குடிநீர் வாங்கவும் இன்று பணம் தேவை | தினகரன் வாரமஞ்சரி

குடிநீர் வாங்கவும் இன்று பணம் தேவை

இன்றைய வாழ்க்கை விளம்பரங்களில்தான் தங்கியுள்ளது. விளம்பரங்கள் பெண்களில் தங்கியுள்ளன. விளம்பரங்களில் பெரும்பாலும் பெண்களே நிறைந்திருக்கின்றனர். உண்மைக்குப் புறம்பான ஏராளமான விடயங்களும் பொருட்களும் தினமும் எமது தொலைக்காட்சிப் பெட்டிகளிலிருந்தும், வானொலிப் பெட்டிகளிலிருந்தும் கொட்டிக்கொண்டிருக்கின்றன. இப்போது இந்த விளம்பர உத்திகள் தொலைக்காட்சித் தொடா்களுக்குள்ளும் சினிமாப்படங்களின் உள்ளுறை பாத்திரங்கள் வாயிலாகவும் கொட்டத் தொடங்கியுள்ளன.  

இவற்றைப்பார்த்து வாய்விட்டுச் சிரிக்கும் மூத்ததலைமுறை எம்முடன் முடிந்துவிடும். அதன்பிறகு இவற்றை நாமே கண்டு பிடித்தோம் என்று மார் தட்டிக்கொள்ளக்கூடும். ஆனால் இவற்றை நாமே கண்டும் கேட்டும் அனுபவித்து வாழ்ந்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தக்காலத்திலும் இவற்றை பரப்புரை செய்ய எமக்கு மூத்தோர்  இருந்தனர். அவர்களிடம் தொலைக்காட்சிப் பெட்டியோ, வானொலிப் பெட்டியோ இருக்கவில்லை. ஆயினும் அவர்களது அனுபோக முறைகளுக்கு சித்தர்கள் வழிவகுத்து சென்றிருந்தனர்.  

ஒருகாலப்பகுதியில் அவற்றை பொய்யாக்கி உலக வர்த்தகர்கள் தமது கடைகளை வலு கலாதியாக பரப்பினர். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் அவர்களே வாழ்க்கை சொல்லிக் கொடுத்தனர். விளைவு இப்போது மிக பாரதூரமாக மாறி வருகிறது.  

 எனது தந்தை நித்தக்குடிகாரன். அவரிடம் பணம் புழக்கத்தில் இருந்த போது அதிகாலையிலிருந்தே குடிப்பார். இப்படி குடித்தே தன்னை கெடுத்தாலும் எண்பத்து நான்கு வயது வரை வாழ்ந்தார். அந்த வயதிலும் அவரது வாயில் ஈச்சங்கொட்டைகளைப்போல பற்கள் உறுதியாக இருந்தன. பாக்கை கடித்தே தின்பார். தினமும் கரியில்தான் பல் விளக்குவார்.  பற்களுக்கு உறுதி என்று இந்த கரியில் கடுக்காயை சுட்டுக் கலப்பார் உடும்புத்தலையை சுட்டு கரியாக்கி இதில் கலப்பார்.  

கல்லும் மணலும்

கரியுடன் பாளைகளும்  

வல்லதொரு வைக்கோலும்

வைத்து நிதம் - பல்லதனை  

தேய்ப்பாரேயாமாகில்

சேராளே சீதேவி  

வாய்த்திடுவாள் மூதேவி வந்து  

 என்ற சித்தர் பாடலை பாடி இதை எனது பூட்டி கண்டிப்பாள். இப்போதும் நாங்கள் அப்படியென்றால் பல்லை எப்படி விளக்குவது என்று கேட்டால், 

வேலுக்குப் பல்லிறுகும்

வேம்புக்குப் பல்லுறுதி 

பூலுக்கு போகம்

பொழியும்காண்- ஆலுக்கு 

தண்டாமரையாளும்

சேர்வாளே நாயுருவி  

கண்டால் வசீகரமாம் காண் 

 என்று பாடி அசத்துவாள். (தண் தாமரையாள் ஸ்ரீதேவி) புதுப்புது பற்பசைகளும் அவற்றை போட்டு விளக்க தூரிகைகளும் இப்போது வழக்கத்தில் இருந்தாலும், பற்சிகிச்சை நிலையங்கள் குன்றாத சனத்தொகையுடன் கொடி கட்டிப்பறக்கின்றன. விளம்பரங்களில் பற்கூச்சத்துக்கு ஓன்று பல் ஈறுகளுக்கு ஒன்று பற் சொத்தைக்கு ஓன்று என ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு பசைகள் வந்துவிட்டன. அதல்ல வேடிக்கை அதற்குள் அடங்கும் பொருட்களாக கரி, உப்பு, எலுமிச்சம்புளி, கராம்பு என நாம் பசை குப்பியில் போடாமலே உபயோகித்த பொருட்கள் வந்திருக்கின்றன. இந்த பசைகள் நமது வாய் நாற்றத்தை போக்குமாம் எப்படி வாய்நாற்றத்தை போக்கினால் என்ன செய்யலாம் என்பதை விளக்கும் விளம்பரத்தில் ஒரு இளம் பெண்ணும் ஆணும் நெருங்கி விருவது போன்று ஒரு காட்சி வருகிறது.  

 தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எமது மரபு. சாதாரணமாகவே சனியும் புதனும் அப்படி நீராடுவதற்காக ஓதுக்கப்பட்ட நாட்கள். எண்ணைக்குளியல் உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் பிறகான நாட்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் சிலருக்கு அப்படியல்ல தோய்ஞ்ச பிறகு தடிமன் பிடிச்சிடும். நெஞ்சில சளிகட்டிரும் என்ற வியாக்கியானங்கள் உண்டு. எனக்கு பதினைந்து வருடங்களுக்கு மேலாக தடிமன் வரவில்லை. என்று நான் சொன்னால் ஆச்சரியம் எதுவுமில்லை. எனது வாழ்க்கை முறை அப்படி. 

அருக்கன் எண்ணை அழகழிக்கும் அணியார் திங்கள் ஆகாது. 

திருக்காம் செவ்வாய் உயிர்போக்கும் செய்ய புதனில் பொருளுண்டாம்.  

கருத்தை அழிக்கும் கவின் வியாழம் கைப்பொருள் போக்கும் கனவெள்ளி 

பெருக்கமுண்டாம் சனி எண்ணை பேணி முழுக வல்லீரேல் 

 தலையில் சாம்பூ வைக்கும் பழக்கம் அறுபதுகளில்தான் சாதாரண மக்களுக்கு வந்தது. அதற்கு முன் குளம் வற்றும் காலத்தில் ஆழ் குளத்தின் பொருக்கு வெடித்திருக்கும். அவற்றை பொறுக்கி எடுத்து சேமித்து வைப்போம். அதை சிறிதளவு ஊறவைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் இந்த நவீன சாம்பூ வகைகள் கிட்ட நிற்க முடியாது. இப்போது களிமண்ணை தேகமெங்கும் பூசி குளிக்கும் முறை வந்துவிட்டது. செம்பருத்தி இலைகளை மருதங்குருத்துகளை கசக்கினால் வழுவழுப்பாக வரும். அவற்றை தேய்த்து முழுக பேன்களோ பொடுகோ இரண்டுமே அழிந்துவிடும். இப்போது இதற்கென விற்பனையாகும் சாம்பூகளின் மூலப் பொருட்களே இவைதான் என்றால் நம்ப முடிகிறதா. செயற்கைக் கூந்தலை அவிழ்த்துப்போட்டு அழகுகாட்டும் விளம்பர நடிகையரும் தலைக்கு மை தேய்க்கும் பெண்களும் ஆடவரும் ஒன்றைக் கவனிக்க வில்லை அவர்களது வயதில் தலை நரைக்காத ஏராளமாள கிழவர்கள் நமது நாட்டில் இருந்தார்கள் என்பதை. எப்படி? அவர்கள் தனியே மூலிகைகளையும் வேர்களையும், தானியங்களையுமே நம்பியிருந்தார்கள். சுத்தமான தேங்காய் நெய்யையும் எள் நெய்யையும், இலுப்பை வேம்பு.போன்றவற்றின் நெய்யையும் அவர்களே தமக்கு தேவையான அளவில் வீடுகளிலேயே தாயாரித்து உபயோகித்தார்கள். வேம்புகள் நிறைந்த எமது மண்ணில் ஒரு மருத்துவ தேவைக்காக சுத்தமான வேப்பெண்ணை ஒரு கடையிலும் கிடைக்கவில்லை. 

 மெய்தான் அது பொருளால் ஆன உலகம். இப்போதுள்ளது பணத்தால் ஆன உலகம். முன்னர் எமக்கு துணிமணி வாங்க மட்டுமே பணம் தேவைப்பட்டது இப்போது குடிதண்ணீர் வாங்கவும் பணம் தேவையாக உள்ளது நான் சிறுமியாக இருந்தபோது எமது வெளிப்படலையடியில் பாலை மரத்தின் கீழ் இரண்டு பானைகள் வைத்திருப்போம் ஒன்றில் தண்ணீர் இருக்கும் அடுத்ததில் அன்றைக்கு கடைந்த மோரில் பச்சைமிளகாய் வெண்காயம் வெட்டிப்போட்டு வைத்திருப்பார் என் பூட்டி. அப்போதைய பயணங்களும் கால்நடைதானே. வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் உட்கார்ந்து நீரருந்தி இளைப்பாறிப்போவார்கள். இப்போது குடி தண்ணீர்ப்போத்தலுக்கும் அதை சுத்திகரிக்கு மெசின்களுக்கும் கவர்ச்சியான விளம்பரங்கள் வருகிறது.   

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments