலாம். அதனைவிடுத்து மேடைகளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் ஒரே பாடலை இரண்டு மொழியில் பாடுவது மூலம் நல்லிணக்கத்தை கொண்டுவர முடியாது.

வயது வந்தவர்களை மதம் மற்றும் இனம் தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளை மாற்றுவது கடினம். ஆனால் மாணவர்களிடையே இனம் மதம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவது இலகுவாக இருக்கும். ஆகவே கல்விக் கொள்கையில் கூடியவிரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தவேண்டும். இம்மாற்றத்தை ஒரு விவாத பொருளாக ஊடகங்கள் முன்னெடுப்பது பல தவறான அபிப்பிராயங்களை மாற்றும்.

கேள்வி: இந்தியாவில் மதம் பாடசாலைகளில் ஒரு பாடம் அல்ல. ஆனால் அங்கு எல்லா மதங்களும் நன்றாகத்தான் உள்ளன. சமயக் கல்வி ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்பது ஒரு போலியான கற்பனை என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு அனுபவம் வாய்ந்தவர் என்ற அளவில் உங்கள் பதில் என்ன?

பதில் – எனது தனிப்பட்ட அபிப்பிராயம் என்னவென்றால், பாடசாலைகளில் மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவது, மாணவர் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் என்பதாகவே உள்ளது. பாடசாலைகளில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து சென்று தத்தமது சமயத்தைக் கற்கிறார்கள்.

மேலும் பாடசாலையில் போதிக்கப்படும் சமயக் கல்வி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது இன்றைக்கும் விவாதப் பொருளாகத்தான் உள்ளது. நாட்டில் காணப்படும் அனைத்து மதங்களினதும் அடிப்படை விஷயங்களைக் கொண்டதாக ஒரு அறவியல் பாடத்தை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்பது என் கருத்து. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதால் அவர்களது கல்வித் திட்டத்தில் சமய பாடநெறி இல்லை, இலங்கையிலே பெரும்பான்மையினரது மதமான பௌத்த மதகுருமார்களது அபிப்பிராயம் இதற்கு இடம் கொடுக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அறநெறி பாடசாலைகளிலும், பாடலுள்ளக் கல்வியிலும் சமயக் கல்வி இருந்தாலும் இந்த நாட்டில் இளைஞர் மத்தியில் காணப்படும் அதிகரித்த வன்முறை உணர்வையும், சட்டவிரோத சம்பவங்களையும் பார்க்கும்போது சமயக்கல்வி மூலம் சிறிதளவு நன்மையேனும் கிடைத்ததாக கருத முடியவில்லை.

கேள்வி– மோடியின் பிரமாண்டமான வெற்றி மற்றும் பா.ஜா.காவை அடியோடு நிராகளித்த தமிழகம்!

இவை பற்றி உங்கள் பார்வை....

பதில்– மோடியின் வெற்றிக்குக் காரணம் தேசியவாதம் மற்றும் மதவாதம் ஒன்று சொல்கிறார்கள். ஆனால்தான் வட இந்தியாவில் பா.ஜ.கவின் வெற்றி பிரமாண்டமாக இருந்தாலும் தென் இந்தியாவில் அவர்களால் அந்த அளவுக்கு வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.கவும் படுதோல்வியடைந்ததை தமிழகத்தில் நாம் கண்டோம். பா.ஜ.க ஆட்சிகாலத்தில் இந்திய மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் இருந்தன. மோடி வெகு விமர்சையாக ஆரம்பித்த பல்வேறு வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. பொருளாதார ரீதியாகவும் இந்தியா பின்னடைவை கண்டு கொண்டிருந்தது. அப்படியிருந்தும் பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம், மோடியின் ஆளுமை மீது இந்திய வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் காங்கிரஸ் மீதான அவநம்பிக்கையும் தான். தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க வெற்றிக்கு எல்லா இனத்தவர்களும், மதத்தவர்களும் பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழகத்தின் வளர்ச்சி, பாராளுமன்ற பொதுத் தேர்தலை விட சட்டசபைத் தேர்தலில்தான் தங்கியிருக்கிறது.

கேள்வி– தின சம்பள முறையை விட்டுவிட்டு புளொக் சிஸ்டம் அல்லது வெளிவாரி ஆகிய முறைகளுக்கு பெருந்தோட்டத் தொழில்துறை மாறவேண்டும் என ரொஷான் ராஜதுரை கூறி வருகிறார். ஒரு மாற்றம் அவசியம்தானே?

பதில்– பெருந்தோட்டத் துறையில் மாற்றங்கள் சம்பந்தமாக பலதரப்பினர் பேசி வருகிறார்கள். எந்த ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அது அத் தொழிற்றுறையின் முன்னேற்றம் சார்ந்தாகவும் அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களது முன்னேற்றம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். வெறுமனே தொழில் துறை சார்ந்ததாகவும் கம்பனிகளுக்கு லாபத்தை அதிகப்படுத்தும் புதிய நடைமுறைகளுக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம். தொழிலாளர்களது நியாயமன வேதன அதிகரிப்பை எதிர்த்த றொஷான் ராஜதுறை போன்றவர்கள் தொழிலாளர்களது முன்னேற்றத்துக்கு வழி வகுப்பார்பகள் என்பது சந்தேகம். நாங்கள் பெருந்தோட்டங்கள் மக்கள் மயமாக்கப்பட வேண்டும் என்றே கூறுகின்றோம். தொழிலாளர் குடும்பங்கள் மத்தியில் தோட்டக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் என்ற அந்தஸ்திற்கு உயர்த்தப்பட வேண்டும். இப்படி செய்வது மூலமாக அவர்களது உழைப்பும் உற்பத்தித் திறனும் அதிகரிப்பது போலவே அவர்களது தொழில் அந்தஸ்தும் சமூக அந்தஸ்தும் உயர வேண்டும்.

இதற்கான கொள்கைத் திட்டங்களை கடந்த அரசிடமும் தற்போதைய அரசிடமும் இ.தொ.கா முன்வைத்துள்ளது. கொள்கை அளவில் இத்திட்டம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எமது மக்கள் சிறு தேயிலை தோட்ட உயிமையாளர்களாக மாற்றம் பெறுவதை விரும்பாத சில மறைமுக சக்திகள் செயற்பட்டு வருவதனால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படாவிட்டால் பெருந்தோட்ட காணிகள் அபகரிக்கப்படும் வாய்ப்பு காணப்படுவதோடு பெருந்தோட்டத்துறையும் அழிந்து விடக்கூடிய அபாயமும் உள்ளது. ஆகவே அடுத்ததாக பதவியேற்கவுள்ள அரசுக்கு பெருந்தோட்டத்துறையில் மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுக்க வேண்டும்.

கேள்வி– சமீபத்தில் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் ஒரேயடியாக தமது பதவிகளை இராஜினாமா செய்தார்கள். ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்திலும் இப்படி ஒரு தீர்மானத்துக்கு மலையகத் தலைமைகள் வந்திருக்கலாமே, என்ற ஒரு கண்ணோட்டம் உள்ளது. மேலும் அரசில் அங்கம் வகிக்கும் எந்தவொரு மலையகத் தலைமையும் அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரியும் தெரியவில்லையே!

பதில் – முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்தது போலவே மீளவும் பெற்றுக் கொள்ளவும் முன்வந்துள்ளனர். அவர்களது அந்த முடிவானது மத இன ரீதியானது. அதற்கும் பெருந்தோட்டத்துறை சம்பள விவகாரத்துக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆயிரம் ரூபா சம்பள உயர்வை நாங்கள் கோரியது பெருந்தோட்டக் கம்பனிகளிடம். அதற்கு தேவையான அழுத்தத்தினை அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும். இந்த சம்பளம் என்பது ஒரு தொழிற்துறையின் உற்பத்தித் திறனுக்கு சமாந்திரமாக வழங்கப்படுவதாகும். ஆனால் நாங்கள் அதைவிட மேலதிகமாக தற்போது நிலவும் வாழ்க்கை செலவை ஈடு செய்யக்கூடிய ஒரு சம்பளத்தைத்தான் நாளாந்தம் 1000ரூபா என்பதாக கோரினோம். மலையக அரசியல்வாதிகள் இக் கோரிக்கையை முன்வைத்து இராஜினாமா செய்திருந்தால் நிர்வாகம் செய்யும் கம்பனிக்காரர்களுக்கு அது எவ்விதமான அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்காது. ஆனால் ஆளும் கட்சி அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தும் அவற்றை அவர்கள் பிரயோகிக்கவில்லை.

இது எங்கள் பிரச்சினையல்ல, அவர்கள் பிரச்சினைதானே என்பது போல மறைமுகமாக அவர்கள் நடந்துகொண்டதால் போராட்டத்தில் வீரியம் குறைந்ததை நாங்கள் கண்டோம்.

கேள்வி– சஹ்ரான் கிறிஸ்தவர்களைத் தாக்கியது ஒரு புறமிருக்க, இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே குறி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு ஒரு இனத்தை தனிமைப்படுத்துவது நியாயமா? இது இன்னொரு பிரச்சினையை தோற்றுவிக்காதா? அச் சமூகத்தின் மீதான தாக்குதல்கள் வர்த்தக அடிப்படையைக் கொண்டதாகக் கருதுகிறீர்களா?

பதில்– சஹ்ரான் கிறிஸ்தவர்கள் கூடும் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியது மாத்திரமல்லாது கொழும்பின் பிரதான நட்சத்திர ஹோட்டல்களையும் தாக்கியதையும் நாங்கள் மறந்து விடக் கூடாது. ஆகவே இலக்கு கிறிஸ்தவ மதத்தினர் மாத்திமல்லாது. பொருளாதார இலக்கையும் இத்தாக்குதல் குறிவைத்திருக்கிறது. அத்துடன் சர்வதேச ரீதியாக இந்த தாக்குதல் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் தாக்குதல்தாரிகள் எண்ணியுள்ளனர். இந்த தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட பின்விளைவுகளும் பெரும்பான்மையின மக்களது எதிர்ப்பும் வெறுப்பும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. தாக்குதலை திட்டமிட்டவர்களும் இம்மாதிரியான ஒரு பின் விளைவைத்தான் எதிர்பார்த்திருத்திருப்பார்கள். எனினும் ஒட்டுமொத்த முஸ்லிம் இனத்தின் மீதும் ஒரு வெறுப்பையும், எதிர்ப்பலையையும் ஏற்படுத்தும் ஒரு சில குழுவினரது செயற்பாடுகள் மூலமாக முஸ்லிம் இனத்தவர்கள் மீது பல்தரப்பட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன் மூலமாக முஸ்லிம் இளைஞர்களது சிந்தனை தீவிர மடையும் என்பதுதான் உண்மை. இதன் மூலமாக நாட்டில் ஒரு தொடர்ச்சியான இனமத வேறுபாடு தோற்றுவிக்கப்படும் ஓர் அபாயம் காணப்படுகிறது.

இது நாட்டிற்கு நல்லதல்ல. முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாட்டில் வர்த்தகத் துறையில் மாத்திரமன்றி பல்வேறு துறைகளில் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள், அவர்களது வர்த்தகத்தை முடக்குவதென்பது ஒட்டுமொத்த நாட்டின் வர்த்தகத்தையும் முடக்குவதற்கு சமமானதாகிவிடும்.

கூடிய விரைவிலேயே இப்பிரச்சினை தீர்வு காணப்பட்டு மீண்டும் முஸ்லிம் சமூகத்தினர் அச்சமின்றி சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக வேண்டும்.

உரையாடியவர்

கண்டி தினகரன் சுழற்சி நிருபர் 

Comments