அண்டினோர்க்கு அருள் பாலிக்கும் கதிர்காமக் கந்தன் | தினகரன் வாரமஞ்சரி

அண்டினோர்க்கு அருள் பாலிக்கும் கதிர்காமக் கந்தன்

அழகன் முருகன், துள்ளித்திரியும் புள்ளி மயிலோன், கோலமயில் வாகனன், குன்று தோறாடும் குமரன் 

அழகன் முருகன், துள்ளித்திரியும் புள்ளி மயிலோன், கோலமயில் வாகனன், குன்று தோறாடும் குமரன் 

ஈழவள நாட்டில் முருகன் வீற்றிருந்து அருள்புரியும் தலங்களிலே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முச்சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்று முதன்மை பெற்று விளங்குவது கதிர்காமத்  திருத்தலம். 

இத் திருத்தலத்தில் ஏறுமயிலேறி வரும் ஆறுமுகப் பெருமான் முச்சக்திகளோடும் வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டுவ ஈந்தும், நெஞ்சம் நெக்குருகித்தனை நினைந்து, தஞ்சம் என வருவோர்க்கு அஞ்சேல் என அபயமளித்தும் அருள் புரிகின்றான். 

கதிர்காமப் பதியிலே மிதித்தாலே கர்மவினை தொலைந்து விடும். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே என முருகன் புகழ் பாடி மலைகள், ஆறுகள், காடுகள் தாண்டித் திருத்தல யாத்திரை செய்கின்றனர். 

மாணிக்க கங்கை வலஞ்சூழ் கதிர்காம மாணிக்கத்தைக்கண்டு பக்திப் பரவசத்தால் ஆடியும் பாடியும் கற்பூரச்சட்டி ஏந்திக், காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தத்தம் நேர்த்திக் கடன்களைத் தீர்க்கும் போது எழும் “அரோகரா” கோஷம் வானைப் பிளக்கும்.  

“முருகனே செந்தில் முதல்வனே, மாயோன் மருகனே, ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கை தொழுவோம்”. 

இவ்வாறு சிரம்மேல் கரம் குவித்தும் கந்தன் அருள் வேண்டுக் கண்ணீர் மல்கி உள்ளம் உருகி மெய்சிலிர்க்க வழிபாடாற்றும் காட்சியைக் கண்டால் இறைபக்தி சிறிதேனும் இலாதாரும் முறையான முருக பக்தராகி விடுவரென்பது முற்றும் உண்மையே. 

மலையாக நின்று ஆறாக ஓடி காடாக விளக்கித் திருவருள் பாலிக்கும் முருகனின் ஆறுபடை வீடுகளுடன் சேர்த்துக் கதிர்காமம் ஏழாம் படைவீடாகப் போற்றப்படுகிறது. 

மாறுபடு சூரனை வதைத்த பின் வள்ளியை மணம் புரிய வந்து கூறுமடியார்கள் வினை தீர்த்தருளித் தேவி தெய்வ யானையையும் சேர்த்து அமைதியை நாடி அமர்ந்த தலமே கதிர்காமமாகும்.  

முருகனை அழகுடை முதல்வனாகக் கண்டனர் பண்டைத் தமிழ்ப் பெருமக்கள். முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள கோட்டங்களில் எல்லாம் அழகு கொழிப்பதைக் கண்ட அருணகிரிநாதர் “மணிதரளம் வீசியணியருவி சூழ மருவு கதிர்காமம்” என சிறப்பித்துப் பாடுகிறார். 

திருக் கதிர்காமத்தை அடுத்து கதிரை மலைவிபூதிமலை, சூரன்மலை முதலிய பல வழிபாட்டிடங்கள் உள்ளன. குன்று தோறாடும் குமரன் குறிஞ்சித் தெய்வம் அன்றோ. 

குன்றில் உறையும் குமரேசன் நம் குறை கேட்டுக் குறை தீர்ப்பான் என்ற நம்பிக்கை அடியார்கள் உள்ளத்தில் வேரூன்றி நிற்க “கதிரைமலை காணாத கண்ணென்ன கண்ணே கற்பூரவொளி காணாக் கண்ணென்ன கண்ணே” எனப் பாலர் விருத்தர் முதற் பலரும் பக்தியுடன் மலையேறும் காட்சி மனதை நெகிழ வைக்கும். 

கதிர்காமத்திலிருந்து மேற்கே சுமார் மூன்று கல் தொலைவில் செல்லக்கதிர்காமம் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு மாணிக்கப்பிள்ளையார் கோயில் கொண்டெழுந்திருளியிருக்கிறார். 

கானவேடக் கன்னி வள்ளியைக் கந்தனுடன் சேர்க்க யானை வடிவில் வந்து ஐங்கரன் அருள் செய்து இருவரையும் இணைத்து வைத்த இடம் இதுவே என்பது ஐதீகம். 

சோர்வகற்றி மாசு துடைத்து உடற்பிணி போக்கும் மாணிக்க கங்கையைக் காவல் புரிவன போல் அதன் கரையிலே பருத்துயர்ந்த மருதமரங்கள் நிற்கின்றன. 

தீர்த்தோற்சவ தினத்தில் மாணிக்க கங்கை நெருங்கி நிறைந்திருக்கும் அடியார்களால் ஒரு மனித கங்கையாகவே மாறிவிடுகிறது. 

கலியுகவரதனான கதிர்காம வேலன் முக்கோண வீதியில் திருவுலா வந்து அடியார்க்கு அபயமளித்து அவனிக்கு அருள் மழை பொழிந்து இரட்சிக்கிறான். 

பக்திவெள்ளம் பிரவாசித்து ஓட எல்லோரும் ஒரே குலம், எல்லோரும் ஓர் இனமாகச் சாதிமத பேதமின்றி ஒருவரை மற்றவர் சாமியென்றழைத்து சண்முகப் பெருமான் சந்நதியில் நின்று தொழுது மனச் சாந்தி பெறுகின்றனர். 

அண்டினோர்க்கு அருள் பாலிக்கும் குன்றக் குமரனை நாமும் வணங்கி அவனருள் பெறுவோம்.

ராஜினி

புண்ணியமூர்த்தி 

மட்டக்களப்பு. 

Comments